நான்கு டிராகன்கள்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,278 
 
 

சீன நாடோடிக் கதை

முன்னொரு காலத்தில் பூமியில் ஆறோ,ஏரியோ இல்லாமல் இருந்த நேரம். கீழக் கடல் மட்டுமே இருந்தது. அந்தக் கீழக் கடலில் நான்கு டிராகன்கள் வசித்து வந்தன. நீள டிராகன்,மஞ்சள் டிராகன்,கருப்பு டிராகன்,பவள டிராகன் என அவற்றுக்குப் பெயர். நாலும் கடலில் கும்மாளமிட்டுக் குதூகலம் செய்து கொண்டிருந்தன.

ஒரு முறை நாலும் சேர்ந்து வான்வெளியை நோக்கிப் பறந்தன. வான வீதிக்குப் போனதும் அவற்றிற்கு உற்சாகம் கரைபுரண்டு எழ ஆரம்பித்தது.

குட்டிக் குட்டி மேகக் கூட்டங்களைப் பார்த்ததும் குஷி இன்னமும் அதிகமாக, சீறிக் கொண்டும் குதித்தும் ஆட்டம் போட்டன. பஞ்சு மேகங்களுக்குள் ஒளிந்து விளையாடின.

இந்த நேரத்தில் மேகக் கூட்டத்தின் மேல் இருந்து கீழே எட்டிப் பார்த்த பவள டிராகன்,””வாருங்கள்,வாருங்கள்…இங்கு வந்து பாருங்கள்” என்றது.

“”அப்படி அங்கு என்னதான் இருக்கிறது” என்று கேட்டபடியே மற்ற மூன்று டிராகன்களும் அருகில் போய் அது காட்டிய இடத்தில் எட்டிப் பார்த்தன.

கீழே பூமியின் ஒரு பகுதியில் மக்கள் பழம்,கேக் போன்றவற்றை வைத்து ஊதுபத்தியையும் கொளுத்தி வைத்து வானத்தை நோக்கி கைகூப்பி தொழுதபடி இருந்தன. தலைமுடி நரைத்திருந்த பெண் ஒருத்தி மண்டி போட்டு அமர்ந்து இருந்தாள். அவள் முதுகில் ஒல்லியான, ஒரு குட்டிப் பையனை சுமந்து கொண்டிருந்தாள்.
அந்தப் பெண் வானத்தைப் பார்த்து முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

“”சொர்க்கக் கடவுளே, மனம் உருகிப் பிரார்த்தனை செய்கிறோம். உங்களின் குழந்தைகள் உண்ண அரிசி வேண்டும். அரிசி விளைய மழையை சீக்கிரம் அனுப்புங்கள்” என்றாள்.

ஆமாம், பூமியில் பல மாதங்களாய் மழை இல்லை. பயிர்கள் வாடி மஞ்சள் நிறமாக மாறியிருந்தன. பல இடங்களில் கருகியே விட்டன. நிறைய இடங்களில் வெயிலின் தாக்கத்தால் பாளம் பாளமாய் பூமி வெடித்து விட்டது.

மஞ்சள் டிராகன், “”பாவம் அவர்கள், தங்கள் குழந்தைகளுடன் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர்? சீக்கிரம் மழை பூமியில் பொழியா விட்டால் அவர்கள் இறந்தே விடுவார்கள்” என்றது.

“”மஞ்சள் டிராகன், நீ சொல்வது சரிதான், பாவம் ஏழை மக்கள், நாம் ஒன்று செய்யலாம்… நாம் மேகக் கூட்டத்தில்தானே இருக்கிறோம், இங்கே வசிக்கும் மழைக்கு அரசனான ஜேட் மன்னரிடம் மக்களுக்காக இரைஞ்சிக் கேட்டுக் கொள்வோம்” என்றன மற்ற மூன்று டிராகன்களும்.

“”அவரை எப்படிக் கண்டு பிடிப்பது?”என்று பவள டிராகன் கவலையோடு கேட்க, மற்றவை “”அவர் அரண்மனை இங்கேதான் மேகக்கூட்டம் தாண்டி இருக்கும், தேடுவோம்” என்று முடிவு செய்தன.

நான்கு டிராகன்களும் சேர்ந்து மேகக் கூட்டத்தில் ஊர்ந்து சென்றன. பறந்து பறந்து, அரசன் ஜேட்டின் மாளிகையைக் கண்டு பிடித்தன.
வேகமாக உள்ளே நுழைந்த நான்கு டிராகன்களையும் பார்த்த மன்னன்,

“”நீங்கள் உங்களின் இடமான கடலில் இருக்காமல் இங்கே அனுமதியில்லாமல் ஏன் வந்தீர்கள்?” என்று கோபமாய்க் கேட்டான்.
நீள டிராகன் முன் சென்று, “”பூமியில் மழை இல்லாமல் நிலங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. கொஞ்ச நஞ்ச பயிர்களும் மழை இல்லாமல் வாடி வதங்கிக் கிடக்கின்றன. இப்படியே விட்டால் அவை இறந்து விடும். பஞ்சத்தில் மக்களும் இறந்தே விடுவார்கள். நீங்கள்தான் மனம் இரங்கி, மழையை பூமிக்கு உடனே அனுப்ப வேண்டும்… உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்” என்றது.

“”சரி, சரி… நீங்கள் உங்கள் வசிப்பிடம் செல்லுங்கள். நாளையே மழையை அனுப்பிப் பயிர்களையும் மக்களையும் காப்பாற்றி விடுகிறேன்” என்றான் மன்னன்.

“”நன்றி, நன்றி…” என்று கூறிவிட்டு நான்கு டிராகன்களும் கிளம்பின.
டிராகன்கள் நான்கும் பூமிக்குத் திரும்பி, தங்களின் இருப்பிடமான கடலுக்குச் சென்றன.

மறுநாள் அவை வானத்தை ஆவலோடு பார்த்தன. மழை வரவில்லை. இரண்டு நாள், மூன்று நாள் எனக் கடக்க, பத்து நாட்கள் ஆகியும் ஒரு சொட்டு மழைகூட வரவில்லை.டிராகன்களை வருத்தம் தொற்றிக் கொண்டது.

மக்கள் பசியில் உணவு இல்லாமல், நிலத்தில் தோண்டி எடுத்த கிழங்குகளையும் சிலர் அதுவும் கிடைக்காமல் காய்ந்து விழுந்த பயிர்களையும் களிமண்ணையும் உண்ணுவதைப் பார்த்து மனம் வெதும்பின.

மேலே களிப்போடு, கும்மாளம் போட்டுக் கொண்டு வாழும் மழையரசன் ஜேட், கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருக்கிறானே என்று வருந்தின. துன்பப்படும் மக்களை, அவர்களின் துயரத்திலிருந்து எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று அவை யோசிக்க ஆரம்பித்தன.

நீள டிராகன், “”இங்கே பாருங்கள், எனக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது, நாம் வசிக்கும் கடல் மிகப் பெரிய கடல். அதில் நாம் எவ்வளவு எடுத்தாலும் குறையாத அளவிற்கு நீர் உள்ளது. நாம் ஏன் மக்களின் துயரைத் தீர்க்கக்கூடாது? நாம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து வானத்திலிருந்து பொழிவோம்… மக்களின் துயர் தீரும்” என்றது.
மற்ற டிராகன்களும் முகம் மலர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்து, நீள டிராகன் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டன.

ஆனாலும் நீள டிராகன் கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தது.

“”ஏன்? என்ன யோசனை? நாம் செயலில் இறங்குவோம்” என்றன மற்ற மூன்று டிராகன்களும்.

அதற்கு நீள டிராகன்,””எனக்கு இரண்டாவது சிந்தனை இல்லை. ஆனாலும் ஜேட் மன்னனின் கோபத்துக்கு நாம் ஆளாகி விடுவோமே என்றுதான் யோசிக்கிறேன்” என்றது.

மற்ற மூன்றும், “”பரவாயில்லை, நாலு பேருக்கு நல்லதுன்னா, நாம் செய்யறது தப்பில்லே” என்று ஒரே குரலாகக் கூவின.

“”அப்படியானல், உடனே காரியத்தில் இறங்குவோம். யோசித்துக் கொண்டே தள்ளிப் போட வேண்டாம். இதற்காக நாம் என்றும் வருத்தப்பட மாட்டோம்” என்று உற்சாகமாகச் சொன்னது.
நான்கு டிராகன்களும் கடலின் நீரை வாயில் சுமந்து சென்று, வானில் பறந்து, மேலே மேகக் கூட்டத்தினை உருவாக்கி, மழையாய்ப் பொழிந்தன. இடைவிடாமல், களைப்பே இல்லாமல் தொடர்ந்து மழையைப் பொழிந்தன.

“மழை,மழை, மழை பொழிகிறது… நம் பயிர்கள் இனி வாடாது… நாம் காப்பாற்றப்பட்டு விட்டோம்’ என்று குதித்துக் கும்மாளம் இட்டனர் மக்கள். தலையைத் தொங்கப் போட்டிருந்த பயிர்கள் உற்சாகமாய் நிமிர்ந்து நின்றன.

கடலரசன் இதையெல்லாம் பார்த்து விட்டு சும்மா இருப்பானா? அவன் கர்மசிரத்தையாய் நடந்த அனைத்தையும் மழையரசனுக்குத் தெரிவித்து விட்டான்.

அவனோ கடுங்கோபம் கொண்டான். இந்த டிராகன்களுக்கு என்ன திமிர்? என் அனுமதி இல்லாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு, மழை பொழியச் செய்து விட்டனவே?என்று கோபத்தின் உச்சிக்கே போய் விட்டான். படைகளை அனுப்பி, நாலு டிராகன்களையும் கைது செய்து இழுத்து வந்து தன் முன்னால் நிறுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டான்.

படை விரைந்து சென்றது. எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்த டிராகன்களைக் கைது செய்து மேலே இழுத்து வந்தனர். மழை அரசன் முன் நாலு டிராகன்களையும் நிறுத்தினர்.

மழை அரசன், “”நீங்கள் இனி கடலில் இருக்க வேண்டாம்… நாலு மலைகளிலும் உங்களை சிறை வைக்கிறேன்… தனித்தனியாக நீங்கள் அங்கேயே படுத்துக்கிடங்கள்” என்றான்.

பிறகு மலைகளின் அரசனிடம், “”நாலு மலைகளுக்குக் கீழே இவர்களைப் படுக்க வையுங்கள்” என்று கூறினான்.

மலைகளின் அரசன் தன் சக்தியால் காற்றை உருவாக்கி, ஊதி, நாலு டிராகன்களையும் நாலு திசைகளுக்குக் கொண்டு சென்று, மேலே மலைகளை உருவாக்கினான். மலையின் அடிவாரத்தில் எந்தவித வருத்தமும் இல்லாமல் இருந்த டிராகன்கள் மக்களுக்கு நிரந்தர சந்தோஷத்தினைத் தர முடிவு செய்தன. நாலும் நாலு ஆறுகளாக மாறிப் பாய ஆரம்பித்து, நான்கு திசைகளிலும் இருந்து ஓடி, நிலத்தில் பாய்ந்து கடலில் கலந்தன.

இப்படித்தான் சீனாவின் மேற்கு மூலையில் ஹெய்லாங்ஜியான் (ஏங்ண்ப்ர்ய்ஞ்த்ண்ஹய் – கருப்பு ஆறு),
மத்திய சீனாவில் ஹூவாங்கே (ஏன்ஹய்ஞ்ட்ங் – மஞ்சள் ஆறு), தெற்கில் சாங்ஜியாங்க் (இட்ஹய்ஞ்த்ண்ஹய்ஞ் – நீள ஆறு), தென்கிழக்கில் ஜூஜியாங் (ழட்ன்த்ண்ஹய்ஞ் – பவள ஆறு) என்று நான்கு பெரிய ஆறுகள் உருவாகின.

– ஆ. ஸ்ரீதரன் (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *