முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள்.
அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை.
ஒருநாள் முல்லாவுக்கு “கோழிக்குஞ்சு சூப்பு” தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது.
“சூப்பு” தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார்.
மனைவி அவர் முன்னால் வந்து நின்றபொது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது.
வீட்டில் சூப்பு செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப்பு வாங்க ஆள் அனுப்பி விடுவாள் என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது.
“சூப்பு இப்பொது தயார் செய்ய வேண்டாம்” என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார்.
சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார்.
அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தாள்.
என்ன, என முல்லா விசாரித்தார்.
“உங்கள் வீட்டில் கோழி சூப்பு தயாரித்தீர்களாமே ! அம்மா கொஞ்சம் வாங்கி கொண்டு வரச்சொன்னாள்” என்று சிறுமி கூறினாள்.
முல்லா உரத்த குரலில் “ஒஹோ ஹோ” என்று சிரித்தார்.
உள்ளெயிருந்த மனைவி ஒடி வந்து “உங்களுக்கு என்ன வந்துவிட்டது, ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டாள்.
“இந்த விநோதத்தைப் பார்?. இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும் போதுதான் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள்”.
இப்பொது நான் சூப்பு செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப்பு வாங்கி வரச் சொல்லி மகளை அனுப்பியிருக்கிறாள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்.