ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன.
நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.
ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக தன் இருப்பிடத்தை விட்டு கழுதை இருக்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், அந்தப் பக்கமாக சென்ற சிங்கத்தைக் கண்டு நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.
ஒரு வழி நரிக்குப் புலப்பட்டது. அதாவது, தன் நண்பன் கழுதையைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தான் தப்பித்துக் கொள்வது என்பதுதான் அந்த வழி.
நரி உடனே சிங்கத்தை நோக்கி, “”மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!” என்று கூறிற்று.
அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.
நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.
“”நண்பனே! இரை தேடச் செல்லலாமா?” என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.
கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.
நரி பதறிப் போய், “”மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!” என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.
“”நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது,” என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.
இதற்குத்தான் கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.
– செப்டம்பர் 24,2010
நட்பு துரோகம் பற்றி இல்லாமல் நட்பின் புனிதத்தை பற்றி ஒரு கதை எனக்கு வேண்டும் ஆனாலும் இக்கதையை என்னால் நன்றாக இல்லை என்று சொல்ல முடியாது!