தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 13,607 
 

முன்னொரு காலத்தில் மகத நாட்டில், ஏகேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு, சஞ்சித், சர்மா என இரு மகன்கள் இருந்தனர்.

அவர்கள் இருவரையும் புகழ் பெற்ற குருவிடம் கல்வி கற்க அனுப்பத் தீர்மானித்தான் மன்னன். சஞ்சித் எதையும் சட்டெனப் புரிந்து கொள்வான்; ஆனால், சர்மா மந்தபுத்தி படைத்தவன்.

தேர்வு வேண்டாம்!குருவிடம் தன் மகன்களைப் பற்றிக் கூறவே, அவரும் ‘தமக்கு மிகவும் வயதாகி விட்டதால், கல்வி புகட்ட இயலாது’ என்றார். ஆனால், தன்னுடைய இரு சீடர்கள் தனித்தனியே ஆசிரமங்கள் அமைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதால் அவர்களிடம் அரசகுமாரர்களை அனுப்புமாறு கூறினர்.

இரு சீடர்களில் ஒருவரான மாறனைக் கண்டு தன் மகன்களைப் பற்றி கூறினர்.

”மன்னா நான் யாரையும் என் மாணவனாக ஏற்கும் முன் ஒரு தேர்வு நடத்துவேன். அதில் அவன் தேறினால் மட்டுமே என் மாணவனாக முடியும். இதற்குச் சம்மதமானால் உங்கள் மகன்களை அனுப்புங்கள்,” என்றார்.

மன்னரோ கோபம் கொண்டு இன்னொரு சீடரான இளங்கோவிடம் தன் மகன்களை பற்றிக் கூறினார்.
”ஒரு ஆசிரியர், மந்த புத்தியுள்ள மாணவனுக்கு கல்வி புகட்டி அவனை புத்திசாலி ஆக்க வேண்டும். அப்போதுதான் அவர் திறமைசாலியாவர். என்னிடம் கல்வி கற்க யார் வந்தாலும் அவனைப் பரீட்சிக்காமலேயே என் மாணவனாக சேர்த்துக் கொள்வேன்,” என்றான் இளங்கோவன்.

அரண்மனை திரும்பிய மன்னன் தன் மந்திரியை அழைத்து, ”இந்த மாறனின் கர்வத்தை அடக்கி அவனை தண்டிக்க வேண்டும். என் மகன்களுக்கு தேர்வு நடத்தி, அதில் தேர்ந்தாலே அவர்களை தன் மாணவர்களாக ஆக்கிக் கொள்ள முடியும் என்று கூறிவிட்டான். என்ன திமிர்?” என்று உறுமினார்.
மன்னனின் மனநிலையைப் புரிந்து கொண்ட மந்திரியும், ”நம் நாட்டில் கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கு ஒரு போட்டி நடத்துவோம். அதில் இளங்கோ மிக எளிதில் மாறனை தோற்கடித்து விடுவான். இந்த அவமானமே கர்வம் பிடித்த மாறனுக்கு சரியான தண்டனை,” என்றான்.

மந்திரியின் யோசனைப்படி மன்னன் தன் நாட்டிலுள்ள எல்லா ஆசிரியர்களையும் அழைத்து போட்டி நடத்தினான். அப்போட்டியில் மாறனே முதலாவதாக வந்தான்.

அது கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டு, ”இவ்வளவு கெட்டிக்காரான நீங்கள் ஏன் அகம்பாவம் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

”படித்தவர்கள் கர்வம் கொள்ளக்கூடாது. நான் உங்களிடம் வேண்டுமென்றே கர்வம் கொண்டவன் போல் நடித்தேன். அதனால், உங்கள் அகம்பாவம் தலை துாக்கி இப்படி ஒரு பரீட்சைக்கு என்னை அழைப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். நான் மெத்தப் படித்தவன் என்று நானே சொல்லிக் கொள்வதை விட அதை உங்கள் பரீட்சையே நிரூபித்து விட்டது,” என்றான்.

”நீங்கள் கர்வம் கொண்டவர் அல்ல, என்று இப்போது தெரிந்து விட்டது. இப்போதாவது என் மகன்களைப் பரீட்சிக்காமல் உங்கள் மாணவர்களாக ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டான் அரசன்.

”அரசே! தங்கள் மகன்களுக்கு தேர்வு தேவை இல்லை என்று தாங்கள் கருதினால் அவர்களை இளங்கோவிடம் அனுப்புங்கள்,” என்றான்.

இதைக் கேட்டதும் மன்னனுக்குக் கோபம் வந்தது.

”அரசே! குருவின் திறமைக்கும், அவர் பயின்ற படிப்பிற்கும் சம்பந்தமே இல்லை. நான் குருகுலத்தில் படித்ததைக் கொண்டு திருப்தி அடையாமல் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அதற்காகத் தான் தக்க மாணவர்களை நான் தேர்ந்தெடுக்கிறேன்.

”அவர்கள் நான் கற்பிப்பதைக் கேட்டு திருப்தி அடையாமல் என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர். அவற்றால் நானும் பல புதிய விஷயங் களைத் தெரிந்து கொள்கிறேன். இதனால் அவர்கள் அறிவோடு, என் அறிவும் பெருகுகிறது. ஒரு விதத்தில் இந்த மாணவர்களே என் ஆசிரியர்களா கின்றனர். அதற்காகத் தான் தேர்வு வைக்கிறேன்,” என்றான்.

புத்திசாலியான மாணவர்களால் ஆசிரியரின் அறிவு மேலும் முதிர்கிறது என்பதை மன்னர் அப்போது, புரிந்து கொண்டார். அதனால் அவர் சஞ்சித்தை மாறனிடமும், சர்மாவை இளங்கோவிடமும் கல்வி பயில அனுப்பினார்.

– ஆகஸ்ட் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *