குழந்தைகளே, நலமா? வழக்கம்போல ஒரு கதையோடு வந்திருக்கேன். கேளுங்க.
அது ஓர் ஆறு. அதில் எப்போதும் வற்றாமல் சலசலவென்று தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். அதில் நிறைய மீன்கள், தவளைகள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஆற்றில் உள்ள ஒரு தவளைக்குக் கொக்கு ஒன்று நண்பனாக ஆனது. கொக்கு தினமும் வந்ததும் வழியில் பார்த்த விஷயங்கள், நடந்த அதிசயங்கள் என எல்லாவற்றையும் ஆர்வத்துடன் விவரிக்கும். தவளைக்கு இவையெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். தானும் இது போலப் பறந்து பல இடங்களுக்கும் செல்ல வேண்டும், உலக அதிசயங்களைக் காண வேண்டும் என்று நாளுக்கு நாள் தவளைக்கு ஆர்வம் அதிகமாகியது.
ஒருநாள் கொக்கிடம் தனது ஆசையைச் சொன்னது தவளை. கொக்கோ, ‘அது சாத்தியமில்லை, எப்படி என்னால் உன்னைப் போல் தண்ணீருக்குள் வசிக்க முடியாதோ, அதுபோல் உன்னாலும் என்னைப் போல் வானில் பறக்க முடியாது. வீண் ஆசை வேண்டாம்!’ என்று அறிவுரை கூறியது. ஆனால் தவளையோ அதைக் கேட்பதாக இல்லை. தொடர்ந்து கொக்கை நச்சரிக்க ஆரம்பித்தது. மற்றத் தவளைகள் எல்லாம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தவளை கேட்கவில்லை.
தான் பலமுறை சொல்லியும் தவளை கேட்காததால், கொக்கு தன்னுடன் தவளையை அழைத்துச் செல்ல சம்மதித்தது. ஒரு நீண்ட குச்சியைத் தவளை தன் வாயில் கவ்விக் கொள்ள வேண்டும் என்றும், அதன் மறுமுனையைத் தான் கவ்விக் கொண்டு வானத்தில் பறப்பது என்றும் தீர்மானம் ஆயிற்று.
மறுநாள் தவளை ஒரு குச்சியைத் தனது வாயில் இறுக்கமாகக் கவ்விக் கொள்ள, கொக்கு அதன் மறுமுனையை தனது வாயில் கவ்விக் கொண்டது. கொக்கு மெல்லப் பறந்து பறந்து உயரே சென்றது. தவளைக்கோ ஆனந்தம் தாங்க முடியவில்லை. தனது கண்களை உருட்டி மேலும் கீழும் வேடிக்கை பார்த்தவாறே சென்றது. பெரிய மரங்கள், பரந்த காடுகள், அழகான மலைகள், புல்வெளிகள் என எல்லாவற்றையும் பார்த்ததும் தவளைக்கு மிகுந்த பரவசம் ஏற்பட்டது.
மகிழ்ச்சி மிகுதியால் ‘ஆ! மிக்க நன்றி நண்பனே!’ என்று சொல்லத் தன் வாயைத் திறந்தது. அவ்வளவுதான். தன் வாயில் கவ்வியிருந்த குச்சியின் பிடியில் இருந்து நழுவி வேகமாகக் கீழே விழ ஆரம்பித்தது. அது கீழே விழும் முன்னரே வேகமாக வந்த ஒரு கழுகு அதைக் கவ்விச் சென்று விட்டது. கொக்கு ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தது.
‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழி வந்தது இதனால் தானோ! அதென்ன நுணல்? அடுத்த மாதம் சொல்கிறேன், சரியா?
சுப்புத்தாத்தா
அக்டோபர் 2007