திரும்பி வந்த மான்குட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 9,910 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காடு. அந்தக் காட்டிலே ஒரு மரத்தடியில் இரண்டு புள்ளி மான்கள் படுத்திருந்தன. அவற்றிலே ஒன்று அம்மா மான்; மற்றொன்று குட்டி மான்.

அம்மாமான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எப்போதும் என் கூடவே இருக்கணும். தனியாக எங்கேயும் போய்விடாதே!” என்றது.

Man1

“ஏம்மா, தனியாகப் போகப்படாதா?” என்று கேட்டது குட்டிமான்.

திரும்பி வந்த மான் குட்டி “நல்லவேளையாக இந்தக் காட்டிலே சிங்கம், புலியெல்லாம் இல்லை. இருந்தால், நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனாலும் வேட்டைக் காரர்களால் நமக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்.”

“வேட்டைக்காரர்களால் ஆபத்தா! எப்படி அம்மா ?”

“உன்னைப்போல் சின்னக் குட்டியாக இருந்த போது, நான் ஒரு வேட்டைக்காரனிடம் சிக்கிக் கொண்டு, படாதபாடு பட்டேன். அது மாதிரி உனக்கும் வந்துவிடக் கூடாது. அதற்காகத்தான்…” – அம்மா மான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குட்டிமான் குறுக்கிட்டது.

“ஏனம்மா, உன்னை வேட்டைக்காரன் பிடித்துப் போய் விட்டானா? அப்புறம், எப்படித் தப்பி வந்தாய்?”

“குட்டியாக இருந்த போது, ஒருநாள், நான் துள்ளிக் குதித்துச் சென்று கொண்டிருந்தேன். ஒரு புதரைத் தாண்டி, அந்தப் பக்கமாக கால்களை வைத்தேன். என் கால்கள் அங்கு விரித்து வைத் திருந்த வலையில் சிக்கிக் கொண்டன. என்ன என்னவோ செய்து பார்த்தேன். கால்களை எடுக்க முடியவில்லை . சிறிது நேரத்தில், உடம்பு முழுவதும் நன்றாக வலைக்குள் அகப்பட்டுக் கொண்டது. அந்தச் சமயம் பார்த்து வேடன் வந்தான். என்னை வலையிலிருந்து விடுவித்தான்; என் கால்களை நன்றாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனான்.”

“தூக்கிக் கொண்டு போனானா? எங்கே அம்மா?” என்று பரபரப்புடன் கேட்டது குட்டி மான்.

“என்னைக் கொண்டு போய், அவன் ஒரு பெரிய பணக்காரரிடம் விற்று விட்டான். அந்தப் பணக்காரரின் வீடு ரொம்பப் பெரிய வீடு. வீட்டைச் சுற்றிப் பெரிய தோட்டமும் இருந்தது. அவர் வீட்டில் இருந்த ஒரு பையனும் பெண்ணும் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து வந்தார்கள். தோட்டத்திலேயிருந்த ஒரு பெரிய கூடத்தில் என்னைக் கட்டிப் போட்டார்கள். எனக்கு ஒரே வருத்தம். ‘இனிமேல் என் அப்பா அம்மாவைப் பார்க்கவே முடியாதே! மற்ற மான்களுடன் சேர்ந்து சுற்ற முடியாதே!’ என்றெல்லாம் நினைத்து நினைத்து ஏங்கினேன்.

“அந்தப் பிள்ளைகள் என்னிடம் மிகவும் பிரியமாகத்தான் இருந்தார்கள்; என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்கள்; கன்னத்தில் முத்தம் கொடுத்தார்கள். முள்ளங்கி, காரட், முட்டைக் கோஸ், தக்காளி, வாழைப்பழம் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார்கள். நான் எதையுமே சாப்பிடவில்லை. பட்டினி கிடந்தேன். தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. தோட்டத்துக்குள் என்னை அழைத்துச் சென்றார்கள். நான் துள்ளி ஓடவில்லை; சோர்ந்து சோர்ந்து நின்றேன்.

“தினமும் பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் அந்த இரண்டு குழந்தைகளும் என் பக்கத்திலே இருப்பார்கள். நான் எதுவுமே சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து அவர்கள் வருந்துவார்கள். தங்கள் அப்பாவிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.

“அந்த அப்பாவும் யார் யாரையோ அழைத்து வந்து காட்டினார். என் வாய்க்குள் மூங்கில் குழாயை வைத்து அதன் வழியாகத் தண்ணீரை ஊற்றினார்கள். முள்ளங்கியையும், தக்காளியையும் நன்றாக அரைத்துத் தண்ணீரில் கலந்து பலவந்தமாக வாய்க்குள் செலுத்தினார்கள். அதனால், நான் சாகாமல் இருந்தேன். ஆனாலும், உடம்பு நாளுக்கு நாள் இளைத்தது. பத்து நாட்கள் இப்படிச் செய்து பார்த்தார்கள். பத்தாம் நாள் நான் சாய்ந்து படுத்து விட்டேன்.

“என் நிலைமையைப் பார்த்த அந்தப் பெண் குழந்தை, அவள் அப்பாவிடம், ‘அப்பா, அப்பா, நாங்கள் சந்தோஷமாக இருக்கத்தானே இதை வாங்கினீர்கள்? ஆனால் பாவம், வந்தது முதல் இதற்கு உடம்பு சரியில்லை . துள்ளிக் குதிக்கவும் இல்லை; சாப்பிடவும் இல்லை. செத்துப்போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. பேசாமல் காட்டிலே கொண்டு போய் விட்டு விடலாம்” என்றாள். “அது தான் சரி; அப்படியே செய்வோம்” என்றார் அந்த அப்பா.

“அன்று மாலையே ஒரு வண்டியிலே என்னை ஏற்றி இந்தக் காட்டிலே கொண்டு வந்து விட்டு விட்டார்கள். நல்லவேளை, நான் திரும்பி வந்து சேர்ந்தேன்.”

அம்மா மான் சொன்னதைக் கேட்டதும், “ஏனம்மா, பெரிய பங்களா, பெரிய தோட்டம், அன்பான பிள்ளைகள், தின்பதற்கு நிறைய நிறையக் காய்கறி, பழங்கள் – இவ்வளவு இருந்தும் இங்கே வந்து விட்டாயே?” என்று கேட்டது குட்டிமான்.

“என்ன இருந்தால் என்ன? என் அம்மா, அப்பா, சிநேகிதர்கள் எல்லாரையும் பிரிந்து இருக்க முடிய வில்லையே! எப்போதும் என்னை அங்கே கட்டிப் போட்டே வைத்தார்கள்; கழுத்து வலித்தது. சுதந்தரமாகத் துள்ளித் திரியவும் முடியவில்லை; இங்கே தேவையான நேரத்திலே தேவைப்பட்டதைத் தின்னலாம்; அங்கே அவர்கள் கொடுப்பதைக் கொடுக்கும் போதுதான் தின்ன வேண்டும். கேவலமான வாழ்க்கை”.

இப்படி அம்மா மானும் குட்டி மானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன.

‘நானாக இருந்தால், திரும்பியே வந்திருக்க மாட்டேன். இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த அம்மா ஏன் தான் திரும்பி வந்ததோ!’ என்று குட்டி மான் அடிக்கடி நினைக்கும்.

ஒருநாள் இரவு நேரம். அம்மா மானும் கூடவே இருபது, இருபத்தைந்து மான்களும் ஓரிடத்தில் படுத்திருந்தன. யாருக்கும் தெரியாமல், அந்தக் குட்டிமான் மெதுவாகப் புறப்பட்டது; புதருக்குள் புகுந்து புகுந்து காட்டின் எல்லைக்கு வந்து விட்டது.

‘விடிவதற்குள் மனிதர்கள் வசிக்கும் ஓர் ஊருக்குள் போக வேண்டும். பெரிய பங்களா ஒன்றுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். விடிந்ததும், அந்த வீட்டுக் குழந்தைகள் என்னைப் பார்ப்பார்கள். ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பார்கள்; கட்டி அணைப்பார்கள். நிறைய நிறையத் தின்னத் தருவார்கள்’ என்று நினைத்து, எந்தப் பக்கம் போகலாம் என்று பார்த்தது.

அப்போது, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஒரு முயல் ஓடி வந்து காட்டுக்குள் புகுந்தது. அதைப் பார்த்ததும் குட்டிமான், “முயலண்ணே, முயலண்ணே! எங்கிருந்து ஓடி வருகிறீர்கள்?” என்று கேட்டது.

“வா சொல்கிறேன்” என்று கூறிச் சிறிது தூரம் காட்டுக்குள் குட்டி மானை அழைத்துச் சென்றது முயல்.

“நான் இப்போது எங்கிருந்து வருகிறேன், தெரியுமா? சிறிது தூரத்திலேயுள்ள நகரத்திலிருந்து தான். என்னையும் இன்னொரு முயலையும் ஒரு வேடன் பிடித்துச் சென்று, அந்த நகரிலே ஒரு பெரிய பணக்காரர் வீட்டிலே விற்று விட்டான். அந்தப் பணக்காரர் வீட்டிலே ஒரு மாதம் சந்தோஷமாக வளர்ந்தோம். அந்தப் பணக்காரர் வீட்டுப் பெண் குழந்தை என்னிடம் மிகவும் அன்பாக இருந்தாள். அவர் பெயர் உமா.

Man2

“ஒரு நாள் அந்தப் பணக்காரர் வீட்டுக்கு வெளியூரிலிருந்து அவருடைய மாப்பிள்ளையும் அவருடைய உறவினரும் இரண்டு மூன்று கார்களிலே வந்து இறங்கினார்கள். அவர்களுக்குத் தடபுடலாக விருந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. சாயங்கால நேரத்திலே அவர்கள் வீட்டுச் சமையல்காரன் எங்கள் அருகே வந்தான். என்னைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தான். பிறகு என்னோடு இருந்ததே, அந்த முயலையும் தூக்கிப் பார்த்தான். என்னைவிட அது கனமாக இருக்கிறது என்று சொல்லி, அதைத் தூக்கிக் கொண்டு சிறிது தூரம் சென்றான். சென்றவன், சட்டென்று அதன் கழுத்தைப் பிடித்துத் திருகினான். விழி பிதுங்கி அது உடனேயே இறந்து விட்டது! பிறகு, அதன் தோலை உரித்தான். கறி சமைக்கக் கொண்டு போனான். அதைப் பார்த்து என் உடம்பு நடுநடுங்கியது. உடனே தப்பித்து ஓடி வர நினைத்தேன். ஆனாலும், அந்தச் சிறு பெண் உமாவை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அவ்வளவு தூரம் அவள் என்னிடம் பிரியமாக இருந்தாள். நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று நினைத்துத் தொடர்ந்து அங்கேயே இருந்தேன்.

“இன்று அதிகாலையில், அந்த வீட்டுக்கு நாலைந்து பேர் ஒரு காரிலே வந்து இறங்கினார்கள். ‘இவர்களுக்கு இங்கே விருந்து நடக்குமே! விருந்து என்றால் நமக்கல்லவா ஆபத்து! என்று நினைத்தேன். இப்படி நான் நினைத்த சிறிது நேரத்தில், உமா என்னிடம் ஓடி வந்தாள்; சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு என்னைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்; வேகமாக நடந்தாள்; வெகு தூரம் நடந்தாள். இந்தக் காடு தெரிந்ததும், உமா என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள். உமாவுக்கு என்னை விட்டுப் பிரிய மனமே இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஆயினும், நான் உயிர் தப்பினால் போதும் என்று அவள் நினைத்திருக்கிறாள். என்னை உயிரோடு காப்பாற்றத்தான் அவள் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறாள்!

“கலங்கிய கண்களுடன் அவள் இந்தக் காட்டுப் பக்கத்தைக் காட்டி, “ஓடு, ஓடு. உம்… சீக்கிரம்” என்று கண் கலங்கக் கூறினாள். எனக்கு அந்த அன்பான உமாவைப் பிரிய மனம் இல்லை; உயிரைக் கொடுக்கவும் மனம் இல்லை. என்ன செய்வது? ஓடி வந்தேன். வரும்போதுதான் உன்னைப் பார்த்தேன்.”

முயல் கூறியதைக் கவனமாகக் கேட்ட குட்டி மான், “என்ன இது! சிங்கம், புலிதான் நம்மை அடித்துத் தின்னும் என்று என் அம்மா சொல்லியிருக்கிறாள். மனிதர்கள்கூடக் கொன்று தின்பார்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டது.

“பின்னே, நான் பொய்யா சொல்கிறேன்? நம்மைப் போன்ற, பிராணிகளை அவர்களிலே பலர் பிரியமாகவும் வளர்ப்பார்கள்; மிகப் பிரியமாகவும் சாப்பிடுவார்கள்.”

“அடடே, அப்படியா!” என்று கேட்டுவிட்டு ‘அம்மா பேச்சை மீறிச் சென்றிருந்தால், நம் உயிருக்கும் ஆபத்துத்தான்!’ என்று நினைத்துக் கொண்டே ஓட்டம் பிடித்தது குட்டி மான்.

எங்கே? பணக்காரர் வீட்டைத் தேடியா? இல்லை, பாசமுள்ள அம்மாவைத் தேடித்தான்!

– திரும்பி வந்த மான்குட்டி, முதற்பதிப்பு: நவம்பர் 2002, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை.

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *