மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கடந்த ஒருமாதமாகத் தீவிரமாகப் பயிற்சி செய்த மணி ஓடுவதற்குத் தயாராகக் களத்தில் நின்றான். இந்தமுறை எப்படியாவது பரிசை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் நிறைந்திருந்தது.
விசில் ஊதப்பட்ட சத்தம் கேட்டவுடன் ஓடத் தொடங்கினான். அவனது கால்கள் குதிரையின் கால்களைப் போலப் பறந்தன. எல்லோரையும் மீறி ஓடி, முதல் இடத்தைப் பிடித்தான்.
பரிசு வாங்கிய கையோடு வீட்டுக்கு வந்தான். வயலில் உழுதுவிட்டு வந்திருந்த அப்பாவிடம் தனது பரிசைக் கொடுத்தான். மிகுந்த மகிழ்ச்சியோடு, “”உனது விடாமுயற்சிக்கும் தொடர் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி…” என்று பாராட்டினார்.
சில மாதங்கள் சென்றன. பொங்கல் தினத்தன்று மணியின் ஊரில் ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது.
ஊரார் முன்னிலையில் ஓடத் தொடங்கினான். ஆனால் பழைய வேகமில்லை! கால்களில் ஏதோ வலி தெரிந்தது. பரிசு பெறப் போராட வேண்டியிருந்தது. இறுதியாக மூன்றாம் பரிசுதான் கிடைத்தது. தன்னால் முதல் பரிசைப் பெற முடியவில்லையே என்ற வருத்தத்தோடு அப்பாவிடம் தனது நிலை பற்றிக் கூறினான்.
அதற்கு அப்பா, “”இந்த ஏர் கலப்பையைப் பார்த்தாயா, இதை ஒருவாரம் முழுவதும் நான் பயன்படுத்தவில்லை. அதற்குள் துருப்பிடித்து விட்டது. இதுபோலத்தான் உன்னிடம் திறமையும் ஆற்றலும் இருந்தது. ஆனால் தொடர்ந்த பயற்சி இல்லை” என்றார்.
“”வெற்றி பெற உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் தோல்விதான் கிட்டும்” என்பது மணிக்கு நன்றாகவே புரிந்தது.
-மலர் (எ) மாணிக்கம், ஜேசுராஜபுரம். (பெப்ரவரி 2013)