(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குற்றமற்ற ஒரு மனிதன் மீது ஊர்காவலாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். குற்றம் சாட்டப் பெற்ற மனிதனுடைய பெயர் ஆண்டியப்பன். ஆண்டியப்பனை நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தி உசாவினார்கள். ஆண்டியப்பன் மிகவும் அஞ்சிய இயல்புடையவன். நான்கு பேர் கூடிய இடத்தில் ஏதேனும் பேச வேண்டியதாக நேரிட்டால், மனம் போனபடி உளறி விடுவான்.
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஆண்டியப்பன் நீதிமன்றத் தலைவரையும், ஊர்காவலாளர்களையும் கண்டு அஞ்சினான். போதாக்குறைக்கு ஊர்காவலாளர்கள் ஆண்டியப்பனை விறைப்பாகப் பார்த்தார்கள்.
சோம்பலால் நேர்ந்த துன்பம் ஆண்டியப்பனால் தன்னுடைய குற்றமற்ற தன்மையை விளக்கமாக எடுத்துக்கூற முடியவில்லை. முன்னுக்குப்பின் முரணாகவும் வழவழப்பாகவும் பேசினான். அதனால் நீதிமன்றத் தலைவர் ஆண்டியப்பன் குற்றவாளிதான் போலும் என்று எண்ணித் தண்டனை விதித்துவிட்டார்.
ஆண்டியப்பன் குற்றமற்றவனாக இருந்தும் சொற் சோர்வுபடுமாறு பேசியபடியால், தண்டனையடையுமாறு நேரிட்டது. ஆகையால் ஒவ்வொருவரும் எந்தச் சமயத்திலும் அஞ்சாமையோடு அழுத்தந் திருத்தமாகப் பேசவேண்டியது கட்டாயமாகும்.
“சொற்சோர்வு படேல்” (இ-ள்.) சொல் – நீ பேசுஞ்சொற்களில்; சோர்வு படேல் – தளர்ச்சியுண்டாகும்படியாகப் பேசாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,