கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 2,516 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். வனப்பைப் கெடுக்கும் வண்ணம் ஏழெட்டுத் தழும்புகள் வதனத்தில் நிரம்பி நின்றன. அந்தத் தழும்புகள் என்னைப் பார்த்துப் புன்னகை புரிவதாக உணர்ந்தேன். உள்ளமும் பூரிப்பில் சிரித்தது.

நேரத்தை நோக்கினேன். மூன்று மணியாகப் போவதை கடிகாரம் உணர்த்தியது. தலையை வாரிக் கொண்டு ஆனந்தம் அலைபாய வெளியே கிளம்பினேன். பஸ் ஸ்டாப்பை நோக்கிக் கால்கள் விரைந்தன. கன்னத்தை மெல்ல வருடிப் பார்த்தேன். அன்பெனும் தைலத்தால் ஆற்றப்பட்ட தழும்புகளல்லவா அங்கே நிறைந்திருக் கின்றன!

சாவதானமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆறு; இரு மருங்கிலும் இயற்கையின் பசுமைக் கோலம்; ஆற்றின் கரையில் பிள்ளையார் கோயில்; கரையின் புறத்தே பஸ் ஸ்டாப். சற்றுத் தூரத்தில் கடைத்தெரு. சதர மென் காற்றைத் தவழ விட்டவாறு நிற்கும் நாலைந்து வேப்ப மரங்கள். பக்கத்தில் இரண்டு சிமெண்ட் பெஞ்சுகள். இத்தகைய சூழ்னிலையிடையே அமை ந்திருக்கும் பஸ் ஸ்டாப்பில் நாள் முழுதும் உட்கார்ந்திருக்கலாம். இதமான நிழலும் குளுமையும் அங்கே கொப்புளிக்கும்.

வேப்பம்பூ மணம் காற்றில் வந்தது. அதனை நுகர்ந்த வண்ணம் பெஞ்சு ஒன்றில் அமர்ந்தேன். பஸ்ஸுக்காகக் காத்து நின்ற இரண்டு மூன்று பேர் வேப்பமரத்தடியில் கூடி வீணான பேச்சை வளர்த்திக் கொண்டிருந்தனர், ஆற்றின்மீது என் பார்வை பதிந்தது. ஆழ்கடலோடு சங்கமமாகப் போகிறோம் என்ற குறிக்கோளோடு அது இடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. என்றாலும் அதனிடையே எத்தனை சுழல்கள்! சுழற்சிகள்! வேகமான சுழியொன்று என் கவனத்தைப் பறித்தது.

மறுகணம்… அந்தச் சுழியின் விசையைக் காட்டிலும் என் சிந்தனை கட்டவிழ்ந்தது! அதி வேகமாகச் சுற்றிச் சுழன்றது. அந்தச் சுழற்சியிலே ஜோஸப் தோன்றினான்! ஆம்! நானும் ஜோஸப்பும் நான்கைந்து வருஷங்களுக்கு முன், நீச்சலடித்து இரண்டு படுத்திய ஆறு இதுதான். அசுர விசையோடு தோன்றும் எத்தனையோ சுழிகளையெல்லாம் நாங்கள் வென்றிருக்கிறோம். ஒன்றாகக் குதித்து எதிர் நீச்சல் போட்ட அந்த இன்ப நாட்களை எப்படி மறக்க முடியும்?

சின்ன வயசு அப்பொழுது, பயிரும் பசுமையுமாக நாங்கள் வளர்ந்தோம். பள்ளிக்கூடத்தில், விளையாட்டு மைதானத்தில், மற்ற இடங்களிலே நாங்கள் ஒன்றுபட்டுத் தான் இருப்போம்; ஒன்றி நின்ற எங்கள் உள்ளங்களை யாராலும் பிரிக்க முடியவில்லை.

இத்தனைக்கும் ஜோஸப் எங்கள் ஊரில் பிறந்தவன் அல்ல. அவனுக்குச் சொந்த ஊரும் இது இல்லை. அன்றியும் அவன் கிறிஸ்துவச் சிறுவன். ஆனால் நானோ…?

ஒரு நாள் இந்த ஆற்றங்கரையில், இதே இடத்தில் நின்று  கொண்டிருந்த போதுதான் எங்கள் சந்திப்பு ஏற்பட்டது. பஸ் நின்றது. அதிலிருந்து குதூகலத்தோடு அவன் குதித்தான் கூடவே தாயும் தந்தையும் இறங்கினர். நான் அவனைப் பார்த்தேன். என்னை அவன் நோக்கினான், புன்னகை எங்கள் முகங்களிலே மின்னியது.

அவனது வட்ட முகத்தைவிட்டு அகல என் கண்கள் ஏனோ மறுத்தன் நல்ல சிவப்பு நிறம்; தக்காளிப் பழ நிறத்தில் கன்னங்கள் தகதகத்தன. பேச்சில்லாத இது தான் எங்கள் முதல் சந்திப்பு!

பிறகுதான் எனக்கு விஷயம் விளங்கியது. அவன் – ஜோஸப் – அப்பாவுக்கு எங்கள் வட்டாரத்தில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் உத்தியோகம். என் அப்பாவும் ஒரு ஆபீஸரானபடியால் ஜோஸப்பின் அப்பாவுக்கும் இவருக்கும் சிநேகம் ஏற்படச் செய்தது. அப்புறம் எங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

ஜோஸப் என் வகுப்பிலேயே படிக்கச் சேர்ந்தான். இடை விடாது என்னிடம் பேச வருவான். “கணேஷ்… கணேஷ்…” என்று என் மீது உயிரையே விடுவான் நானும் அப்படித்தான்.

பேதம் கற்பிக்கும் பிழையான பழக்கம் பெரியவர் களால் ஏற்படுத்தப்படுவதுதான். வேற்றுமைக்கும், உயர்வு தாழ்வுக்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே இடமேது? நாங்கள் பழகினோம்; அன்புக்கு எதிராக நின்ற அனைத்தையும் அகற்றி எறிந்தோம். என் அம்மாவுக்கு மட்டும் இதில் சற்று வெறுப்பு இருக்கவே செய்தது. எங்கள் நட்புக்கு இடையூறாக அப்பா ஒரு போதும் நிற்கவில்லை. புதுப் பழக்கம் கூடாது என்று அம்மா பலமுறை இலேசாக்க் கண்டித்திருக்கிறாள். என்றாலும் எனக்கென்ன? ஒரு கிளைப் பறவையாக நாங்கள் சிறகடித்துப் பறக்க தொடங்கிய பின்னர் யார் என்ன செய்ய முடியும்?

ஆற்றையொட்டிய கொய்யா மரக் கூட்டமும், மாஞ் சாரிகளும் எங்கள் பார்வைக்குக் கீழ்ப்பட்டவைகள்தாம். ஜோஸப் லாவகமாக மரத்தில் தாவுவான். மரத்திற்கும் தரைக்குமிடையே கல் பறக்கும். காயும் கனியும் கீழே உதிரும். பிள்ளையார் கோயில் படித்துறைப் பக்கத்தில் உட்கார்ந்து, நாங்கள் அவற்றை ருசிக்கும்போது பெருமிதம் பொங்கும்; பூரிப்புச் சிரித்தாடும்!

ஜோஸப் வீட்டாரும் என்னிடம் ஆசை கொண்டிருந்தனர்; அன்பு காட்டினர்; பரிவைப் பெருக்கினர். இப்படியாக நாட்கள் நகர்ந்தன.

இன்பம் எப்பொழுதும் நினைத்து நிற்பதில்லையே! இன்பத்திற்கு ஓர் எல்லை காணும்போது துன்பம் தானே தெரிகிறது!

ஞாயிற்றுக்கிழமை. சோம்பல் முறித்துக்கொண்டு ஏழு மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்தேன். ஜோஸப்பை இரண்டு நாட்களாகப் பார்க்காத குறை என்னை வருத்தியது. அவன் பள்ளிக்கூடத்திற்கும் வரவில்லை. என்ன காரணத்தினாலோ நானும் அவர்கள் வீட்டிற்குப் போய்ப் பார்க்கத் தவறி விட்டேன்.

எத்தனையோ நாட்கள் உயிருக்கு உயிராகப் பழகியிருக்கிறோம். ஏனோ இப்பொழுது அதுவும் இரண்டு தினங்களாக எங்கள் முகங்கள் சந்திக்கவில்லை. ஜோஸப்பைப் பார்க்க வேண்டும் என்ற துடிதுடிப்பு நெஞ்சிலே விரவியது.

ஒன்பது மணியிருக்கும்.ஜோஸப்பைப் பார்க்கப் போகலாம் என மெல்ல அடியெடுத்து வைத்தேன். அதற்குள் அப்பா அழைத்தார். ஞாயிற்றுக்கிழமை யாகையால் அவருக்கு ஆபீஸ் இல்லை. என்னவோ ஏதோ என்ற அச்சத்தோடு அருகே போனேன்; அமைதியாக நின்றிருந்தேன்.

“எங்கேடா கிளம்புகிறாய்?” முதற் கேள்வியைக் கேட்டு வைத்தார்.

”எங்கேயும் இல்லேப்பா…”

”பிரமாதமா வெளியே புறப்பட்டப்புறம், என்னடா பொய் சொல்ல வேண்டியிருக்கு? அந்த ஜோஸப் வீட்டுக்குத்தானே…?”

சற்று அழுத்தமாகவே அப்பா வினவினார். அப்பாவா இப்படிக் கேட்கிறார் என ஐயற்றேன். பொய் சொல்லத் துணியவில்லை.

“ஆமாம், அங்கேதான் போகலாமென்று…” பேசி முடிக்கவில்லை.

அவர் முகம் மாறியது. கண்களில் என்னவோ போல் ஒருவித மருட்சி! என்னிடம் அப்பா எப்போதும் உக்கிரமாக நடந்து கொள்வதில்லை. ஏனெனில், நான் அவருக்கு ஒரே குழந்தை. ஆனால் இன்று என்ன வந்துவிட்டது?

“அந்த வீட்டுப் பக்கம் பத்து நாளைக்கு அடியெடுத்துக்கூட வைக்கக் கூடாது. ஊருக்குப் போயிருக்கும் ஜோஸப் திரும்பி வருவதற்குள், அங்கே நீ போனதாகத் தெரிந்தால்….”

அப்பா நீட்டி முழக்கினார். நான் திகைத்து நின்றேன். இப்படி ஒரு கட்டளை பிறக்கும் என்று நான் கனவில்கூட நினைத்ததில்லையே!

’அவன் வீட்டுக்குப் போகக்கூடாதாம்! போனால் என்ன வந்து விடும்? ஏன் போகக் கூடாது?’ என் மனம் துடித்தது. குழந்தையின் கருத்திலிருந்து ஒரு பொருளை மறைக்க முயலும்போது, அந்தப் பொருளை அடையத்தானே அது நாடுகிறது? நானும் அந்த நிலையில் தானிருந்தேன்.

கண்ணிலும் நல்லவனாக நான் கருதும் ஜோஸப்பைக் காண முடியாது. என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் அவன் கண்டிப்பாக ஊருக்குப் போக மாட்டான். அப்பா பொய் பேசுகிறார்; அன்பை அழிக்க முற்படுகிறார். இப்படிச் சிந்தித்தேன் நான்.

காலை முழுதும் வீட்டில் அடங்கிக் கிடந்தேன். அப்பா காவலுக்கு இருந்தமையால், நெஞ்சு பொறுக்க வில்லை. வானை மறந்த பயிரை எங்கே காண முடியும்?

பகல் சாப்பாட்டுக்குப் பிறகு, அப்பா குட்டித் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அம்மா அடுக்களைப் பக்கம் ஏதோ அலுவலாக இருந்தாள். இதுவே நல்ல சமயமெனப் பட்டது. மெல்லக் கிளம்பினேன். அன்பு அலறியது. ஆசை பிடரியைப் பிடித்துத் தள்ளியது. ஜோஸப்பின் இல்லம் நோக்கி ஓடினேன்!

கதவைத் திறந்தேன். உள்ளே நுழைந்தேன்; நிச்சப்தம் நிலவியிருந்தது. கண்களைச் சுழல விட்டேன். அன்னை மேரியின் உருவப் படத்தைச் சுவரில் கண்டேன். அருகே, அன்பின் உருவாக அவதரித்து, அன்பை நிலவ விட்டு மறைந்த உத்தமர் இயேசுவின் படம் இருந்தது.

”ஜோஸப்…” கண்டத்திலிருந்து குரல் எழும்பியது. பதிலைக் காணோம். முனகலோசை மெதுவாகக் கேட்டது. கூடத்துப் பக்கம் பார்த்தேன். முகத்தை வேறு பக்கம் திருப்பியவாறு முடங்கிக் கிடந்தான் ஜோஸப். ஊரில் இல்லையென்று அப்பா சொன்னாரே, அதே ஜோஸப் தான்! தன்னந்தனியாக அவன் ஏன் படுத்திருக்க வேண்டும்? பிரமிப்பு மேலிட நெருங்கினேன்.

“உடம்புக்கென்ன ஜோஸப்? ஏன் இப்படியிருக்கிறாய்?”

என் பக்கம் புரண்டான். மூடியிருந்த அவன் கண்கள் மெல்ல விரிந்தன. முகத்தைப் பார்த்த நான் பீதியால் அஞ்சி, நடுங்கி, ஒடுங்கிப் போனேன்! நெஞ்சு திக்கென்றது.

ஜோஸப்பின் எழில் முகமா அது? என் நண்பன் ஜோஸப்பா அவன்? நான் எப்படி நம்புவேன்? அவனது ஆப்பிள் கன்னங்கள் எங்கே? சப்பாத்திப் பழ நிறத்தில் அல்லவா முகம் மாறிவிட்டிருக்கிறது! இத்தனை வடுக்களும் கோரமும் அவனிடம் எப்படி வந்து சேர்ந்தன? விம்மினேன்.

”கணேஷ்… இங்கே எதற்காக வந்தாய்? என்னைப் பார்க்காதே. இங்கே நிற்காதே” தட்டுத் தடுமாறித்தான் அவனால் பேச முடிந்தது.

“ஜோஸப்… நீயா இப்படிப் பேசுகிறாய்? மன மறிந்துதான் என்னைப் போகச் சொல்லுகிறாயா?” பதற்றத்தோடு கேட்டேன்.

”ஆமாம் கணேஷ்! என் முகத்தைப் பார்க்க உனக்குப் பிடிக்கிறதா? கோரம் தாண்டவமாடும் இந்த முகத்தைப் பார்க்காதே! போய் விடு….”

”ஒன்றிய நம் உள்ளங்கள் கன்றிப் போகத்தான் வேண்டுமா ஜோஸப்? அன்பைச் சுட்டுப் உன் பொசுக்கிவிடுவதுதான் எண்ணமா?”

”தவறாகப் பேசாதே கணேஷ்! கொடுமையான நோய்க்குப் பலியாகிக் கிடக்கிறேன். கர்த்தர் காப்பாற்றுவார்! நம் அன்பு அழியாதது. கணநேரமும் இங்கே நிற்காதே, கணேஷ்….”

எப்படியோ அவன் பேசி விட்டான். ஆதுரத்தோடு அவனை மீண்டும் பார்த்தேன். எங்கள் விழிகள் கண்ணீர் சொரிந்தன.

அடுத்த நிமிஷம் வெளியே வந்தேன். அப்பாவை நினைத்தேன். வீட்டில் நுழைந்தவுடன் அமோகமான அர்ச்சனை அப்பா கோடுக்கும் அர்ச்சனை தான் பெரிதா? துணிவோடு வீட்டுக்குப் போனேன்.

அம்மாவின் முகம் கடுகடுவென மாறியிருந்தது. அப்பா ஓய்ந்ததற்கப்புறம் எச்சரிக்கை கொடுத்தனர், மீண்டும் இப்படி நடக்கக் கூடாதென்று!

இரவு, படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். பாழுந்தூக்கம் வந்தால்தானே? அந்த வதனம் – ஜோஸப் பின் கோரத்தோற்றம் – என்னுள்ளே அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஒருவாறாகக் கண்கள் மூடிக் கொண்டன.

காலையில் எழுந்திருக்க என்ன தான் முயன்றும் முடியவில்லை. இரவு முழுவதும் கனவுகள். ஒருவிதமான தளர்ச்சி! உடம்பு கொஞ்சம் கொதித்தது.

“இன்னும் எழுந்திருக்கவில்லையா, கணேஷ்?” – என் பக்கம் வந்தாள் அன்னை. எழுந்து உட்கார்ந்தேன்.

”ஏண்டா ஒரு மாதிரியாக இருக்கே?” என்றவாறு உடம்பைத் தொட்டுப் பார்த்தாள். நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். ஐந்து நிமிஷத்திற்குள் விஷயம் பிரமாதப்பட்டது.

அன்று மாலை. உடம்பிலே ஓர் எரிச்சல்! ஜுரம் நெருப்பாகத் தீய்த்தது. கலங்கிவிட்டாள் அனனை. எதிர் வீட்டுப் பாட்டி வந்தாள்.

”குழந்தைக்கு அதுதான் வந்திருக்கிறது. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” – இதைத்தான் அவள் சொன்னாள்.

”நன்மைக்குத்தானே நான் சொன்னேன். கேட்டானா தடியன்! அங்கே ஏன் போக வேண்டும்? இப்பொழுது கஷ்டப்படப் போவது யார்?” என் தந்தை துடித்தார்.

நான் புரிந்துகொண்டு விட்டேன். மறுநாள் என் தேகத்திலும் முகத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொப்புளங்கள். அம்மை என்னையும் பிடித்துக்கொண்டு விட்டது. வைசூரியின் கொடும் பிடிக்குக் கீழ் வாடத் தொடங்கினேன். சதா ஜோஸப்பின் நினைவுதான் நின்றது.

பத்து நாட்கள் ஓடிவிட்டன. உடம்பு சற்றுத் தேறி விட்டிருந்தது. அடுத்த நாள் தலைக்குத் தண்ணீர் விட்டார்கள். வடுக்கள் அநேகமாக மறைந்துவிட்டன. முகத்தில் மாத்திரம் சில தழும்புகள்;

ஓய்வாக உட்கார்ந்திருந்தேன். வெளியே போய்விட்டு வந்த அப்பா, “அந்த இன்ஸ்பெக்டர் தம் ஊருக்கு இன்று காலையில் தாம் போகிறார். அவர் பையனுக்கு உடல் ரொம்பப் பலவீனமாம்” என்று கூறினார். திடுக்கிட்டேன்! இந்தச் செய்தி எனக்கு எவ்வளவு வேதனையளிக்கும் என்பதை அவர் எப்படி உணர முடியும்? ஜோஸப்பைக் காணலாம் என் ஆசை மேலிட இருக்கும் வேளையில் இப்படியா விபரீதம் நடக்க என் ஆசை நசித்து விட்டது.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எங்களைச் சந்திக்க முடியாமல் தடுத்துவிட்டன. நாட்கள் ஓடிவிட்டன. இதயங்களிலே நிரம்பியிருக்கும் எல்லையற்ற அன்பு எப்படி மாற முடியும்; ஜோஸப் கடிதம் எழுதினான். பதில் எழுதினேன். நான்கு கடிதங்கள் எங்களிடையே பறந்தன. ஆழ்ந்த நட்பின் அருமையை அம்மா பிறகுதான் உணர்ந்தாள். அந்த ஜோஸப்பைத் தான் இப்போது இன்னும் சற்று நேரத்தில் காணப்போகிறேன்.

வேப்பமரத்தடியில் நின்றவர்களின் வேகமான பேச்சு என் சிந்தனையோட்டத்தைத் தடைப்படுத்தியது. பேச்சு இன்னும் அடங்கின பாடில்லை. வேம்புக் காற்று குளுமையாக வீசியது அமைதியான நீரோட்டம் ஆற்றில் இருந்தது. எட்டத்தில் பஸ் வரும் ஓசை கேட்டது. கிழக்கே திரும்பிப் பார்த்தேன்.

பஸ் வந்துவிட்டது. ஜோஸப் இறங்கிவிட்டான். கரத்தைப் பற்றிக் குலுக்கினேன். என் ஜோஸப் செழுமையாக வளர்ந்து விட்டானே!

அந்த முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். தழும்புகள் அங்கும் இருக்கத்தான் செய்தன. கன்னங்குழிய மின்னிய மென்னகை தழும்புகளை, எங்கள் அன்பில் அறிகுறியை – மறைத்து நின்றது. நாங்கள் நடந்தோம்.

– 1956 – கண்ணன் இதழில் இடம்பெற்றது, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *