ரவி மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். இவன் தந்தை மட்டும் கூலி வேலைக்குச் சென்று வந்தார். ரவியைச் சேர்த்து அவர்கள் வீட்டில் நான்கு பேர். தந்தையின் தினக் கூலி அன்றாடம் அவர்கள் வயிற்றுப்பாட்டைக் கழுவவே சரியாக இருந்தது.
சமயங்களில் கூலி வேலை கிடைக்காவிட்டாலோ, அன்றைய வேலைக்கு கூலி கிடைக்காவிட்டாலோ அன்று பட்டினிதான் கிடக்க நேரும் அல்லது அக்கம் பக்கத்தினரிடம் அரிசியோ பணமோ கடன் வாங்கித் தான் அன்றைய பாட்டை ஓட்ட வேண்டும்.
தங்களுக்கு மட்டும் ஏன் இந்த வறுமை? இந்த வறுமையை நீக்க என்ன வழி என்று ரவி யோசிக்காத நாளே இல்லை.
http://www.dinamalar.com/siruvarmala…es/Smr-1-1.jpg
ஒரு நாள்—
அந்த ஊரில் காமாட்சி பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள். அந்த வழியாக சென்ற ரவி மிகவும் ஏக்கமாக வடைகளை பார்த்தபடியே சென்றான். அவனை பார்த்து இரக்கப்பட்ட பாட்டி, “ரவி இங்க வா. இந்தா வடை சாப்பிடு,” என்றாள்.
“பாட்டி என்கிட்ட காசு இல்லை. வேணும்னா உனக்கு நான் விறகு பொறுக்கி தரட்டுமா?” என்றான் ரவி.
“சரிடாப்பா! இந்தா இந்த வடையைச் சாப்பிடு,” என்றாள் பாட்டி.
“ஏண்டா கப்பல் கவுந்த மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு இருக்க… என்னாச்சு உனக்கு?” என்றாள் பாட்டி.
“பாட்டி எல்லார் வீட்லயும் வசதியா இருக்காங்க. ஆனால், எங்க வீட்ல மட்டும்தான் வறுமை தாண்டவம் ஆடுது. என்ன செய்றது பாட்டி!” என்று சொல்லும்போதே கண்களில் கண்ணீர் முட்டியது ரவிக்கு.
“குடும்பத்தில் ஒருவர் வேலை பார்த்து குடும்பம் நடத்துவது இக்காலத்தில் மிகவும் கஷ்டம். நாலுபேர் இருந்தால் நாலு பேரும் வேலை செய்ய வேண்டும் அல்லது நாலு விதத்திலாவது வரும்படி வர வேண்டும். அப்பொழுதுதான் கஷ்டமில்லாமல் காலத்தை ஓட்ட முடியும்,” என்றாள் பாட்டி.
அது ரவியின் மனதில் பசக்கென்று ஒட்டியது.
உடனடியாக அம்மா எங்காவது வேலைக்கு சென்றால் சிறிது கஷ்டம் குறையுமே என்று தோன்றியது. அம்மாவிடம் எப்படி எடுத்துச் சொல்வது என்ற தயக்கம்.
ஒரு நாள்—
“அம்மா என் நண்பன் ஜானுக்கு பிறந்த நாள். வகுப்பில் உள்ள எல்லாருக்கும் கேக் கொடுத்தான். சமோசா, கூல்டிரிங் என்று ஒரே அமர்க்களம் அம்மா,” என்றான் ரவி.
“அவங்க அப்பா அம்மா இரண்டு பேரும் ஆபிஸ்ல வேலை செய்றவங்களா இருப்பாங்க. அதுதான் இப்படி செலவு செய்ய முடியுது,” என்று கூறினாள்.
“அம்மா நீங்க ஏம்மா வேலைக்கு போகலை?”
“நான் படிக்காத முண்டமாச்சே? என்ன வேலைக்குப் போவது?”
“படிக்காத எல்லாரும் ஏதேதோ வேலை செய்யிறாங்களே?”
“அப்ப என்னையும் வேலைக்குப் போகச் சொல்றியாக்கும். உங்கப்பனே என்னை வேலைக்குப் போகச் சொன்னதில்லை. நீ சொல்லுறே போய்த்தான் பார்க்கிறேன். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கிடைத்தால் காய்கறிச் செலவுக்காச்சே,” என்று சொல்லிக் கொண்டே அம்மாவும் பிற வீடுகளில் வீட்டு வேலைகள் செய்தாள்.
முதலில் துணி துவைப்பது, பத்துப் பாத்திரம் தேய்ப்பது என்று எடுபிடி வேலைதான். சிறிதுதான் கூலி கிடைத்தது. சமையல் வேலைக்குச் சென்றால், நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் பின்னர் சமையல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் கஷ்டம் சிறிது குறைந்தது.
தந்தைக்கு ஒரு நாள் வேலை கிடைக்காவிட்டாலோ அல்லது வேலைக்குச் சென்று கூலி கிடைக்காவிட்டாலோ சமாளித்துக் கொள்ள முடிந்தது. வேலைக்கு செல்லும் வீடுகளிலிருந்து ரவிக்கு பழைய சட்டை டிராயர், தங்கைக்கு கவுன், தனக்கு பழம் புடவைகள் என்று வாங்கி வந்தாள்.
பண்டிகை காலங்களில் இனிப்பும், போனசும் கிடைத்தது. வறுமை அவர்கள் வீட்டை விட்டு ஓடத் தொடங்கியது.
“என் மகன் பேச்சை கேட்டதால் தான் நம்ப வீடு உருப்புட்டது,” என்றாள் அம்மா.
“அப்பா நாலுவித வருமானம் வரும்படி நாம் செய்யணும். அப்பதான் நாமும் இந்த சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கலாம்,” என்றான் ரவி. யோசித்து இரண்டு ஆட்டையும், நான்கு கோழியும் வாங்கினர். தந்தை ஓய்வு நேரங்களில் வீட்டின் பின்புறம் காய்கறித் தோட்டம் போட்டார். ஆடுகள் குட்டிப் போட்டு எண்ணிக்கை வளர்ந்தன. வளர்ந்த ஆட்டை நல்ல விலைக்கு விற்றனர். கோழி முட்டைகளை விற்றனர். வீட்டு சமையலிலும் முட்டை இடம் பெற்றது. விருந்தினர் வந்தால் கோழியும் உணவாயிற்று. சிறிது பணம் சேரவும் மாடு வாங்க நினைத்து அதைச் செயல்படுத்தினர். மாடு பால் கறந்தது. பாலை வீட்டிற்கும் தாராளமாக பயன்படுத்தினர். மீதியை வீடுகளில் வாடிக்கை ஏற்படுத்திக் கொண்டனர்.
வீட்டுத் தோட்டம் நன்கு வளர்ந்து காய்கறிகள் காய்க்க ஆரம்பித்தன. வீட்டிற்கு தேவையான காய்கறி போக மற்றவற்றை அக்கம் பக்கத்தில் விற்றனர்.
ஆக, தற்போது அவர்களுக்கு கோழி முட்டை, காய்கறி, பால் விற்பனை மூலம் தயிர், மோர் வெண்ணை நெய் என்று பணம் சேர்ந்தது. ஆடு, வளரும் போது பெரிய தொகையாகக் கிடைத்தது.
அக்கம் பக்கத்தவர் பணக் கஷ்டம் என்றால் இவர்களிடம் கடன் கேட்டு வந்தனர். ரவியின் தாய் கண்டிப்பானவர். அவர்களிடம் கடன் கொடுத்துவிட்டு வசூலுக்கு யார் அலைவது? திருப்பித் தருவர் என்பது தான் என்ன நிச்சயம்? அதனால் பணம் தேவையெனில் ஏதாவது பொருளை எடுத்து வந்தால் தருகிறேன். பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பொருளை திரும்பிப் பெற்றுச்செல்லலாம் என கன்டிஷன் போட்டார். அதற்கும் சம்மதித்து பலர் கடன் வாங்கிச் சென்றனர். ஒரு அறை நிறைய பண்டம் பாத்திரங்கள் சேர்ந்து விட்டது. ஒவ்வொரு பாத்திரத்தின் மீதும் யார் பாத்திரமோ அவர்கள் பெயர் எழுதி ஒட்ட வேண்டியது ரவியின் வேலை.
பெண்கள் என்றால் நகை ஆசை இல்லாமல் இருக்குமா? சேர்ந்த காசில் ரவியின் தாயார், காதில், கையில், கழுத்தில் என்று நகைகளாக வாங்கி அணிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
“”நகைகள் ஒன்றிரண்டு போட்டுக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். நிறைய நகைகள் உயிருக்கே ஆபத்து. மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படவும் செய்கிறது. அதனால் நகையில் போடும் பணத்தை பாங்கிலோ, போஸ்டாபிசிலோ சேமித்து வைத்தால், சேமிப்புக்கு சேமிப்பும் ஆயிற்று. வட்டியும் வரும் என்று ரவி சொன்ன யோசனைப்படியே தன் தாய் பெயரிலும் தந்தைப் பெயரிலும் ரவி பெயரிலும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு பணம் செலுத்தி வந்தனர். சேமிப்பும் வளர்ந்தது, வட்டியும் சேர்ந்தது.
வசதிக் கூட குடிசை வீடு பிடிக்காமல் ஓட்டு வீடாகி அதுவே மாடி வீடானது. ரவி சொந்தமாக சைக்கிள் வாங்கிவிட்டான். பள்ளிக்கு கடைகளுக்குச் செல்வது சைக்கிளில்தான். ரவியும், அவன் பெற்றோரும் நினைத்துப் பார்த்தாலே ஆச்சரியமாயிருந்தது. வறுமையில் உழன்று சோற்றிற்கே வழியின்றி சிரமப்பட்ட தாங்கள் இந்த நிலைக்கு எப்படி உயர்ந்தோம் என்று ஆச்சரியப்படுவர். ஐடியா சொன்ன காமாட்சி பாட்டிக்கு புடவை, பழம், சுவீட், பணம் எல்லாம் சேர்த்து எடுத்துச் சென்று மரியாதைச் செலுத்தி மகிழ்ந்தான் ரவி.