(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கண்ணப்பன் தொலைவில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றிருந்தார்.
அந்த ஊரின் பெயர் ஆலங்காடு. பெயர்தான் காடு என்று உள்ளது. உண்மையில் அந்த ஊர் ஒரு பெரிய நகரம்.
தான் சென்ற வேலை முடிந்து ஊர்த் தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, “அய்யா வாங்க! அய்யா வாங்க என்று யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பினார். யாரையும் ஆட்களைக் காணவில்லை.
மறுபடி திரும்பி நடந்தார்.
“அய்யா வாங்க ! அய்யா வாங்க!” என்று ஒரு மழலைக் கீச்சுக் குரல் கேட்டது.
கேட்ட திசையை உற்றுப் பார்த்தார். ஆம், அவரை அழைத்தது ஒரு பச்சைக் கிளி.
ஒரு கடையில் தொங்கிய கூட்டுக்குள் இருந்த பச்சைக் கிளி தான் அப்படி அழைத்தது.
கண்ணப்பர் அந்தக் கடைக்குச் சென்றார். அந்தக் கடையில், பச்சைக் கிளி, மைனா, சிட்டுக் குருவி , மயில், புறா, கொக்கு போன்ற பறவைகளும், மான், முயல், நாய், பூனை, ஆடு, வெள்ளெலி போன்ற சிறு விலங்குகளும் விற்பனை செய்யும் கடையாக இருப்பதைக் கண்டார்.
கடைக்காரர் “அய்யா அந்தக் கிளி உங்களுக்கு வேண்டுமா? நூறு ரூபாய்தான்! மிக மலிவான விலை. வாங்கிக் கொண்டு செல்லுங்கள்” என்றார்.
கண்ணப்பர் மகள் இன்பவல்லி ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறு பெண்.
அவளுக்கு அன்றைய மறுநாள் பிறந்தநாள். பிறந்தநாள் பரிசாக இந்தப் பேசும் கிளியைத் தன் மகள் இன்பவல்லிக்குக் கொடுக்க முடிவு செய்தார் கண்ணப்பர்.
கடைக்காரனுடன் பேரம்பேசி எழுபது ரூபாய்க்கு அந்தப் பேசும் கிளியை வாங்கிக் கொண்டார்.
அந்தக் கிளியை எப்படி வளர்க்க வேண்டும் எந்த எந்தப் பொருள்கள் கொடுக்க வேண்டும். நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய அட்டை ஒன்றையும் கடைக்காரர் கொடுத்தார்.
கண்ணப்பர் வாங்கி வந்த அன்று கிளியைத் தன் அறையிலேயே வைத்திருந்தார்.
மறுநாள் காலையில் குளித்து முடித்து. உணவு உண்ணும் முன் இன்பவல்லி தன் அப்பாவை வந்து பார்த்தாள்.
“அப்பா! இன்று என் பிறந்த நாள். வாழ்த்துங்கள்” என்று கூறி அவருடைய காலடிகளில் விழுந்து வணங்கினாள் இன்பவல்லி.
ஒவ்வொரு பிறந்த நாளிலும் தன் செல்ல மகளுக்கு நல்வாழ்த்துக் கூறுவதோடு ஒரு சிறு பரிசும் கொடுப்பது கண்ணப்பருடைய வழக்கம்.
சென்ற ஆண்டு பிறந்த நாள் பரிசாக ஒரு தங்கச் சங்கிலி கொடுத்தார்.
இன்று, தன் அன்பு மகளை வாழ்த்தி அவளுக்கு மிகவும் விருப்பமான பச்சைக் கிளியைப் பரிசாகக் கொடுத்தார்.
இன்பவல்லிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .
அன்புப் பரிசான அந்தப் பச்சைக் கிளியின் பட்டுடலைத் தடவித் தடவித் தன் அன்பை வெளிப் படுத்தினாள்.
ஏற்கெனவே பேசத் தெரிந்த பச்சைக் கிளிக்கு மேலும் பல சொற்களைப் பேசப் பழகிக் கொடுத்தாள்.
அந்தக் கிளி மிக அறிவுள்ள கிளி. ஒரு தடவை சொன்னால் போதும், அதே சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லும். அழகாகச் சொல்லும்.
வீட்டில் உள்ள பூனை மியா மியா என்று கத்தினால் கிளியும் மியா என்று கத்தும். நாய் குரைப்பது போல் குரைக்கும். பசுவைப் போல் அம்மா என்று கத்தும். காக்கையைப் போல் காகா என்று கத்தும். வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் சொற் களையும் அப்படி அப்படியே திருப்பிச் சொல்லும்.
இவ்வளவு அழகாகப் பேசும் கிளியைத் தன் உடன் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் காட்ட வேண்டும் என்று நினைத்தாள் இன்பவல்லி.
இன்பவல்லி அறிவுள்ள பெண்ணாய் இருந்தாள். அப்பாவுக்குச் செல்லப் பெண்ணாக இருந்தாள். ஆனால் அம்மா சொல்லும் எந்த வேலையும் செய்ய மாட்டாள்.
ஒரு நாள். அம்மா அவளை அழைத்து, “இன்பவல்லி பக்கத்துக் கடையில் போய் கால் கிலோ பருப்பு வாங்கிக் கொண்டு வா” என்றாள்.
“போ அம்மா, உன்னோடு பெரிய தொல்லை” என்று கூறிவிட்டு அறையில் போய்க் கதை படித்துக் கொண்டிருந்தாள்.
மற்நொரு நாள். இன்பவல்லி, அத்தை வீட்டில் போய் இந்தப் பலகாரங்களைக் கொடுத்துவிட்டுவா என்றாள்.
அத்தை வீடு, அதே தெருவில் மூன்றாவது வீடு தான்.
இன்பவல்லி போக மறுத்து விட்டாள்.
“எனக்கு நேரமில்லை அம்மா” என்று கூறி விட்டு விளையாடப் போய்விட்டாள்.
இன்னொரு நாள் அம்மா அவளைக் கூப்பிட்டு, “கண்ணே இன்பவல்லி, கடைக்குப் போய் இரண்டு தேங்காய் வாங்கி வா” என்றாள்.
“போம்மா? உனக்கு வேறு வேலையில்லை” என்று கூறிவிட்டு நாய்க்குட்டியுடன் விளையாடப் போய்விட்டாள்.
இதை எல்லாம் அந்தப் பச்சைக் கிளி பார்த்துக் கொண்டிருந்தது அவள் சொல்லிய சொற்களையும் நினைப்பு வைத்திருந்தது.
அன்று ஒருநாள் பள்ளிக்கூடத்துக்கு அந்தப் பச்சைக் கிளியைத் தூக்கிக் கொண்டு சென்றாள் இன்பவல்லி.
தன் தோழிகளிடம் “நான் சொன்னேனே. எங்கள் வீட்டில் ஒரு அதிசயக் கிளி இருக்கிறதென்று அது இதுதான்” என்று காண்பித்தாள்.
மாணவ மாணவியர் சூழ்ந்து கூடி நின்றார்கள்.
இன்பவல்லி தன் பச்சைக் கிளிக்கு “பவழம்” என்று பெயர் வைத்திருந்தாள்.
“பவழம்! இதோ பார் இவள் தான் மீனா. மீனா அக்கா நலமா? என்று கேள் பார்க்கலாம்” என்று கூறினாள்.
மாணவ மாணவிகள் பச்சைக் கிளி பேசுவதைப் பார்க்க ஆவலோடு நின்றார்கள்.
பச்சைக் கிளி பேசியது.
ஆனால், “மீனா அக்கா நலமா?” என்று கேட்கவில்லை.
“உன்னோடு பெரிய தொல்லை” என்று கூறியது.
இன்பவல்லி, உன் பச்சைக் கிளி ஏறுக்கு மாறாகப் பேசுகிறதோ என்று கேட்டாள் மீனா.
“இல்லை இது நல்ல கிளி. சொன்னதை அழகாகச் சொல்லும்”.
“பவழம் வள்ளியக்காவுக்கு வணக்கம் சொல்லு பார்க்கலாம்” என்றாள் இன்பவல்லி.
பச்சைக் கிளி தலையை ஆட்டிக் கொண்டு வாயைத் திறந்து, “எனக்கு நேரம் இல்லையம்மா” என்றது.
சூழ்ந்திருந்த மாணவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். இன்பவல்லி கோபத்தை அடக்கிக் கொண்டாள்.
பவளம் “என் கண்ணல்ல, கன்றுக்குட்டி போல் அம்மா கத்து பார்க்கலாம்” என்றாள்.
“போம்மா உனக்கு வேறு வேலையில்லை” என்றது பச்சைக் கிளி. தோழிப் பெண்கள் சிரித்தார்கள்.
அவர்கள் சிரிக்கச் சிரிக்க இன்பவல்லிக்கு. அழுகை அழுகையாக வந்தது.
“இந்தக் கிளி என்னை அவமானப்படுத்தி விட்டது. இது பொல்லாத கிளி, குரங்குக் கிளி” என்று கத்தினாள்.
அப்போது அங்கு நின்ற மீனா சொன்னாள். “இன்பவல்லி, கோபப்படாதோ பவழம் தவறாக ஒன்றும் பேசவில்லை. வீட்டில் உன் அம்மாவை நீ எதிர்த்துப் பேசிய சொற்களையே அது திருப்பிச் சொல்லியிருக்கிறது.
அது அறிவுள்ள கிளி. நீ அம்மாவிடம் அன்பு கொண்டிருப்பது உண்மையானால் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அதை உனக்கு உணர்த்துவதற்காகவே, நீ அம்மாவிடம் மறுத்துச் சொன்ன சொற்களைப் பேசியிருக்கிறது.
நீ அம்மாவிடம் அன்பாகப் பேசு. அவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்.
பச்சைக் கிளியும் நல்ல சொற்களைப் பேசும்” என்று கூறினாள்.
இன்பவல்லி மீனா சொன்னதை ஒப்புக் கொண்டாள்.
“இனிமேல் நான் அம்மாவுக்கு உதவியாக இருப்பேன்” என்று கூறினாள். உடனே பச்சைக் கிளி, “நன்றி வணக்கம்” என்று கூறியது.
மாணவர்கள் எல்லோரும் பச்சைக் கிளியைப் பாராட்டினார்கள்.
– ஒரு ஈயின் ஆசை, சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.