கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,774 
 
 

கார்த்திக் என்னைப் பார்”

குரல் வந்த திசையை நோக்கினான் கார்த்திக். அவனைத் தவிர அந்த அறையில் யாரும் கிடையாது. உடனே அவனை பயம் தொற்றிக் கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தான். பயம் ஏற்படும் போதெல்லாம் அம்மா சொல்லித்தந்த ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டே இருப்பான். அன்றைக்கும் அப்படித்தான், பயம் வந்தவுடனேயே அந்த ஸ்லோகத்தை முணுமுணுக்கத் தொடங்கினான்.

நண்பனின் குரல்அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அதே குரல், “”பயப்படாதே கார்த்திக்! நான் பேயோ பூதமோ, பிசாசோ அல்ல; நான்தான் உன் நண்பன்; உனக்குப் பிடித்த புத்தகம் பேசுகிறேன். கொஞ்சம் என் அருகில் வாயேன்” என்றது.

பயந்துபோன கார்த்திக் “புத்தகம் கூட பேசுமோ?’ என்ற சந்தேகத்துடன் சற்று படப்படப்போடு மேஜை அருகில் சென்றான். மேஜை மீது இருந்த, அவனுக்குப் பிடித்த பாரதியார் கவிதைகள் புத்தகம் கண்ணில் பட்டது. காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அவனுடைய அப்பா பிறந்தநாள் பரிசாக வாங்கித் தந்தது அது. அதிலுள்ள பாப்பா பாட்டைப் பலமுறை படித்து, அதைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதி, அதையே பள்ளி ஆண்டு விழாவில் நடந்த பேச்சுப் போட்டியில் வாசித்து முதல் பரிசும் பெற்றான். அது மறக்க முடியாத அனுபவம். முதன் முதலாக பரிசையும், ஆசிரியர்களிடமும் பள்ளி நண்பர்களிடமும் பாராட்டை பெற்றுத்தந்த “பாரதியார் கவிதைகள்’ மேல் கார்த்திக்குக்கு அளவுகடந்த ஈர்ப்பு இருந்தது.

அப்பா சொல்லியிருக்கிறார், “”தினமும் குளித்து விட்டு சாமி படத்துக்கு முன் நின்று ஏதாவது ஸ்லோகம் சொல்லிவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பு கார்த்திக். வாயில் நுழையாத ஸ்லோகத்தைச் சொல்வதைவிட பாரதியாரின் பக்திப் பாடல்களில் ஏதாவது ஒன்றைச் சொல்வதை வழக்கமாக்கிக் கொள்”.

அவர் கூறிய நாளிலிருந்து நாள்தவறாமல் பாரதியாரின் பக்திப் பாடல்களில் ஏதேனும் ஒன்றைப் படித்துவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்வது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான் கார்த்திக்.
அந்த பாரதியார் கவிதைதான் இப்போது பேசியது. கார்த்திக்கு வியப்பாக இருந்தது. அந்த வியப்புடனேயே அதைப் பார்த்தபடி, சற்று பயத்துடன் நின்ற கார்த்திக்கைப் பார்த்து, அது மேலும் பேசத் தொடங்கியது, “”இதோ பார் கார்த்திக். இந்த சின்ன வயதிலேயே நீ புத்தகப் பிரியனாக இருப்பதை இங்கிருக்கும் நாங்கள் அனைவரும் அறிவோம். உன் அப்பா உனக்குக் கொடுக்கும் பணத்தை சேமித்து வைத்து அதில் உனக்குப் பிடித்த நல்ல புத்தகங்களை ஆண்டுதோறும் வாங்கிப் படித்து மகிழ்கிறாய். இப்படி வாங்கி வைத்தால் மட்டும் போதுமா? எங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டாமா?” பேச்சு நின்று போனது.
“”நன்றாகத்தானே பராமரித்து வருகிறேன்” என்றான் கார்த்திக்.
“”எங்கே பராமரிக்கிறாய்? இதோ பார் என் மேல் அட்டை மடங்கிக் கிழிந்திருக்கிறது. நீதான் என்னை தினமும் பயன்படுத்துகிறாயே! உனது மேல்சட்டைக் கிழிந்தால் உடனே வேறு சட்டை போட்டுக் கொள்கிறாய். இல்லையென்றால், உன் அப்பாவிடம் சொல்லி புது சட்டை வாங்கி அணிந்து கொள்கிறாய். ஆனால், நாங்கள் மட்டும் கிழிந்த சட்டையுடன் இருக்க வேண்டுமா? அங்கே பார், போன மாதம் நீ வாங்கிவந்த சிறுகதைப் புத்தகம். எப்படி ஓரம் மடங்கி, கசங்கி போய்க் கிடக்கிறது. புத்தகத்தின் பக்கங்களைக் கண்டபடி மடித்து மடித்து வைத்து, அதைக் காயப்படுத்தி, பக்கத்தில் எல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறாய். அதுமட்டுமா? உன் நண்பர்கள் யாராவது வந்து விளையாடக் கூப்பிட்டால் படித்துக் கொண்டிருக்கும் பக்கத்துக்கு நடுவில் பேனாவையோ பென்சிலையோ, வேறு ஏதாவது பொருளையோ வைத்துவிட்டு ஓடிவிடுகிறாய். கார்த்திக், எங்களுக்கும் உயிர் இருக்கிறது தெரியுமா? எங்களை இப்படி இம்சித்தால் எங்களுக்கு வலிக்காதா? இதனால்தான் நாங்கள் சீக்கிரமே கிழிந்து, நீண்ட நாள்களுக்கு உங்களுக்குப் பயன்தர முடியாமல் இருக்கிறோம். நாங்கள் உனக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று நினைக்காதே. நீயும் படித்து மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நீ பிறரிடம் இரவல் கேட்கும்போது அவர்கள் உனக்குக் கொடுத்து உதவுவார்கள். புரிந்ததா? “நாங்கள் வாழும் இடம் அறிஞர்கள் ஆன்மாக்கள் வாழும் இடம் என்றும், நாங்கள் உங்களுடைய நண்பர்கள்’ என்றும் புகழ்ந்து கூறுகிறார்கள். அப்படியிருக்க, எங்களை நன்றாகப் பராமரித்தால்தானே நாங்கள் நீண்ட நாள்கள் வாழமுடியும்” என்றது.
“”அப்படிக் கிழிந்து போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?”
“”அப்படிக் கேள். ஆண்டு தோறும் உன் பாடப் புத்தகத்துக்கு மட்டும் அட்டை போட்டு, பைண்டு செய்து பத்திரமாக வைத்திருக்கிறாய், தேர்வு முடிந்ததும் அவற்றைக் கடையில் போட்டு விடுகிறாய். ஆனால், நாங்கள் உன் காலத்துக்கு மட்டுமல்ல, அடுத்த அடுத்த தலைமுறைக்கும் பயன்படக் கூடியவர்கள். அறிவுக் கண்களைத் திறப்பவர்கள். அதனால், எங்களையும் நன்றாக அட்டை போட்டு, முடிந்தால் பைண்டு செய்து, அழகாக வைத்துக்கொள்ள முயற்சி செய்.
÷புத்தகத்தில் படித்த பக்கம் வரை மடித்து வைப்பதோ, இடையே கிழிப்பதோ, நடுவில் ஏதாவது பொருளை வைப்பதோ கூடாது. படித்து முடித்ததும் கண்டபடி இறைத்துப் போடுவதும் தவறு. எடுத்த இடத்திலேயே அதை எடுத்து அடுக்கி வைக்கவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை சரஸ்வதி பூஜை, விஜயதசமி என்ற பெயரில் எங்களை அடுக்கி வைத்து பூஜை செய்கிறீர்கள். சரஸ்வதி தெய்வம் என்று கொண்டாடி வழிபடுகிறீர்கள் அவ்வளவுதான். பிறகு எங்கள் கதி? உங்கள் அறிவுக் கண்களைத் திறக்கும் எங்களின் நிலையைப் பற்றி சிந்தித்தீர்களா?”

“”மன்னித்துக்கொள். இனிமேல் அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன். நீ கூறிய அறிவுரைகளை நானும் ஏற்று, என் நண்பர்களுக்கும் கூறி, உங்களை நல்லமுறையில் பராமரிக்கச் சொல்கிறேன். இவ்வளவு காலமாக உங்களை வருத்தியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கார்த்திக் வேண்டினான்.
“”என்ன கார்த்திக் இவ்வளவு சீக்கிரமா எழுந்து புத்தகத்துக்கு அட்டை போட்டுக்கிட்டிருக்கே. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானே!” என்ற கார்த்திக்கின் தாய் அமுதா அவன் அறையை எட்டிப் பார்த்தபடி கேட்டார். அப்போது விடியற்காலை மணி 5.30.

“”அம்மா! நேத்திக்கு ராத்திரி என் அறையில் இருந்த புத்தகம் என்னோட பேசியது தெரியுமா? அது மட்டுமல்ல, எங்களை நன்றாகப் பராமரித்து வைத்தால்தான் நாங்கள் நீண்ட நாள்களுக்கு உனக்குப் பயன்படுவோம் என்றும் கூறியது. அதனால்தான் அவைகளைப் பராமரிக்கத் தொடங்கிவிட்டேன். இவை என் நண்பர்கள் இல்லையா?” என்றான் கார்த்திக்.

கார்த்திக்கை ஆச்சரியமாகப் பார்த்து, “”புத்தகம் உன்னோடு பேசியதா? பரவாயில்லையே கார்த்திக் நீ கொடுத்து வைத்தவன்” என்று சிரித்துக்கொண்டே கூறிய தாய் அமுதா மனதுக்குள், “கார்த்திக் கனவு கண்டிருப்பான் போலிருக்கு. தேவலையே, சில நல்ல கனவுகள்கூட சில நேரங்களில் நல்ல செயல்களைச் செய்ய வைக்கின்றன. நான் எத்தனை முறை கூறியிருப்பேன், படிச்ச புத்தகங்களைக் கண்டபடி போடாதே, புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வை என்று. அவன் ஒரு நாள்கூட கேட்டதில்லையே!’ என்று நினைத்துக் கொண்டவர், கார்த்திக்கின் கனவுக்கு நன்றி கூறினார்.

– இடைமருதூர் கி.மஞ்சுளா (அக்டோபர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *