(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாயிடம் அவன் மிக அன்பு வைத்திருந்தான். அவன் அடிக்கடி அதைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான். அதனுடன் சேர்ந்து ஓடி ஆடி விளையாடுவான். எங்கு போனாலும் அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான். அன்பு மேலீட்டால் அதைத் தன் முகத்துக்கு நேரே தூக்கி முத்தமிடுவான்.
ஒருநாள் ஓர் அறிவாளி இதைக் கவனித் தார். அந்த மனிதன் நாயோடு விளையாடு வதையும் அதற்கு முத்தமிடுவதையும் கண்டு அவர் சங்கடப்பட்டார். அவர் அந்த மனிதனை அழைத்தார்.
“இந்த வேலையை விட்டுவிடு. அந்த நாய்க்குப் பகுத்தறிவு கிடையாது. நீ அதை இப்படிக் கொஞ்சுவது சரியில்லை. என்றாவது ஒருநாள் அறிவற்ற அது உன்னைக் கடித்து விடக்கூடும். அதற்கு வெறி வந்தபோது அது உன்னைக் கடித்தால், உன் உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று எச்சரித்தார்.
அவர் கூறுவது சரியென்றே அவனுக்குப் பட்டது. அன்று முதல் நாயோடு கொஞ்சு வதைவிட்டு விட்டான். அதைத் தூர எறிந்து விட்டுப் பேசாமல் இருந்தான். ஆனால் அந்த நாய் வழக்கம் போல அவனிடம் வந்து விளையாடத் தொடங்கியது. வாலைக் குழைத்துக் கொண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. அன்புடன் மோந்து கொண்டே அவன் மடிமீதும் தோள்மீதும் தாவி விளையாட முயன்றது. ஆனால் அந்த மனிதன் அப்படி அந்த நாய் கொஞ்ச வரும் போதெல்லாம் அதை அடித்துத் துரத்தினான். பலமுறை நன்றாக அடிபட்ட பிறகுதான் அது அவனிடம் நெருங்காமல் இருந்தது. அவனுக்குத் தொல்லையும் விட்டது.
அறிவற்றவர்களிடம் பழகுவது எப்போதும் ஆபத்தானது. பழகிவிட்டால், நாம் வெறுத்தாலும் அவர்கள் நம்மை விட்டுப் போக மாட்டார்கள். அவர்களுடைய தொல்லை நீங்கும் வரை அவர்களை விரட்டி ஒதுக்குவது தான் நாம் செய்யத்தக்க செயலாகும்.
தாழ்ந்தவர்களோடு அன்பு கொள்ளக் கூடாது.
– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.