தீபாவளி நாள். மாலை மணி நான்காகிவிட்டது. மழை வரும்போல லேசாக இருட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வடுகவிருட்சியூர் கிராமமும் தீபாவளி பரபரப்பிலிருந்து கொஞ்சம் அமைதியாயிருந்தது.
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ராஜேந்திரனும் முகுந்தராஜனும் தீபாவளி சந்தோஷங்களை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். குறும்புக்கார வால் பசங்களான அவர்கள் அருகிலுள்ள கிளியனூர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
ராஜேந்திரன் கையில் ஓர் அதிரசம் இருந்தது. அந்தப் பலகாரத்தை எதிர்வீட்டு அமுதா கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போயிருந்தாள். முகுந்தராஜன் கையிலோ ஒரு சரவெடிக்கட்டும் தீப்பெட்டியும் இருந்தது.
“”என்னடா, அதிரசத்தை தின்னாமல் ஏதோ யோசனை செய்து கொண்டு இருக்கிறாய்?” என்றான் முகுந்தராஜன்.
“”நீதான் அதிரசம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாய். பரவாயில்லை. எனக்கு ஒரு யோசனைடா. நம்ம கிளாசிலே படிக்கிறானே வடக்குத் தெரு சோமு, அவன் வீட்டு நாய் ஜிம்மி எப்போதும் வாசலிலேதானே படுத்திருக்கும்?” என்று கேட்டான் ராஜேந்திரன்.
குழப்பத்துடன், “”ஆமாம்… எதுக்கு கேட்கிறே..?” என்றான் முகுந்தராஜன்.
“”இல்லே, அந்த சோமு ஒருதடவை கணக்கு வாத்தியாரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி எனக்கு அடிவாங்க வைத்தான். அதற்குப் பதிலடியாக உன் கையிலிருக்கும் சரவெடியை அவன் வீட்டு நாயின் வாலில் கட்டிக் கொளுத்திவிடலாமேன்னு பார்க்கிறேன்..” என்றான் ராஜேந்திரன்.
“”நல்ல ஐடியாடா! சரி கிளம்பு, இந்த தீபாவளியில் அந்த வேடிக்கையையும் பார்த்துடுவோம்…” என்றபடி எழுந்தான் முகுந்தராஜன்.
ராஜேந்திரனும் முகுந்தராஜனும் வடக்குத் தெருவை நோக்கி நடந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே சோமு வீட்டு நாய் அங்கே வீட்டு வாசலில்தான் இருந்தது.
“”அந்த நாயின் முகத்துக்கு நேரே ஆனால் அதன் வாய்க்கு எட்டாதபடி நீ அதிரசத்தை அதற்குக் கொடுப்பது போல் பாசாங்கு காட்டு! நான் அந்த நேரத்தில் வேகமாக இந்த சணலினால் சரவெடியைக் கட்டிக் கொளுத்திவிடுகிறேன்..” என்றான் முகுந்தராஜன்.
சோமு வீட்டு நாய் ராஜேந்திரன் கையில் இருந்த அதிரசத்தைப் பார்த்து சந்தோஷத்துடன் வாலை ஆட்டியது. அதன் முகத்துக்கு நேரே மேலே தூக்கி அதிரசத்தைக் காட்டினான். அது அதிரசத்தை அவன் தனக்குக் கொடுக்கப் போகிறான் என்று தலையைத் தூக்கி ஆவலுடன் பார்த்தது. அதேநேரத்தில் வெகுவேகமாக முகுந்தராஜன் அதன் வாலில் சரவெடியைக் கட்டி, மத்தாப்புக் குச்சியை “சரக்’கென்று கொளுத்தினான்.
அப்போது தற்செயலாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த சோமு, ஒரு விநாடி திகைத்துப் போனான். அடுத்த தெருப் பசங்க, நம்ம வீட்டு நாய் வாலில் பட்டாசைக் கட்டிக் கொளுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொண்டான். உடனே பதற்றத்துடன் “”ஜிம்மி… ஜிம்மி….” என்று குரலெழுப்பினான்.
சோமுவின் குரலைக் கேட்ட அந்த நாய் குபீரென்று பாய்ந்து ராஜேந்திரன் கையிலிருந்த அதிரசத்தை “லபக்’கென்று கவ்விக் கொண்டு வீட்டுக்குள்ளே ஓடி மறைந்தது. அதேசமயம் , ராஜேந்திரனும் முகுந்தராஜனும் “”ஆ… ஊ…” என்று கத்தினார்கள்.
ஏனென்றால் நாய், ராஜேந்திரன் கையிலிருந்த அதிரசத்தைக் கவ்விக் கொண்டு ஓடியபோது, அவன் கையில் அதன் பல் கீறிவிட்டது. அதேசமயம், திடீரென்று நாய் எழுந்து ஓடியதால், பதற்றத்தில் பட்டாசுக் கட்டில் தீ வைப்பதற்குப் பதிலாக தன் கையையே சுட்டுக் கொண்டான் முகுந்தராஜன்.
கையில் கீறலுடன் அதிரசத்தை இழந்த ராஜேந்திரனும் கையை சுட்டுக் கொண்ட முகுந்தராஜனும் பதற்றத்துடன் ஓட்டமும் நடையுமாக திரும்பினார்கள். ஏதோ எதிர்பாராத அதிர்ஷ்டம் போல சோமு வீட்டு நாய்க்கு ஒரு சூப்பரான அதிரசமும் சோமுவுக்கு ஒரு நல்ல பட்டாசுக் கட்டும் கிடைத்தன.
ராஜேந்திரனும் முகுந்தராஜனும் வேக வேகமாக வடக்குத் தெருவைக் கடந்து அய்யனார் கோவில் பக்கம் திரும்பும்போது, சோமு வீட்டு வாசலில் படபடவென்று சரவெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. அது நிச்சயமாக இவர்களுடைய பட்டாசுக் கட்டாகத்தான் இருக்கும்!
– சின்னஞ்சிறு கோபு (நவம்பர் 2011)