டிங்கு குட்டியும் பிங்கு வாத்தியாரும்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 16,442 
 
 

சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன.

சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன.
அங்கு, பிங்கு என்ற மனிதக்குரங்குதான் தமிழ் கற்றுக் கொடுத்தது.

அவர் பாடம் நடத்தும் முன்பு திருக்குறள் கதைகளைக் கூறுவார். எல்லா மாணவர்களும் ஆர்வத்துடன் கதைகளைக் கேட்பார்கள். இதற்கு டிங்கு யானைக்குட்டி மட்டும் விதிவிலக்காக இருந்தது.

ஏனென்றால், டிங்கு குட்டி கால்பந்து விளையாடுவதில் கெட்டிக்காரன். அவன்தான் பள்ளிக்கூடத்தில் சாம்பியன். அந்த இறுமாப்பு அவனுக்கு இருந்தது. படிப்பில் கெட்டிக்காரன்தான். இருந்தாலும் பெரியவர்களையும், ஆசிரியர்களையும் மதிப்பதில்லை. தமிழ் வாத்தியார் கதை கூறும்பொழுது சரியாகக் கவனிக்காமல் அடக்கமில்லாமல் இருப்பான். அவனது எண்ணமெல்லாம் கால்பந்து விளையாடுவதிலேயே இருக்கும்.

ஒருமுறை விடுமுறை நாளில், எல்லா விலங்குகளும் சேர்ந்து மலைப்பகுதிக்குக் கால்பந்து விளையாடச் சென்றன. டிங்கு குட்டியின் தாய், “அங்கெல்லாம் சென்று விளையாடாதீர்கள். கிரவுண்டில் விளையாடுங்கள்’ என்று கூறியதையும் கேட்காமல் டிங்கு குட்டி எல்லோரையும் அழைத்துச் சென்றது.

டிங்கு குட்டி, ஒட்டகச்சிவிங்கி, கரடி, மான், நரி, முயல் என ஒரு பட்டாளமே சென்றது.

ஒட்டகச்சிவிங்கி தூக்கிப்போட்ட பந்தை டிங்கு குட்டி காலால் உதைத்தது. அந்தப் பந்து மலையின் கீழ்ப்பகுதியிலிருந்த பள்ளத்தில் விழுந்தது.

உடனே டிங்கு பந்தை எடுப்பதற்கு வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தது. எல்லா விலங்குகளும் கத்தின}

“டிங்கு! அங்கே போகாதே! பெரிய பள்ளம் இருக்கு. பந்து போனால் போகுது. நீ இறங்காதே’ என்று. எல்லா நண்பர்களும் கத்துவது டிங்குவிற்குக் கேட்டது.
சின்ன முயலும், “டிங்கு அண்ணா! நீங்கள் இறங்காதீர்கள். நான் போய் எடுத்து வருகிறேன்’ என்று கூறியதையும் கேட்காமல் பந்தை எடுக்க முயற்சித்தது டிங்கு.

அப்போது அந்தப் பகுதியில் வளர்ந்திருந்த மரக்கிளை ஒன்று டிங்குவின் கண்ணருகே பதம் பார்த்தது.

‘ஆ! அம்மா’ என்ற அலறலுடன் டிங்கு மயங்கி விழுந்தது.

மற்ற நண்பர்கள் டிங்குவின் பெற்றோருடன் வந்து டிங்குவைத் தூக்கி வந்தன.

முயல் பள்ளத்தில் விழுந்த பந்தை எளிதாகக் குதித்துப் போய் எடுத்து வந்தது.

“நல்லவேளை! கிளை கண்ணில் குத்தியிருந்தால் கண்ணே போயிருக்கும்’ என்று டிங்குவின் பெற்றோர்கள் கவலைப்பட்டனர்.

டிங்கு பள்ளிக்கு வராததன் காரணத்தை, பிங்கு வாத்தியார், டிங்குவின் நண்பர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

காயம் சிறிது ஆறினபின் டிங்கு பள்ளிக்கூடத்திற்குச் சென்றது. வலி இருந்ததால் அமைதியாக உட்கார்ந்திருந்தது. வழக்கம்போல் பிங்கு தமிழ் வாத்தியார் பாடம் நடத்த ஆரம்பித்தார். அன்றைய தலைப்புக்குண்டான திருக்குறளை போர்டில் எழுதினார்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

பின் கதையைத் தொடங்கினார்.

“”ஒருவன் உயர்வு பெற வேண்டுமாயின் அடக்கமாக இருக்க வேண்டும். அடக்கமாக உள்ளவன் வாழ்வு பெறுவான்.

நதிகள் அனைத்தும் கடலில்போய் கலக்கும். அதனால் கடலுக்குப் புணரி என்ற ஒரு பெயருண்டு.

கங்கை, யமுனை, காவேரி, கோதாவரி என்ற மகாநதிகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கடலுடன் கலக்கும்போது, நதிகளின் கரைகளில் உள்ள வானளாவிய மரங்களை வேருடன் சாய்த்துக் கடலில் சேர்க்கும்.

சமுத்திர ராஜா தனக்குள் சிந்தித்தார் – இந்த நதிகள் தன் கரைகளில் உள்ள மரங்களுக்கு அலைகளாகிய கரங்களால் நீர் வார்த்து, குழந்தைகளைப் போலவே வளர்க்கின்றன. அப்படி வளர்த்த மரங்களை இப்படி வேரோடு பெயர்த்தெடுத்து நம்மிடம் சேர்க்கின்றன. ஆனால் நதிக்கரைகளில் உள்ள நாணல் புற்களும் தர்ப்பைப்புற்களும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வருவதில்லையே? இதற்கு என்ன காரணம்?

ஒருநாள் நதிகளுக்கெல்லாம் தாய் போலவும் அரசி போலவும் விளங்குகின்ற கங்கை நதியைப் பார்த்துக் கடலரசனான சமுத்திர
ராஜன் கேட்கலானான்:

“ஏ! கங்கா நதியே! நீ புனிதமான நதி… மனித குலத்தை வாழச் செய்கின்றாய். உன்னால் பயிர்களும், உயிர்களும் தழைக்கின்றன. உனது பெருமையை அளவிட முடியாது.

நீயும், உன் இனமான நதிகளும் உங்கள் கரைகளில் உள்ள மரங்களை உங்கள் அலைக்கரங்களால் நீர் வார்த்து வளர்க்கின்றீர்கள். இப்படிப் பல காலம் வளர்த்த குழந்தைகளான மரங்களை வெள்ளத்தில் அடியுடன் பெயர்த்துக்கொண்டு வந்து என்னிடம் சேர்க்கின்றீர்கள். ஆனால், உங்கள் அருகில் உள்ள நாணற் புற்களையும், தர்ப்பைப் புற்களையும் வெள்ளத்தில் கொண்டு வருவதில்லையே. இதற்குக் காரணம் யாது?’ என்று வினவினான்.
கங்காமாதா கூறினாள், “கடல் அரசனே! இதன் காரணம் உனக்கு விளங்கவில்லையா?

விளங்குமாறு சொல்கின்றேன் கேள். எங்கள் கரையில் உள்ள விருட்சங்களை நாங்கள்தான் தண்ணீர் பெய்து வளர்க்கின்றோம். நாங்கள் ஓடி வருகின்றபோது அம்மரங்கள் எங்களைக் கண்டு வணங்க வேண்டாமோ? வணக்கம்தானே உயர்வுக்குக் காரணம். ஏற்றம், கிணற்றில் உள்ள நீரை வணங்கியே முகர்கின்றது. நாங்கள் வெள்ளமாக வருகின்றபொழுது நாணற் புற்களும், தர்ப்பைப் புற்களும் எங்களைக் கண்டு
“அம்மா’ என்று வணங்கி எங்கள் மடியில் தவழ்கின்றன.

அவ்வாறு வணங்கிய அவைகளை நாங்கள் வாழ வைக்கின்றோம். எங்களைக் கண்டு கர்வத்துடன் நிமிர்ந்து நிற்கின்ற மரங்களை வேருடன் கிளப்பிக்கொண்டு வருகிறோம். வணங்கியவன் வாழ்வான்! நிமிர்ந்தவன் அழிவான்!’ என்று அழகாகக் கூறினாள்.

குழந்தைகளே! வணக்கமும், அடக்கமும் ஒருவனுக்கு வாழ்வு தரும். எனவே பெரியோர்களையும், பெற்றோர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லிக் கதையை முடித்தார் பிங்கு வாத்தியார்.
பின் தொடர்ந்து பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

வலியினால் அமைதியாக உட்கார்ந்திருந்த டிங்கு குட்டிக்கு தனக்காகவே ஆசிரியர் அந்தக் கதையைக் கூறியதுபோல இருந்தது.

அன்று இவ்வளவு பெரிய உடலை வைத்துக்கொண்டு யார் பேச்சையும் கேட்காமல் பள்ளத்தில் இறங்கினோமே! அம்மா கூறியதையும் கேட்காமல் சென்றோமே! கண் போயிருந்தால் என்னவாகியிருக்கும்! சின்ன முயல் கூறியதையும் கேட்காமல் இறங்கினோமே! கடவுள்தான் காப்பாற்றினார் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டது.

இப்போது டிங்கு குட்டி எல்லோரிடமும் பணிவாக இருக்கக் கற்றுக் கொண்டது. அதற்குக் காரணம் பிங்கு வாத்தியார் கூறிய கதைதான்.

– நவம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *