நில்லிஸ் ஹோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,000 
 
 

அது ஒரு ஆதரவற்றோர் சிறுவர் இல்லம்… அன்பின் உருவான கருணை உள்ளம் கொண்ட மதர் இஸபெல்லா என்ற மூதாட்டிதான் இந்த இல்லத்தை நடத்தி வந்தார். இங்கே உள்ள இந்த ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு இணையாக ஒரு ஆதரவற்ற குதிரையும் அங்கே வளர்ந்து வந்தது.

அந்த குதிரைக்கு எந்தவொரு வேலையும் கிடையாது. அங்கு வளரும் அந்த எட்டு சிறுவர்களையும் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு சுற்றி வரும், ஓடும், நடனம் ஆடும்.

http://www.dinamalar.com/siruvarmala…es/Smr-1-1.jpg

தன்னைப் போன்ற இந்த அனாதை குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் அன்போடு இணைந்து வாழ வேண்டும் என்பதே அக்குதிரை நில்லியின் நோக்கம். குழந்தைகள் எத்தனை முறை சவாரி கேட்டாலும்… நேரம் காலம் பாராமல் அவைகளை முதுகில் ஏற்றிச் சென்று மகிழ்விப்பதிலேயே குறியாக இருக்கும். நாளாக நாளாக மதர் இஸபெல்லாவின் உடல் நிலையில் தொய்வு… இல்லத்திற்கு வருமானமும் குறைய ஆரம்பித்துவிட்டது… குழந்தைகளுக்கே அரை வயிறு சாப்பாடுதான் என்ற நிலையில் “நில்லிஸ்’க்கு எப்படி தீனி கொடுக்க முடியும்? தங்களின் “நில்லி’யை பட்டினி போட்டுவிட்டு தாங்கள் மாத்திரம் சாப்பிட்டால் எப்படி என்று உருகிய குழந்தைகள் தங்களுக்குக் கொடுக்கப்படும்.

அந்த அளவு சாப்பாட்டிலிருந்து சிறிது எடுத்துக் கொண்டு போய் நில்லிக்கு ஊட்டி விடுவர்… நில்லியின் கண்களிலிருந்து நீர்வழியும். “என் அன்பு செல்லங்களே! நீங்கள் எல்லாம் வாழ வேண்டிய இளம் சிட்டுக்கள்… இந்த கிழவனுக்காக நீங்கள் உங்கள் வயிற்றை வாடப் போட்டுக் கொண்டு எனக்கு இப்படி ஆகாரத்தை திணிப்பது என்ன நியாயம்?” என்பதைப் போல் குழந்தைகள் ஆகாரம் ஊட்ட வரும்போது முகத்தைத் திருப்பிக் கொள்ளும். ஆனால், அந்த குட்டிப் பாப்பாக்கள் விட்டு விடுமா என்ன?

இந்த காட்சியை பார்க்கப் பார்க்க “மதரி’ன் மனது மிகவும் வேதனை அடைந்தது. இப்படி இந்த நிலைமை நீடித்தால் குழந்தைகளின் உயிருக்கும் கூட ஆபத்தாகிவிடுமே என்று பயந்தவர்… நில்லியை வேறு எங்கேனும் கண்காணாத இடத்தில் கொண்டு போய் விட்டு விட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார். அன்று இரவு குழந்தைகள் அனைவரும் தூங்கி இருப்பார்கள் என்ற எண்ணத்தில் நில்லி மெதுவாக மதர் இஸபெல்லாவின் அறைக்குள் நுழைந்தது.

“என்னடா நில்லி இந்த நேரத்தில் இங்கு வந்தாய்?” என்றார் மதர்.
“மதர்! எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை… கருணையின் மொத்த உருவான நீங்கள் வளர்க்கும் இந்த கருணையின் படிமங்கள் செய்யும் அநியாயத்தைப் பார்த்தீர்களா? வாழ வேண்டிய குருத்துக்கள். தங்களுக்கு கிடைக்கும் அரை வயிற்று சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்து வலுக்கட்டாயமாக என் வாயில் திணித்து விடுகின்றனர். இது நியாயமா மதர்? நான் தீர்மானித்துவிட்டேன்.

“தேவமாதாவாகிய உங்களையும்… உங்களின் இந்த தெய்வீக குழந்தைகளையும் விட்டு விட்டு நான் வெகுதூரம் சென்று விடத் தீர்மானித்துவிட்டேன். என்னை காணாமல் குழந்தைகள் அழுவர். மதர்! நீங்கள் தான் குழந்தைகளை சமாதானப்படுத்த வேண்டும். நான் எங்கு இருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும், என் கடைசி மூச்சு வரை உங்களுக்காக பிராத்திப்பேன்… நான் புறப்படுகிறேன் மதர்,என்றது நில்லி.” “”ஓ! கிராண்ட்பா! எங்கே எங்களை மீறி நீங்கள் இங்கிருந்து ஒரு அடி எடுத்து வையுங்கள் பார்க்கலாம். அப்புறம் நடக்கிற கதையே வேறு…” ஒரே நேரத்தில் இந்த எட்டு குழந்தைகளும் குரல் எழுப்ப… மதருக்கு ஒரே திகைப்பு! ஏழு வயது சார்லி தான் குரல் எழுப்பினான்… “”மதர்! கிராண்ட்பா இங்கிருந்து வெளியே போகக் கூடாது. கிராண்ட்பா சாப்பாட்டிற்கு நாங்கள் ஏற்பாடு பண்ணிவிட்டோம்.
“என்னடா ராஜா! என்ன சொல்றே நீ? என்ன ஏற்பாடுகள் செய்.
“ஊஹூம் மதர்! அதெல்லாம்… “டாப் ஸீக்ரட்’ நாளை ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்,” என்று கறாராக சொல்லிவிட்டான் சார்லி.

“என்ன மதர் இது?” என்றான் நில்லி.
“நான் என்னப்பா செய்யட்டும்… அவர்கள் எட்டு நபர்கள்… நான் ஒருத்தி… இவைகளிடம் போய் மல்லுக்கு நிற்க முடியுமா?” என்று சொல்லிவிட்டார்.
மறுநாள் அதிகாலை…
சார்லி தலைமையில்… நிக்கலஸ்சும் மைக்கேலும் புறப்பட்டு விட்டனர். மற்ற ஐவரையும் தாத்தாவுக்கு காவலாக வைத்துவிட்டே புறப்பட்டனர்.
பக்கத்து ஊரிலுள்ள பத்திரிகை ஆபிஸை அவர்கள் அடைந்த போது பொழுது விடிந்து வெகுநேரம் ஓடிவிட்டிருந்தது. நல்ல வேளை ஆபிஸ் வாசலில் காவலாளி யாருமில்லை. ஒரே ஓட்டமாக ஆசிரியரின் அறைக்குள் ஓடி “”குட்மார்னிங் ஸார்” என்று கோரஸாக குரல் கொடுக்க தலை நிமிர்ந்தார்.
“நீங்கள் எல்லாம் எதற்கு இங்கு வந்தீர்கள்?” என்றார்.

“சார்! நாங்கள் பக்கத்து ஊரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தை சார்ந்தவர்கள். எங்கள் தாத்தாவுக்கு மிகவும் உடம்பு சரியில்லை. எங்கள் இல்லத்திற்கு சரியான வருமானம் இல்லாததால் அவருக்கு வயிறார ஒருவேளை ஆகாரம் கூட கொடுக்க முடியவில்லை. இவ்வுலகில் எங்களுக்குரிய ஒரே சொந்தம் மதர் இஸபெல்லாவும், தாத்தாவும் தான். இப்போது இவரும் போய் விட்டால்… மேற்கொண்டு பேச முடியாமல் திகைத்து நின்றனர்.
“சரி… இதற்கு நான் என்ன செய்ய முடியும்?”
“சார்! இதோ எங்கள் தாத்தாவை பற்றிய ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். தயவு செய்து இந்தக் கட்டுரையை உங்கள் பத்தரிகையில் பிரசுரித்தால் போதும். இதை படித்த பின் எல்லாரும் என் தாத்தாவிற்கு உதவ முன் வந்து விடுவர். தயவு செய்து இதனை பிரசுரித்து விடுங்களேன்.”
இக்கட்டுரையை படிக்க படிக்க ஆசிரியரின் கண்களில் நீர் உள்ளமெல்லாம் ரத்தக் கசிவு. என்ன மென்மை, என்ன கருணை இந்த தேவ குழந்தைகளுக்கு இவைகளின் கண்ணீரை துடைப்பது என் தலையாய கடமை என்று உள்ளூர தீர்மானித்துவிட்டு… “”உம் குழந்தைகளே! இந்த கட்டுரை மிக நீளமாக உள்ளது. இதை பிரசுரிக்க நிறைய பணம் செலவழியுமே. அதை எப்படி சமாளிப்பீர்கள்?” என்றார்.

“”சார்! பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். இங்கேயே வேலை செய்து பணத்தை கட்டிவிடுகிறோம்,” என்றார் சார்லி. “”அட… நீங்கள் என்ன வேலை செய்வீர்கள்?” ஏழு வயது மைக்கேல் அசரவில்லை. “சார்! இந்த ஆபிஸை பெருக்கி சுத்தம் செய்வான் சார்லி… நிக்கலாஸ் தோட்ட வேலை மிக நன்றாக செய்வான். நான் ஆம்லெட் போடுவதில் “எக்ஸ்பர்ட்’ ஆபிஸில் அனைவருக்கும் “ஆம்லெட்’ தயார் செய்து தருகிறேன். இதற்கெல்லாம் நீங்கள் கொடுக்க விரும்பும் சம்பளத்தை நீங்கள் பிரசுரத்திற்கான செலவிற்காக எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றான். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார் ஆசிரியர். “”குட் ஐடியா! சரி… இப்போது எல்லாரும் டிபன் சாப்பிடுங்கள். அப்புறம் நானும் உங்களுடன் உங்கள் இல்லத்திற்கு வருகிறேன். மதரின் பெர்மிஷன் இல்லாமல் உங்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள முடியாது அல்லவா? அவரை சந்தித்து அவர் ஒப்புக் கொண்டால் உங்களை இங்கு வேலைக்கு அமர்த்திக் கொள்கிறேன்,” என்றார். டிபன் வந்தது.

பெரிய பெரிய தட்டுக்களில் பிரெட்… பட்டர். ஆம்லெட்… விதவிதமான அயிட்டங்கள். “உம் சாப்பிடுங்கள்,” என்றார் ஆசிரியர். ஊஹூம். குழந்தைகள் தொடவில்லை… “சீக்கிரம் சாப்பிடுங்கள். நாம் புறப்பட வேண்டுமல்லவா? ஊஹூம் குழந்தைகள் தொடவில்லை. “”என்ன இது? நான் சொல்வது உங்கள் காதில் விழவில்லை… உம் சாப்பிடுங்கள்,” என்றார் மறுபடியும். “”சார்! எங்களை மன்னித்து விடுங்கள். அங்கே எங்கள் மதர், தாத்தா மற்றும் சகோதரர்கள் அனைவரும் பட்டினியாக இருக்கும் போது, அவர்களை விட்டு விட்டு நாங்கள் மட்டும் சாப்பிட்டால் எப்படி? நீங்கள் அனுமதித்தால் இவைகளை நாங்கள் எடுத்து போய் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறோம்,” என்றார் சார்லி.

“ஒ! ஜீஸஸ்…” அலறிவிட்டார் ஆசிரியர்.
“குழந்தைகளே! நீங்கள் சாப்பிடுங்கள். நாம் இப்போது போகும் போது அங்குள்ள அனைவருக்கும் நிறையவே சாப்பாடு எடுத்துப் போவோம்… உங்கள் கிராண்ட்பாவிற்கு தனியாக அவருடைய அயிட்டங்கள் தருகிறேன். இனி உங்கள் இல்லத்தில் என்றுமே “பசி’ என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது,” என்றார்.
காலையிலிருந்து மூன்று குழந்தைகளையும் காணவில்லை என்பதால் தவியாய் தவித்து கலங்கிப் போயிருந்தார் மதர். தாத்தாவின் சோகத்திற்கு கேட்கவா வேண்டும்? தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று மற்ற ஐந்து குழந்தைகளும் ஒரேயடியாக சாதித்துவிட்டனர். (என்ன ஒரு அழுத்தம்).
ஒரு பெரிய படகு காரிலிருந்து இறங்கிய ஒரு பெரிய மனிதரைத் தொடர்ந்து தன் குழந்தைகள் இறங்குவதை கண்ட மதர் ஓடிப் போய், “”எங்களைத் தவிக்க விட்டு விட்டு எங்கே போனீங்கள்?”
இடைவெட்டிய ஆசிரியர் மிஸ்டர் கிப்ஸ், “”மதர்! ஒன் மினீட்” என்று அவர் முன் மன்னியிட்டு சிலுவைக் குறி பெற்றுக் கொண்டார்.

“”மதர்! நீங்கள் என்ன முயன்றாலும் இந்த சுட்டி பட்டாளத்திடமிருந்து உண்மை வெளிவரப் போவதில்லை. முதலில் நீங்கள் அனைவரும் டிபன் சாப்பிடுங்கள் என்று சொல்லி பெரிய அட்டை பெட்டியை அவர்கள் வைத்தனர். “”தாத்தாவுக்கு தனியாக புல் கொள்ளு மற்றும் தீனி வகைகளும் நிறையவே கொண்டு வந்திருக்கிறேன். அவரை கவனிக்க ஒரு ராசியான வெட்னரி டாக்டர் இன்றும் சிறிது நேரத்தில் வருகிறார். இனி அவர்கள் இங்கேயே தங்குவார். இந்த இல்லத்தின் பொறுப்பு அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்துவிட்டேன்… மதர்! நீங்கள் உருவாக்கி இருக்கும் இந்த மனிதநேய தேவ குழந்தைகளைப் போல் இன்னும் பல குழந்தைகளை உருவாக்க வேண்டும். இதுதான் என் விருப்பம்,” என்றார்.

பத்திரிகையில் பிரசுரமான கட்டுரையைத் தொடர்ந்து பணம் குவியத் துவங்கியது. கட்டடம் புது பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, பல ஆதரவற்ற குழந்தைகள் இங்கே அடைக்கலமாகிவிட எப்போதும் சிரிப்பும் கும்மாளமாக ஜொலிக்க ஆரம்பித்தது… நில்லி பூரண குணமடைந்து விட்டது. “”டேய்! இனி இவர் நம் கிராண்ட்பா இல்லை… கிராண்ட் சன்,” என்று அவரின் பேரன் பேத்திகள் அவரை கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தனர். “”மதர்! நாம் இன்று இத்தனை உயர் நிலையில் இருப்பதற்கு காரணம் தாத்தா அல்லவா? அதனால் இனி இதை “நில்லிஸ் ஹோம்’ என்று அழைக்க வேண்டும் என்று சொல்லிவிட… நற்பண்புகளுக்கு இலக்கணம் வகிக்கும் தேவ புஷ்பங்களை உருவாக்கும் அந்த “நில்லிஸ் ஹோம்’ நாளுக்கு நாள் பிரபலமடைந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *