கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 1,732 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாதவி மயங்கிக் கிடந்தாள். அலறித் துடித்த உடல் அசைவற்றுக் கிடந்தது. இழையும் மூச்சிலே வேகம் இல்லை; கண்களிலே ஒளி மங்கியது.

வேதநாயகம் விம்மினார். அவரது விழிகள் நீரைக் கொட்டிக் கொண்டிருந்தன. அன்புச் செல்வி மயங்கிக் கிடக்கிறாள்; அரவம் அவளைத் தீண்டிவிட்டது. ஓலமிட்டது அவர் உள்ளம். மாதவி பிழைப்பாளா? நெஞ்சத்தில் துயர அலைகள் மோதிக் கொண்டிருந்தன.

சற்று முன் மகிழ்ச்சியோடு தோட்டத்திற்குச் சென்றாள் மாதவி. மலர் என்றால் அவளுக்கு உயிர். மாலைப் பொழுதிலே தோட்டத்திற்குச் சென்று மலர் பறிப்பது அவள் வழக்கம். மயக்க மூட்டும் மணத்தோடு ரோஜா மலர்கள் பூத்திருந்தன. ஆசை பொங்க செடியருகே சென்றாள் அவள். மலர்ந்து மணம் பரப்பும் மலரை அவள் கைகள் கொய்த போது –

“ஆ, அம்மா…! அலறினாள் மாதவி. குதிகாலைப் பிடித்த வண்ணம் தரையில் சாய்ந்தாள். சற்று எட்டத்தே பாய்ந்து மறைந்து கொண்டிருந்தது, ஒரு நச்சுப் பாம்பு!


“எசமான்! நேரமாகிறது. இப்படியே நின்றால் குழந்தை என்னாவது? ஏகாம்பரம் அண்ணனைக் கூட்டி வந்தால் எதனாச்சும் செய்யலாம்” வேலைக்கார வேலப்பன் கூறினான்.

“ஆமாம், வேலு! நாம் கூப்பிட்டால் ஏகாம்பரம் வருவானா? மறுத்துவிட்டால் என்ன செய்வது…?

“ஆபத்துக் காலத்தில் அதையெல்லாம் ஏன் பேசுகிறீர்கள், எப்படியும் நான் கூட்டி வருகிறேன்!”

அடுத்தக் கணம் வேலப்பன் ஓடினான். விடம் தீண்டி விட்டால் அதனைக் குணப்படுத்தும் முறைகளை அறிந்தவன் ஏகாம்பரம்.

வேதனையால் வெதும்பினார் வேதநாயகம். எத்தனையோ நாட்களாக ஏகாம்பரத்தை மறந்திருந்த அவர் மனத்திலே அவன் எழுந்துவிட்டான்.

இரக்கமற்ற வேதநாயகத்தை இகழ்ந்து பேசிவிட்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டு நீங்கிய வன் ஏகாம்பரம். அவன் வாழ்வை பாலையாக்கிவிட்டவர் வேதநாயகம் தானே. வேதநாயகத்தின் நிலையும் இன்று அப்படி ஆகிவிட்டால்…?

மாதவி பிழைக்க வேண்டும். ஏகாம்பரம் முயன்றால் அது முடியும். ஆனால் அவன் வர வேண்டுமே. நெஞ்சிலே நஞ்சை வைத்திருக்கும் மனித அரவத்தை நாடி எந்த மென்மையுள்ளம் வரும்? அவருள்ளே ஒரே போராட்டம். ‘ஏகாம்பரம் வருவானா, வரமாட்டானா?’ இரையை விழுங்கிவிட்டு மூச்சு விடத்திணறும் பாம்பைப் போல அவரது நெஞ்சம் நெளிந்தது. கண்ணீர் பெருகியது. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த சம்பவம் அவர் நினைவில் நிழலாட்டம் காட்டியது.


வேதநாயகம் அந்தப் பக்கத்தில் பெரும் பணம் படைத்தவர். தோட்டம் துறவுகள் அவருக்கு நிறைய இருந்தன. எனவே அவற்றைப் பேண தேவையான ஆட்களை வைத்திருந்தார். சின்ன வயசு முதல் ஏகாம்பரம் அவரிடத்தில் தான் வேலை பார்த்து வந்தான். வெளியூர்களுக்குத் தோட்டப் பொருள்களைக் கொண்டு போவது அவன் வேலை. அப்பொழுது பண்டிகைக் காலம். வண்டி நிறைய பொருள்களை ஏற்றிக் கொண்டு அடுத்த ஊருக்குப் போயிருந்தான் ஏகாம்பரம். ஏகாம்பரம் தன் அன்பு மகன் அமுதனைக் கண்ணாகப் பேணி வந்தான்.

வேதநாயகம் தோட்டக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது மகள் மாதவி வந்தாள். அவர் முகம் மலர்ந்தது.

“என்னம்மா, மாதவி?” புன்னகை நெளிய அவர் கேட்டார். “அப்பா. நான் ஒன்று கேட்கப் போகிறேன். தவறாமல் தருவீர்களா?”

“தாராளமாகக் கேள், தருகிறேன் மாதவி!”

“எனக்குத் தாழம்பூ வேண்டும் அப்பா, சூடிச் ஆசையாக இருக்கிறது…!”

விழித்தார் வேதநாயகம்.

”தாழம்பூ ஏனம்மா? கொல்லையிலே முல்லையும் மல்லிகையும் இருக்கம் போது…”

மாதவியின் முகம் வாடியது. இலேசாக சிணுங்கத் தொடங்கினாள்.

“மாதவி, தாழம்பூ கொண்டுவர ஆள் யாரும் இல்லையே! என்ன செய்வது? நாளைக்கு ஆகட்டுமே!”

“அமுதன் இருக்கிறான் அப்பா! அவனைப் போகச் சொல்லுங்கள்…”

பத்து வயதுச் சிறுவன் அமுதனை அங்கே அழைத்து வந்தாள் மாதவி. அன்னையற்ற அந்த ஏழைச் சிறுவன் அவரிடம் அடக்கமாக நின்றான்.

“டேய், அமுதா…!” சிம்மக் குரலை எழுப்பினார் வேதநாயகம்.

“என்னங்க, எஜமான்?”

“தாழங் காட்டுக்குப் போய், தாழம்பூ கொண்டு வர வேண்டும், சீக்கிரம் போ!”

”தாழங்காட்டுக்கா…?” –உள்ளம் துணுக்குற அமுதன் கேட்டான். அவருக்கு இரக்கமில்லையா? ஊரில் யாருமே அந்த இடத்திற்குப் போகத் துணிய மாட்டார்களே! மனித நடமாட்டமில்லாத இடமாக அது மாறிவிட்டிருக்கிறது. மணம் பரப்பும் ஆயிரமாயிரம் பூக்கள் அங்கே இருந்தாலும் அவற்றை எடுத்துவர யாரும் முன்வருவதில்லை. ஊரின் கீழ்க்கோடியிலே பச்சைக் குன்றுகள் போல் தாழம் புதர்கள் நிறைந்து நின்றன. நச்சுப் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்ற அச்சந்தான் யாரையும் அங்கே போகவிடாமல் தடுத் திருந்தது அந்த இடத்திற்கு ஒரு சிறுவனைப் போகச் சொல்ல வேதநாயகத்தின் மனம் எப்படி இடங் கொடுக்கிறது? ஏழைச் சிறுவனென்றால் அத்தனை இளப்பமா?

“ஆமாம்! ஏன், போகக் கூடாதோ?”

”நான் மாட்டேன்! அப்பாவுக்குத் தெரிந்தால் திட்டுவார்”

“நான் சொல்லுகிறேன் மறுக்காமல் போ! நிறைய காசு தருகிறேன்…”


அமுதனை அச்சம் ஆட்டியது. உணர்வற்று நடந்தான் அமுதன். ஏகாம்பரத்தை நினைக்கவெ அவன் நெஞ்சு அஞ்சியது.

தாழங்காடு பூத கணம் போல் நின்றிருந்தது. சின்னப் பறவைகள் ‘கிரீச்’ சிட்டுக் கொண்டிருந்தன. அருகே குளது நீரின் அலையசைவு தெளிவாகக் கேட்டாது. வேதநாயகத்தின் கட்டலை. அமுதன் மெல்ல நகர்ந்தான் புதரை நோக்கி! நெருங்கிப் போனான்; கண்ணை மூடிக் கொண்டு கையை நீட்டினான். முட்கள் கையில் குத்தின. மஞ்சள் நிறத்தில் பெரிய பெரிய மடல்கள். இன்பமான நறுமணம்.

ஒரு பூவைப் பற்றினான், திருகினான்; திருகினான். அந்தக் கை மலரைத் திருகியது. அடுத்த நொடி! அங்கே சலசலப்பு ழுந்தது.

சரசர’வென்று ஏதோ நெளிந்து வருவது அவன் செவியில்

தெளிவாகக் கேட்டது. இமைகளை இறுக மூடிக் கொண்டான். அச்சம், பீதி…!

மறுகணம் –

“அம்மா! ஐயோ…!” அங்கே ஓலம் எதிரொலித்தது. ஒருவருமில்லையே அங்கே! நிலத்தில் சாய்ந்து கிடந்தான் அமுதன் உடலிலே நீலம் பரவியது. துடிக்கத் துடிக்க அவன் உயிர்…! ஆமாம், அது போய்க் கொண்டுதானிருந்தது.

மகிழ்ச்சியோடு ஊர் திரும்பிய ஏகாம்பரம் மகனின் சவத்தைத் தான் கண்டான். விஷயம் அவனுக்கு எப்படியோ விளங்கிவிட்டது. கொடிய நஞ்சையும் அழித்து உயிரளிக்கக் கூடிய உயர்ந்த மூலிகைகளும், வேர்களும் ஏகாம்பரத்திடம் இருக்கின்றன. என்றாலும் என்ன செய்வது? அன்பு மகனின் உயிரைக் காகா அவை பயன்படவில்லையே! அலறித் துடித்தான் ஏகாம்பரம். இரக்கமில்லாத வேதநாயகத்தைத் திட்டினான். ஆத்திரம் எளிதில் தணியக் கூடியதா?

வேதநாயகம் அந்த ஏழையின் சலசலப்புக்கு அஞ்சுபவரா? ஏழையின் மகந்தானே இறந்துவிட்டான்? எல்லாம் அவருக்கு எளியதாகவே தெரிந்தது நெஞ்சில் இரக்கமின்மையால்..! ஆறாத சீற்றத்தோடு அன்று அவரை விட்டு நீங்கியவன்தான் ஏகாம்பரம். அப்புறம் இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவன் வாழ்வை நாசமாக்கிய வேதநாயகம் இன்று துடிக்கிறார்… மாதவி பிழைப்பாளா…?

அரவம் தீண்டி நெடுநேரம் ஆகவில்லை. ஏகாம்பரம் உதவினால் அவள் குணமடைய முடியும்… அதற்குள் அவன் வரவேண்டுமே? அந்த ஏழை நெஞ்சம் நஞ்சை நாடி வருமா? துடித்தார் வேதநாயகம். தந்தை உள்ளத்தின் தவிப்பை உணர்ந்தார் அவர்! அன்று ஏகாம்பரம்… ஏகாம்பரம்!’ அவர் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.

கணங்கள்…! நொடிகள்…!! நிமிடங்கள்…!!! தெளிந்தன; நகர்ந்தன, ஓடின. மாதவியின் உயிர் இன்னும் எத்தனை நிலைக்கும்? அப்புறம்…?

அவர் கண்கள் எதையோ துழாவின. அந்த விழிகளிலே ஒளி!

அவரை அண்மித்து வரும் அந்த உருவம்! ஆம்! ஏகாம்பரம் தான். அங்கே வருவதற்கு அவன் மனம் எப்படி இடங்கொடுத்தது? ஏழை நெஞ்சம் இப்படித்தானோ? இரக்கமுள்ள இதயம் ஏழையிடந்தான் இருக்கிறதா?

ஏகாம்பரம் அமைதியோடு மாதவியைப் பார்த்தான். அவனுக்குள்ளே இலேசான நம்பிக்கை ஒளி விட்டது. அது அவன் முகத்திலே தெரிந்தது. ஒரு நிமிடம்; இரண்டு நிமிடங்கள்…! ஏகாம்பரம் என்னென்னவோ செய்தான். பரபரப்போடு நின்றிருந்தார் வேதநாயகம்.

வினாடிகள் ஓடின! மாதவி மெதுவாகப் புரண்டாள். உடலிலே அசைவு ஏற்பட்டது. இமைகள் மெல்ல விரிந்தன. விழித்து சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினாள். வேதநாயகம் விம்மினார். அதில் முன்னைய அச்சமும் நடுக்கமும் இல்லை. அது மகிழ்ச்சியால் முகிழ்த்த விம்மல்.

மரமாக நின்றிருந்த ஏகாம்பரத்தை ஏறிட்டுப் பார்த்தார். நன்றிக் கண்ணீர் விழிகளிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தது. ஏகாம்பரத்திற்கு என்ன கைம்மாறு செய்வது?

வேதநாயகம் பேசினார்:

“ஏகாம்பரம் என்னை மன்னித்துவிடு; இத்தனை நாளாக நெஞ்சிலே நஞ்சை வார்த்துக் கொண்டு வாழ்ந்திருந்தேன். இன்று என் கண் திறந்து விட்டது தாழம்பூ? அதை என்னால் மறக்க முடியாது ஏகாம்பரம்.

முட்களிலிருந்தும் மணம் இருக்கத்தான் செய்கிறது!

– 1958 – ‘மாணவர் குரல்’ இதழில் இடம்பெற்ற சிறுகதை – ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *