தருமரும் நடுவுநிலைமையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,682 
 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பஞ்சபாண்டவர்களில் முதல்வராகிய தருமர் எந்தச் சமயத்திலும் நடுவு நிலைமையினின்றும் தவறாத உயர்ந்த கொள்கையை மேற்கொண்டிருந்தார். பாண்ட வர்கள் காட்டிலே தங்கியிருந்தபோது, புருட மிருகம் என்னும் ஒரு விலங்கிற்கும் வீமனுக்கும் ஒரு போட்டிப் பந்தயம் ஏற்பட்டது. இருவரும் ஓரிடத்தில் நின்று மற்றோர் இடத்திற்கு ஓடுவதென்றும் அவ்வாறு ஓடுவதில் வீமன் புருட மிருகத்தின் மார்பைத் தொட்டு விட்டு ஓடுவதென்றும், குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குள் புருடமிருகம் வீமனைப் பிடித்துவிட்டால் வீமன் புருடமிருகத்திற்கு இரையாக வேண்டும் என்றும், அவ்வாறு பிடிக்காவிட்டால், புருடமிருகம் வீமனுக்கு அடிமையாவதென்றும் முடிவாயிற்று.

வீமன் புருடமிருகத்தின் மார்பைத் தொட்டுவிட்டு விரைவாக ஓடினான். புருடமிருகம் அவனைத் துரத்திக் கொண்டு ஓடியது. ‘வீமன் குறிப்பிட்ட எல்லையை நெருங்கிவிட்டான். எல்லையின் இந்தப் பக்கத்தில் ஒருகாலும் அந்தப் பக்கத்தில் ஒரு காலுமாக இருக் கும்போது புருடமிருகம் வீமனைப் பிடித்துவிட்டது. வீமன், ‘நான் வென்றேன்’ என்றான். புருட மிருகமோ ‘நான் தான் வென்றேன்’ என்றது. வழக்கு எளிதில் முடிவு பெறவில்லை. நீண்டநேரம் சொற்போர் நடந்தது. இறுதியில் இருவரும் தருமரிடஞ் சென்று வெற்றி தோல்வியைக் கேட்பது என்று முடிவு செய் தனர். தருமரிடஞ் சென்று நிகழ்ந்ததைக் கூறினர். “யார் வென்றது? யார் தோற்றது?” என்று அவர்கள் கேட்டனர்.

நடுவுநிலைமையிற் பிறழாத தருமர் வழக்கை நன்கு உசாவினார், “பிடிப்பட்ட காலையும் உடற் பகுதியையும் புருடமிருகத்திற்குக் கொடுத்துவிடவேண்டும்,” என்று முடிவு கூறினார். வீமன் தன்னுடைய தம்பியாகவிருந்தும் தருமர் நடுவுநிலைமையிற் சிறிதும் பிறழவில்லை. புருடமிருகம் தருமருடைய முடிவைக் கேட்டு மகிழ்ந்தது. வீமனுக்கு எத்தகைய துன்பமுஞ் செய்யாமற் சென்றது. அது தருமருடைய நடுவு நிலையைப் பெரிதும் புகழ்ந்து கூறியது. எவராக இருப்பினும் நடுவு நிலைமையினின்றும் பெயராமல் இருந்தால், அவர்கள் மிகுந்த சிறப்பையடைவார்கள்.

“நிலையிற் பிரியேல்” (இ – ள்.) நிலையில் – நீ நிற்கின்ற உயர்ந்த நிலையிலே நன்று; பிரியேல் – ஒரு போதும் நீங்காதே.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *