பச்சைக் கிளியும் கருப்பு காகமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 14,300 
 

‘‘பசுமையான மரம் ஒன்றில் ஒரு கிளிநீண்ட காலமாகத் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தது.

ஒரு நாள் அந்த வழியே வந்த ஒரு காகம், அந்த மரத்தைப் பார்த்தது.‘இவ்வளவு பசுமையான மரமா?’ என்று ஆச்சர்யப்பட்டது. அந்த மரத்தையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்தது.

இனிமேல் இங்கேயே குடியேறிவிட வேண் டியதுதான் என்று முடிவுசெய்தது. தன் பழைய கூட்டைக் கலைத்துவிட்டு, இந்த மரத்தில் கூடு கட்டியது. அப்போது கிளி எங்கோ வெளியே போயிருந்தது.

திரும்பி வந்த கிளி, காக்கையின் கூட்டைப்பார்த்து, ‘‘ஏய்.. காக்கையே… எங்க மரத்தில் எதுக்குக் கூடு கட்டினே? இது நான் வசிக்கிற மரம்… இங்கு வேறு யாரும் தங்கக்கூடாது. உடனே இங்கிருந்து கிளம்பிவிடு’’ என்று மிரட்டியது.

அதற்கு காகம், ‘‘அதெல்லாம் முடியாது. மரம் எல்லோருக்கும் பொதுவானது. யாரும் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்று பதிலடி கொடுத்தது.

இப்படியே சண்டை வலுத்துக்கொண்டு இருக்கும்போது அந்த வழியே இரண்டு நரிகள் வந்தன. ‘‘ஏன் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்?’’ என்று கேட்டது ஒரு நரி.

காகம் நரிகளிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறியது. நரிகள் நன்றாக யோசித்துவிட்டு, ‘‘சரி… இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரு வழி சொல்கிறோம்’’ என்றன.

காகமும் கிளியும் ‘‘என்ன… என்ன…’’ என்று ஆவலுடன் கேட்டன.

உடனே நரிகளும், ‘‘உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறோம். அதில் ஜெயிப்பவர்தான் இந்த மரத்தில் இருக்கவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?’’ என்றன.

காகம், கிளியும் ஒன்றை ஒன்று முறைத்துக்கொண்டு ‘‘சரி’’ என்று தலை ஆட்டின.

நரிகள் போய் மைக், ஸ்பீக்கர் செட் எல்லாம் எடுத்து வந்து பொருத்த ஆரம்பித்தன.

கிளி, கழுகு என்று பார்வையாளர்களும் ஆவலோடு போட்டியைப் பார்க்க மெள்ள மெள்ளக் கூடத் தொடங்கின.

போட்டி அன்று மாலைதான் நடக்க இருந்தது. அதற்கு முன்பாக கிளி தன் குஞ்சுகளுக்காக, இரை தேடிச் சென்றது.

அங்கு இதுவரையிலும் பார்த்திராத பழங்களைப் பார்த்து, ஆனந்தத்தோடுப் பறித்துக்கொண்டது.

தானும் சாப்பிட்டுவிட்டு, குஞ்சு களுக்கும் எடுத்து வந்தது.

போட்டி தொடங்க, சில மணித் துளிகளே இருக்கையில், வெளியே சென்றிருந்த காகம் திரும்பி வந்தது.

நரிகளும் வந்து சேர்ந்தன.

‘‘இது பாட்டுப் போட்டி. இதில் முதலில் காகத்தைப் பாட வருமாறு அழைக்கிறோம்’’ என்று கம்பீரமாக அழைத்தன நடுவர்களான நரிகள்.

காகம் வந்தது. மைக்கின் முன்னால் நின்று, தன் தொண்டையைச் செருமிக்கொண்டது. தன் கரகரத்த குரலில், ‘‘காகா… காகா…’’ என்று பாடி முடித்தது.

கிளியும், கிளிக்குஞ்சுகளும் விழுந்து விழுந்து சிரித்தன. சிரித்த சிரிப்பில் அவற்றுக்கு வயிற்று வலியே வலித்துவிட்டது. நரிகளும் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தன.

பிறகு, கிளி பாடத் தொடங்கியது. தன் இனிய குரலெடுத்து ‘கீ… கீ…’ என்று பாடும் என்று எதிர்பார்த்தால், அதன் தொண்டையிலிருந்து, எந்த சத்தமும் வரவில்லை. கிளியால் ஒரு வார்த்தை கூடப் பாடமுடியவில்லை.

நரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

இப்போது காகம் வாய்விட்டுச் சிரித்தது. ‘‘உனக்கு நல்லா வேணும். என்னைக் கிண்டல் செஞ்ச இல்ல… இப்ப உன்னாலே பாட முடியலை, பார்த்தியா? அடுத்தவங்களை கேலி பண்ணினா இப்படித்தான் ஆகும்’’ என்று சொன்னது.

ஒன்றுமே பாடாத கிளி, தோல்வி அடைந்ததாக நரிகள் அறிவித்தன.

வெற்றி பெற்ற காகத்தைப் பாராட்டிவிட்டு, ‘‘இனிமேல் காகம் இங்கேதான் இருக்கும். போட்டி விதிப்படி, தோற்ற கிளி இந்த மரத்தைவிட்டு வேறு மரத்திற்குப் போய்விட வேண்டும்’’ என்று அறிவித்தன.

‘‘ஒரு நிமிடம்…’’ என்று காகம் பேச ஆரம்பித்தது. ‘‘கிளி வேறு எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே, என்னுடனேயே இருக்கட்டும். ஒரு மரம் பொதுவானது. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஏதோ பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, அதன் தொண்டை இன்று கெட்டுப் போய்விட்டது. இல்லை என்றால் நன்றாகப் பாடி ஜெயித் திருக்கும்.இந்தப் போட்டியின் மூலம் மற்றவரின் இயற்கையான குறைபாடுகளை கேலி பண்ணக்கூடாது என்பதைக்கிளி புரிந்து கொண்டு இருக்கும். அத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு கிளி வாழ வேண்டும் என்பது தான் என் விருப்பம்’’ என்று சொன்னது.

இதைக் கேட்ட கிளி, வெட்கத்தோடு தலை குனிந்து‘‘என்னை மன்னித்துவிடு’’ என்பது போல்காகத்தைப் பார்த்தது.

நரிகள் விடைபெற்றுச் செல்ல, கறுப்புக் காகமும் பச்சைக் கிளியும் தங்கள் குஞ்சுகளோடு எந்த வேற்றுமையும் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தன.

வெளியான தேதி: 16 ஆகஸ்ட் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *