தகுதிக்குத் தகுந்த வேலை !

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 12,631 
 

மந்தாரபுரி என்ற ராஜ்ஜியத்தில் சற்குரு என்ற பண்டிதர் இருந்தார். அறிவில் சிறந்த மேதையாகக் கருதப்பட்ட அவரது குருகுலத்தில், பல மாணவர்கள் பயின்று வந்தனர். அந்த நாட்டு மன்னரும் அவரிடம் மிகவும் மதிப்பு வைத்து, அவரைத் தன் ராஜகுருவாகக் கருதி வந்தான். தன்னிடம் பயிலும் மாணவர்களின் படிப்பு முடிந்ததும், அவர்களது தகுதியைப் பொறுத்து அவர்களுக்குத் தகுந்த வேலைகளை அவர் சிபாரிசு செய்வதுண்டு.

Thaguthikkuமிகச் சிறப்பாகப் பயிலும் மாணவர்களை, அவர் தன்னுடைய சிபாரிசுடன் மன்னரிடம் அனுப்புவதுண்டு. அந்த மாணவர்களுக்கு மன்னரிடமே பொறுப்புள்ள நல்ல வேலைகள் கிடைத்துவிடும். ஒருமுறை, இவ்வாறு நன்றாகப் பயின்ற ஐந்து மாணவர்களைத் தேர்வு செய்து மன்னரிடம் அனுப்பினார் ராஜகுரு. அப்போது அந்த மாணவர்களில் நால்வரிடம் முறையே, மரத்தாலான செருப்பு, கைப்பிரம்பு, சல்லடை, துடைப்பம் கொடுத்து அனுப்பினார். ஐந்தாவது மாணவனை, மழுங்க மொட்டை அடித்து அனுப்பினார்.

அந்த ஐவரும் மன்னரது சபையை அடைந்தனர். மன்னர் அப்போது பக்கத்து நாட்டு அரசரின் அழைப்பின் பேரில் சென்றிருந்ததால், நிர்வாகப் பொறுப்பு இளவரசனிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அரியணையில் அமர்ந்திருந்த இளவரசனுக்கு வணக்கம் தெரிவித்தபின், தங்களை ராஜகுரு, மன்னரிடம் பணிபுரிய அனுப்பியுள்ளதாகக் கூறினர். ராஜகுரு மிகச் சிறப்பான மாணவர்களை மட்டுமே அனுப்புவார் என்று அறிந்திருந்த இளவரசனுக்கு, அவர்கள் கொண்டு வந்த பொருட்களைக் கண்டு குழப்பம் உண்டாகியது. அவர்களில் ஒவ்வொருவரும், எத்தகைய அரசுப் பணிக்குத் தகுதியானவர்கள் என்பதை உணர்த்தும் சங்கேதக் குறிப்புகளே அவர்களுடன் இருந்த பொருட்கள் என்று ஊகித்தாலும், அதை முழுமையாக இளவரசனால் அறிய இயலவில்லை. ஆகவே, அந்தப் பொறுப்பைத் தன் முதல் மந்திரியிடம் ஒப்படைத்தான் இளவரசன்.

முதல் மந்திரியும் அவர்களைத் தனித்தனியே பல கேள்விகள் கேட்டு, அவர்களுடைய தகுதிகளை ஒருவாறு அறிந்து கொண்டார். பின்பு அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் சங்கேதக் குறிப்பின்படி, மரத்திலான செருப்புகள் கொண்டு வந்தவனை, அரண்மனைப் பொருளாளர் பதவியில் அமர்த்தினார்.
பிரம்பு கொண்டு வந்தவனை கல்வித்துறை அதிகாரி ஆக்கினார். சல்லடை கொண்டு வந்தவனை காவல்துறை அதிகாரியாக நியமித்தனர். துடப்பம் கொண்டு வந்தவனை சேனாதிபதி ஆக்கினார். தலையை மொட்டை அடித்துக் கொண்டு வந்தவனை துணை மந்திரி ஆக்கினார்.

முதல் மந்திரியிடமிருந்து அவர்களது நியமனங்களைக் கேட்டறிந்த இளவரசனுக்கு, அவர் எந்த அடிப்படையில் இவ்வாறு தேர்வு செய்தார் என்பது விளங்கவில்லை. ஆகவே, அவன் அதைப்பற்றி விளக்கம் கேட்டான்.
முதல் மந்திரியும் புன்னகை புரிந்துகொண்டே, “”இளவரசே கேளுங்கள்! மரச் செருப்புகள் நமது பாரத்தை சுமந்து நம்மை வழி நடத்துகின்றன. அதைக்கொண்டு வருபவன் மிகப் பொறுப்புள்ள வேலையைத் திறம்படச் செய்து நாட்டை வழி நடத்தக் கூடியவன் என்று பொருள். ஆகவே, அவனைப் பொருளாளர் ஆக்கினேன்.
“”பிரம்பு பொதுவாக ஆசிரியர்கள் கையில் காணப்படுவது. ஆகவே, பிரம்பு கொண்டு வந்தவனைக் கல்வித்துறை அதிகாரி ஆக்கினேன். மூன்றாமவன் கொண்டு வந்தது சல்லடை. சல்லடை, பயனுள்ள நல்ல பொருட்களை அனுமதித்து, பயனற்ற பொருட்களைப் பிரித்து எடுக்கிறது. நல்லவர்களுக்கு மதிப்பு அளிப்பதும் அவர்களைக் காப்பதும் தீயவர்களைக் கண்டு பிடிப்பதும், அவர்களை தண்டிப்பதும் ஒரு காவல்துறை அதிகாரியின் பணியாகும்.
“”ஆகவே, சல்லடை கொண்டு வந்தவனை காவல் துறையில் அமர்த்தினேன். அடுத்தது, நமது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் தூசி, குப்பை ஆகியவற்றை அப்புறப்படுத்துவது துடப்பத்தின் வேலை. நமது ராஜ்ஜியத்துக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் எதிரிகளை போர் செய்து வெளியேற்றுவதையே துடைப்பம் குறிக்கிறது. ஆகவே, துடைப்பம் கொண்டு வந்தவனை படைத் தலைவன் ஆக்கினேன்!” என்றார்.

“”அமைச்சரே! இதுவரை நீங்கள் கூறியது சரி. ஆனால், கடைசியாக மொட்டை அடித்துக் கொண்டு வந்த மாணவனை ஏன் துணை அமைச்சர் ஆக்கினீர்கள்?” என்று இளவரசன் கேட்டான்.

“”எனக்கும் முதலில் அது புரியவில்லை. வெகுவாக யோசித்த பின்னரே புரிந்தது. மனிதனுடைய தலைமுடியின் கீழே என்ன உள்ளது? அவனுடைய மூளை. அந்த மாணவனுக்கு மூளையின் திறன் அதிகம் என்று உணர்த்தவே அவன் முடியைக் களைந்து அனுப்பினார் என்று புரிந்தது. ஆகவே, அவனை துணை அமைச்சர் ஆக்கினேன்,” என்றார் முதல் மந்திரி.

முதல் மந்திரியின் விளக்கங்களைக் கேட்டபின், இளவரசனுடைய சந்தேகம் முற்றிலும் தீர்ந்தது. அவருடைய புத்தி கூர்மையை இளவரசன் மனமாரப் பாராட்டினான்.

– செப்டம்பர் 17,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *