தங்களால் தாங்களே கெட்டோர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 50 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன் காலத்தில் ஒரு சாமியார் இருந்தான். அவன் பெயர் தேவசன்மா என்பது. அவன் பிச்சை யெடுத்துப் பிழைத்து வந்தான். பிச்சை யெடுத்துச் சேர்த்த காசை யெல்லாம் அவன் ஒரு கந்தையில் முடிந்து வைத்திருந்தான். அவன் பணம் சேர்த்து வைத்திருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை எப்படியோ ஆஷாடபூதி என்ற பார்ப்பனன் தெரிந்து கொண்டு விட்டான். ஆஷாடபூதி ஒரு திருடன். திருடிப் பிழைப்பதே அவன் தொழில். சாமியாருடைய கந்தையைத் திருடி எடுத்துக் கொண்டு விட்டால், பிறகு நாள்தோறும் திருட வேண்டியதில்லை. அந்தப் பணத்தைக் கொண்டு பல நாள் இன்ப வாழ்வு நடத்த முடியும் என்று ஆஷாடபூதி நினைத்தான். இதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். 

ஆஷாடபூதி சாமியாரிடம் வந்து, அவன் காலில் விழுந்து வணங்கினான். தனக்குத் திருமணமாக வில்லை என்றும், தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டு, நல்ல வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினான். தேவசன்மாவும் அவனைத் தன் சீட னாக ஏற்றுக் கொண்டான். ஆஷாடபூதியும் மிகவும் நல்லவன் போல் சாமியாருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான். 

இப்படி யிருந்து வரும் நாளில் ஒரு நாள், ஓர் அந்தணன் இவர்களுக்கு விருந்து வைத்தான். விருந் துண்டுவிட்டுப் புறப்பட்ட அவர்கள் நெடுந்தூரம் சென்ற பிறகு, ஆஷாடபூதி தன் தலையில் கிடந்த ஒரு துரும்பைக் காட்டி, ‘சுவாமி, நமக்குச் சோறு போட்ட அந்தணன் வீட்டிலிருந்து இந்தத் துரும்பு என்னையும் அறியாமல் ஒட்டிக் கொண்டு வந்து விட்டது. உணவளித்தவன் வீட்டுப் பொருளை ஒரு துரும்பானாலும் எடுத்து வரலாமா? இதோ நான் ஓடிப்போய் இதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்’ என்று ஓடினான். சிறிது தூரம் சென்று ஒரு மறைவான இடத்தில் நெடு நேரம் உட்கார்ந் திருந்துவிட்டு அவன் திரும்பி வந்தான். 

இந் நிகழ்ச்சிக்குப் பிறகு, தேவசன்மாவுக்கு தன் சீடன் மேல் நம்பிக்கை அதிகமாகியது. 

ஒரு நாள் சாமியாரும் சீடனும் ஒரு குள க் கரையை அடைந்தார்கள். குளத்தில் இறங்கிக் கால் கை கழுவிக் கொண்டு வருவதற்காக சாமியார் போகும் போது, கரையில் இருந்த ஆஷாடபூதியிடம் என்றும் விட்டுப் பிரியாத தன் கந்தை முடிப்பைக் கொடுத்து. வைத்திருக்கும்படி கூறிவிட்டுப் போ னான். 

சாமியார் கை கால் கழுவிக் கொண்டு திரும்பும் போது, குளத்தின் கரையில் மற்றொரு பக்கத்தில், இரண்டு ஆட்டுக் கடாக்கள் முட்டி மோதிச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நரி அவற்றின் தலை யிலிருந்து வழிந்து தரையில் கிடக்கும் இரத்தத்தைக் குடிப்பதற்காக அங்கு வந்தது. இரண்டு கடாக் களுக்கு இடையில் புகுந்து இரத்தம் குடிக்கத் தொடங்கிய நரி அவற்றின் இடையில் சிக்கி முட்டுப்பட்டு மோதுண்டு உயிரை இழந்தது. இந்த வேடிக் கையைப் பார்த்துக் கொண்டே சாமியார் தேவசன்மா தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான். 

இந்த வேளை போனால் இன்னொரு வேளை வாய்க்காது என்று எண்ணிய ஆஷாடபூதி அப் போதே, சபியாரின் கந்தை முடிப்பை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். காட்டுக்குள் எங்கோ சென்று மறைந்து விட்டான். திரும்பி வந்த சாமியார் தன் சீடனைக் காணாமல் மனம் வருந்தினான். அவனைத் தேடிக் கொண்டு ஊர் ஊராக அலைந்தான். 

அலைந்ததுதான் மிச்சம். கடைசிவரை அவன் ஆஷாடபூதியைக் கண்டு பிடிக்கவில்லை. 

அறிவின்மையால் தேவசன்மா தன் கைப் பொருளை இழந்தான். யோசனையில்லாமல் ஆட்டுக்கடாப் போரில் நடுவில் சென்று மாட்டிக் கொண்டு நரி உயிரிழந்தது. 

இதுதான் தங்களுக்குத் தாங்களே கேடு செய்து கொண்ட கதை. 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி-1 – நட்புப் பிரித்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *