தொழில் கற்று முன்னேறினான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 7,244 
 

இரும்பு வியாபாரி ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து கொண்டிருந்தனர்.

வியாபாரிக்கு வயதாகி விட்டது. எனவே, தன்னுடைய சொத்து முழுவதையும் இளைய மகனுக்கே கொடுத்து விட விரும்பினார். ஏன் என்றால், இளைய மகனிடம் மிகுந்த பிரியம் கொண்டிருந்தார்.

அதை அறிந்த வியாபாரியின் மனைவி கணவனிடம், “இருவருமே நம்முடைய பிள்ளைகள் தானே சொத்து இருவருக்கும் பொது அல்லவா? இளையவனுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விடால், மூத்தவன் என்ன செய்வான்? இருவருக்கும் சமமாகக் கொடுப்பதே நியாயம் என்று வாதாடினாள்.

அதற்கு வியாபாரி, “நான் தேடிய சொத்து. என் விருப்பப்படி, இளையவனுக்குக் கொடுக்கவே விரும்புகிறேன். இந்தச் செய்தியை நம் மக்களுக்குத் தெரிவிக்கக் கூடாது” என மனைவியிடம் எச்சரித்தார்.

மனைவி, தன் வேண்டுகோளை கணவன் ஏற்காததால், மிகவும் வருந்தி அழுது கொண்டிருந்தாள்.

அப்பொழுது, குடும்ப நண்பர் ஒருவர் வந்தார். வியாபாரியின் மனைவியைப் பார்த்து . “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார். கணவனின் எண்ணத்தைக் கூறி வருந்தினார் மனைவி

மேலும், “என்னிடம் தனியாக எதுவுமே இல்லை. இருந்தால், மூத்தவனுக்குக் கொடுக்கலாம். என் துயரத்தைப் போக்க வழி எதுவும் தெரியவில்லை ” என்று புலம்பினாள்.

“அம்மா! நீங்கள் கலங்க வேண்டாம். துன்பம் தீர வழி ஒன்று உண்டு. அதாவது இளையவனுக்கே சொத்து முழுவதும் கிடைக்கப் போகிறது. மூத்தவனுக்கு எதுவும் இல்லை என்பதை இப்பொழுதே அவர்களிடம் தெரிவித்து விடுங்கள் பின்னால் இருவரும் சமமாகி விடக்கூடும்” என்று கூறிச் சென்றார் உறவினர்.

மகன்கள் இருவரிடமும் விவரத்தைக் கூறினாள் தாய்.

இளையவன், சொத்து முழுவதும் தனக்குக் கிடைக்கப் போகிறது. அதில் அண்ணனுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கர்வமாக இருந்தான். மேலும், தொழிலைக் கவனிக்கவில்லை.

சொத்தில் தனக்கு பங்கு இல்லை’ என்று தாய் கூறியதும், மூத்தவன் அப்பொழுதே வீட்டைவிட்டுப் புறப்பட்டு, அயலூர் சென்றான். அங்கே தொழில் பயிற்சி பெற்றான்.

வியாபாரி இறந்து போனார்.

இளையவன், தொழில் முறை தெரியாமல், சொத்து முழுவதையும் இழந்து, உணவுக்கே வழியில்லாமல் திண்டாடலானான். மூத்தவன் தொழில் பயிற்சி பெற்று, பணக்காரன் ஆனான். தாயையும் ஆதரித்தான்.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *