நான்கு நண்பர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 86 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தெளிவான நீர் ஓடும் கோதாவரிக் கரையில் ஓர் இனிய காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஓர் இலவமரத்தில் ஒரு காகம் வாழ்ந்து வந்தது! 

ஒரு நாள் விடியற்காலையில் அந்தக் காகம் தன் னத்துடன், ஒரு குளத்தில் போய்க் குளித்து, சிறகு களைக் காய வைத்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஓரு வேடன் வந்து சேர்ந்தான். அவன் தன் கைகளில், வலையும், வில்லும், அம்புகளும் வைத் திருந்தான். வேட்டையாட வந்த அவனைக் கண்ட வுடன் எல்லாக் காகங்களும் பறந்து ஓடி விட்டன. இலவமரத்துக் காகம் மட்டும் ஓடவில்லை. இந்தக் கொடியவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வேண்டும் என்று அது ஒரு சோலைக்குள்ளே போய் ஒளிந்து கொண்டது. 

அந்த வேடன் வலையை விரித்து வைத்து அதைச் சுற்றித் தீனியும் போட்டு வைத்தான். ஏதா வது பறவைகள் வந்து அகப்படாதா என்று எதிர் பார்த்து அவன் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந் தான். அப்போது புறாக் கூட்டம் ஒன்று அந்த வழி யாகப் பறந்து வந்தது. அருகில் இருந்த மரத்தில் இறங்கிய அந்தப் புறாக்கள் கீழே கிடந்த தானியங்களைக் கண்டன. 

அந்தப் புறாக்களின் அரசனும் அந்தக் கூட்டத் தோடு வந்திருந்தது. அது மிகுந்த அறிவுள்ளது. அந்த அரசப் புறா தன் கூட்டத்தைப் பார்த்து, ‘காட்டில் தானியம் கிடப்பதென்றால், தானாக வந்து கிடக்காது. யாரோ இதைக் கொண்டு வந்து எதற்கா கவோ போட்டு வைத்திருக்க வேண்டும். இதை நன் றாகத் தெரிந்து கொள்ளாமல் நாம் போய்த் தின்னக் கூடாது. ஆராயாமல் நாம் இதைத் தின்னப் புகுந் தால் புலியால் மாய்ந்த பார்ப்பனன் போலத் துன்பமடைய நேரிடும் என்று மற்ற புறாக்களை எச்சரித்தது. 

அப்போது அந்தப் புறாக்களில் ஒன்று ‘இப்படி ஒவ்வொன்றுக்கும் யோசனை செய்து கொண்டிருந் தால் நாம் இரையே இல்லாமல் இறந்து போக வேண்டியதுதான்! எப்படியும் எந்தெந்தக் காலத்தில் என்னென்ன நடக்க வேண்டுமோ, அந்தந்தக் காலத் தில் அது அது அப்படி அப்படி நடந்தே தீரும்’ என்று சொல்லியது. உடனே எல்லாப் புறாக்களும் இறங்கித் தீனி தின்னப் போய் வலையில் மாட்டிக் கொண்டன. 

இதைக் கண்ட அந்த அரசப்புறா எல்லாப் புறாக்களும் சிக்கிச் சாகும்போது, தான் மட்டும் உயிர் பிழைத்திருப்பது தக்கதல்ல என்று மனத்தில் நினைத்துக் கொண்டு, தானும் வலையில் போய் வீழ்ந்து அகப்பட்டுக் கொண்டது. 

அப்போது அதன் மனத்தில் ஓர் அருமையான எண்ணம் தோன்றியது. 

‘வேடனிடம் அகப்படாமல் தப்ப வேண்டுமானால், எல்லோரும் இந்த வலையைத் தூக்கிக் கொண்டு ஒன்றாகப் பறப்பதைத் தவிர வேறு வழி யில்லை’ என்று அரசப்புறா மற்ற புறாக்களைப் பார்த்துக் கூறியது. 

உடனே எல்லாப் புறாக்களும் கூடிப் பறந்தன. வலையை எடுத்துக் கொண்டு அவை வானத்தில் பறந்ததைக் கண்ட வேடன் கலங்கிப் போனான். புறாக்கள்தான் அகப்படவில்லை என்றால், வலை யும் போச்சே என்று மனம் வருந்தினான். 

‘இந்தப் புறாக்கள் எவ்வளவு தூரம்தான் இப்ப டியே பறந்து ஓடப் போகின்றன. விரைவில் களைப் படைந்து கீழே விழத்தான் நேரிடும். அப்போது அவற்றைப் பிடித்துக் கொள்வதோடு வலையையும் திரும்பப் பெறலாம்’ என்று எண்ணிக் கொண்டு அந்த வேடன் அவற்றின் பின்னாலேயே ஓடினான். ஆனால், அவனுக்குத்தான் விரைவில் களைப்பு வந்ததே தவிர அந்தப் புறாக்கள் களைக்கவே யில்லை. அவை வெகு தொலைவில் பறந்துபோய் அவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன. 

