(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ரமேவும் வினோத்தும் பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரே நாலு கால் பாய்ச்சலில் ஒரு காளை மாடு தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தது.
“ரமேஷ், காளை மாடுடா! மிரண்டு போய் ஓடி, வரது!” என்று ரமேஷின் கையைப் பிடித்து இழுத்து ஓரமாக ஒதுங்கிக் கொண்டான் வினோத், நன்றி தெரிவிக்க வேண்டிய ரமேஷ், “என்னடா இப்படி பயத்தாங்கொள்ளியா இருக்கே!” என்று வாய்க் கொழுப்பாகக் கிண்டலடித்தான்.
“யாருடா பயத்தாங்கொள்ளி!”
“நீதான் என்னமோ பேய் பிசாசைக் கண்டது போல், காளை மாட்டைப் பார்த்து இப்படி, பயப்படறியே”
“அப்போ நீ எதுக்குமே பயப்பட மாட்டியா?”
“மாட்டேன். எதுக்குமே பயப்பட மாட்டேன். ஐயா அஞ்சா நெஞ்சன்!” என்று பெருமையாக மார்தட்டிக் கொண்டான் ரமேஷ்.
“அப்படின்னா, இன்னிக்கு ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு எல்லைக் காளி கோவில் சுவரில், நான் தரும் கணக்கை பென்சில்ல எழுதிட்டு வா பார்க்கலாம்? நீ எதற்கும் பயப்படாத அஞ்சா நெஞ்சன் என்பதை ஒப்புக் கொள்றேன்!”
“சவால் ஏற்கப்பட்டது!” என்று வலது கையை மடக்கி, கட்டை விரலை உயர்த்திக் காட்டினான் ரமேஷ்.
“கணக்கு எங்கேடா?”
“அதை இப்போ தர மாட்டேன், இப்போ தந்தால், நீ இப்பவே போய் எழுதிட்டு வருவே. அது நடக்காது. ராத்திரி பதினொன்றரை மணிக்கு என் வீட்டுக்கு வா. தரேன், அப்புறமா காளி கோவில் சுவர்ல போய் எழுதிட்டு வா!”
“சரிடா…”
“டேய் ரமேஷ். வாய்க் கொழுப்பா வீம்பு பண்ணாதே. காளி கோவில்ல சாயங்காலம் ஆறு மணிக்கு மேலேயே நடமாட்டம் இருக்காது. பேய், பிசாசு, ஜடாமுனி எல்லாம் உலவும்னு யாருமே போக மாட்டாங்க, வீணா வம்புல மாட்டிக்காதே, சவாலைத் திரும்ப வாங்கிக்க”
“போடா பயந்தாங்கொள்ளி! சவால் விட்டா சவால்தான், ஐயா அஞ்சா நெஞ்சண்டா! பதினொன்றரை மணிக்கு வீட்டுக்கு வரேன், நீ தூங்கி வழியாம முழிச்சுக்கிட்டு இரு”.
***
சரியாக இரவு மணி பதினொன்றரை ரமேஷின் சைக்கின் வினோத்தின் வீட்டு வாசலில் வந்து நின்றது. வினோத் கணக்கு எழுதிய தாளைக் கொடுத்தான். ரமேஷ் வாங்கி டார்ச் லைட் வெளிச்சத்தில் பார்த்தான்.
“என்னடா ஆறுஸ்தான் பெருக்கல்! மூன்றாம் வகுப்புல போட்டதுடா! ஏதாவது கஷ்டமான கணக்கைக் கொடுடா”
“வேண்டாண்டா. நீ அங்கே போய் விட்டு வந்தே, பன்னிரண்டு மணிக்குக் காளி கோவில்ல இருந்தே என்பதை நிரூபிக்கத்தான் இது” என்று குழைந்த வினோத், “டேய் ரமேஷ் இப்பக் கூட நினைச்சுப் பாருடா. விஷப் பரீட்சையாக விடக்கூடாதுடா, சவாலைத் திரும்ப வாங்கிக்க” என்று கெஞ்சினான்.
“போடா பயந்தாங்கொள்ளி” என்று பெருமையுடன் சாடிய ரமேஷ், “என்ன பென்சில்லடா இந்தக் கணக்கைப் போடணும்!” என்று கேட்டான்.
வினோத் சட்டைப் பையில் இருந்து ஊதா வண்ணனப் பென்சிலை எடுத்துக் கொடுத்தான்.
“பை” கூறிக் கையை ஆட்டி விட்டு ரமேஷ் சைக்கிளில் விரைந்தான்.
***
காளி கோவில் மாந்தோப்பு, அமாவாசை வந்து இரண்டு நாட்களே ஆகியிருந்ததால் மை இருட்டு. சுவர்க் கோழிகளும் சில்வண்டுகளும் போட்ட இரைச்சலில் மனம் கலங்கியது. காற்று வேறு மரக்கிளைகளைக் கலகலக்க வைத்தது.
ரமேஷ், சைக்கிளை கோவில் வாசலில் நிற்க வைத்துவிட்டு, பிரகாரத்திற்குள் நடந்தான்.
வினோத் கொடுத்த கணக்கை சுவரில் எழுதினான், விடையையும் போட்டு விட்டுத் தன் கையெழுத்தைப் போட்டான். அதற்குப் பிறகு தான், ஏற்கெனவே அந்தச் சுவரில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை டார்ச் லைட்டின் ஒளியில் கவனித்தான். அவற்றை நன்றாக உற்றுப்பார்த்தான். பன்னிரெண்டு என்று எழுதி, இண் டூ போட்டு அது அடிக்கப்பட்டிருந்தது. கீழே ஆர்.எஸ். என்று எழுதப்பட்டிருந்தது. அதை அடுத்து 19, 27 என்ற எண்கள் வெறுமனே அடிக்கப் படாமல் இருந்தன. ஒன்றும் புரியாமல் ரமேஷ் வீடு திரும்பினான்.
மறுநாள் அதிகாலையிலேயே வினோத் அவனைத் தேடிக் கொண்டு வந்து விட்டான். ஏற்கெனவே அவன் காளி கோவிலுக்குப் போய்ப் பார்த்து விட்டுத்தான் பாராட்ட வந்திருந்தான். அவனுடைய துணிச்சலைப் பாராட்டி கோகுலத்திற்கு ஓர் ஆண்டு சந்தா கட்டி விடுவதாகக் கூறிக் கைகுலுக்கினான். ரமேஷ். தான் சுவரில் கண்ட எண்களைப் பற்றிக் கூறினான்.
“அது பெரிசா ஒண்ணுமிருக்காதுடா, எவனாவது மண்டை காஞ்சவங்க நம்மை மாதிரி பந்தயம் போட்டிருப்பாங்க. இல்லே, ஆடு மேய்க்கிறவங்க தங்கள் ஆடுகளோட எண்ணிக்கையையும் பெயரின் அடையாள எழுத்தை எழுதியிருக்கலாம்” என்றான் வினோத்.
மாலையில் இருவரும் வீடு திரும்பிய பொழுது பஞ்சாயத்து அலுவலக வானொலியில் மாநிலச் செய்திகளை அடுத்து அறிவிப்புக் கேட்டது! “பிரபல திருடன் ரஞ்சித் தமிழகத்தின் மருதூரை அடுத்துள்ள திருச்சூரில் நேற்று ஆர்.எஸ் பாங்கில் பத்து லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்து விட்டுப் பணத்துடன் தப்பி விட்டான். அவனைப் பிடிக்க துப்புத் தருவோருக்குப், பத்தாயிரம் ரூபாய் பரிசு தரப்படும்” என்று அறிவிப்பு உரைத்தது.
“அநேகமாக அந்த ரஞ்சித் நம் ஊரிலதான் எங்காவது ஒளிந்திருப்பான்” என்று இருவரும் பேசிக் கொண்டனர். இருவரும் பிரியும் தெரு வந்தது. “ரமேஷ், கேட்க மறந்து விட்டேனே. எங்கேடா என் ஊதா வர்ணப் பென்சில்? நேற்று இரவு கணக்குடன் அதையும் தந்தேனே?” என்று நினைவாகக் கேட்டான் வினோத்.
“அடாடா! ஆமாம், நான் கணக்கை காளிகோவில் சுவரில் எழுதி முடித்ததும் அது இருட்டில் எங்கேயோ விழுந்து விட்டது. தேடினேன் கிடைக்கலே. பகல்ல வந்து தேடலாம்னு வந்துட்டேன். ஒரேயடியா மறந்து போச்சு!”
“ஐயையோ! அது என் தங்கையின் கலர் பாக்ஸில் இருந்து அவளுக்குத் தெரியாமல் எடுத்துக் கொடுத்ததுடா!” என்று பதறினான் வினோத்.
“யார்டா எடுக்கப் போறாங்க? நாளை காலை ரெடியா இரு. சைக்கிளை எடுத்துக்கிட்டுப் போய்ப் பார்க்கலாம்” என்றான் ரமேஷ்.
***
மறுநாள் அதிகாலையில் நண்பர்கள் இருவரும் காளிகோவிலில் இருந்தனர். கலர் பென்சில் கிடைத்து விட்டது. திரும்பும்போது, தான் கணக்கு எழுதின சுவரை ரமேஷ் பார்த்தான். அவன் முகத்தில் வியப்புக்கூடியது!
அவன் போட்டிருந்த கணக்கை யாரோ பெரிய இண்டு போட்டு அடித்திருந்தார்கள்! அதோடு, 19 என்று எழுதப்பட்டிருந்த எண்ணும் இண்டு போட்டு அடிக்கப்பட்டு எதிரே ஜி.கே.பி, என்று எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழே இருந்த 27 மட்டும் அப்படியே அடிக்கப்படாமல் இருந்தது. இருவரும் திரும்பினர்.
பள்ளி இடைவேளை சாப்பிட்டு முடித்ததும், “வினோத் இன்னிக்கு தேதி 19, காளி கோவில் சுவர்ல அந்தத் தேதி அடிக்கப்பட்டு எதிரே ஜி.கே.பி என்று எழுதப்பட்டிருந்ததை கவனிச்சியா? நான் சந்தேகப்படுவது சரியாக இருந்தால், இன்று ஜி.கே.பி. என்ற பெயருடைய ஏதோ ஒரு பெரிய நிறுவனம் கொள்ளையடிக்கப்படப் போறது. இதே போல் 27ம் தேதியும் நடக்கப் போகிறது” என்றான் ரமேஷ்.
மறுநாள் காலை செய்தித்தாளில் “பிரபல ஜி.கே.பி. நகைச்கடை நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டது. இதுவும் ரஞ்சித்தின் கைவரிசையே!” என்று செய்தி வெளியாகியிருந்தது.
“ரமேஷ் உன் சந்தேகம் உறுதியாகி விட்டது. அப்போ 27-ஆம் தேதி எங்கே கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்பதைக் கவனிப்போம்” என்றான் வினோத்.
வினோத்தும், ரமேஷம் பத்தொன்பதாம் தேதி மீண்டும் காளி கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டனர்.
வினோத்தும், ரமேஷும் தினமும் காளி கோவிலுக்குச் சென்று கவனித்து வந்தனர். 27ஆம் தேதிக்கு எதிரே ஒரு பிள்ளையார் படம் வரையப்பட்டிருந்தது!
“சொக்கிப்பட்டி, பிள்ளையார் கோயில்ல 27ஆம் தேதி பிள்ளையாருக்கு வைரக் கிரீடம் வைக்கிறாங்க. அங்கே கொள்ளையடிப்பாங்க போல இருக்கு” என்றான் ரமேஷ்.
இருவரும் போலிஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தனர். தங்கள் கண்டுபிடிப்பை அவர்கள் விளக்கிய போது போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிர்ச்சி அடைந்தார். விஷயம் இரகசியமாக வைக்கப்பட்டு கொள்ளைக்காரனைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டது. வகையாக வந்து சிக்கிக் கொண்டான் கொள்ளைக்காரன் ரஞ்சித்.
இப்பொழுது ரஞ்சித் தன் கூட்டத்தினரோடு பலமான காவலுடன் சிறையில் இருக்கிறான். வினோத்துக்கும், ரமேஷூக்கும் ஜனாதிபதி பரிசு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இடையில் பள்ளியில் பாராட்டு விழா! போகலாமா நாமும்?
– ஜூலை 1996, அழ.வள்ளியப்பா நினைவுச் சிறுகதைப் போட்டியில் வெளியிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தாவது கதை.