(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த வீட்டின் முன் ‘ஹோல்’, ரியூப் லைட்டின் ஒளி வெள்ளத்திலே மூழ்கிக் கிடந்தது. அவசர அவசர மாகப் புறப்பட்டுக் கொண்டு அங்கே ஓடி வந்த அவன் மீண்டும் மேற்குப்புறச்சுவரிலே பொருத்தப்பட்டிருந்த அந்தக் கடிகாரத்தை அவதானித்தான். மணியோ, பன்னிரண்ட ரையை எட்டிக்கொண்டிருந்தது. அவன் நித்திரையை விட்டு எழுந்து பதினைந்து நிமிடங்கள்தான் கடந்து விட்டிருக்கும். இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் புறப்பட்டுக் கொண்டது அவனுக்கே ஆச்சரியத்தை ஊட்டியது. வேறு எவ்வித அவசரகாரியமாக விருந்தாலுங்கூட அவன் புறப்படுவதற்கு முப்பது முப்பத்தைந்து நிமிடங்களாவது எடுத்துவிடும். அத்தோடு, இன்று இரவு அவன் சரியாகக் கூட. நித்திரை செய்திருக்கவும். மாட்டான். தான் எழுந்திருக்க வேண்டிய நேரத்தை எண்ணி எண்ணியே நித்திரை கொண்டிருப்பான். இவற் றிற்கெல்லாம் அவனுள்ளே கொழுந்து விட்டெரிந்து கொண் டிருக்கும் இனவெறி உணர்வுதான் காரணமாக விருக்க வேண்டும்.
புதுவிதமான ஒருவேகம் அவனுள்ளே பிரவகித்துக் கொண்டிருந்தது. கைகளும், கால்களும் துடித்துக் கொண் டிருந்தன. எட்டி அடிவைத்து தென்திசைச் சுவர் அருகே இடப்பட்டிருந்த ஒரு பெரிய மேசையின் பக்கத்தே விரைந் தான். அம்மேசையிலே ஒரு மீன் தொட்டி. அதன் அருகே தயாராக வைக்கப்பட்டிருந்த ஒரு துப்பாக்கியை தாவி எடுத்துக் கொண்டு நிமிர்ந்தான். ரியூப் லைட்டின் மிக அண்மையிலே இருந்த அந்த மீன் தொட்டி, பொங்கி வந்த ஒளியிலே மிகவும் பளீரென்று தோன்றியது. விளிம்பின் மிக அண்மைவரை நீர் நிரப்பப் பட்டிருந்த கண்ணாடியா லான அந்த மீன் தொட்டியில் பல வண்ணங்களிலே பல இன மீன்கள் ஒன்றாக இணைந்து உலாவி வந்தன.
அம் மீன் தொட்டி அவனின் உள்ளத்தைத் தன்பால் சுண்டி இழுத்து அவனை அங்கேயே நிறுத்தி விடுகிறது. அந்த மீன் தொட்டியிலே அங்குமிங்குமாய் நெளிந்தும். வளைந்தும் அழகு காட்டிய அம்மீன்களிலே அவனின் பார்வை மாறி மாறி மொய்க்கிறது. சிறிது நேரத்தின் பின் அந்தத் தொட்டியின் அடியிலிருந்து பொன்னிறமும், சிவப்பும் கலந்த ஒரு மீன் மேலே எழுந்து வந்து அவனின் எதிரே அவனையே நோக்கியவாறு நின்று கொண்டது. இப்போது அம்மனிதனின் பார்வையும் அம்மீனில் வந்து விழுகிறது. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அந்த மீன் உடனேயே அவனை நோக்கி தன் பார்வையால் பேசியது:
“ஏ மனிதா! நின் ஊரின் கிழக்கே குடியிருக்கும் மற்ற இனத்தவரை இயலுமானவரை இன்றிரவே கொன்று குளித்துவிடப் போவதாக சில மணித்தியாலங்களுக்கு முன் இங்கே சூளுரைத்துக் கொண்டாயே, அதைச் சாதிப்பதற் காகத்தான் இப்போது புறப்பட்டுக் கொண்டிருக்கிறாயோ…?'”
“ஆம்… ஆம்… சரியாகச் சொன்னாய்…” அந்த மனிதனும் பார்வையாலேயே அதற்குப் பதிலளித்தான்.
‘”ஏன் அவர்களை அப்படிக்கொன்று குவிக்கப் போகின்றாய்…? உங்களுக்குள்ளே என்ன நடந்தது…?”
“அவர்களால் எங்கள் இனத்தவருக்கு ஒரேயே பிரச்சினையாக இருக்கிறது… அதுதான்…”
அப்போது மீன் தொட்டியிலே தயிராடை நிறங் கொண்ட ஒரு மீனும், மாந்தளிர் நிறங்கொண்ட மற்றொரு மீனும் பொன்னிறமும் சிவப்பும் கலந்த அந்த மீனின் பக்கமாய் வந்து அதனை முத்தமிட்டு விட்டு அப்பால் செல்கின்றன. அதுவோ, அவற்றை ஒரு முறை அவதா னித்துவிட்டு மீண்டும் அவன்மேல் தன் பார்வையைச் செலுத்துகிறது.
”ஏ மனிதா! கொலை என்பது இலேசான காரிய மல்ல… அதை மனத்தால் நினைப்பது கூட மிகவும் பாவம். அவர்கள் ஓர் இனமும் நீங்கள் வேறோர் இனமாகவும் இருக்கலாம். என்றாலும் நீங்கள் எல்லோரும் மனித இனம் என்பதை மறந்து விடக் கூடாது… உயிர்களிலெல் லாம் உயர்ந்த படைப்பான மனித இனம் இவ்வாறெல் லாம் நடந்து கொள்வது அநாகரிகமல்லவா?
சாதாரணமாய் ஒருவரை எடுத்துப் பார்ப்போம். அவரும் ஓர் உயிர் என்பது முக்கியமானது. அதைவிட அவர் எத்தனையோ மனக் கோட்டைகளைக் கட்டிவைத் திருப்பார். அது மட்டுமல்ல அவரைச்சுற்றி ஒரு குடும்ப மிருக்கும்… அத்தோடு அவரை நம்பி அவரின் பாசத்தைப் பிரிய முடியாத எத்தனையோ பேரிருப்பர். இந்த நிலை யிலே அவரைக்கொன்று விடுவது எவ்வளவு கொடுமை. ஆகையினாலே, கொலை என்ற எண்ணத்தையே விட்டெ றிந்து விட்டு எப்படியோ பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொண்டு இரு இனங்களும் ஒற்றுமையாக வாழுங் கள்** என்று அந்த மீன் பார்வையால் இயம்பிலிட்டு சற்று முன்னோக்கி வந்து மேலும் தொடர்ந்தது:
“இதோ! எங்களைப்பார்! இந்தச்சிறிய இடத் திலே நாங்கள் நான்கு ஐந்து இனங்கள் வாழ்கின்றோம். அப்படி யிருந்தும் நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம். ஓர் இனத்திலே உள்ள ஒருவரை மற்ற இனத்திலே உள்ள ஒருவர் புரிந்து கொண்டும், மதித்தும் நடப்பதன் மூலம் பெரும்பாலும் எங்களுக்குள்ளே பிரச்சினைகளே தோன்று வதில்லை. தவிர்க்க முடியாமல் எப்போதாவது பிரச்சினை கள் தோன்றினால், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் ஆகியவற்றை பரஸ்பரம் நாங்கள் கைக்கொள்வதன் மூலம் பிரச்சினைகளை விடுவித்துக் கொண்டு ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆகையினாலே, நீங்களும் மற்ற இனத்தவரும் இவ்வாறு நடந்து ஒற்றுமையாக வாழுங்கள்”
அந்த மீன் இலாவகமாகத் திரும்பி நீரைக் கிழித்துக் கொண்டு கீழே விரைந்தது. சற்று நேரத்தில் மீண்டும் அம்மீன் அவ்விடத்திற்கே வந்தது.
அந்த மனிதனோ தான் நின்ற அதே இடத்திலேயே நின்று கொண்டு அந்த மீன் தொட்டியிலே வாழும் மீன் களைப் பார்த்தவண்ணம் சிந்தனையிலே மூழ்கியிருந்தான்.
இப்போது அவன் வதனத்திலே கோபமில்லை; கடுகடுப்பு இல்லை. மென்மையிருந்தது; சாந்தி நிலவியது.
இவை அனைத்தையும் நன்கு அவதானித்துக் கொண்ட அம்மீன் இப்போது அவனின் பார்வையை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தது. அப்போதே, சிந்தனை கலைத்து அவனின் பார்வையும் அம்மீனிலே
அம்மீனிலே விழுந்தது. உடனேயே மீன் அவனிடம் வினவியது:
“நான் சொன்னவற்றை நீர் சிந்தித்துப்பார்த்தீரா? இப்போது என்ன கூறுகிறீர்?”
“ஆம்… ஆம்… சிந்தித்துப் பார்த்தேன். உன்னைச் சந்தித்ததும் நல்லதாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் இப்போது நான் எத்தனையோ கொலைகளைச் செய்திருப் பேன்… ஒரு சிறிய இடத்திலே நீயும் நின் இனமும், இன் னும் பல இனங்களும், ஒற்றுமையாக வாழ்வதை நான் காணவைத்து எனக்கு நல்ல அறிவுரைகளையும் எடுத்துக் கூறி எந்த உயிருக்கும் தீங்கு நினையாத அளவுக்கும் என்னைத் திருத்திவிட்டீர்! இனி நான் எங்கள் இனத்திலே யும், மற்ற இனத்திலேயும் இனவெறி உணர்வோடு வாழ் கின்ற அனைவரையும் என்போல் திருந்தச் செய்து இங்கே, எங்கள் இனமும் மற்ற இனமும் நாங்கள் மனித இனம் என்ற உணர்வோடு என்றும் ஒற்றுமையாய் வாழ வழி சமைப்பேன்…’ அவன் தனது புயங்களை ஒருமுறை உலுக்கி விட்டுக் கொண்டான்.
*மிகவும் சந்தோசம்…” என்று அந்த மீன் பார் வையால் இயம்பி விட்டு, சிவப்பு, கறுப்பு, விறவுண் ஆகிய நிறங்கொண்ட ஏனைய இன மீன்கள் பலவற்றுடன் சேர்ந்து கொண்டு அங்கிருந்து அகன்று போனது.
ஆனால் அந்த மனிதனோ கையிலிருந்த துப்பாக்கியை விசுக்கென்று தரையிலே வீசியெறிந்து விட்டு தனது அறையை நோக்கி அடிவைத்தான்.
– தினகரன் வார மஞ்சரி.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.