அது சிறுமியர்க்கான குதிஉயர் காலணி; அதிக உயரமில்லாத நடுத்தர குதி; கூரல்லாத சற்றே மழுங்கலான குதிநுனி; கால்களின் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ளும் மெத்தென்ற அமைப்புடன் கூடிய மூன்றடுக்கு ஸோல்; பாதம் பதியுமிடத்தில் பிடிமானத்தை உறுதி செய்யும் மெல்லிய நுண்வரிகள்; அடர் பாசிப்பச்சை பழுப்புமஞ்சள் என்று இரட்டை வண்ணப்பூச்சுக்களில் மெருகூட்டப்பட்ட கால்களை மூடும் மேற்பட்டை என அந்தக் காலணி மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது.
நதியா பத்து வயது சிறுமி; துறுதுறுப்பும் அழகும் கொண்ட பெண்; அவளின் பிறந்த நாளிற்கு அப்பா அந்தக் காலணியைப் பரிசாகத் தந்தார். பரிசுஉறையைப் பிரித்த போதுதான் காலணி முதன்முதலாக நதியாவைப் பார்த்தது. பார்த்த மாத்திரத்தில் அவள் வசதியான வீட்டுப் பெண் என்பதைப் புரிந்து கொண்டது. வீட்டில் அவளுக்கென்று தனி படுக்கை அறை இருந்தது. நதியா ஆர்வம் மேலிட காலணியை வாங்கிப் பார்த்தாள் அதில் பிணைக்கப்பட்டிருந்த விலைப்பட்டியையும் மாடல் டேக்கையும் அவள் அவசரப்பட்டு பிய்க்கவில்லை. சிறு கத்தரிக்கோல் கொண்டு பொறுமையுடன் கத்தரித்தாள். காலணியை இலாவகமாகக் கையாண்டாள். அந்த முதல் சந்திப்பிலேயே காலணிக்கு நதியா மீது பிரியம் வந்து விட்டது.
நதியா காலணியை அணிந்து வீட்டில் அனைவருக்கும் அழகு காட்டினாள்.
“எப்படிமா நல்லா இருக்கா?”
“கலர் காம்பினேஷன் அருமையா இருக்கு! சுடிதார் ஃபிராக் மிடினு நீ எந்த டிரெஸ் போட்டாலும் அதுக்கு இது பொருத்தமா இருக்கும்னு நினைக்குறேன்!” – என்றார் அம்மா;
“எனக்கும் அப்படித்தான் தோணுது!” – சொன்னாள் நதியா;
“எங்காவது வெளில போறப்பம் போடுறதுக்கு வைச்சுக்கோ!” – என்றார் அப்பா; நதியா ‘சரி’ என்று தலை ஆட்டினாள்.
தினசரிப் பயன்பாட்டில் இல்லாத விலை உயர்ந்த மற்ற காலணிகளை வைப்பதற்கென்று அவளது அறையில் தனி ஷீ ரேக் இருந்தது. நதியா காலணியை அந்த ரேக்கில் வைத்தாள். அங்கே ஏற்கனவே ஐந்து ஜோடி காலணிகள் இருந்தன. இந்தப் புதுக் காலணி ஆறாவது ஜோடியானது. நதியா தன்னை சுழற்சி முறையில் பயன்படுத்துவாள் என காலணி எதிர்பார்த்தது. ஆனால் அதன் நினைப்பிற்கு மாறாக இந்த ஹீலையே அவள் அதிகம் பயன்படுத்தினாள். நதியா தனது பிறந்த நாளுக்கு எம்ப்ராய்டரி வேலை செய்யப்பட்ட கற்கள் பதித்த அடர் மஞ்சநிற மேலாக்குடன் கூடிய நீள ஃபிராக் அணிந்திருந்தாள். பிறந்தநாள் விருந்திற்கு வந்திருந்த அனைவரும் அவளை வைத்தகண் வாங்காமல் பார்த்தார்கள். அதில் வயதான பெண்மணி ஒருவர் “சுத்திப் போடு நதியா! உனக்கு மட்டுமி;ல்லை! உன்னோட ஹைஹீலுக்கும்! சூப்பரா இருக்கு! பிளசண்ட் கலர்!” – என்ற போது நதியா மட்டுமல்ல காலணியும் வெட்கத்தில் முகம் சிவந்தது.
நதியா ஹைஹீல் அணிந்து நடக்கும் போதும் தனது இயல்பு மாறாமல் நடப்பாள். குதிநுனிக்கு அவள் தரும் அழுத்தம் சீரானதாகவும் அதே சமயம் போதிய விசையுடனும் இருக்கும். சீரற்ற தளத்தில் நடந்தாலும் அவள் ஒருபோதும் ஹைஹீலினால் தடுமாறியதில்லை. காலணி அவளோடு கல்யாண மண்டபங்கள் மால்கள் கடைவீதிகள் பள்ளிக்கூடம் பூங்காக்கள் நண்பர்களின் வீடுகள் என்று அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்தது. அனைத்தும் சிறுவர்களுக்கே உரித்தான உற்சாகமாள துள்ளலான பயணம்; காலணி அவளின் அந்த அனைத்து பயணங்களையும் வெகுவாக இரசித்தது. நதியா காலணிகளைக் கழற்றி விடும் போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரைந்து விட மாட்டாள். அருகருகே ஜோடியாகத்தான் விடுவாள். வாசலில் நடமாடும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வண்ணம் ஒரு ஓரமாக விடுவாள். அதில் ஒரு நளினமும் அழகுணர்ச்சியும் இருக்கும்.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள்; நதியாவினால் அந்தக் காலணி அதிகமுறை பயன்படுத்தப்பட்டது. ஒருநாள் அவள் காலணியை எடுத்து முன்னும் பின்னும் உற்றுப் பார்த்தாள். தனது தேய்மானம்; குறித்து ஆராய்கிறாள் என்பதை காலணி புரிந்து கொண்டது. அவளின் முகத்தை வைத்தே அவள் அதன் ஆரோக்யம் குறித்து அவ்வளவு திருப்திபடவில்லை என்பதைப் புரிநது கொண்டது. செல்வச் செழிப்பான பெண்ணாயிற்றே! தன்னை அவள் தூக்கி வீசி விடுவாள் என காலணி நினைத்தது. ஆனால் அவள் அவ்வாறு செய்யவில்லை. அதை பழுது பார்க்க அதை வாங்கிய கடைக்கே கொண்டு சென்றாள். அவள் தன்னைத் தொடர்ந்து பயன்படுத்த நினைக்கிறாள் என்பதை காலணி புரிந்து கொண்டது. அது மகிழ்ச்சி கொண்டது. கடையின் விற்பனையாளர் “பயன்படுத்துன அடையாளமே தெரியலையே பாப்பா! ரொம்பப் பதனமா வச்சுப்பீங்க போல! பாத பிடிமானத்துக்காக இருக்குற சின்னசின்ன வரிகள் கூட இன்னும் அழியாம இருக்கு! ஹீல் முனை தேயல! பாட்டம் ஸோல் மட்டும்தான் கொஞ்சம் பிரிஞ்சிருக்கு! ஒட்ட முடிஞ்சா ஒட்டித் தர்றேன்! இல்லாட்டி முழுசா இதே கலர்ல மாத்திரலாம்! ஹீல் இன்னும் கொஞ்ச நாளைக்கு வரும்!” – என்றார். சொன்னது போன்றே மாற்றியும் தந்தார்.
அன்றிலிருந்து மேலும் ஆறு மாதங்கள்; காலணி நதியாவோடு ஒட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அவள் காலணியை மற்ற காலணிகளுடன் சுழற்சி முறையில் பயன்படுத்தினாள். காலணியின் மேற்பட்டை ஸோலோடு பிணைக்கப்பட்டிருந்த இடத்தில் சிறுசிறு வெடிப்புகள் தென்பட்டன. பட்டைகள் தளர்வுற்றிருந்ததால் நடக்கும்போது அவளுக்குபு; போதிய பிடிமானம் கிடைக்கவில்லை. காலணி தனக்கு வயோதிகம் வந்து விட்டதைப் புரிந்து கொண்டது.
“கலர் மங்கிருச்சு நதியா! பழைய பளபளப்பு இல்ல! வேணா தூக்கிப் போட்டுட்டு வேற புதுசா ஒன்னு வாங்கிக்கோ!” – என்றார் அம்மா;
“இன்னும் கொஞ்ச நாளைக்கு வரும்னு நினைக்குறேன்!” – என்றாள் நதியா;
அவள் ஒருநாள் அப்பாவுடன் புதிய காலணி வாங்க கடைக்கு வந்திருந்தாள். அதே ஷோhரூம்; அதே விற்பனையாளர்; இங்குதான் அந்தப் பழைய ஹைஹீலின் நதியாவுடனான இரண்டு வருட பயணம் ஆரம்பித்தது. தான் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஷெல்பை காலணி பெருமையுடன் பார்த்தது. நதியா இப்போது வேறு மாடல் வகை காலணியைத் தேர்வு செய்தாள். விற்பனையாளரின் பார்வை அவள் அணிந்திருந்த பழைய காலணியின் மீது படிந்தது. தங்கள் பிராண்ட் காலணியை ஒரு சிறுமி நன்றாகப் பயன்படுத்துகிறாள் என்ற பெருமிதம் அவருக்கு; நதியா தான் தேர்வு செய்த புதிய காலணியை அணிந்து கொண்டாள். “இதை பேக் பண்ணிருங்க!” – என்றபடி பழைய காலணியைக் கையில் எடுத்துத் தந்தாள். நதியாவுடனான கடைசி ஸ்பரிசமாக இது இருக்கக் கூடும்; காலணி ஒருகணம் ஏங்கியது. இருந்தாலும் அது தனது காலம் முடிந்து விட்டதைப் புரிந்து கொண்டது. வீட்டிற்கு வந்ததும் வாங்கிய மற்ற பொருட்களை வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
“நதியா! பழைய ஹீல் வேணுமா? பயன்படுத்த போறியா?” – அப்பா கேட்டார்.
“இல்லை! வேண்டாம்பா!” – என்ற நதியா அது இருந்த அட்டைப் பெட்டியை வாசல் வராண்டாவின் ஓரமாக வைத்தாள். ஒரு பொருள் உருவாக்கப்படுவதன் நோக்கம் பயன்பாடுதான்; தான் முழுமையாக பயன்பட்டு விட்ட திருப்தியுடன் காலணி தனது இறுதிப் பயணத்திற்குக் காத்திருந்தது.
– மானுடம், ஏப்ரல் – ஜீன் 2024.