(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மதுரையில் கண்ணன் என்று ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெற்றோர் மிகுந்த ஏழைகள். அதனால் அவர்கள் அவனைப் படிக்க வைக்கவும் இல்லை; அவனுக்குப் பணம் சேர்த்து வைக்கவும் இல்லை.
பெற்றோர் இருந்தபோது கண்ணன் எங்காவது கூலி வேலை செய்து, கிடைத்த பணத்தை அவர் களிடம் கொண்டு வந்து கொடுப்பான். அது அவர்கள் வீட்டுச் செலவுக்குப் பயன்படும். அவர்கள் குடும்பத்தில் ஏழ்மையினால் ஏற்பட்ட துன்பத்தைச் சிறிது குறைக்க அவனுடைய பணம் உதவியாக இருந்தது.
பெற்றோர் இறந்த பிறகு, கண்ணன் தனக்குச் கிடைத்த கூலியை நண்பர்கள் சிலரோடு சேர்ந்து உண்ணுவதிலும், ஊர் சுற்றிச் செலவழிப்பதிலுமாகக் கரைத்து வந்தான். அதனால் அவன் கையில் எப்போதும் காசு மீந்திருப்பதில்லை. அன்றன்று சாப்பாட்டுக்கு அவன் உழைத்தே பிழைக்கவேண் டியிருந்தது.
என்றாவது ஒரு நாள் தலை வலிக்கிறது என்று படுக்க முடியாது; உடல் நோகிறது என்று ஓய்வெடுக்க முடியாது. வேலைக்குப் போகாமல் இருந்தால் கூலி கிடைக்காது. கூலியில்லாவிட்டால், வயிற்றுப் பசியைத் தணிக்க முடியாது. ஆகவே, அவன் பட்டினி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், நாள் தோறும் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருந்தது.
ஒரு முறை கண்ணனுக்கு நன்றாகக் காய்ச்சல் வந்து விட்டது. வேலைக்குப் போக முடியவில்லை. இருந்த பணம் முற்றிலும் வேலைக்குப் போய் வந்த அன்றே தீர்ந்து விட்டபடியால் மருந்து வாங்கக் கையில் காசில்லை.
காய்ச்சலோடு வீட்டில் படுத்துக் கிடைந்த கண்ணன், என்ன செய்வதென்று யோசித்தான்.
கண்ணன் வசித்த அதே தெருவில் நமசி வாயம் என்று ஒரு பெரியவர் இருந்தார். அவர் கண்ணன் தந்தைக்கு நல்ல நண்பர். ஊரில் அவரை நல்லவர் நமசிவாயம் என்றுதான் குறிப்பிட்டுப் பேசுவார்கள்.
கண்ணனுக்கு நமசிவாயத்தின் நினைவு வந்தது. ‘அவரிடம் போய் இரண்டு ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வந்து மருந்து வாங்கிச் சாப் பிடலாம். பின்னால், கூலி கிடைக்கிற பணத்தில் அவர் கடனைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தான்.
காய்ச்சலால் சோர்ந்து போயிருந்த கண்ணன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டே நமசி வாயத்தின் வீட்டை அடைந்தான். கண்ணனைக் கண்டவுடனே நமசிவாயம் அன்போடு வரவேற் றார். அவன் தந்தை இறந்த பிறகு, அவன் தன் வீட்டுக்கே வராமல் இருந்ததைக் குறிப்பிட்டுக் கோபித்துக் கொண்டார். அவன் உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “கண்ணா, காய்ச்சலுக்கு மருந்து சாப்பிடவில்லையா? உடம்பைக் கவனித்துக் கொள்ளவேண்டாமா?” என்று பரிவோடு கேட்டார். அப்போதே துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, கண்ணனை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினார். மருத்துவருக்கு அவரே பணம் கொடுத்தார். பிறகு, கண்ணனை அவன் வீட்டிலே கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் மனைவி பார்வதியம்மாள்,காய்ச்சிய கஞ்சியும் வெந்நீரும் கொண்டுவந்து கண்ணனுக்குக் கொடுத்து விட்டுச் சென்றாள்.
நமசிவாயத்தைப் பற்றிக் கண்ணள் எண்ணிப் பார்த்தான். அவர் எவ்வளவு நல்லவர் என்பது அப்போது தெளிவாகத் தெரிந்தது. அவன் அவரிடம் எப்படி இரண்டு ரூபாய் கடன் கேட்பதென்று கூசி னான். ஆனால், அவரோ அவன் கேட்கும்வரை காத்திராமல், எவ்வளவு அன்போடு உதவி செய் தார். அப்பா இப்படிப்பட்ட நல்ல நண்பரைப் பெற்றிருந்தது தனக்கு எவ்வளவு உதவியாயிருக் கிறது! தனக்கும் நண்பர்கள் ஏழெட்டுப் பேர் இருக்கிறார்களே! யாராவது கண்ணன் என்ன ஆனான் என்று எட்டியாவது பார்த்தார்களா?
உடல் நலமடைந்தவுடன் கண்ணன் நமசி வாயத்தைப் போய்ப் பார்த்து வரச் சென்றான். அவர் அவனை அன்போடு வரவேற்றார். எப்படியிருக் கிறான், என்ன வருவாய் கிடைக்கிறது என்றெல் லாம் கேட்டார். கடைசியில் அவர் அவனைக் கடிந்து பேசினார்.
“கண்ணா, நீ செய்வது சரியில்லை. உன் அன்றாடத் தேவைக்கு அதிகமாகவே உனக்குக் கூலி கிடைக்கிறது. கிடைக்கும் பணம் முழுவதை யும் நீ செலவழித்து விடுவது சரியில்லை. பணம் சேமித்து வைக்க வேண்டும்; சொல்லப் போனால், உன் செலவுகளைக் குறைத்து அதிகப் பணம் சேமித்து வைப்பதே நல்லதென்பேன்!” என்று நமசிவாயம் கூறினார்.
அவருடைய சொற்கள் கண்ணன் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. அவர் தன் நன்மைக்காகத் தான் கூறுகிறார் என்று கண்ணன் தெரிந்து கொண் டான். அன்று முதல் அவன் பணம் சேமிக்கத் தொடங்கினான். ஓராண்டுக்குப் பிறகு அவன், தான் சேமித்து வைத்த பணத்தை எண்ணிப் பார்த்த போது அவனுக்கே வியப்பாயிருந்தது. ‘இன்னும் நான்கைந்து ஆண்டுகள் சென்றால் நானே பெரிய பணக்காரன் ஆகிவிடுவேன் போலிருக்கிறதே நமசிவாயத்தின் வழி நல்ல வழிதான்!’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
ஒரு முறை கண்ணன் தன் நண்பர்கள் சில ருடன் ஆற்றங்கரைக்குக் காற்று வாங்கச் சென்றிருந் தான். காற்று வாங்கிக் கொண்டே வைகையாற்று மணலில் உட்கார்ந்திருக்கும் போது, நண்பர்கள் பல செய்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவன், “இந்த உலகம் வரவரக் கெட்டுப்போய் விட்டது. நல்லவர்களைக் காண் பதே அரிதாயிருக்கிறது. சொல்லப் போனால், இந்த உலகத்தில் நல்லவர்களே இல்லை என்றுதான் கூற வேண்டும்!” என்று குறிப்பிட்டான்.
இதைக் கேட்ட கண்ணன் தன் நண்பனுடைய கருத்தை வன்மையாக மறுத்துரைத்தான். நமசி வாயத்தைப் பற்றி அவனுக்கு எடுத்துக் கூறினான். அவருடைய நல்ல பண்புகளைப் போற்றிப் பேசி னான். ஊர் மக்களுக்கு அவர் தம்மாலியன்றவரை செய்து வரும் உதவிகளையெல்லாம் விளக்கிக் கூறினான்.
நண்பர்கள், இப்படி ஒரு நல்ல பண்புள்ள மனிதர் இருக்கிறாரா என்று வியந்தார்கள். அதனால் இன்னொரு பலனும் ஏற்பட்டது. அந்த நண்பர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மனிதர் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண் டிருந்தார். அவர் இளைஞர்களின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு செல்வந்தர்.
அவர் நமசிவாயத்தின் பண்பு நலன்களைப் பற்றியறிந்து களிப்பு கொண்டார். பின் சில நாட் களில் அவர் நமசிவாயத்தின் நட்புக்குரியவரானார்.
அந்த செல்வந்தர் தன் மகனுக்கு நமசிவாயத் தின் மகளைத் திருமணம் செய்து வைத்தார். நம சிவாயத்தின் மூலம் கண்ணனுடைய நல்ல பண்பு களை அறிந்து அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.
இதனால் கண்ணனுக்கு நல்ல குடும்பத் தொடர்பு ஏற்பட்டது. அதோடு தந்தையின் நண்பராயிருந்த நமசிவாயம் அவனுக்கு உறவினருமாகி விட்டார்.
பின்னர் நமசிவாயத்தின் தொடர்பில் அவன் அடைந்த நன்மைகள் மிகப் பல. நல்ல பண்புகள் மிக்க தன் மாமனாரின் தொடர்பால் அவன் அடைந்த நன்மைகளும் பலப்பல.
மதுரையில் குறிப்பிடத் தகுந்த வணிகர்களிலே கண்ணனும் ஒருவனாகி விட்டான். நேர்மையோடு அவன் வாணிபம் செய்து வந்ததால், நாளுக்கு நாள் அவன் செல்வம் வளர்ந்தது.
புதிது புதிதாக அவன் வசதிகளையும் இன்பங் களையும் செல்வங்களையும் அடையும் போதெல் லாம் நமசிவாயத்தை நினைத்துக் கொள்ளத் தவறவே மாட்டான்.
கண்ணன் நல்ல பல பிள்ளைகளைப் பெற்று இன்பமாகப் பல காலம் வாழ்ந்து வந்தான்.
கருத்துரை:– நல்லவர்களைக் காண்பதும் நன்று; நல்லவர்கள் சொல் கேட்பதும் நன்று; நல்லவர்கள் குணங்களைப் பேசுவதும் நன்று; நல்லவர்களோடு சேர்ந்து இருப்பதும் நன்று.
– நல்வழிச் சிறுகதைகள் – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.