திருட்டுப்பட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 7,920 
 
 

“மகாத்மா காந்தி நினைவு” பள்ளியில் அடுத்த வாரம் பள்ளிஆண்டு விழா வருகிறது. அந்த விழாவிற்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரி ஜீவானந்தம் அவர்கள் விருந்தினராக வருகிறார் என்று பள்ளி தலைமையாசிரியர் அறிவித்தார்.அங்குள்ள மாணவ்ர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால் ஜீவானந்தம் அவர்கள் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்த மூன்று மாதத்திலேயே பல் நல்ல செயல்களை செய்து புகழ் பெற்று விட்டார்.அந்த ஊரில் அதுவரை தொடர்ந்து நடந்து வந்த வழிப்பறிகள், கொள்ளைகள் போன்ற தீய செயல்களை பெருமளவு குறைத்து விட்டார்.அது மட்டுமல்ல அவருடைய மகன் ராம் பிரசாத் இந்த பள்ளியில் தான் ஏழாம் வகுப்பில் சேர்ந்துள்ளான்.இதனால் மாணவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.ராம் பிரசாத்துடன் நட்பு வைக்க நான் நீ என்று போட்டி கூட நடந்தது.

ராம் பிரசாத் பெற்றோர் பரம்பரையாகவே பணக்காரர்களாக இருந்த்தால் கொஞ்சம் செலவாளியாக இருந்தான்.மற்றபடி அமைதியான மாணவன்.அவன் உட்கார்ந்திருக்கும் பெஞ்சில் மோகன்,சாமிநாதன் என்று இரு மாணவர்கள் உட்கார்ந்திருந்தனர். மூவரும் நல்ல முறையில் நட்புடன் இருந்தனர்.மோகனின் அப்பாவும் நல்ல உத்தியோகத்தில் இருந்தார்.அதனால் மோகனும் தினமும் காரில் தான் பள்ளிக்கு வந்து இறங்குவான். சாமிநாதனின் அப்பா ஒரு சாதாரண உத்தியோகத்தில் இருந்தார். சாமிநாதனுக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருந்தனர்.இவர்கள் மூவரையும் படிக்க வைக்க அவன் அப்பா மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.சாமிநாதனும் அப்பாவின் கஷ்டம் தெரிந்ததால் ஆடம்பரமாக இருப்பதை தவிர்த்தான். தினமும் அவனிடம் இருந்த பழைய சைக்கிளிலேயே பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான்.

இன்னும் மூன்று நாட்களில் பள்ளி ஆண்டு விழா வருவதால்,அப்பொழுது நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாணவ,மாணவிகளுக்கு பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன.இதனால் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் மாணவர்களும்,மாணவிகளும் பயிற்சிகளுக்கு அடிக்கடி வகுப்பை விட்டு வெளியே சென்று வந்து கொண்டிருந்தனர்.ராம் பிரசாத்தும், மோகனும், பேச்சுப்போட்டியிலும் நடனப்போட்டியிலும் கலந்து கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் இருவரும் சாமிநாதனிடம் அவர்கள் புத்தகப்பையை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு பயிற்சிக்கு சென்றனர்.

பயிற்சி முடிந்து வகுப்பறைக்கு வரும்போது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. அதன் பின்னர் நாலரை மணிக்கு பள்ளி முடிந்தவுடன் ராம்பிரசாத் மோகனையும்,சாமிநாதனையும் தன்னுடன் கூட வரும்படியும், வழியில் உள்ள ஒரு கடையில் ஏதாவது சாப்பிட்டு விட்டு செல்லலாம் என வற்புறுத்தினான்.மோகன் சம்மதித்துவிட்டான். சாமிநாதன் என்னை மன்னித்துக்கொள் இன்று அப்பாவும்,அம்மாவும் வெளியே செல்கிறார்கள், தம்பி தங்கைகளை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்று சொல்லி விடை பெற்று சென்று விட்டான். சரி என்று மோகனும்,ராம்பிரசாத்தும் கடைக்கு சென்று விருப்பபட்டதை சாப்பிட்டனர். பின் பணம் எடுப்பதற்காக தனது புத்தகப்பையை திறந்து பணம் வைத்திருக்கும் அறைக்குள் பணம் எடுக்க போனான். ஆனால் பணம் தட்டுப்படவேயில்லை. திடுக்கிட்டு தன் புத்தகப்பையிலிருந்து அனைத்து புத்தகங்களையும் எடுத்து துழாவிப்பார்த்தான். பணம் தட்டுப்படவேயில்லை.

