திட்டமிட்டு வேலை செய்தால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 7,446 
 

துறையூர் என்னும் நாட்டை மகதவர்மன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான்.

அவனிடம் ஏராளமான படை வீரர்கள் இருந்தனர்.அத்ற்காக மற்ற நாட்டுடன் போர் புரிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அந்த படை வீரர்களைக்கொண்டு உள் நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தினான். இதன் மூலம் நாட்டில் திருட்டு,கொள்ளை போன்ற குற்றங்கள் இல்லாமல் இருந்தன.அதே போல் விவசாயம் செய்யும் நிலங்களை நன்செய்,புன்செய் என பிரித்து அதற்கேற்றவாறு வா¢ வசூல் செய்து அந்த வருவாய் மூலம் மற்ற காரியங்களுக்கு செலவுகள் செய்து நாட்டை வளமுடன் வைத்துக்கொண்டான்.

இவ்வாறு நல்ல முறையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மகதவர்மனுக்கு பெரிய சோதனை வந்தது, அந்த வருடம் நாட்டில் பெரும் பஞ்சம் தலை விரித்தாடியது. மழையே பெய்யவில்லை. இதனால் பயிர்கள் கருகி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடினர். மன்னனும் முடிந்தவரை சமாளித்து பார்த்தான். விவசாயம் நலிந்ததால் வரி கட்ட முடியாமல் விவசாயிகள் தடுமாறினர். வா¢ கட்டாததால் நாட்டில் பண பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அனைவரும் மிகுந்த துனபம் அடைந்தனர்.

அப்பொழுது ஒரு துறவி அந்த நாட்டுக்கு வந்தார். மகதவர்மன் உடனே அவரை பார்க்க வேண்டி அவர் தங்கியுள்ள குடிலுக்கு வந்தான். அங்கு துறவியின் சீடர்கள் துறவி தூங்குகிறார் என்றனர். மன்னன் நான் காத்திருக்கிறேன் என்று வாசலில் காத்திருந்தான்.

ஒரு மணி நேரத்தில் துறவி எழுந்து விட்டார். மன்னர் தங்களுக்காக வெளியே நீண்ட நேரமாக காத்திருக்கிறார் என சொல்லவும் துறவி மன்னனைக்காண அவரே வெளியே வந்து விட்டார். மன்னன் எழுந்து அவர் கால்டியை வணங்கினான்.மகதவர்மா இந்த நாட்டின் மன்னனான நீ எனக்காக ஏன் இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் எழுப்பி விட உனக்கு அதிகாரம் இருந்தும் ஏன் எனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தாய்?

முனிவரே! கற்றோருக்கும்,வயதில் மூத்தோருக்கும், குருவுக்கும், உம்மைப்போன்ற துறவறம் கொண்டோருக்கும் பணிவுடன் நடந்து கொள்வதுதான் மனித குல தர்மம். அதில்
மன்னன் மட்டும் என்ன விதி விலக்கா?

உன் பணிவும் பண்பும் என்னை வியப்படைய வைக்கின்றது, உனக்கு என்ன வேண்டும் கேள்? கேட்ட துறவியிடம் என் நாட்டில் மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துன்பபடுகிறார்கள், இதற்கு நீங்கள் ஒரு வழி சொல்ல வேண்டும்.என்று பணிவுடன் கேட்டான்.

துறவி சிறிது நேரம் கண்ணை மூடி அமர்ந்திருந்தார்.மன்னா உன் நாட்டின் வறட்சியை என்னால் போக்க முடியும், குறுகிய கால திட்டம், நீண்ட கால திட்டம், என்ற இரண்டு முறைகள் உள்ளன. குறுகிய கால வழி என்பது என்னால் மந்திரங்கள் சொல்லப்பட்டு மழை பொழிய ஆரம்பிக்கும்.வறட்சி நீங்கும், ஆனால் மறுபடியும் வறட்சி வரும், அப்பொழுது என்னைப்போல வேறு ஒரு துறவியிடம் நீ செல்ல வேண்டியிருக்கும்.இது குறுகிய கால வழி, ஆனால் உடனடி பலனுண்டு.நீண்ட கால் வழிஎன்பது மந்திர தந்திரமல்ல, நான் சொல்லும் யோசனைகளை மட்டும் செய்தால் போதும், அது பலன் தர நாட்களாகலாம், அதன் பின் வறட்சி வந்தாலும் உன்னால் சமாளித்துக்கொள்ளலாம், என்ன சொல்கிறாய்?

சிறிது நேரம் யோசித்து நின்ற மகதவர்மன் ஐயா எனது நாட்டுக்கு நீண்ட கால திட்டம் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் எதிர்காலத்தில் இது போல் துன்பம் வந்தால் எனக்கு பிறகு வரும் மன்னனுக்கு மிகுந்த துன்பத்தை தரும்

உன்னுடைய நல்ல எண்ணத்தை பாராட்டுகிறேன், உன்னால் இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த வறட்சியை சமாளிக்க முடியும்? முனிவரே இன்னும் ஐந்து ஆறு மாதங்கள் மட்டுமே இருப்பை வைத்து சமாளிக்க முடியும்.

கவலைப்படாதே, உன் நல்ல மனதுக்கு அவ்வளவு காலம் துன்பப்ப்டமாட்டாய். அடுத்த மாதத்திலிருந்து நல்ல மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதற்குள் உன் மக்களை தயார்படுத்துவதுதான் இப்பொழுது முக்கியமான பணி. என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.

உன் நாட்டில் ஆற்று வெள்ளம் வரும் பாதை இருக்கிறதா? ஆம் அது காய்ந்து வறண்டு போய் கிடக்கிறது. கவலைப்படாதே, முதலில் ஒரு கூட்டத்தை ஆற்றுப்பாதையை அகலப்படுத்தவும் ஆழப்படுத்தவும், அதன் கரையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைக்கச்சொல். அடுத்து ஒரு கூட்டத்தை ஆற்றிலிருந்து நான்கைந்து இடங்களில் கால்வாய் வெட்டி ஊருக்கு நடுவே குளம் எடுக்க செய், அதனை சுற்றி கரையை உயரப்படுத்தி பலப்படுத்த செய்.மூன்றாவது ஒரு கூட்டத்தை நாடு முழுவதும் மரக்கன்றுகளை நட்டு
தண்ணீர் விட்டு பாதுகாத்து வைக்க சொல்.அடுத்ததாக ஒவ்வொரு வீட்டிலிருந்து வெளியேறும் தண்ணீரை ஒரு குழியில் விடச்சொல். ஒவ்வொரு விவசாயும் தன் விளை நிலத்தில் ஒரு குளம் போல் வெட்டி தண்ணீரை சேமித்து வைக்கச்சொல்.

இறுதியாக ஆற்றில் வெள்ளம் வருமுன் நானகைந்து இடங்களில் தடுப்பணை போல கட்டி பெரும் வெள்ளம் வந்தாலும் வெளியேறி செல்லவும் வெள்ளம் வராத காலங்களில் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்கவும் ஏற்பாடுகள் செய்து விடு. இதன் பலனை ஒரு வருடத்தில் காண்பாய்.

மகதவர்மன் துறவியை வணங்கி விடை பெற்றான். துறவி சொன்ன வேலைகளை அவசர அறிவிப்பாக அறிவித்து நாட்டில் உள்ள அனைத்து படை வீரர்களுடன், குடிமக்களையும் இந்த செயலில் ஈடுபட வைத்தான். விவாசாயிகளும் வறட்சி காலமாக இருந்ததால் இந்த காரியங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள்ளாகவே நல்ல மழையை பார்த்த அந்த நாடு அதன் பின் பெருமளவு வெள்ளம் வந்தாலும் வடிகால் வழியாக வெளியேற்றி, எந்தளவுக்கு வறட்சி வந்தாலும் ஈரப்பதம் காயாமலும் நாட்டை பாதுகாத்து வளப்படுத்திக்கொண்டன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *