கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 7,116 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு மன்னனுக்கு விசிறி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவன் ஆயிரக்கணக்கில் விதவிதமான விசிறிகளைச் சேர்த்து வைத்திருந்தான்.

ஒருநாள் தெருவில் ஒருவன் “விசிறி வாங்கலையோ விசிறி ! அற்புத விசிறி!! அழகு விசிறி. மலிவான விலை. ஐம்பதே பொற்காசுகள்தான்” என்று கூவிக்கொண்டே போய்க் கொண்டிருந்தான். மன்னன் அவனை அழைத்து “எங்கே உன் விசிறியைக் காட்டு! அதில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது பார்ப்போம்” என்றான்.

விசிறி வியாபாரியும் ஒரு விசிறியை எடுத்துக் கொடுத்து “இது தான் அந்த அற்புத விசிறி” என்றான். மன்னனும் அதை வாங்கிப் பார்த்து “இது எல்லா விசிறிகளைப் போலத்தானே இருக்கிறது. இதில் ஒரு சிறப்பும் இருப்பதாகத் தெரியவில்லையே” என்றான்.

வியாபாரியும் “இதை வாங்கி உபயோகித்துப் பார்த்தாலே இதன் சிறப்பு என்ன என்பது தெரியும். பார்க்கப் போனால் இதனை நான் ஆயிரம் பொற்காசுகளுக்கு விற்க வேண்டும். ஐம்பது பொற்காசுகளுக்கு விற்கிறேன் என்றால் அது மிகவும் மலிவுதானே” என்றான்.

மன்னனும் “சரி. ஒன்றைக் கொடுத்து விட்டுப் போ இது எப்படிப்பட்டது என்று பார்க்கிறேன்” என்றான்.

வியாபாரியும் “நான் ஒன்றும் மோசக்காரன் அல்ல. நீங்கள் இதை உபயோகித்துப் பாருங்கள். நான் ஒரு மாதம் கழித்து வந்து பார்க்கிறேன். ஆனால் இதை உபயோகிக்கும் விதத்தைக் கூறுகிறேன்” என்றான்.

மன்னனும் “நிறுத்து. ஒரு விசிறியை எப்படி உபயோகிக்க வேண் டும் என்று நீ ஒன்றும் சொல்லிக் கொடுக்க வேண்டாம். எல்லாம் எனக்குத் தெரியும்” என்று கூறி விசிறியை வாங்கிக் கொண்டு ஐம்பது பொற்காசுகளைக் கொடுத்து வியாபாரியை அனுப்பி விட்டான்.

அந்த விசிறி வாங்கிய மூன்றாவது நாளே அதன் காம்பு தனியாக வந்து விட்டது. அதன் ஓலைகள் அடுத்தடுத்து விழலாயின. விசிறி வியாபாரி ஏமாற்றி விட்டான். அவன் எங்கே ஒரு மாதம் கழித்து வரப் போகிறான் என எண்ணிக் கோபமும் ஆத்திரமும் கொண்டான்.

ஆனால் அவன் நினைத்தது போல அல்லாமல் ஒரு மாதம் கழித்து விசிறி வியாபாரி வந்து மன்னனைப் பார்த்தான். மன்னனும் “ஓட்டை விசிறியைக் கொடுத்து ஏமாற்றி விட்டாயே? நீயே பார்” எனக் கூறி விசிறிக் காம்பையும் உதிர்ந்த ஓலைகளையும் காட்டினான்.

விசிறி வியாபாரியும் “குறை விசிறியில் இல்லை. உங்களிடம் தான். நீங்கள் இதை உபயோகிக்க வேண்டிய விதத்தில் உபயோகிக்க வில்லை” என்றான். மன்னனும் “என்ன உளறுகிறாய்? எனக்கா விசிறி வீசிக் கொள்ளத் தெரியாது?” என்று கோபத்தோடு கேட்டான். விசிறி வியாபாரியும் “இல்லை அரசே. இது அற்புத விசிறி. அதனால் எல்லா விசிறிகளைக் கையில் பிடித்து ஆட்டுவது போல அல்லாமல் இதனை நீங்கள் கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இதன் முன் உங்கள் தலையை ஆட்ட வேண்டும்” என்றான்.

அதைக்கேட்ட மன்னனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவனும் “பேஷ் சாமர்த்தியமாகப் பேசுகிறாயே. இன்று முதல் நீ என் விசிறிகளின் பராமரிப்பு அதிகாரி” என அவனுக்குப் பதவியை அளித்தான்!

ஜூன் 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *