தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு நாய், ஒரு வீட்டின் மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தது. மாட்டுக்குப் போடுவதற்கென தொழுவத்தில் நிறைய வைக்கோலை சேமித்து வைத்திருந்தான் வீட்டுக்காரன். வைக்கோலைக் கண்டதும் நாய்க்கு அது அருமையான படுக்கையாகத் தோன்றியது. வைக்கோலின் மீது ஏறி சுகமாக படுத்துக்கொண்டு உறங்க முற்பட்டது.
வீட்டுக்காரனுடைய மாடு தொழுவத்தினுள் வந்து தனக்கென வைக்கப்பட்டிருந்த வைக்கோலைத் தின்னத் தொடங்கியது.
உடனே நாய், “லொள் லொள்’ என ஆர்ப்பாட்டமாக குலைத்து மாட்டை விரட்ட முயற்சி செய்தது.
“”இது எனக்காக என் எஜமானர் சேமித்து வைத்திருக்கும் வைக்கோல். நான் இதைத் தின்னுவதை நீ ஏன் தடுக்கிறாய்?” என மாடு நாயைப் பார்த்துக் கேட்டது.
“”வைக்கோல் யாருக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் இப்போது இதில் படுத்துத் தூங்க இருக்கிறேன். என் தூக்கத்தைக் கெடுக்காதே போ!” என்று கூச்சல் போட்டது நாய்.
“”இது என்ன நியாயம்? நீ உறங்க வேண்டும் என்றால், வழக்கமான உன் குப்பை மேட்டுக்குப் போவதுதானே!” என்று மாடு கேட்டது.
“”என்னை அதிகாரம் செய்ய நீ யார்? உன்னை வைக்கோலைத் தின்ன விட மாட்டேன். நான் இந்த வைக்கோலில் படுத்து உறங்கத்தான் செய்வேன்,” என்று நாய் அடம் பிடித்தது.
மாடு, நாயுடன் விவாதம் செய்ய விரும்பாமல், ஒரு பக்கமாக இழுத்து வைக்கோலைத் தின்னத் தொடங்கியது. நாய் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டு மாட்டின் மீது பாய்ந்து அதைக் கடித்து விரட்டிவிட்டது.
நாய் வைக்கோல் மீது சுகமாகப் படுத்து உறங்கத் தொடங்கியது. நாய்க்கு உணவு வைக்கோல் அல்ல. மாட்டின் உணவு அது. நாய், வைக்கோலை தான் தின்ன மாட்டாத நிலையில், மாட்டையும் தின்ன விடவில்லை.
உலகத்திலே இந்த மாதிரி சில ஆட்கள் உண்டு. இவர்கள் தானும் வாழ மாட்டார்கள்; பிறரையும் வாழ விட மாட்டார்கள். இம்மாதிரி இவர்கள் செய்வதற்கு நியாயமான காரணமே இருக்காது. வெறும் வயிற்றெரிச்சல், பொறாமை போன்ற தீய குணங்கள் தான் இதற்குக் காரணமாக இருக்கும். நீங்களும் இப்படிச் செய்யாதீர்கள் குட்டீஸ்! ***
– ஆகஸ்ட் 20,2010