தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 9,950 
 

அரசனின் தர்பார் மண்டபத்திற்கு ஓர் ஏழை ஓடிவந்தான். அரசன் அவனது வருகைக்கான காரணத்தைக் கேட்டார். அவன், “”அரசே எங்கும் களவு அதிகரித்துவிட்டது. என் வீட்டிலும் நேற்று, இருந்த பொருளெல்லாம் திருட்டுப் போய்விட்டது…” என்றான்.

அரசன் மந்திரி ஒருவரை அழைத்து, “”இவன் கூறுவது உண்மையா?” என்று வியப்போடு கேட்டார்.

தனக்கு வந்தால்

அமைச்சர் யோசித்தார். இன்னொரு இளைய அமைச்சர் குறுக்கிட்டு, “”இவன் கூறுவது பொய் அரசே… ஒவ்வொருவரின் வீட்டிலும் எலுமிச்சம் பழம் அளவு தங்கமாவது மறைத்துவைக்கப்பட்டு பத்திரமாக இருக்கும்” என்றார்.

அரசருக்குப் புரியவில்லை. வயதில் மூத்த அமைச்சரை கேள்வியோடு நோக்கினார். அவரும், “”அரசே… நாளை இதற்கு முடிவு கட்டலாம்…” என்றார். சபை கலைந்தது.

மறுநாள் சபை கூடியதும், இளைய அமைச்சர் ஓடிவந்து, “”அரசே… நாட்டில் களவு போவது உண்மைதான். நேற்று ஏழை கூறியதும் சரியே…” என்றார்.

அரசருக்கு ஒரே வியப்பு. நேற்று இந்த அமைச்சர் பேசியதற்கும் இன்று பேசுவதற்கும் முரணாக உள்ளதே… என்று எண்ணி, மூத்த அமைச்சரைக் கேட்டார். அவரும், “”களவு போவது உண்மையே! அதனைத் தடுக்க அரசே ஆவன செய்யுங்கள்…” என்றார்.

அரசருக்கு “தன் ஆட்சியில் இப்படியா?’ என்ற வருத்தம் மேலோங்கியது.
அரசர் மூத்த அமைச்சரிடம் தனிமையில் இளைய அமைச்சரின் முரண்பட்ட பேச்சுக்கான விளக்கத்தைக் கேட்டார். அதற்கு மூத்த அமைச்சர், “”அரசே… அந்த அமைச்சரின் வீட்டில் எலுமிச்சம் பழம் அளவு தங்கம் இருந்தது. அதை நான் நேற்று களவாடச் செய்துவிட்டேன். அதனால்தான் அவர் இப்படிக் கூறினார். எல்லாரும் தன்னை வைத்தே பிறரையும் எண்ணுகின்றனர். பிறர் துன்பப்படும்போதும், வருந்தும்போதும் அவர்கட்கு இரக்கப்படுவதில்லை. தனக்கு நேரும்போது அந்த வேதனை தெரிகிறது. பிறரையும் சேர்த்துக் கொள்கிறார்கள்…” என்றார்.

அரசர், அமைச்சரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார்.

– அ.கருப்பையா, புதுக்கோட்டை. (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *