சுவீடன் நாட்டில் உள்ள சிறிய நகர் ஒன்றில் “பிளிம்போ’ என்று ஒரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன்; புத்திசாலி, அந்நகர மக்கள் எல்லாரும் அவனை அதிர்ஷ்டக்காரன் என்றே அழைத்தனர்.
ஏனென்றால் பிளிம்போ ஒரு வேலைக்கு கூட செல்லமாட்டான்.
அதிர்ஷ்டத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தான். அதிர்ஷ்ட தேவியின் அருளைப் பற்றி பார்ப்பவர்களிடம் எல்லாம் பேசினான். அதிர்ஷ்ட தேவியின் அருளிருந்தால் ஒருவன் உழைக்காமலிருந்தால் கூட உலகிலேயே மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என்று கூறி வந்தான்.
இதனால் அவன் தந்தை அவனிடம் மிகுந்த கோபம் கொண்டார். ஒரு நாள் அவனை நன்றாக திட்டி வீட்டை விட்டே விரட்டி விட்டார்.
“அதிர்ஷ்ட தேவதையின் அருளால் பணக்காரனாகத் திரும்புவேன்,” என்று சபதம் செய்த பிளிம்போ ஊரை விட்டு கிளம்பினான்.
ஒரு படகில் ஏறி கடலில் பயணம் செய்தான். படகு நடுக்கடலில் சென்றபோது புயலடித்தது. மழை பெய்தது. திடீரென படகு கவிழ்ந்தது.
பிளிம்போ தத்தளித்தான். சிறிது நேரத்தில் கடல் நீரில் மயங்கி மூழ்கினான்.
மயக்கம் தெளிந்து எழுந்த பொழுது ஒரு சிறு தீவில் ஒதுங்கி இருந்தான் பிளிம்போ.
எழுந்து களைப்புடன் மெல்ல நடந்தான். பசியும், தாகமும் வயிற்றைப் புரட்டியது. கால்போன போக்கில் நடந்தான். வழியில் கிடைத்த பழங்களையெல்லாம் தின்றான். எல்லா பழங்களும் சுவையுடன் இருந்தன.
இப்படி ஒரு வார காலம் பிளிம்போ அந்த தீவில் பழங்களை தின்றபடி வாழ்ந்தான்.
ஒரு நாள் அதிகாலையில் ஒரு புதர் அருகில் மிகவும் தெளிந்த நீரோடை ஒன்றிலிருந்தது. மிகுந்த தாகத்திலிருந்த பிளிம்போ ஓடையிலிறங்கி நீரைப் பருகினான்.
என்ன மாயம்? திடீரென பிளிம்போ ஒரு குரங்காக மாறிவிட்டான்.
கவலையுடன் கரை ஏறிய பிளிம்போ மனம் அப்போதும், “”அதிர்ஷ்ட தேவியின் அருளால் தான் இது நடந்தது. ஏதோ காரணம் இதிலுண்டு,” என்று கூறிக் கொண்டு விறுவிறுவென்று அருகிலிருந்த மரங்களில் ஏறினான்.
விரும்பிய பழங்களைப் பறித்து உண்டான். பின் மேலும் சிறிது நேரம் மரங்களில் தொற்றியபடி அலைந்தான். திடீரென குரங்காக இருந்த பிளிம்போ கண்களில் ஒரு நீல நிற மரம் தென்பட்டது. அதில் நீல நிறப் பழங்கள் சில இருந்தன.
http://2.bp.blogspot.com/_Bgw_usHd9n…320/angel8.jpg
அந்த மரத்திற்கு தொற்றிப் பாய்ந்தான் பிளிம்போ. சில நீலப் பழங்களைப் பறித்துத் தின்றான். அவை அபூர்வ சுவையுடன் இருந்தன. பிளிம்போ அதைத் தின்ற மறு நிமிடமே முன்பு போல மனித உருவம் பெற்று மரத்தின் மேல் அமர்ந்திருந்தான். உடனே மளமளவென்று சில நீலப் பழங்களைப் பறித்து தன் சட்டையியலிருந்த பையில் போட்டுக் கொண்டான். பின் மளமளவென்று மரத்தை விட்டு இறங்கினான். முன்பு தான் நீர் பருகி குரங்காக மாறிய நீரோடையை சென்று அடைந்தான்.
ஒரு சிறு மூங்கில் குழாயை எடுத்தான். அதில் நிறைய ஓடை நீரை நிரப்பிக் கொண்டான். பின் அங்கிருந்து சில மரப்பலகைகளைக் கொண்டு ஒரு சிறு படகு செய்தான். அதில் நீலப் பழங்களையும், ஓடை நீரடங்கிய மூங்கில் குழாய்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். மறுநாள் விடியும் நேரத்தில் அவன் ஒரு நாட்டின் கரையை கண்டான்.
http://i287.photobucket.com/albums/l…l/angel004.gif
அது தங்கப்பாளம் என்ற நாட்டின் கடற்கரை. அங்கு வந்திறங்கிய பிளிம்போ நீலப் பழங்களையும், மூங்கில் குழாயையும் எடுத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்தான். அந்நாட்டு மக்கள் வழங்கிய உணவை உண்டான்.
வழியில் ஒரு நந்தவனத்தை கண்டான். அங்கு பூக்களும், கனிகளும், ஏராளமாக இருந்தன. அவற்றின் மணமும், நிழலும் பிளிம்போவை மயக்கியது.
எனவே, நந்தவனத்தில் புகுந்தான். அங்கிருந்த ஒரு குளக்கரையில் படுத்தான். திடீரென அடித்த காற்றில் பிளிம்போ தன்னருகில் வைத்துவிட்டு உறங்கிய மூங்கில் குழாய் கடகடவென உருண்டு குளத்தில் விழுந்தது. உடனே அதன் உள்ளிருந்த நீர் முழுவதும் குளத்தினுள் கொட்டிவிட்டது.
முதலில் திடுக்கிட்ட பிளிம்போ பின்பு, “”இதுவும் அதிர்ஷ்ட தேவியின் செயலே,” என நினைத்தபடி எழுந்து சென்று பக்கத்திலிருந்த மர நிழலில் படுத்து உறங்கிவிட்டான். அப்படியே இரவாகிவிட்டது.
மறுநாள் விடிந்தது. திடீரென நந்தவனத்தினுள் பெண்கள் அலறியபடி ஓடும் சத்தம் கேட்டது. உடனே பிளிம்போ விழித்தான். அந்தப் பெண்களிடம் ஓடி நடந்ததைவிசாரித்தான்.
அவர்கள், “”இந்நாட்டு இளவரசி இஸ்பார் மிகுந்த அழகி. இப்போது எங்களுடன் நந்தவனத்திற்கு வந்தாள். இந்தக் குளத்துநீரில் இறங்கினாள். நீர் அவள் மீது பட்டதுமே குரங்காகி விட்டாள்,” என்று கூறி அழுதனர்.
செய்தி அரசர் காதிற்கு எட்டியது. அரசனும், அரசியும் நந்தவனத்திற்கு ஓடி வந்தனர். தங்கள் மகள் குரங்காக இருப்பதைப் பார்த்து கண்ணீர் வடித்தழுதனர். பின் குரங்கை பிடித்துக் கொண்டு அரண்மனைக்கு சென்றனர்.
மறுநாள் ஊர் முழுக்க அரசர் செய்தி அறிவித்தார். இளவரசி இஸ்பார் திடீரென குரங்காக மாறிவிட்டாள். அவளை மீண்டும் பெண் உருவாக மாற்றுபவர்களுக்கு இளவரசி இஸ்பாரை மணம் செய்து வைப்பார் அரசர். அதோடு தங்கப்பாள நாட்டை ஆளும் பொறுப்பும் தரப்படும் என அறிவித்தார்.
உடனே பிளிம்போ, நேராக அரண்மனைக்குச் சென்றான். தன்னுடன் நீலப் பழத்தையும் எடுத்துச் சென்றான். அரசனிடம் இளவரசி இஸ்பாரை பெண்ணுருவில் மாற்றித் தருவதாக கூறினான். அரசர் ஒப்புக் கொண்டார்.
குரங்கு வடிவிலிருந்து இளவரசி இஸ்பாரை கொண்டு வந்து பிளிம்போ முன் நிறுத்தினர். பிளிம்போ உடனே தன் மடியிலிருந்த நீலப் பழத்தை அவளிடம் தந்தான். குரங்காக இருந்த இஸ்பார் அதனை வெடுக்கெனப் பறித்து கடித்துத்தின்றாள்.
மறுநிமிடம் பெண்ணாக மாறிவிட்டாள். அரசரும், அரசியும் மகிழ்ந்தனர். சொன்னபடி பிளிம்போவிற்கே இஸ்பாரைத் திருமணம் செய்து தந்தார் அரசர்.
பிளிம்போ தங்கப்பாள நாட்டின் அரசனான். விபரத்தை அவன் நகர மக்களும் அறிந்தனர். அவன் பெற்றோர் தங்கப்பாள நாட்டிற்கே வந்தனர். மகனுடன் அரண்மனையிலேயே மகிழ்வுடன் வாழ்ந்தனர்.
பிளிம்போ இஸ்பார் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு இருவரும் அதிர்ஷ்ட தேவி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
சுவீடன் நாட்டு மக்கள் இக்கதையை இன்றும் பிள்ளைகளுக்கு சொல்கின்றனர். அதோடு அதிர்ஷ்டத்தில் அதிக நம்பிக்கையும் வைத்துள்ளனர்.
குட்டீஸ்… அதற்காக அதிர்ஷ்டத்தில் கண்மூடித்தனமாக நாம் நம்பிக்கை வைக்கலாகாது. அதிர்ஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், முயற்சியும் தேவை. அப்போதுதான் வாழ்வில் நாம் முன்னேற முடியும்.