என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்காக இலவ மரத்துக் காகமும் பின்னால் பறந்து சென்று கொண்டேயிருந்தது. 

வலையோடு புறாக்கள் பறந்து சென்று கொண் டிருக்கும் போது ஒரு காடு குறுக்கிட்டது. அதைக் கண்டவுடன் அரசப்புறா, ‘எல்லோரும் இங்கே இறங்குங்கள். என் நண்பனான எலி ஒன்று இங்கே இருக்கிறது’ என்று கூறியது. எல்லாப் புறாக்களும் அங்கே இறங்கின. 

சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு புறாக்கள் கூட்டமாக இறங்கியதைக் கண்டவுடன் என்னவே ஏதோ என்று பயந்து போன அந்த எலி, தன் வளைக்குள்ளே ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. 

அதன் வளைக்கு நேரே இறங்கிய புறாவரசன், ‘நண்பா, நண்பா என் எலி நண்பா, இங்கே வா என்று வளைத்துளையில் மூக்கை வைத்துக்கொண்டு கூப்பிட்டது. 

நண்பனின் குரலைக் கேட்டு வெளியில் வந்தது அந்த எலி. அது தன் நண்பன் நிலையைக் கண்டு மனம் வருந்தியது. 

‘எதையும் முன்னும் பின்னும் சிந்தித்துச் செய்யக் கூடிய அறிவாளியான நீ எப்படி இந்த வலையில் சிக்கினாய்?’ என்று அந்த எலி கேட்டது. 

‘எவ்வளவு சிறந்த அறிவிருந்தாலும் எவ்வளவு சாமார்த்தியம் இருந்தாலும் விதியை மீறமுடியுமா? எந்த இடத்தில், எந்தக் காலத்தில், எப்படிப்பட்ட காரணத்தினால், யாரால் எவ்வளவு நல்வினை தீவினைகளின் பயனை அனுபவிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் அந்தக் காலத்தில், அப்படிப்பட்ட காரணத்தால், அவரால் அல்வளவும் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்!’ என்று புறா பதில் கூறியது. 

கடலில் திரியும் மீன்களும், வானில் பறக்கும் பறவைகளும், தம்மைத் தொடர்ந்து வீசப்படுகின்ற வலையில் சிக்குகின்றன. குன்று போன்ற பெரிய யானையும், வெம்மையான தன் நஞ்சினால், எவரை யும் கொல்லக் கூடிய பாம்பும், நெஞ்சின் நிலை தளர்ந்து தம்மைப் பிடிப்பவர்க்குக் கட்டுப்பட்டு விடு கின்றன. வானில் இருக்கும் பெரும் சுடர்களான கதிர வனும், நிலவும்கூட கிரகணப் பாம்பால் பீடிக்கப் படு கின்றன. அறிவில் மிக்க புலவர்களும் வறுமைக்கு ஆட்படுகின்றனர். அறிவில்லாத அற்பர்களின் கை யிலே பெரும் பணம் போய்க் குவிகிறது. எல்லாம் அவரவர் நல்வினை தீவினைகளின் பயனேயாகும். இந்த வினையின் பயனை யாராலும் தள்ளமுடியாது. 

இவ்வாறு கூறிய அந்த எலி, தன் நண்பனான அரசப்புறாவையும் அதன் கூட்டத்தையும் சிக்க வைத்துக் கொண்டிருந்த அந்த வலையைத் தன் கூர்மையான பற்களால் அறுத்தெறிந்து அவற்றை விடுவித்தது. அரசப்புறாவும் அந்த எலியும் ஒன்றுடன் ஒன்று மிக அன்பாக நெடுநேரம் பேசிக் கொண் டிருந்தன. பின் எலியிடம் விடை பெற்றுக்கொண்டு புறாக்கள் பறந்து சென்றன. 

அவை சென்றபின் அந்த எலி மீண்டும் தன் வளைக்குள்ளே போய் நுழைந்து கொண்டது. 

புறாக்களைத் தொடர்ந்து பறந்து வந்த இலவ மரத்துக் காகத்திற்கு அந்த எலியின் மீது அன்பு பிறந்தது. ஆகவே, அது கீழே இறங்கி வந்து, எலி வளையின் வாயிலில் மூக்கை வவத்து அந்த எலி யைக் கூப்பிட்டது. 

எலி வளையின் உள்ளேயிருந்தபடியே, ‘நீ யார்? ஏன் என்னை அழைத்தாய்?’ என்று கேட்டது. 

‘நான் ஒரு புறாவரசனின் பின்னால் வந்தேன். உன்னுடைய பெருந்தன்மையையும், நற்குணத்தை யும், நட்புத் திறத்தையும், மரியாதைப் பண்பையும் பாசவுறவையும் கண்டு மனம் வசப்பட்டேன். நானும் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன், அதற் காகவே அழைத்தேன்’ என்று காகம் கூறியது. 

அதற்கு அந்த அறிவுமிகுந்த எலி, ‘நானோ உன்னால் தின்னப்படும் இரைகளில் ஒன்றாயுள்ள வன். நீயோ என்னைப் போன்ற எலிகளைக் கொன்று தின்னும் இனத்தைச் சேர்ந்தவன். நானும் நீயும் நட்பாய் இருப்பது எனக்குப் பேராபத்தாய் முடியுமே யல்லாமல் வேறல்ல. நரியோடு நட்புக் கொண்டாடிய மான், வலையில் சிக்கிக் கொண்டது போல், எனக்குத் தீங்கு வரக் கூடும், ஆகையால் உன்னுடன் நண்பனாயிருக்க நான் விரும்பவில்லை என்று பதில் சொல்லிவிட்டது. 

அதைக் கேட்ட காகம், மனங்கரையும்படியாக இவ்வாறு கூறியது: 

‘ஐயோ! எலியே, நீ என்ன சொல்லி விட்டாய். என் குணம் தெரியாமல் இவ்வாறு பேசி விட்டாய். உன்னைக் கொன்று தின்றால் ஒரு வேளைப் பசி கூட எனக்குத் தீராதே. ஆனால், நட்பாக இருந் தால் எத்தனையோ காலம் நாம் நன்றாக வாழலாமே! 

‘அந்தப் புறாவரசனிடம் உள்ளது போல் என்னி டமும் நீ நட்பாக இருந்தால், என் உயிருள்ள அளவும் நான் நட்பு மாறாமல் இருப்பேன். இது உண்மை. சூதாகச் சொல்லும் வார்த்தை அல்ல. 

‘அலை வீசிக் கொண்டிருக்கும் கடல் பரப்பிலே, எரியும் கொள்ளிக்கட்டை போய் நுழைந்தால் கடல் நீரா வற்றி விடும்? கொள்ளித் தீ தானே அணையும். அறிவுள்ள மேலோரிடம் கோபம் பற்றி எரியாது. அவர்கள் கடலைப் போன்ற தங்கள் விரிந்த நெஞ் சால் அந்தக் கோபத் தீயை அணைத்து விடுவார்கள்’ என்று இலவமரத்துக் காகம் எடுத்துக் கூறியது. 

‘உங்கள் காக்கைப் புத்தியே ஒரு நிலையில்லா தது. உன்னை நண்பனாகச் சேர்ப்பதால், என்னு டைய செயல்கள் ஒன்றும் ஆகப்போவதில்லை. மேலும் அவை கெட்டுத்தான் போகும்.நானும் நீயும் எவ்வாறு கலந்து வாழ முடியும்? 

‘கப்பல் கடலில்தான் ஓடும். அதைத் தரையில் ஓட்ட முடியாது. தேர் பூமியின் மீது தான் ஓடும். அதைக் கடலில் ஓட்டிச் செல்லமுடியாது. சேரக் கூடாதவை சேர்ந்தால் அந்த உறவு திடமாக நிலைப் பதில்லை. கெட்டுப் போவதே தவிர அந்தச் சேர்க்கையால் ஆகும் சிறப்பு எதுவும் இல்லை. 

‘பெண்களிடத்தும், ஒழுக்கம் கெட்டவர்களிடத் தும் நியாயத்தை எதிர்பார்த்தும், தீயவர்களிடம் ஒரு நன்மையைச் செய்து கொள்ள எதிர்பார்த்தும், நட்புக் கொண்டு அதனால் இன்பம் அடைந்தவர்கள் உலகத்தில் இல்லவே இல்லை. பாம்பை மடியில் கட்டிக் கொண்டவர்களைப் போல், அவர்களுக்கு எந்தக் கணமும் துன்பம் தாம் ஏற்படும் என்று எலி காகத்தின் உறவை மறுத்துரைத்தது. 

‘எலியே, நீ சொல்வது உண்மைதான். தீயவர் களின் உறவு ஒருக்காலும் சேர்க்கக் கூடாதுதான். ஆனால், என்னை ஒரு காக்கை என்பதற்காக ஒதுக்கித் தள்ளி விடாதே. நான் உனக்கு என்றும் உயிர் நண்பனாவேன். நீ என் நட்பை ஏற்றுக் கொள் ளாமல் தள்ளி விட்டால், நான் என் உயிரை விட்டு விடுவேன், சத்தியம்! 

‘செல்வத்தினால் மனிதர்களுக்குள் நட்பு உண் டாகும். ஒன்றாகக் கூடித் தின்பதால், பறவைகளுக் குள் நட்பு உண்டாகும். கோப புத்தியால் துட்டர் களுக்குள்ளே நட்பு உண்டாகி விடும். 

‘மென்மையான ஊசி காந்தத்தைக் கண்டவுடன் போய் ஒட்டிக் கொள்ளும். இரும்புத் துண்டுகளோ, நெருப்பில் கலந்து, வருத்தப்பட்ட பின்பே ஒன்றாக ஒட்டிக் கொள்ளும். அது போல, கண்டவுடனே நல்ல வர்கள் நண்பர்களாகி விடுவார்கள். தண்டனை யடைந்த பின் ஒன்று சேர்ந்து புல்லர்கள் நண்பர் களாயிருப்பார்கள். 

‘உன் அறிவின் உயர்வையும், உன் நெஞ்சில் உள்ள நட்பின் தன்மையையும், அந்த நட்பை நீ பாது காக்கும் முறையையும் கண்டு, உன் நட்பைப் பெற எண்ணியே நான் உன்னிடம் வந்தேன். என் நிலைமையை நீ நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அன்பு ஒன்றுக்காகவே நான் உன்னை நாடி வந்திருக்கிறேன்’ என்று காக்கை கூறியது. 

இவ்வளவு உறுதிமொழிகள் கூறியபின், அந்த எலி, இந்த இலவமரத்துக் காகத்தை நம்பிவிட்டது. நம்பிக்கை பிறந்தவுடன் அதன் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. மலர்ந்த முகத்துடன் அது காகத்தை நோக்கி, ‘நன்று, இனி நாம் என்றும் நண்பர்களாய் இருப்போம்’ என்று ஆதரவான பதிலை யளித்தது. 

அன்று முதல், காகம் தனக்குக் கிடைக்கும் மானி றைச்சிமுதலியவற்றில் எலிக்கும் ஒரு பங்கு கொண்டு வந்து கொடுத்து வந்தது. இப்படியாய்ப் பல நாட்கள் ஒன்றுக்கொன்று உதவியாய் இருந்து அவை வந்தன. 

ஒரு நாள் காகம் எலியிடம் வந்து, இந்தக் காட்டில் இரை எளிதாகக் கிடைக்கவில்லை. எனக்குத் தெரிந்த ஆமை ஒன்று இருக்கிறது. அதனிடம் சென் றால் குளத்தில் இருக்கும் மீன்களையெல்லாம் நமக்கு உண்ணத் தந்திடும். நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு நலமாக இருக்கலாம்’ என்று கூறியது. 

‘சரி, நானும் அங்கு வருகிறேன். எனக்கு அங்கே ஒரு வேலையிருக்கிறது அதை நான் அங்கு சென்ற பின் உனக்குத் தெரிவிக்கிறேன்’ என்று எலி சொல்லியது. 

உடனே காகம், தன் கால்களால் எலியைத் தூக்கிக் கொண்டு ஆமையிருக்கும் குளத்தை நோக் கிப் பறந்தது. 

அங்கு போய்ச் சேர்ந்ததும், ஆமை வெளியில் வந்து, காகத்தை அன்பாக வரவேற்று நலம் விசாரித் தது. பேசிக் கொண்டிருக்கும் போது, காகத்தை நோக்கி ஆமை, ‘இந்த எலி யார்?’ என்று கேட்டது. 

‘ஆமை நண்பனே, நாம் முன் வருந்திச் செய்த தவத்தால் நமக்கு அருமையாகக் கிடைத்த நண்பன் இந்த எலி. இதன் பெருமையை யாராலும் சொல்ல முடியாது’ என்று சொல்லிப் புறா அரசன் வேடன் வலையில் அகப்பட்டுக் கொண்டதையும் அதை எலி மீட்டதையும் விளக்கமாகக் கூறியது. 

அத்தனையும் கேட்ட ஆமை, ‘ஆ! இவன் உண்மையான நண்பனே!’ என்று சொல்லி அன்பு பாராட்டி, காகத்திற்கும் எலிக்கும் விருந்து வைத்து அவற்றோடு மகிழ்ச்சியாக இருந்தது. 

ஒரு நாள் ஆமை எலியை நோக்கி, ‘உன் சொந்த ஊர் எது? உன்னுடைய வரலாறு என்ன? நீ இங்கு வரக் காரணம் என்ன’ என்று கேட்டது. 

எலி தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கியது. 

என்னுடைய சொந்த ஊர் சம்பகாவதி என்பது. அங்கே ஒரு மடத்தில் நான் இருந்து வந்தேன். அந்த மடம் ஒரு சைவத் துறவியுடையது. அந்தச் சைவத் துறவி நாள்தோறும் தெருவில் பிச்சை எடுத்து வந்து, தான் உண்டது போக மீதியை வேறு யாரேனும் பரதேசிகள் வந்தால் கொடுப்பதற்கென்று ஒரு சிறு பாத்திரத்தில் வைத்திருப்பான். அவன் மீத்து வைக் கும் சோற்றை இரவில் நான் வந்து வயிறு புடைக்கத் தின்பேன், அவன் கையில் அகப்படமாட்டேன். இப் படிப் பல நாட்கள் என்வாழ்க்கை இன்பமாக நடந்தது. 

ஒரு நாள் அந்த சைவத்துறவியின் மடத்துக்கு இன்னொரு சந்நியாசி வந்திருந்தான். இருவரும் பல விதமான சாத்திரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே யிருந்தார்கள். இரவு வெகு நேரமாகியும் அவர்கள் பேச்சு முடிந்து தூங்கப் போவதாகத் தெரிய வில்லை. எனக்குப் பசி பொறுக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் தூங்கும் முன்னாலேயே அந்தப் பாத்திரத்தில் இருந்த சோற்றைத் தின்னத் தொடங்கி னேன். நான் சோறு தின்னும் சத்தம் கேட்டு சைவத் துறவி அதட்டி என்னைத் துரத்தி விட்டான். அப் போது அவனுக்கு ஏதோ ஒரு யோசனை தோன்றி யிருக்கிறது. 

தன்னோடு பேசாமல் ஏதோ நினைவாய் இருப் பதைக் கண்டு அங்கு அமர்ந்திருந்த சந்நியாசி அவனை நோக்கி, ‘திடீர் என்று என்ன யோசனை?’ என்று கேட்டான். 

‘அந்த எலி குதித்தோடியதைப் பார்த்துத் தான் யோசனையில் ஆழ்ந்து விட்டேன். நான் தெருத் தெருவாகச் சுற்றிப் பிச்சை யெடுத்துக் கொண்டு வருகிற சோற்றை யெல்லாம் இது இங்கிருந்து, கொண்டே தின்று கொழுத்துப் போய்விட்டது. எவ் வளவு வேகமாக அது குதித்துப் பாய்கிறது! அதைப் பிடிக்கக்கூட முடியவில்லை. இப்படி மதமதப்பான அச்சமில்லாத எலியை நான் பார்த்ததேயில்லை’ என்று சைவத்துறவி கூறினான். 

‘இந்த எலி ஒன்றுதானா, இங்கு இன்னும் வேறு எலிகள் இருக்கின்றனவா?’ என்று வந்திருந்த சந்நியாசி கேட்டான். 

‘ஒன்றுதான்’ என்று சொன்னான் சைவத்துறவி. 

‘அப்படியானால், உன் சோற்றுப் பருக்கையி னால் மட்டும் இது கொழுக்கவில்லை. இது கொழுத் திருப்பதற்கு வேறொரு காரணம் உண்டு. இந்த இடத்திலே நாம் மண்வெட்டியால் வெட்டிப் பார்க்க வேண்டும்’ என்றான். 

‘ஏன்?’ என்று சைவத்துறவி விவரம் புரியாமல் கேட்டான். 

‘எவனிடத்தில் பொருள் இருக்கிறதோ, அவன் கொழுப்பாக இருக்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல, இந்த எலி இருக்குமிடத்தில் ஏதோ புதையல் இருக்க வேண்டும்’ என்று வந்திருந்த சந்நியாசி கூறினான். 

‘உடனே அவர்கள் எலி வளையிருந்த இடத்தை வெட்டத் தொடங்கினார்கள். உண்மைபில் அங்கு அவர்களுக்குத் தங்கப் புதையல் கிடைத்தது. அவர் கள் அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக் கொண் டார்கள். நான் பயந்து போய் வேறொரு வளையில் பதுங்கிக் கொண்டேன். மறுபடி பசியெடுத்த போது, நான் அங்கு சோறு தின்னப் போனேன். அந்தத் துறவி துரத்திக் கொண்டு வந்து என்னை அடித்து விட்டான். அன்று முதல் இன்றுவரை அந்த மடத் திற்குத் திரும்பிப் போகவே எனக்குப் பயமாக இருக்கிறது. இப்போது ஓர் ஆண்டாகக் காட்டில் தான் இருந்து வருகிறேன். 

‘அறிவும் கல்வியும் நன்மையும் பயனும், வன்மையும் இன்பமும் எல்லாம் பொருளினால்தான் உண்டாகின்றன. 

‘சுதியில்லாத பாட்டும், உறவினர் இல்லாத நாடும், அறிவில்லாதவர் கவிதையும், நல்ல மனைவி யில்லாத வீடும், கணவன் இல்லாத பெண்ணின் அழகும் வீண் பாழே! பொருள் இல்லாதவர்களுக்கு உலக வாழ்வே பாழ்! 

‘கதிரவன் இல்லை யென்றால் கண்ணுக்குத் தெரிவன எல்லாம் மறைந்து போகும். அது போல் பொருள் இல்லாதவர்களுக்கு எல்லா நன்மைகளும் மறைந்து போகும். 

‘அந்தச் சைவத்துறவி என்னை அடித்து விரட்டும் போது, தங்கப் புதையலின் மேல் இருந்து கொண்டு என் சோற்றைத் தின்று கொழுத்த எலியே, இப்போது உன் தங்கம் பறி போச்சே! இன்னும் உனக்கு வெட்கம் இல்லையா?’ என்று கேட்டான். அது எனக்கு இன்னும் வேதனையாக இருக்கிறது. அந்த வேதனை நீங்க நீதான் ஒரு வழி சொல்ல வேண்டும். அதற்காகவே உன்னிடம் வந்து சேர்ந் தேன்’ என்று எலி கூறியது. 

‘கவலைப்படாதே, இந்தக் காகத்திற்கு நீ ஒரு செல்வம் போல உற்ற நண்பனாகக் கிடைத்தாய். நீங்கள் இருவரும் என்னிடம் வந்து சேர்ந்ததே பெரும் பாக்கியம். நட்பாகிய பெரும் செல்வம் நம்மி டம் இருக்கிறது. அதை நமக்குக் கொடுத்த தெய்வத்தை வழிபட்டுக் கொண்டு நாம் நலமாக இருப்போம்’ என்று ஆமை கூறியது. 

ஆமை குளத்திலிருந்து மீன்களைக் கொண்டு வரும். காகம் எங்கிருந்தாவது இறைச்சி கொண்டு வரும். எலி ஊருக்குள் போய்ச் சோறு கொண்டு வரும். மூன்றும் ஒன்றாகக் கூடியிருந்து கொண்டு, நாள் தோறும் உண்டு அன்புடன் பேசிக் காலம் கழித்திருக்கும். 

இப்படி அன்போடு அவை ஒன்றாக வாழும் நாளில் ஒரு நாள் ஒரு மான் ஓடி வந்தது. அந்த மான் நடுங்கிக் கொண்டே நின்று, மருண்டு மருண்டு விழித்தது. 

‘சிறிதும் அறிவில்லாத நண்பனே, ஏன் நடுங்கு கின்றாய்?’ என்று அந்த மூன்று நண்பர்களும் கேட்டன. 

‘யமனை யொத்த கொடிய வேடன் ஒருவன், நஞ்சு தோய்ந்த அம்பு கொண்டு என்னைக் கொன்று வீழ்த்த வந்தான். நான் அதற்குத் தப்பி ஓடி வந் தேன். இப்போது நான் உங்கள் அடைக்கலம், என்னை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று அந்த மான் கூறியது. 

‘நல்லது. நீ யார், எங்குள்ளவன் என்றெல்லாம் சொல்லு’ என்று அவை கேட்டன. 

‘எனக்குத் தாய் தந்தையர் யாரும் கிடையாது. சுற்றத்தாரும் ஒருவரும் இல்லை. காடுதான் எனக்கு வீடு. என் மீது அன்பு கொண்டு என்னைக் காப்பாற் றினீர்களானால், உங்களையே தாய் தந்தையராக வும், உற்ற சுற்றத்தாராகவும் கொண்டு, என்றும் உங்களைப் பிரியாமல் வாழ்வேன்’ என்று அந்த மான் கூறியது. 

அந்த மானின் சொற்களில் உண்மையிருந்தது. எனவே அவை மூன்றும் அதை நம்பின. 

‘நல்லது. நீ இங்கேயே எங்களுடன் இரு. இனி நாம் நால்வரும் நண்பர்களாக வாழ்வோம்’ என்று கூறி மானைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டன. 

புதிதாக வந்த அந்த மான் வகை தெரியாமல் ஒரு வேடன் விரித்திருந்த வலையில் மாட்டிக் கொண் டது. அது துயரத்தோடு கத்தியதைக் கேட்டுக் காகம், மற்ற நண்பர்கள் இருவரையும் கரைந்து அழைத்தது. காகத்தின் குரல் கேட்டு ஏதோ ஆபத்து வந்து விட்டது என்று எண்ணிக் கொண்டே, ஆமை யும், எலியும் அந்தத் திசை நோக்கி விரைந்து சென் றன, அப்போது கரைந்து கொண்டே எதிரில் வந்த காகம், ‘அந்த மான் குட்டி ஒரு கொடிய வேடனு டைய வலையில் சிக்கிக் கொண்டு விட்டது. இப் போதே நாம் அதை விடுவிக்க வேண்டும் என்று கூறியது. 

மூன்றும் விரைந்து மான் வலைப்பட்டிருந்த இடத்தை அடைந்தன. சிறந்த அறிவுடைய நீ எப்படி இந்த வலையில் மாட்டிக் கொண்டாய்?’ என்று அவை கேட்டன, 

‘எல்லா விளக்கமும் பின்னால் சொல்லுகிறேன். வேடன் வந்து என்னைக் கொல்வதற்கு முன்னால் விடுவித்து விடுங்கள்’ என்று மான் பதறியது. 

‘வலையில் அகப்பட்டு விட்டதற்காக ஏன் இப்படிப் பதறித் துடிக்கிறாய்? ஏன் இப்படிப் பயப் படுகிறாய்?’ என்று எலி கேட்டது. 

‘முன் ஒரு நாள், நான் என் அம்மாவுடன் இருக்கும் போது ஒரு வேடன் வலை விரித்திருந் தான். அதைத் தாண்டிப்போய் நான் ஒரு சோலைக் குள் புகுந்து கொண்டேன். ஆனால், அந்தப் பாவி வேடன், என்னைத் தொடர்ந்தோடி வந்து உயிரோடு பிடித்துக் கொண்டான். என்னை அவன் அந்த நாட்டு அரசருக்குக் காணிக்கையாகக் கொண்டு போய்க் கொடுத்தான். அவர் தம் பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுத்தார். அவர்கள் என்னோடு விளையாடி மகிழ்ந்தார்கள். நான் ஓடி விடாதபடி அவர்கள் என்னைக் கட்டி வைத்திருந்தார்கள். ஒரு நாள் பகல் நேரத்தில் இடி முழக்கத்துடன் மழை பெய்தது. அப்போது மற்ற மான் குட்டிகளோடு கூடிச் சுதந்திரமாக ஓடி ஆடித் திரிந்து, விரும்பிய தழைகளை ஒடித்துத் தின்பது எப்போது, அந்தக் காலம் எப்போது வரும்?’ என்று நான் அழுது கொண்டிருந்தேன். 

‘நான் வருந்தி அழுது கொண்டிருப்பதைக் கண்ட இளவரசர்கள், ‘பாவம், ஏனோ இது வருத்தமாக இருக்கிறது. இதை நாம் கட்டிப் போட்டு வைத்திருப் பது நல்லதல்ல’ என்று இரக்கப்பட்டு என்னை விடு வித்து விட்டார்கள். அதன் பிறகுதான் நான் இந்தக் காட்டுக்கு வந்து சேர்ந்தேன். இப்போது மீண்டும் வேடர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டால் என்ன தீமை செய்வார்களோ, தெரியவில்லையே! அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது! சீக்கிரம் என்னை விடுவியுங்கள்!’ என்று மான் குட்டி கூறியது. 

எலி சிறிதும் காலந் தாழ்த்தாமல், அந்த வலை யைத் தன் பற்களால் கொறித்து அறுத்து விட்டது. வலை அறுந்தவுடன் மான் வெளிப்பட்டுத் தங்கள் இடத்தை நோக்கி நடந்தது. அப்போது, அந்தக் கொடிய வேடன் அங்கு வந்து சேர்ந்து விட்டான். வேடனைக் கண்டவுடன் மான் குட்டி துள்ளி ஓடியது. எலி அங்கிருந்த வளைக்குள் ஓடி மறைந்து கொண் டது. ஆமையால்தான் வேகமாக நடக்க முடிய வில்லை மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. மானைத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த வேடன். வழியில் ஆமையைக் கண்டதும், அதைப் பிடித்துத் தன் தோள் பைக்குள் போட்டுக் கொண்டு ஓடினான். 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த காகம், எலி யிடம் வந்து ‘அந்த வேடன் ஆமையைத் தூக்கிக் கொண்டு மானை விரட்டிப் போகிறான். மான் ஓடித் தப்பிவிட முடியும். ஆனால், ஆமை சிக்கிக் கொண்டு விட்டதே. போய் மானைக் கண்டு இதற்கு ஒரு வழி பார்க்க வேண்டும் வா!’ என்று கூறியது. 

‘வேடனிடமிருந்து நம் நண்பனான ஆமையை விடுவிக்காமல் நாம் உயிருடன் வாழ்வது சரியல்ல. வா, வா,விரைவில் போவோம்’ என்று எலி துள்ளிக் குதித்தோடியது. 

காகம் வேகமாகப் பறந்து சென்று ஓடிக் கொண் டிருந்த மானைக் கண்டது. 

‘மான் குட்டி, மான் குட்டி, உன்னை விரட்டிக் கொண்டு வந்த வேடன், வழியில் தென்பட்ட ஆமை யாரைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறான். இப்போது அவரை நாம் காப்பாற்ற வேண்டும். நான் ஒரு வழி சொல்கிறேன். கேட்கிறாயா? என்று கேட்டது. 

‘காக்கையண்ணா, சீக்கிரம் சொல்லுங்கள்!’ என்று மான் குட்டி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் கூறியது. 

‘அதோ, நமது குளம் அருகில்தான் இருக்கிறது. குளத்தை நெருங்கியவுடன் அதன் கரையில் நீ செத் ததுபோல் விழுந்து கிட. செத்த பிணத்தைக் கொத்து வதுபோல் நான் உன்மேல் நின்று கொத்திக் கொண் டிருக்கிறேன். இந்தக் காட்சியைக் கண்டதும் வேடன் உன்னைத் தூக்கிக் கொண்டு போக வருவான். 

அவன் வருமுன் ஆமையிருக்கும் தோள் பையைக் கீழே வைத்துவிட்டுத்தான் உன்னைத் தூக்க வரு வான். அவன் தரையில் பையை வைத்தவுடன் நமது எலியார் அதன் வாயைக் கத்தரித்து விடுவார். உடனே ஆமையார் பக்கத்தில் இருக்கும் குளத்திற் குள் நழுவி விடுவார். வேடன் உன்னைத் தொடுமுன் நீ அம்புபோல் பாய்ந்து சென்று அருகில் எங்காவது ஒளிந்து விடு. நானும் வானில் பறந்து மரங்களுக்குள் மறைந்து விடுகிறேன்’ என்றது காகம். 

‘அருமையான திட்டம். அப்படியே செய்வோம்” என்று சொல்லி மான் குளக்கரையில் போய் விழுந்து கிடந்தது. காகம் பின்னால் வந்து கொண்டிருக்கும் எலியிடம் பறந்து சென்று தன் திட்டத்தைக் கூறியது. பின் திரும்பிவந்து, விழுந்து கிடந்த மானின்மேல் உட்கார்ந்து அதைக் கொத்தித் தின்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தது. 

மானை விரட்டிக் கொண்டு வந்த வேடன், இதோ அந்த மான் செத்து விழுந்து கிடக்கிறது. இதை எடுத்துக் கொண்டு போகலாம்’ என்று நினைத்தான். தன் தோளில் ஆமை போட்டுக் கட்டி யிருந்த பையைக் குளக்கரையில் இறக்கி வைத்து விட்டு, மானைத் தூக்க ஓடினான். 

உடனே எலி பாய்ந்தோடி வந்து அந்தப் பையை கடித்துக் குதறி எறிந்தது. வேடன் மானை நெருங்கிச் சென்றவுடன், இலேசாகக் கண்ணைத் திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்த மான், வெடுக்கென்று துள்ளி எழுந்து ஓடியது. அதை விட மனமில்லாமல் வேடன் துரத்திக் கொண்டு ஓடினான். மானோ காட்டு மரங்களுக்கிடையே, வளைந்து வளைந்து ஓடி ஒரு புதரில் போய், வேடன் கண்ணுக் குத் தெரியாமல் மறைந்து விட்டது. அதற்குள் ஆமை குளத்திற்குள் இறங்கி விட்டது. எலி வளைக்குள் பதுங்கி விட்டது. காகம் மரத்தின் மேல் ஏறியமர்ந்து கொண்டது. 

வேடன், ஓடி இளைத்து ஒன்றுமில்லாமல் ஏமாந்து திரும்பினான். 

வேடன் அங்கிருந்து போனபின், காகம், ‘வேடன் போய்விட்டான்!’ என்று அறிவித்துக் கரைந்தது. 

அந்தக் குரல் கேட்டதும் ஒளிந்திருந்த எலி ஓடி வந்தது. மறைந்திருந்த மான் பாய்ந்து வந்தது. குளத்திலிருந்த ஆமை கரைக்கு வந்தது. நான்கும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தன. அந்த நான்கும் ஒன்றுக் கொன்று உற்ற உதவியாக இருந்து பெற்ற இன்பம் பெரிது. அவை வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தின. 

நல்லவர்கள் நட்புப்போல் இலாபமானது வேறு எதுவும் இல்லை. 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 2 – நட்பு உண்டாக்குதல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *