வீதியில கழுதை ஒன்னு கால்ல அடிபட்டு வந்திட்டு இருந்தது. அந்த வழியா வந்த எண்ணெய் ஆட்டுக்கின்ற செக்கன் ஒருவன் அடிபட்ட கழுதைய பார்த்தான்.
ஐயோ! பாவமன்னு அந்தக் கழுதையின் கால்ல, துணியை எண்ணெய்ல்ல நனைச்சி கட்டி விட்டான்.
கால் கட்டுப்போடப்பட்ட பிறகு கழுதை சந்தோசத்துல துள்ளிக் குதிச்சது.
அப்படியே கொசவர்கள் மட்பாண்டம் செய்யும் இடத்திற்கு ஓடியது.செய்த பானையை வேகவைப்பதற்காக நெருப்பு கங்குகள் போடப்பட்டிருந்தன. கழுதை அந்த நெருப்பு கங்குகள் மீது ஏறிக் குதித்தது.
கழுதையின் எண்ணெய் உள்ள காலில் நெருப்பு பற்றிக்கொண்டது.
சூடு தாங்க முடியாத கழுதை பக்கத்தில் இருக்கும் கரும்பு காட்டுக்குள் ஓடியது. காலில் உள்ள நெருப்பானது கரும்பு சோவையைப் பற்றியது. கொஞ்ச நேரத்தில் கரும்பு காடே வெந்து சாம்பலானது.
இக்கதையில், கரும்பு காடு யாரால் எரிந்த போனது? கழுதையின் மேல் தவறா? கழுதைக்குப் பாவம் பார்த்துக் காலில் கட்டிவிட்ட எண்ணெய் செக்கன் மீது தவறா? மண்பானைக்காக நெருப்பு கங்குகள் வைத்திருந்தவன் மீது தவறா? இல்லை வேலிப்போடாத கரும்பு காட்டுக்காரன் மேல் தவறா?
ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன.
எந்த ஒரு logic um இல்லாத, சுவாரஸ்யமும் இல்லாத கதை..