என்ன செய்வது என்று கையை பிசைந்தான். மோகன் பணம் தொலைந்து விட்டது இப்ப என்ன செய்வது?என்று கேட்டான். மோகன் என் கையிலும் பணமில்லையே என்று விழித்தான்.
பள்ளி சீருடையில் இவர்கள் இருவரும் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதை பார்த்த கடைக்காரர் மெல்ல இவர்களிடம் வந்து என்ன தம்பி பணமில்லையா? என்று கேட்டார். அவரும் இதே பள்ளியில் படித்து வந்தவர்தான். இவர்கள் இருவரும் மெல்ல எழுந்து ஐயா நான் போலீஸ் அதிகாரியின் பையன்,இவனின் அப்பா பொ¢ய அதிகார், நாங்கள் எங்கள் புத்தகப்பையில் பணம் வைத்திருந்தோம்.அதனால்தான் தைரியமாக இங்கு சாப்பிட வந்தோம். நீங்கள் அனுமதி கொடுத்தால் வீட்டுக்கு சென்று பணத்தை எடுத்து வந்து தந்து விடுகிறோம் என்றனர். கடைக்காரர், அதனாலென்ன? நாளைக்காலையிலேயே பணம் கொண்டு வந்து கொடுங்கள். உங்கள் புத்தகப்பையை யாரிடமாவது கொடுத்து வைத்தீர்களா என்று கேட்க
இருவருக்கும் அப்பொழுதுதான் சாமிநாதனிடம் புத்தகப்பையை பார்த்துக்கொள்ளச்சொல்லி சொன்னது ஞாபகம் வந்தது.சாமிநாதன் மேல் சந்தேகப்படுவதா என்று சிந்தித்தாலும், அவன் அவசரமாக வீடு செல்ல வேண்டும் என்று சொன்னது இவர்கள் மனதை சந்தேகப்பட வைத்தது.

மறு நாள் பள்ளிக்கு வந்தவுடன் ராம் பிரசாத்தும், மோகனும், அவர்கள் வகுப்பாசிரியரை பார்த்து நேற்று நடந்ததை தெரிவித்தனர். புத்தகங்களை சாமிநாதனிடம் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு சென்றதையும் சொன்னார்கள். வகுப்பாசிரியர் திகைத்தார், சாமிநாதன் முதல் வகுப்பிலிரிந்து இங்கு படித்து வருபவன். இதுவரை அவனைப்பற்றி எந்த பழி சொல்லும் வந்ததில்லை. இப்பொழுது என்ன செய்வது? நேராக தலைமையாசிரியரை பார்க்க சென்றார்.இருவரும் நீண்ட நேரம் கலந்து பேசி சாமிநாதனை விசாரித்து விடுவது என முடிவு செய்தனர்.

சாமிநாதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.இதுவரை இப்படி ஒரு பழி சொல் வந்ததில்லை. தலைமையாசிரியர் கூப்பிட்டு இவனை விசாரித்தவுடன் நிலை குலைந்து போனான். புத்தகப்பையில் வைத்த பணம் காணவில்லை,புத்தகப்பையை இவன் தான் பார்த்த்க்கொண்டிருந்தான்.அதனால் தொலைந்த பணத்துக்கு இவன் பதில் சொல்லியாக வேண்டும். என்ன செய்வது?நான் எடுக்கவில்லை என்று சொன்னால் பணம் எப்படி புத்தகப்பையிலிருந்து காணாமல் போகும் என்று கேள்வி கேட்பார்கள்.

நாளை மறு நாள் ஆண்டு விழா,விழாவிற்கு வரப்போகும் போலீஸ் அதிகாரி மகனுடைய பணத்தை காணவில்லை என்றால் இந்த பள்ளியைப்பற்றி என்ன நினைப்பார்? தலைமையாசிரியர் சாமிநாதனிடம் நாளை வரும்பொழுது கட்டாயம் இதற்கு நீ பதில் சொல்லியாக வேண்டும் என்று சொல்லிவிட்டார். மிகுந்த வருத்தத்துடன் வீட்டுக்கு வந்த சாமிநாதனின் முகத்தை பார்த்த அவன் அம்மா என்னவென்று விசாரித்தார்.

சாமிநாதன் நடந்ததை சொன்னான்.அப்பா வரட்டும் நீ கவலைப்படாதே என்று ஆறுதல் கூறினார் சாமிநாதனின் தாய்.

அப்பா வந்தவுடன் நடந்த விசயங்களை கேட்டார். நாளை இதற்கு ஒரு வழி செய்கிறேன், நீ நிம்மதியாய் போய் தூங்கு என்று சொன்னார்.

மறு நாள் வருத்தம் மிகுந்ததாலும், என்ன செய்வது என்ற பயத்தாலும் சாமிநாதன் பள்ளிக்கு செல்ல பயந்தான்.அவன் அப்பா ராம் பிரசாத்தின் அப்பா பணிபுரியும் போலீஸ் ஆபிசிற்கு சென்று நடந்ததை சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுகொண்டிருந்த போலீஸ் ஆபிசர் நாளை அவனை பள்ளிக்கு கிளம்ப தயாராய் இருக்க சொல்லுங்கள் என்றார். நன்றி சொல்லிவிட்டு சாமிநாதனின் அப்பா வீடு வந்து அவனிடன் விசயத்தை சொன்னார்.

ஆண்டு விழா ஆரம்பமாக போகிறது, தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் போலீஸ் அதிகாரிக்கு காத்திருந்தார்கள்.போலீஸ் அதிகாரியின் கார் பள்ளி வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து போலீஸ் அதிகாரி இறங்கினார்.தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அவரை மாலை போட்டு வரவேற்றனர்.அவர்கள் மரியாதையை ஏற்றுக்கொண்ட அதிகாரி காருக்குள் தலையை நுழைத்து பயப்படாமல் இறங்கி வா என்று சொல்ல சாமிநாதன் பயத்துடன் மெல்ல கீழிறங்கினான்.தலைமை ஆசிரியருக்கும்,மற்ற ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. போய் மாணவர்களுடன் உட்கார் என்று அவனை அனுப்பிவிட்டு வாருங்கள் என்று அனைவரையும் மேடைக்கு அழைத்து சென்றார்.

ஆசிரியர்களின் வரவேற்புரை, மற்றும் தலைமை ஆசிரியரின் உரை, முடிந்தவுடன் போலீஸ் அதிகாரி எழுந்து மாணவ,மாணவிகளின் சுய ஒழுக்கம்,கல்வி,கட்டுப்பாடு ஆகியவைகளைப்பற்றி பேசி முடித்தவுடன்.நான் உங்களுக்கு ஒரு விசயம் சொல்ல நினைக்கிறேன் இங்கு படிக்கும் என் பையன் ராம் பிரசாத்தின் புத்தகப்பையிலிருந்து
பணம் காணாமல் போய்விட்டதாகவும். அதனால் அவனுக்கு அருகில் உட்கார்ந்திருந்த சாமிநாதன் என்னும் பையன் மேல் திருட்டுப்பட்டம் விழுந்து விட்டது என்றும் கேள்விப்பட்டேன்.நான் முதலில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்”சாமிநாதன் இந்த பணத்தை எடுக்கவில்லை”ஏனென்றால் அந்த பணத்தை எடுத்தது நான்தான்.

மேடையில் இருந்த ஆசிரியர்களும்,மாணவ மணிகளும் திகைத்துவிட்டனர். ராம் பிரசாத் சில நாட்களாக நிறைய செலவு செய்வதாக தெரிந்து கொண்டேன்.அவன் அம்மாவிடம் செலவுக்கு பணம் பெற்று புத்தகப்பையில் வைப்பதையும் தெரிந்து கொண்டு அந்த பணத்தை எடுத்து வைத்து விட்டேன். நான் செய்த பிசகு அவன் அம்மாவிடம் சொல்லியிருக்க வேண்டும். வேலைப்பளுவால் மறந்துவிட்டேன்.சாமிநாதனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நடந்ததை மறந்து சாமிநாதனும் ராம்பிரசாத்தும் நண்பர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று சொல்லி முடிக்கவும் மாணவ மாணவிகளின் கைதட்டல் ஓங்கி ஒலித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *