ஓர் ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தான். அவன் ஒரு வடிகட்டிய கஞ்சன். யாருக்கும் ஒரு சிறு உதவிகூடச் செய்ய மாட்டான். ஆனால், பேராசைக்காரனான அவன், சோதிடர்களைக் கண்டுவிட்டால் உடனே ஓடோடிச் சென்று அவர்களை அழைத்துவந்து, வீட்டில் தங்க வைத்து விருந்து கொடுப்பான். மனம் குளிர்ந்து போகும் சோதிடர்களிடம் அவன் கேட்பதெல்லாம் ‘‘எனக்கு எப்போது புதையல் கிடைக்கும்? நான் எப்போது இன்னும் பெரிய பணக்காரன் ஆவேன்? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’’ போன்ற கேள்விகளைத்தான்.
சோதிடர்களும் அவன் மனம் மகிழும்படி எதையாவது சொல்லிவிட்டு நழுவி விடுவார்கள்.
அந்த ஊருக்கு அருகிலே இருக்கும் பட்டணத்துக்குப் போக வேண்டுமானால் ஒரு சிறிய காட்டைக் கடந்துதான் போக வேண்டும். அந்தக் காட்டுக்கு நடுவே ஒரு குளமும், கரையில் ஒரு பெரிய ஆலமரமும் இருந்தன.
பட்டணத்துக்குச் செல்லும் ஊர்க்காரர்களும், வணிகர்களும் வழியில் அந்த ஆலமரத்தடியில் தங்கி இளைப்பாறிச் செல்வது வழக்கம். அப்போது ஊர்க் கதைகளை எல்லாம் அலசுவார்கள். பெரும்பாலான கதைகள் நம் கஞ்சனைப் பற்றியவையாக இருக்கும்.
அந்த ஆலமரத்துக்கு அருகில் ஒரு குறும்புக்கார நரி வாழ்ந்து வந்தது. கஞ்சனைப் பற்றி ஊரார் பேசிக்கொள்வதைப் பல முறை கேட்ட அந்த நரிக்கு கஞ்சனிடம் விளையாடத் தோன்றியது.
எனவே நரி ஒருநாள் பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையும் அணிந்து கொண்டது. தோளில் துண்டு ஒன்றைப் போட்டுக்கொண்டது. நெற்றியிலே திருநீறும் குங்குமமும் இட்டுக் கொண்டது. வாய் சிவக்க வெற்றிலை போட்டுக் கொண்டது. கையிலே ஓலைச்சுவடிக் கட்டையும் எடுத்துக்கொண்டு ஊருக்குள் நுழைந்தது.
‘‘நரி ஜோசியம் பார்க்கலையா நரி ஜோசியம்… ஐயா நரி ஜோசியம் பார்க்கலையா நரி ஜோசியம்!’’ என்று கூவிக்கொண்டே ஊருக்குள் திரிந்தது.
நரி ஜோசியரை ஊர் மக்கள் வியப்போடு பார்த்தார்கள். விரைவில் நரி சோதிடரைப் பற்றிய செய்தி, கஞ்சனை எட்டியது. நரி சோதிடர் நம் தெருவிற்கு எப்போது வருவார் என்று காத்திருந்தான் அவன்.
நரியின் தலை தென்பட்டதும் ஓடோடிச் சென்று அதை வரவேற்று அழைத்து வந்து வீட்டின் வரவேற்பறையிலே உட்கார வைத்தான். தனக்கு எப்போது புதையல் கிடைக்கும் என்ற வழக்கமான கேள்வியை நரியிடமும் கேட்டான்.
உடனே நரி, ‘‘அப்பனே! யாம் அகத்திய முனிவரின் ஆசிபெற்ற அரும்பெரும் சோதிடர்! நீ எம்மைச் சிறப்பாக விருந்தோம்பினால் உனக்குப் பெரும் புதையல் இருக்குமிடம் காட்டுவோம்!’’ என்று கதை விட்டது.
‘‘அப்படியே ஆகட்டும் சாமி!’’ என்று நரியின் கால்களில் விழுந்தான் கஞ்சன்.
‘‘என்ன வெயில்…என்ன வெயில்! அப்பனே முதலில் அந்த மின் விசிறியைப் போடு!’’ என்றது நரி.
‘‘மினி விசிறி என்ன சாமி? குளிர் பதனத்தையே இயக்குகிறேன்!’’ என்று கூறி அதை இயக்கினான் கஞ்சன். சற்று நேரத்தில் அறை ‘சில்’ என்று ஆனது.
பின்னர் நரி, ‘‘அப்பனே யாம் அருந்துவதற்கு அரைப்படி மோரும், நான்கு செவ்விளநீர்களும் கொண்டுவா!’’ என்று பணிக்க அதையும் நிறைவேற்றினான் கஞ்சன்.
‘‘சரி, உன் மனைவியிடம் கூறிக் கோழி அடித்து, பாசுமதி அரிசியில் நெய் ஊற்றி பிரியாணி செய்யச் சொல். இப்போது சிற்றுண்டியாகக் கொறிப்பதற்கு முந்திரி, பாதாம், திராட்சை கொண்டு வா!’’ என்றெல்லாம் கேட்டு நரி அட்டகாசம் செய்தது.
எச்சில் கையால் காக்காய்கூட ஓட்டாத அந்தக் கஞ்சன், நரி கேட்டதை எல்லாம் விழுந்து விழுந்து செய்தான். புதையல் ஆசை அவனை அப்படி ஆட்டி வைத்தது.
கோழி பிரியாணியை வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டுக் கஞ்சனின் பட்டு மெத்தையில் படுத்து உறங்கிய நரி, மாலை நான்கு மணிக்கு விழித்தது. சுடச்சுட வெங்காய பக்கோடாவும் மிளகாய் பஜ்ஜியும் சாப்பிட்டது. பாதாம் பாலை அருந்தி முடித்தது. பிறகு ஓர் அரைமணிநேரம் ஓலைச் சுவடியைப் புரட்டி விட்டுக் கஞ்சனை அருகே அழைத்த நரி, ‘‘மகனே, யாம் சொல்வதைக் கவனமாகக் கேள். இன்றிலிருந்து அறுபது நாள் கழித்து வரும் முழுநிலா இரவன்று, உன் தோட்டத்தின் வலது மூலையில் இருக்கும் சப்போட்டா மரத்தின் கீழே நீ தோண்டினால் உனக்குப் பெரும் புதையல் கிட்டும்! ஆனால் அந்தப் புதையல் உனக்குக் கிடைக்கவேண்டுமானால் நீ சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும்!’’ என்று கூறியது.
‘‘எதுவாக இருந்தாலும் கூறுங்கள் சாமி! தட்டாமல் செய்கிறேன்!’’ என்றான் கஞ்சன் பணிவுடன்.
‘‘இந்த அறுபது நாள்களும் நீ தான தரும காரியங்களைச் செய்து வரவேண்டும். பசி என்று கேட்டு வரும் ஏழை, எளியவர்களுக்குப் புசி என்று நீ அன்னதானம் செய்ய வேண்டும். உன்னிடம் பொருளுதவி கேட்டு வருவோருக்கு இல்லை என்னாது நீ வாரி வழங்க வேண்டும்! அப்படிச் செய்து வந்தால் உனக்குப் புதையல் கிட்டும்!’’ என்றது நரி.
நரி இவ்வாறு கூறியதும் கஞ்சனின் முகம் இருண்டுபோனது. உடனே நரி, ‘‘அப்பனே நீ எந்த அளவிற்கு உன் செல்வத்தைச் செலவழிக்கிறாயோ அந்த அளவைவிடப் பத்து மடங்கு அதிகமாக உனக்குப் புதையல் கிடைக்கும்… நீ தான தருமங்களைக் குறைவாகச் செய்தால் கிடைக்கும் புதையலும் குறைவாகத்தான் இருக்கும், பார்த்துக்கொள்!’’ என்று ஒரு போடு போட்டது.
வேறு வழியின்றி கஞ்சனும் தலையாட்டினான். பின்னர் நரி காற்றிலிருந்து வரவழைப்பதுபோல் தந்திர வித்தை காட்டி, தான் ஏற்கனவே ஒளித்து வைத்திருந்த ஒரு பொற்காசை எடுத்துக் கஞ்சனுக்குப் பிரசாதமாய் வழங்கியது.
பிறகு நரி தனக்குத் தட்சணையாக 5000 ரூபாய் பணம், 10 ஆடுகள், 15 கோழிகளை கஞ்சனிடம் கறந்து கொண்டு கம்பி நீட்டியது.
நரிக்கு அந்த ஊரிலே நான்கு நண்பர்கள் இருந்தார்கள். ஒரு குயவன், ஓர் உழவன், ஒரு கொல்லன், ஒரு நெசவாளி ஆகிய நால்வரும்தாம் நரியின் நண்பர்கள். ஏழைகளாகிய அவர்களுடைய குடிசைகள் ஊரின் எல்லையில் அருகருகே இருந்தன.
அங்கே சென்ற நரி, நண்பர்களை அழைத்து ஆளுக்கு 1250 ரூபாயைக் கொடுத்தது. பிறகு தன் குறும்பு வேலையைப் பற்றி அவர்களிடம் கூறிய நரி, ஆடுகளையும் கோழிகளையும் ஓட்டிக்கொண்டு காட்டுக்குள்ளே சென்றுவிட்டது.
நரியின் நண்பர்கள் மூலம் செய்தி ஊர் முழுக்கப் பரவ, மறுநாள் காலையிலிருந்து கஞ்சனின் வீட்டு முன் ஏழை எளியவர்களின் கூட்டம் அலைமோதியது. கஞ்சனும் புதையல் ஆசையில் இல்லை என்று சொல்லாமல் எல்லோருக்கும் வாரி வாரி வழங்கினான்.
அறுபது நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்த கஞ்சன், முழுநிலா அன்று இரவானதும் சப்போட்டா மரத்தடிக்கு மண்வெட்டியுடன் ஓடோடி வந்தான்.
ஆவலோடு தோண்டத் தொடங்கினான். சற்று நேரத்திற்கெல்லாம் குறும்புக்கார நரி ஏற்கெனவே அங்கே புதைத்து வைத்திருந்த செப்பேடு ஒன்று அவனுக்குக் கிடைத்தது.
மண்ணைத் தட்டிவிட்டு, நிலவொளியில் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று படித்தான்.
‘‘அப்பனே! இத்தனை நாள்கள் கஞ்சனாக இருந்த நீ, வாரி வாரி வழங்கி இப்போது வள்ளல் என்று பெயர் பெற்றுவிட்டாய்! தானங்கள் செய்து புண்ணியம் தேடிக் கொண்ட நீ, இறந்தபின் சொர்க்கத்திற்குத்தான் செல்வாய்! இதைவிடவா உனக்குப் பெரிய புதையல் வேண்டும்? எனவே உன் தானங்கள் தொடர என் வாழ்த்துக்கள். இப்படிக்கு நரி’’ என்று அந்தச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.
அதைப் படித்ததும் கஞ்சனின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே…
தொடர்ந்து ‘ஓ’ வென்று கதறி அழத் தொடங்கினான் கஞ்சன். அழுகை கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிரிப்பாக மாறியது. பிறகு பெருஞ் சிரிப்பாய் மாறிய அந்தச் சிரிப்பு நெடுநேரம் ஓயாது ஒலித்துக் கொண்டே இருந்தது.
– வெளியான தேதி: 01 மார்ச் 2006