கடையில் நான் சாமான் வாங்கிக்கொண்டு இருந்த போது யதார்த்தமாக குப்பைத்தொட்டியை பார்த்தேன். குப்பையின் மேலுள்ள ஒருஅட்டைபெட்டியில் சமீபத்தில் பிறந்த மூன்று பூனைக்குட்டிகள் இருந்தன .
அதில் இரண்டு கட்டிப்புரண்டு கத்திக் கொண்டே இருந்தது. மற்றொன்று நன்கு தூங்கிக்கொண்டு இருந்தது . சாமானைவாங்கியவாறே சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லோரும்பார்த்தும் பார்க்காததைப் போல அவசர அவசரமாக போய்க்கொண்டுஇருந்தனர்.
பிறந்த மூன்று பூனைக்குட்டிகளை குப்பையில் போட யாருக்கு மனசு வந்திருக்கும் என்ற நினைப்போடு நடக்க ஆரம்பித்தேன்.ஒரு சிறுவன் மட்டும் குப்பைத்தொட்டியின் அருகில் வந்து அது விளையாடுவதை பார்த்துக்கொண்டு இருந்தான்.அறை நண்பர்கள் முன்பே என்னை எச்சரித்து இருந்தனர். இனிமேல் நாய்,பூனை எதுவும் எடுத்துட்டு வரக்கூடாதுயென அதை நினைத்தவுடன் என் வீட்டை நோக்கி நடக்க மனமின்றி சென்றேன் .
பாதிதூரம் சென்றவுடனே என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற முடிவோடு குப்பைத்தொட்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கு ஒரே ஒரு குட்டிதான் இருந்தது.இரு குட்டிகளை காணவில்லை.அந்த சிறுவனையும் காணவில்லை .
அந்த ஒரு பூனைக்குட்டியை தூக்கினேன்.அது கத்திக்கொண்டே என் கையை இறுகப்பற்றிக் கொண்டது. என் வீட்டில் அப்போது யாருமில்லை .அப்பூனையை வீட்டின் உள்ளறையில் வைத்தேன்.வீட்டில் உள்ள பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்தேன்.
அது ஒரே இடத்தில் இல்லாமல் சுற்றிக் கொண்டே வந்தது. அருகே போய் பாலை வைத்தும் அது குடிக்கவில்லை. சத்தம் போட்டுக்கொண்டே இருந்தது . என்ன செய்வதென்று தெரியவில்லை.கத்திக்கொண்டே சுவரோடு சுவராக நன்கு ஒட்டிக்கொண்டது .
வெயில் தாங்கமுடியாமல்தான் இப்படி சுவரோடு ஓட்டுகிறதோவென நினைத்து நான் போட்டிருந்த சட்டைக்குள் இருபட்டனை விலக்கி குட்டியை அதற்குள் வைத்தேன். இருட்டைப் பார்த்தவுடனே படக்கென்று உள்ளே ஓடியது.என் வயிற்றை தன் கையால் உள்ளே போகும் போது அப்பூனை பிராண்டிவிட்டது .
இடையிடையே இலேசாக முனகியது .நன்கு தூங்கிக்கொண்டு இருந்தது . சிறிது நேரம் கழித்துப்பார்த்தால் என் இடுப்பை தன் நாக்கால் நக்கிக்கொண்டு இருந்தது . கிச்சு கிச்சு முட்டுவதாக இருந்தாலும் திடீரென்று கடித்து விடுமோயென பயமாக இருந்தது .
ரொட்டியை வாங்கி வரலாமென நினைத்து பூனையை ஒரு பொந்தில் வைத்து விட்டு கடைக்குச் சென்றேன். கடையில் வாங்கிவந்த ரொட்டியை பொடிப்பொடியாக ஆக்கிக்கொண்டு இருந்தபோது திடீரென்று பூனை பயங்கரமாக கத்தியது. நாய்தான் உள்ளே புகுத்து விட்டதென நினைத்து பயத்தில் அருகே இருந்த கட்டையை எடுத்துக்கொண்டு படுவேகமாக பூனைக்குட்டி இருந்த இடத்தை நோக்கி ஓடினேன் .
அங்கு பார்த்தால் ஒரே ஆச்சர்யம். அச்சு அசலாக அதே மாதிரி அதனுடைய தாய்ப்பூனை.அது தன் வாயில் பூனையை கவ்விக்கொண்டு என்னைப் பார்த்துவிட்டு சென்றது . அது போவதையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
என் மனதில் சந்தேகம் இருந்து கொண்டு இருந்தது. இரு பூனையையும் அச்சிறுவன் நன்கு வளர்ப்பானா …?
அன்றிரவே அதற்கு விடை கிடைக்கும் என்பது அப்போது தெரியாது.இரவு துக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தேன். படிக்கலாமென நினைத்து டீ குடிக்க வெளியே சென்றேன்.
குப்பைத்தொட்டியின் அருகே உள்ள வீட்டின் மேல்கூரையில் அந்த தாய்ப்பூனை நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தது.நான் அதைப்பார்த்தபடி மியாவ்வென்றேன். பூனை ஒரு நிமிடம் என்னை உற்றுப்பார்த்தவாறு மியாவ் மியாவ்யென்றது .
திடிரென்று தூரத்தில் இருந்து மியாவ் மியாவ் மியாவ்வென தொடர்ச்சியாக சத்தம் கேட்டது.சத்தம் வந்த திசையை நோக்கி பூனை படுவேகமாக தாவியது . நானும் அதன் பின்னே ஓடினேன் .அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைக்குள் இருந்து பூனைக்குட்டியின் சத்தம் கேட்டது. பூனை அதற்குள்போய் தன் இரு குட்டிகளை ஒரே வாயில் கவ்விக்கொண்டு வெளியே வந்து என்னை பார்த்தது. பூனை தூரத்தில் போன பின்பும் அந்த இருட்டில் என்னையே பார்த்துக்கொண்டு போவது என் கண்களுக்கு நன்றாக தெரிந்தது.