சோழவந்தான் என்ற ஊரில் ஒரு பால்காரர் இருந்தார். பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையாக வியாபாரம் செய்து வந்தார்.
வயது ஆக ஆக அவரால் அக்கரைக்குச் சென்று தனது பால் வியாபாரத்தைத் தொடர முடியவில்லை. எனவே தனது ஒரே மகன் கோபாலிடம் அந்த வேலையை ஒப்படைத்தார்.
மகனும் பால் கறந்து, அக்கரையில் உள்ளவர்களுக்குப் பால் வியாபாரம் செய்து வந்தான்.
ஆனால் பாலில் சரிக்கு சரியாக தண்ணீர் ஊற்றி வியாபாரம் செய்து வந்தான்.
இது அவனது தந்தைக்குத் தெரிய வந்தது. அவர் அதுவரை மிகவும் நேர்மையாக வியாபாரம் செய்து வந்தவராதலால் அவருக்கு இது மிகவும் வேதனையைக் கொடுத்தது.
தனது மகனைக் கூப்பிட்டு, “வேண்டாம் மகனே! பாலில் தண்ணீர் கலக்காதே… நேர்மையாக வியாபாரம் செய். நம்மை நம்பி நம்மிடம் பால் வாங்குபவர்களுக்கு நாம் ஒருபோதும் துரோகம் செய்யக் கூடாது! நேர்மையாகப் பணம் சம்பாதித்தால்தான் நம் பணம் நம்முடன் இருக்கும்!’ என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார்.
அவர் மகன் அதையெல்லாம் கேட்பதாக இல்லை!
இப்படிப் பலமுறை சொல்லிப் பார்த்தார்.
அவருடைய மகனோ, “போங்கப்பா, உங்களுக்கு வியாபார நுணுக்கங்கள் தெரியாது. வைக்கோல், தவிடு, சீமைப்புல், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை எல்லாம் என்ன விலை விக்குது? இந்த விலையில் வாங்கி மாடுகளைப் பேணிக் காப்பதற்கு நமக்கு எவ்வளவு செலவாகிறது? இந்த நிலையில் பாலில் தண்ணீர் கலக்காமல் விற்பதெல்லாம் நடக்காத காரியம்!’ என்று கூறி அவரை அடக்கி விட்டான்.
இதையெல்லாம் கேட்ட அவனது தந்தை மிகவும் வருத்தமுற்றார்.
கோபால் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பதற்காக அக்கரைக்குச் சென்று வருவது வழக்கம். ஆற்றைக் கடந்து போய், வாடிக்கையாளர்களின் வீடு வீடாகச் சென்று பணத்தை வாங்கிக் கொண்டு மாலையில் வீடு திரும்புவான். இது மிகவும் களைப்பைத் தரும் வேலையாக இருந்தது அவனுக்கு!
இப்படி ஒரு முறை பணம் வசூலித்துவிட்டு, மிகவும் களைப்படைந்தவனாக வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.
வழியில் ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
அப்போது ஆற்றின் கரையோரம் இருந்த ஆலமரம் ஒன்றின் கீழே உட்கார்ந்தான். கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு ஆற்றைக் கடக்க முடிவு செய்தான்.
அந்த ஆலமரத்தின் மேல் குரங்கு ஒன்று வசித்து வந்தது. கோபால் அந்தக் குரங்கைக் கவனிக்கவில்லை.
மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, தான் கொண்டு வந்திருந்த பணமூட்டையைப் பிரித்தான். வசூலான பணம் முழுவதையும் கீழே பரப்பி வைத்துக் கொண்டு எண்ண ஆரம்பித்தான். எண்ணிக் கொண்டே வந்தவன், அதுவரை எண்ணிய பணத்தைத் தனது சட்டைப் பையில் போட்டுக் கொண்டு மீதியிருந்த பணத்தை எண்ணத் தொடங்கினான்.
அப்போது, அவனுக்குத் தெரிந்த ஒருவர் அந்த வழியே வந்தார்.
அவனிடம், “என்ன கோபால்? இவ்வளவு தூரம்?’ என்று பேச ஆரம்பித்தார். கோபாலும் அவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். இருவரும் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்தச் சமயத்தில் மரத்தின் மேலிருந்த குரங்கு மெதுவாகக் கீழே இறங்கி வந்தது.
தரையில் துணியில் பரவியிருந்த பணத்தை உற்றுக் கவனித்தது. ஏதோ வித்தியாசமான பொருளாக இருக்கின்றதே என்ற ஆர்வத்தில், அத்தனை பணத்தையும் துணியோடு சேர்த்து சுருட்டிக் கொண்டு, மூட்டையைத் தனது தோளில் போட்டுக் கொண்டு தாவிப்போய் மரத்தின் மீது ஏறியது. கண் இமைக்கும் நேரத்தில் மரத்தின் உச்சிக்கும் சென்றுவிட்டது!
பேச்சிலிருந்து கவனம் திசை திரும்பியதோடு பணத்தைக் காணாத கோபால் அதிர்ந்து போனான்.
குரங்கு ஒன்று பணமூட்டையுடன் மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டான்.
அய்யய்யோ, மோசம் போய்விட்டோமே! என்ற எண்ணத்தில் வந்தவரை விட்டுவிட்டு மரத்தின் மீது ஏறத் தொடங்கினான்.
கோபால் மரத்தின் மீதேறி மேலே வருவதைக் கவனித்த குரங்கு, மரத்திலிருந்த நீண்ட கிளையின் நுனிப் பகுதிக்குச் சென்றது.
அக்கிளைக்கு நேர் கீழே ஆறு ஓடிக் கொண்டிருந்தது!
கோபால் தன்னை நெருங்குவதைக் கவனித்த குரங்கு பயந்துபோய் பணமூட்டையை அப்படியே ஆற்றில் வீசியது!
ஆற்றில் நீர் அதிகம் இருந்ததால், பணமூட்டை நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதைக் கவனித்த கோபால் மரத்தைவிட்டு இறங்கினான்.
கீழே இறங்கி ஆற்றைக் கவனித்தான். அதற்குள் பணமூட்டை ஆற்றில் வெகுதூரம் சென்றுவிட்டது.
அவனது கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த மூட்டையைப் பார்க்க முடியாமல் போய்விட்டது!
இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது.
பணத்தைக் கோட்டைவிட்ட துக்கத்தோடு கோபால் தனது வீட்டுக்குத் திரும்பினான்.
வாடிய முகத்தோடு வீடு திரும்பிய கோபாலைப் பார்த்து அவனது தந்தை அதிர்ந்து போனார்.
“என்னப்பா? முகமெல்லாம் வாடிப் போயிருக்கிறது… என்ன நடந்தது? சொல்..’ என்று கவலையுடன் விசாரித்தார்.
நடந்ததை வருத்தத்தோடு தந்தையிடம் கூறினான். மேலும் சட்டைப்பையில் வைத்திருந்ததால் பாதிப் பணம் மட்டுமே மிஞ்சியதாகவும் தந்தையிடம் கூறினான்.
இதைக் கேட்ட தந்தை, “சரி விடுப்பா… தண்ணிக்காசு தண்ணியோடு போச்சு! பால் காசு மட்டும் நமக்கு மிஞ்சியிருக்கிறது!’ என்று கூறி அவனைத் தேற்ற முயற்சித்தார்.
கோபாலுக்குத் தனது தந்தை கூறியதன் அர்த்தம் புரிந்தது! அவனது மனம் மாறியது!
“அப்பா, இனி ஒருபோதும் பாலில் தண்ணீர் சேர்த்து வியாபாரம் செய்ய மாட்டேன்! உங்கள் சொற்படி கேட்காமல் நடந்ததற்கான பலனை அனுபவித்து விட்டேன்…’ என்று உறுதியோடு கூறினான்.
ஒரு குரங்கின் மூலம் தனது மகனுக்குப் பாடம் புகட்டிய இறைவனுக்கு நன்றி கூறினார் கோபாலின் தந்தை!
– எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன் (பெப்ரவரி 2012)