தாதியின் தியாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 7,683 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜோதிப்பூரை ஆண்டுவந்த ராஜபுத்திர அரசனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. மிக வும் குதூகலத்துடன் எல்லோரும் அந்த நாளைக் கொண்டாடினார்கள். ஆனால் மூன்று நாட்களுக்குப் பின் நடந்த ஒரு சம்பவம் மக்கள் அடைந்த சந்தோஷத்தைத் துக்கமாக மாற்றியது. மகவை ஈன்றெடுத்த இராணி இறந்துபோனாள்.

தாயில்லாப் பிள்ளையை எப்படி வளர்ப் பது என்பது தான் அரசனின் கவலை. தகுந்த தாதியைத் தேடிக்கொண்டு வரும்படியாக அவர் தமது ஆட்களை பல இடங்களுக்கும் அனுப்பினார். அநேக பெண்கள், அரச சேவையில் அதிகமான ஊதியம் கிடைக்கும் என்று நம்பி, அரண்மனைத் தாதியாவதற்கு விரும்பினார்கள்.

கடைசியில், “மோதி” என்றொரு பெண் வந்தாள். அரசிளங் குமாரனைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே எண்ணம் தான் அவள் மனதில் இருந்தது. எனவே அவளையே தாதி யாக நியமித்தார்.
மோதிக்கும் ஒரு குழந்தை இருந்தது. இரு குழந்தைகளுக்கும் ஏறக்குறைய ஒரே வயது தான். இருவரையும் மிகவும் அன் புடன் வளர்த்து வந்தாள் அத்தாதி. தன் மகனைப் பார்க்கிலும் அரசிளங் குமாரனைத் தான் அதிகமாய் நேசித்தாள் என்றுங்கூடச் சொல்லலாம். இதற்குக் காரணம் அவள் மன தில் உண்டான உள்ளான அனுதாபம்தான். “என் பிள்ளைக்குத் தாய் இருக்கிறாள். ஆனால் நம் அரச குமாரனுக்குத் தாய் இல்லையே” என்று அடிக்கடித் தனக்குள்ளே சொல்லிக் கொள்வாள்.

அரசனுக்கோ அநேக விரோதிகள் இருந்தார்கள். அவர்கள் அரச குமாரனைக் கொல்லும்படியாக சதி ஆலோசனை பண்ணி னார்கள். ஆனால் அரண்மனைக்குள் இலகுவில் செல்ல முடியுமா?
ஒரு நாள் அவ்விரோதிகள் வாள்களை ஏந்திக் கொண்டு அரண்மனையை நோக்கி வந்தார்கள். வாசலிலிருந்த காவலாளர்கள் அவர்களை எதிர்த்துத் தாக்கினார்கள். என்ன பிரயோஜனம்? ஒவ்வொருவராக மடிய வேண்டியதாயிற்று.

அரண்மனைக்கு உள்ளே ஒரு அறையில் தாதியின் மடியருகே இரு குழந்தைகளும் வெகு சந்தோஷமாக விளையாடிக் கொண் டிருந்தார்கள். அச்சமயத்தில் தான் ஒரு வேலையாள் ஓடி வந்து, “அம்மா! நான் என்ன சொல்லுவேன்! அரண்மனைக்குள் எதிரிகள் வந்து விட்டார்களே. நமது அரசி ளங்குமாரனைக் கொல்லப் போகிறார்கள். என்ன செய்வது. ஐயோ! இது என்ன அநியாயம்,” என்று அலறினான்.

ஒரு இமைப் பொழுது ஸ்தம்பித்து நின் றாள் தாதி. பிறகு அவள் மனம் ஒரு உறுதியான முடிவிற்கு வந்தது. தனது சொந்தப் பிள்ளையின் உடுப்பைக் கழற்றி அரச குமாரனுக்குப் போட்டாள். அவன் அணிந்திருந்த உடைகளைத் தன் மகனுக்கு உடுத்தினாள். துஷ்டர்கள் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. இராஜ உடையில் இருக்கும் தனது அருமை மகனை அரசகுமாரன் தூங்கும் கட்டிலிலே விட்டாள். அரசகுமாரனைத் தூக்கிக் கொண்டு, பின் வாசல் வழியாய் ஒரே ஒட்டமாய் ஓடி விட்டாள்.

கதவு உடைந்தது. கொலைக்காரர் உள்ளே புகுந்தார்கள். அரையில் ஒருவரையும் காணோம். கட்டிலில் மாத்திரம் ஒரு குழந்தை இருந்தது. தலையிலிருந்த குல்லாவும் உடம்பில் அணிந்திருந்த உடைகளும் அப்பிள்ளை அரசகுமாரன் என்பதை எடுத்துக் காட்டின. அவர்களில் ஒரு முரடன் சிரித்துக் கொண்டே, “என்ன இருந்தாலும் தாதி தாதிதான். ஆபத்து வந்தவுடன் தன் மகனைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள். இவ னைக் காப்பாற்றவோ ஆள் இல்லை” என்றான். அதற்குள் அடுத்தவன், “தாதி நமது வேலையை இலகு வாக்கிவிட்டாள். நமக்கு வேண்டியது அரசகுமாரன் தான். அவன் இங்கே இருக்கிறான். வேறு இடந்தேடி அலைய வேண்டியதில்லை” என்று பதிலளித் தான்.

கல்நெஞ்சம் படைத்த அப்பாதகர்கள் கட்டிலிலிருந்த பிள்ளையைக் கொன்றார்கள்.

ஆனால் சில மணி நேரங்களுக்குள்ளாக உண்மை வெளியாயிற்று. அரச குமாரனைக் காப்பாற்றும்படியாக, மோதி தன் அருமைப் புதல்வனைப் பாதகர்களுக்குப் பலி கொடுத்தாள் எனறு ஜனங்கள் கேட்டபோது அவளை மிகவும் பாராட்டினார்கள். அரச பரம்பரையைக் காத்த அவளைப் புகழ்ந்தார் கள். அரசனுடைய மகிழ்ச்சியோ எல்லை மீறியது. தாதிப் பெண்ணுக்கு வெகுமதியாக விலையுயர்ந்த ஆபரணங்களையும் வைரங்களையும் அனுப்பினார். ஆனால் மோதியோ மிக வும் மரியாதையாக அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். “கடமையைச் செய்த எனக்குக் கைக் கூலியா?” என்றாள்.

அடுத்த நாள் அத்தாதி, “அரசிளங் குமாரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டேன், என் கடமை தீர்ந்தது. இனி என் மகன் இருக்கும் இடத்திற்கு நான் செல்ல வேண்டாமா” என்று சொல்லித் தனது உயிரை மாய்த்துக்கொண்டாள்.

“உயிரைக் கொடுத்தாகிலும், கடமை யைச் செலுத்த வேண்டும்.”

கேள்விகள்
1. “மோதி” என்பவள் யார்? அவள் அரண்மனையில் எதற்காக நியமிக்கப்பட்டாள்?
2. அவள் அரசகுமாரனை எப்படிக் காப்பாற்றினாள்?
3. அவள் தன் குழந்தையை பலி கொடுத்தது சரியா? உன் அபிப்பிராயம் என்ன?
4. தாதியின் தியாகத்தைப் பற்றிச் சுருக்கமாய் எழுது.

– சிறுவர்க்கேற்ற சிறுகதைகள், முதற்பதிப்பு – நவம்பர் 1949, தென்னிந்தியப் பதிப்புக் கழகம், சென்னை – 24

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *