ஜேம்ஸ் பாண்ட் சங்கர்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 2,317 
 
 

அத்தியாயம் 6 -10 | அத்தியாயம் 11 -16

11. பெட்டிக்குள் என்ன? 

ஆஸ்பத்திரியிலிருந்து வருகிற வழியிலேயே சங்கர் வண்டியை ஹாஸ்டல் வாச லில் நிறுத்தச் சொன்னான். பட்டாமணியம் குணமடை ந்து வீடு திரும்பச் சில வாரங்கள் ஆகும்; அவர் வரும் வரையில் சங்கருடைய இருப்பிடம் பட்டாமணியத்தின் வீடுதானே? ஆகவே தன் அறையிலுள்ள துணி மணிகளையெல்லாம் எடுத்துக் கொண்டான். மானேஜரிடமும் விவரத்தைக் கூறி விட்டு வண்டியில் வந்து ஏறிக் கொண்டான்.

வண்டி, பட்டாமணியம் வீட்டு வாசலுக்கு வந்ததும் சங்கரும் இறங்கிக் கொண் டார்கள். பொன்னுசாமி, அவர்களுக்குத் தைரியம் கூறிவிட்டுப் போனார். 

இப்போது-பட்டாமணியத்தின் அத்தனை பெரிய வீட்டில் சங்கர், வசந்தி, சமையல்காரக் கிழவி ஆகிய மூன்று பேர்தான். அதுவரையில் அவர் களுக்குத் துணையாக இருந்த முனியனும் இப்போது இல்லை. ஆஸ்பத்திரியில் எஜமானருக்கு உதவி யாக இருக்க அவன் அங்கேயே தங்கிவிட்டான். 

அந்த வருஷம், சங்ககுக்கும், வசந்திக்கும் பத்தாம் வகுப்பு. இறுதிப் பரீட்சைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லை. சங்கர் வெகுநேரம் தன்னுடைய அறையில் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்தான். வசந்தியால் அவனைப் போல் அப்படித் தூக்கம் விழிக்க முடியவில்லை. அதிகம் போனால்; இரவு பத்து மணிவரை கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியாது. புஸ்தகத்தில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு தூங்கிப் போவாள். சங்கர் மாத்திரம் இரவு வெகுநேரம் வரையில் கண் விழித்துப் படிப்பான். 

பட்டாமணியத்தின் உடம்பில் வியாதி கிளை விட்டுப் படர்ந்தது. லேசாக அடிபட்ட காயங்கள் கூட ஆறுவதற்கு வெகு நாளாயிற்று. உடம்பில் சர்க்கரை வியாதி இருந்தது ஒரு காரணம். அதிக ரத்த அழுத்தம் இருந்ததற்காகவும் சிகிச்சை நடந்தது. இப்படி நாட்கள் ஓடின. 

பொன்னுசாமி மாலையில் வண்டி கட்டிக் கொண்டு ஆஸ்பத்திரியில் பட்டாமணியத்தை வந்து பார்க்கத் தவறுவதில்லை. ‘சங்கரையும் வசந்தியையும் தினசரி அழைத்துக் கொண்டு வரவேண்டாம். படிப்புக் கெட்டுப்போகும்’ என்று பட்டாமணியமே கூறிவிட்டார். 

பாவாடையும் தனக்கு ஓய்வு இருக்கும் போதெல்லாம் ஆஸ்பத்திரிக்கு வந்து பட்டாமணியத்தைப் பார்க்கத் தவறுவதில்லை. ஆனால், அவன் வருகிற நேரம் அநேகமாக அவர் அருகில் முனியனோ, பொன்னுசாமியோ இல்லாத நேரமாகத்தான்- இருக்கும். 

ஒரு நாள் தன் எஜமானரைப் பார்க்க வந்த பாவாடை கூறிய செய்தி பட்டாமணியத்தையே வியப்பிலாழ்த்தி விட்டது. உயிருக்கு ஆபத்து என்றால் யாருக்குமே பயம்தானே. அதிலும் நோய் வாய்ப்பட்டிருப்பவரிடம் மரணத்தைப் பற்றிப் பேசினால் மனம் எப்படிப் பதறாமலிருக்கும்? 

“பாவாடை, நீ சொல்றதெல்லாம் நெசமா?” என்றார் பட்டாமணியம் எல்லை மீறிய பரபரப் புடன். 

“சத்தியமுங்க, எஜமான். நாம இந்தச் சந்தையிலே வாங்கின கன்றுக்குட்டி, சந்தானமய்யா வித்தது. மூணு சந்தைக்கு முன்னே, சுழிக் கோளாறுன்னு, இந்தக் கன்றுக் குட்டியையும், மாட்டையும் வித்துப்புட்டாராம். அந்தப் பொல்லாத குட்டியைத்தான் நாம் கவனிக்காமப்போய் வாங்கி யிருக்கோம். அது நம்மை எந்தக் கதிக்கு உள்ளாக்கியிருக்கு பார்த்தீங்களா?’” 

“சந்தானம் இதைப் பத்தியெல்லாம் எங்கிட்டே ஒரு வார்த்தை கூடச் சொல்லவே இல்லையே பாவாடை?” 

“அவரு எப்படீங்க எஜமான் சொல்லுவாரு? நீங்கதான் பழைய விரோதத்தை மறுத்துப்புட்டுப் பழகறீங்க!” 

பட்டாமணியத்தின் உள்ளத்தில் பாவாடை சிறிது சிறிதாகச் சந்தானத்தைப்பற்றி விஷமேற்றி அவர் மனத்தையே கெடுத்துவிட்டான். ஆரம்பத்தி லிருந்த வெறுப்பு மறைந்து சந்தானத்துடன் இடைக் காலத்தில் பட்டாமணியம் சிநேகமாகப் பழகி வந்ததைப் பாவாடையின் இந்த விஷமப் பேட்சு முறித்து விட்டது. ‘சந்தானம் என்றும் தமக்கு எதிரியே’ என்கிற முடிவுக்குப் பட்டாமணியம் வந்து விட்டார். 

“எதற்கும் நான் குணமாகி வீடு வருகிறவரை நீ இதொன்றையும் வெளியில் காட்டிக்கொள்ள வேண்டாம்!, என்று பாவாடையிடம் கூறினாலும் பட்டாமணியத்தின் மனத்துக்கு லேசில் அமைதி. ஏற்படவில்லை. 

பொன்னுசாமியிடம் தம் உள்ளத்து ஆத்திரத்தை யெல்லாம் கொட்டி, நமக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கதிக்கு மோசக்காரச் சந்தானம் தான் காரணம் என்று ஆத்திரம் தீரக் கூறினார். ஆனால் பட்டாமணியத்தின் கூற்று பொன்னு சாமிக்கு நியாயமாகத் தோன்றவில்லை. 

“சந்தானம் அப்படியெல்லாம் ஒண்ணும் அக்கிரமமாகப் போகக்கூடியவனில்லே. அவன் எப்போவோ விற்ற கன்றுக்குட்டியைத்தான் நீ ரேக்ளாவுக்கு வாங்கியிருக்கிறே என்கிற விசயமும் அவனுக்குத் தெரிய நியாயமில்லே. தெரிஞ்சிருந்தால் கூட நிச்சயம் அவன் தடுத்திருப்பான். வியாபாரத்திலே நாமதான் உஷாராயிருக்கணுமே தவிர, ஏமாந்துட்டுப் பிறத்தியார் மேலே பழியைப் போடக்கூடாது!” என்று பொன்னுசாமி கூறி விட்டார். 

பாவாடையின் உபதேசத்தில் ஊறிப்போயி ருந்த பட்டாமணியத்துக்குப் பொன்னுசாமியின் வார்த்தைகள் காதில் ஏறவேயில்லை. ஆனாலும் சந்தானத்தைப் பற்றி அவர் அதற்குமேல் ஏதும் கூறவில்லை. 

“எது எப்படி இருந்தாலும் சரி பொன்னுசாமி, அந்தக் கன்றுக்குட்டி மூஞ்சியிலே இனிமே நான் முழிக்கமாட்டேன்! சந்தானத்தோடு பண்ணையிலே கொண்டுபோய் வேணுமானாலும் கட்டிப் புடுங்கோ, நான் திரும்பிவர்ற போது என் வீட்டிலே அது நிக்கக்கூடாது!’” என்றார் பட்டாமணியம் கண்டிப்பாக. 

பொன்னுசாமி ஒன்றும் பதில் பேசவில்லை. பட்டாமணியத்தின் அன்றையபேச்சு, ஒரு கண்ணி யமான மனிதர் பேசுகிற பேச்சாகவே அவருக்குத் தோன்றவில்லை. ‘இவர் ஏமாந்து வாங்கின வேண்டாத கன்றுக்குட்டியை, சந்தானத்தின் பண்ணையில் கொண்டுபோய் எதற்காக விடுவது? இதென்ன வீண் சண்டையை வலைக்கு வாங்குகிற வியாபார மாகவல்லவா இருக்கிறது?’ என்று எண்ணிக் கொண்டார். 

புறப்படும்போது பட்டாமணியம், பொன்னு சாமியிடம் தம்முடைய இரும்புப் பெட்டிச் சாவி யைக் கொடுத்தார். அதை வசந்தியிடம் கொடுத்துப் பெட்டியில் மேலாகவே வைத்திருக்கும் பாங்க் புஸ்தகப் பையை வாங்கி வரும்படி கூறினார். 

பட்டாமணியத்துக்கு அப்படி யொன்றும் திடீ ரென்று அவசரச் செலவு முளைத்து விடவில்லை. பாவாடை அவரிடம் ஒரு முக்கியமான காரியத்துக் காகப் பணம் கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தான். அவனுக்காகத் தான் அவர் வீட்டிலிருந்து பாஸ் புஸ்தகத்தை வரவழைக்க ஏற்பாடு செய்தார். 

முனியன் மட்டும் உள்ளுற வருந்தினான். “இந்த அயோக்கியன் பாவாடையை எஜமான் நம்பு கிறாரே, அதை முன்னிட்டு அந்தப் பாவிப்பயல் ஆஸ்பத்திரிக்கு வந்துகூட அவருக்குத் தொந்தரவு கொடுத்து, மனத்தை ஏதாவது சொல்லிக் கலைத்து விட்டுப் போகிறானே!” என்று முனியனுக்குப் பாவாடைமீது ஆத்திரம் பற்றிக் கொண்டுவந்தது. ஆனால், அவனால் என்ன செய்துவிட முடியும்? அதட்டிப் பேசினால், மறுவார்த்தை கூறாமல் கீழ்ப்படிய வேண்டிய வேலைக்காரன் தானே? 

“கடவுள்தான் எஜமானைச் காப்பாற்றவேண்டும்!” என்று எண்ணிக் கொண்டான். 

வீட்டுக்கு வந்த பொன்னுசாமியை வசந்தியும், சங்கரும் ஆவலோடு வரவேற்றார்கள். “அப்பாவுக்கு உடம்பு எப்படி மாமா இருக்கு?” என்று வசந்தி விசாரித்தாள். 

பொன்னுசாமி, பட்டாமணியம் கொடுத்த இரும்புப் பெட்டிச் சாவியை அவளிடம் கொடுத்தார். 

“பெட்டிக்குள்ளே, அப்பாவோடு பாங்க் புத்த கப்பை மேலாகவே இருக்காம். எடுத்துவை. நாளைக்கு நான் ஆஸ்பத்திரிக்குப் போகறபோது கொண்டுபோகணும்” என்றார் பொன்னுசாமி. 

அன்றிரவு வெகுநேரம் முயன்றும் வசந்தியால் அந்த இரும்புப் பெட்டியைத் திறக்க முடியவில்லை. அந்தச்சாவிக் கொத்திலே எது சரியான சாவி என்பதைக் கண்டுபிடிக்கவே அவளால் முடியவில்லை. 

“சங்கர், நீதான் இந்தப் பெட்டியைத் திறந்து அப்பாவுடைய பாஸ் புஸ்தகத்தை எடுக்கணும். என்னால் இதைத் திறக்கவே முடியல்லே….!’என்று இரும்புப்பெட்டிச் சாவியை அவன் மேஜை மீது போட்டுவிட்டுப் படிக்கச் சென்றுவிட்டாள். 

சங்கர் அந்தச் சாவியை எடுத்துக் கொண்டு இரும்புப் பெட்டியின் முன் உட்கார்ந்தான். எப்படியோ ஒன்றை மாற்றி ஒன்று போட்டுப் பார்த்ததில் பெட்டி திறந்து கொண்டு விட்டது. 

பட்டாமணியம் கூறியது போலவே, பாங்க் புஸ் தகப்பை முன்னாடியே இருந்தது. ஆனால் அந்தப் பெட்டியினுள் தெரிந்த வேலைப்பாடும்; அதன் ரகசிய அறைகளும் சங்கரை மேன்மேலும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டின. 

யானையின் தும்பிக்கை போன்றிருந்த ஒன்றை உயர்த்தினான். அதில் ஒருசாவித்துவாரம் இருந்தது. கஜலக்ஷ்மி அமர்ந்திருந்த தாமரையைச் சற்றுத் தள்ளினான். அதிலே இன்னொரு அறைக்கான திறப்புத் தெரிந்தது. 

எல்லாவற்றுக்கும் கடைசியாக; அந்த இரும்புப் பெட்டியிலிருந்த கள்ள அறையைத்திறந்து பார்த்த போது சங்கரின் உடம்பு பயத்தினால் நடுங்கிப் போய் விட்டது. 

உள்ளே காணப்பட்ட பொருள்கள் அவனது பயத்தை மீண்டும் தூண்டுவனவாக இருக்கவே சங்கர் சட்டென்று அந்த அறையைச் சாத்திப் பூட்டி விட்டான். 

‘பட்டாமணியம் இப்படிப் பட்டவரா?? என்கிற கேள்வியைவிட நல்ல வேளை! வசந்தி இதையெல்லாம் பார்க்கவில்லையே!’ என்கிற ஆறுதலே பெரிதாக இருந்தது. சட்டென்று பாஸ் புஸ்தகத் தை மட்டும் எடுத்துக்கொண்டு ஒன்றுமே அறியா தவன் போல் பெட்டியைப் பூட்டிச் சாவியையும் வசந்தியிடம் ஒப்படைத்து விட்டான் சங்கர். 

அவன் மனம் பட்டாமணியத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கவே நடுங்கியது. எத்தனை பயங்கரமான-அது மட்டுமல்ல; எத்தனை வஞ்சகமான மனிதரும் கூட! 

இவருடைய போலியான அன்பை உண்மை யென்று நம்பி ஏமாந்து போனேனே! சீ! இத்தகைய மனிதரிடமிருந்து ஒரு தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்டது கூட, ஒரு அவமானப்பட வேண்டிய விஷயமே! ஆனால் வசந்தியை எண்ணிப் பார்த்த போது-அவன் மனம் தடுமாறியது. 

12. போலீஸ் கெடுபிடி 

அன்று அமாவாசை கழித்த மறுநாள். டவுனுக் குச் சென்றிருந்த சந்தானத் திற்க்கு நிறைய வேலை யிருந்தது. அந்த வருஷம் அவரது பள்ளியில் பத்தா வது பரீட்சையில் பாசான மாணவ மாணவிகளுக்கு உடனே ஜுனியர் கல்லூரி யில் இடம் கிடைக்க வேண் டிய ஏற்பாடுகளைச் செய்யவே அவர் சென்றிருந்தார். 

பகலில் தம்முடைய காரியங்களை முடித்துக் கொண்டு சந்தானம் மாலையில் பட்டாமணியத்தைக் காண ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தார். ஆனால், உடல்நலம் தேறி வீடு திரும்பும் தருவாயிலிருந்த பட்டாமணியம், ஏனோ சந்தானத்தினிடம் சரியாக முகம் கொடுத்துப்பேசவேயில்லை. 

‘என்னை இங்கு வந்து நீ பார்க்கவில்லை யென்று யார் குறைபட்டுக் கொண்டார்கள்? என்னுடைய இந்த கதிக்கே-நிலைமைக்கே – நீதானே காரணம்?’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அது புரியாமல். 

“பட்டாமணியம், ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க? எங்கே ஒருவேளை, முன்னேமாதிரி கால் சரியா நடக்கமுடியாமப் போயிடுமோன்னு கவலைப்படறீங்களா?” என்று வேடிக்கையாகக் கேட்டார் சந்தானம். ஆனால் அப்போதிருந்த மன நிலையில் சந்தானத்தின் வேடிக்கையே பட்டாமணி யத்துக்கு விபரீதமாகத் தோன்றியது. 

“ரொம்பப்பேரு அப்படித்தான் ஆசைப்பட்டுக் கிட்டிருக்காங்க. அதுக்காகப் பிரார்த்தனைக் கூடப் பண்ணறாங்க. ஆனால் என் நல்ல காலம், அவங்களாலே ஒண்ணும் செஞ்சுக்க முடியல்லே!” என்றார் பட்டாமணியம் நிஷ்டூரமாக. 

“அப்படி உங்களுக்கு விரோதிகள் யார் இருக்காங்க  பட்டாமணியம்?” என்றார் சந்தானம் எதார்த்தமாக. 

“இல்லாமே என்ன? நூறு பேர் இருக்காங்க. இதெல்லாம் வெளிக்குத் தெரியும்படியா காட்டிக் ணுமா என்ன?… உள்ளுக்குள்ள பூரா வேப்பங்காயா இருக்கும் வெளியே வெல்லக்கட்டி! அதைப் புரிஞ்சுக்க முடியாமத்தான் நானும் ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஏமாந்துக்கிட்டே இருக்கேன். இல்லேன்னா நீங்க லாயக்கில்லைன்னு ஒதுக்கின கன்னுக்குட்டியைத் தெரியாமெ விலைகொடுத்து வாங்கி ரேக்ளாவிலே பூட்டி கால் ஒடிஞ்சு இங்கே வந்து விழுந்து கிடப்பேனா?’” 

பட்டாமணியத்தின் இந்தப் பேச்சைக் கேட்டதும், சந்தானத்துக்குச் சுருக்கென்று மனத்தில் தைத்தது. இத்தனை நேரம் தம்மிடம் ஏதோ விரோதத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் பட்டாமணியம் பேசியிருக்கிறார் என்பதைச் சந்தானம் நன்றாகப் புரிந்துகொண்டார். அதற்கு மேலும் அங்கே நின்றுகொண்டிருக்க அவரது மனம் இடம் கொடுக்கவில்லை. 

பட்டாமணியத்துக்காக வாங்கிச் சென்றிருந்த ஆப்பிளையும் ஆரஞ்சையும் அருகிலிருந்த முனிய னிடம் கொடுத்தார். “நான் வற்றேன் பட்டா மணியம்!” என்ற சந்தானம்; பதிலுக்குக் கூடக் காத்திராமல் வேகமாக ஆஸ்பத்திரி காம்பவுண்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தார். 

சந்தையில் எப்போதோ தமக்கு வேண்டா மென்று அந்தக் கன்றுக்குட்டியை அவர் விற்ற துண்டு. ஆனால் அதற்குப் பட்டாமணியம் கூறுவது போல் எவ்விதத் தீய காரணமும் இல்லை. 

வண்டியில் திரும்பிக்கொண்டிருந்த சந்தானம், வழிநெடுக, தம்மைப் பற்றிப் பட்டாமணியம் கூறிய அபாண்டத்தைப் பற்றி எண்ணி வருந்திக் கொண்டே வீடு சென்றார். வஸ்தாத் பாவாடையின் வஞ்சகப் போதனையால்தான் பட்டாமணியம் இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்பது அவருக்குத் தெரியுமா என்ன? 

இரவு எட்டு மணிக்குள் வசந்தி தன்னுடைய அறைக்குச் சென்று நன்றாக இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கிவிட்டாள். சமீப நாட்களாகப் பரீட்சைக்காக இரவு நீண்டநேரம் கண்விழித்துப் படித்த அலுப்பு அவளுக்கு. 

ஆனால் சங்கர் மட்டும் தூக்கம் வராமல் அந்தக் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். 

அவனுடைய தூக்கமின்மைக்கு இரண்டு காரணங்கள். 

ஒன்று – 

அன்று மாலையில், விளக்கு வைக்கிற வேளை யில் தற்செயலாக அவன் கேட்க தேர்ந்த பயங்கரச் செய்தி. மற்றொன்று சமீப நாட்களாக அவன் தன்னுடனேயே சதா மூடி வைத்துக் காப்பாற்றி வரும் ஒரு ரகசியம். இரண்டுக்கும் அவனால் என்ன செய்வதென்றே புரியவில்லை. 

இரவின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு சுவரிலிருந்த கடிகாரம் ‘டாண் டாண்’ என்று பதினொன்றடித்து அப்பொழுது திடீரென்று, தெருவில் ‘சர் சர்’ என்று சப்தம் கேட்கவே, சங்கர் லேசாக ஜன்னலைத் திறந்து பார்ந்தான். இரண்டு ஜீப்கார்கள் ஒளியைப் பாய்ச்சிக்கொண்டு வேகமாகப் பறந்தன. பின்னால் வந்த காரின் ‘ஹெட்லைட்’ முன்னால் சென்ற ஜீப்பிலுள்ளவர்களைக் காட்டியது. அதில்- 

சிவப்புத் தொப்பி அணிந்த நாலைந்து போலீஸ்காரர்களும், முன் ஸீட்டில் ஓர் இன்ஸ்பெக்டரும் இருப்பது தெரிந்தது. 

அந்தப் ‘போலீஸ்வான் இந்த வேளையில் எங்கே செல்லுகிறது?’ என்று சங்கர் கணநேரம் தான் யோசித்திருப்பான் 

அதற்குள் அவன் கேட்க நேர்ந்த மாலை நேரச் சம்பாஷணை நினைவுக்கு வரவுமே, சங்கர் திடுக் கிட்டுப் போனான். அவனையும் அறியாமல் ஏதோ ஒரு சக்தி அவனை அங்கிருந்து உந்தித் தள்ளுவது போலிருந்தது. 

ஏதோ ஆவேசம் வந்தவனைப்போல் சங்கர் வேகமாக புறப்பட்டான். தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்திருந்ததை எடுத்து டிராயருக்கும், வயிற்றுக்கும் இடையில் செருகிக்கொண்டான். 

உள்ளே எட்டிப்பார்த்தான்; வசந்தி நன்றாகத் தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்தாள். சமையற் காரக் கிழவி, அடுக்களை வாசற்படியில் தலையைச் சாய்த்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய தூக்கம் உண்மையோ பாசாங்கோ என்பதைச் சங்கரால் கண்டுகொள்ள முடியவில்லை. 

மெதுவாக வாசற்கதவைத் திறந்து கொண்டு வெளியே புறப்பட்ட சங்கர், கதவை மீண்டும் மெள்ளச் சாத்திவிட்டுத் தெருவில் இறங்கி வேகமாக நடந்தான். 

சந்தானத்தின் வீட்டை நெருங்கும்போது சங்கர் எண்ணியது சரியாக இருந்தது! அந்தப் பெரிய வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. காம்பவுண்ட் ஓரமாக ஒரு நிழல் மறைவில் நின்று சங்கர் கவனித்தான். 

போலீஸ் ஜவான்கள் சற்று ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். 

இன்ஸ்பெக்டர், சந்தானத்திடம் ஏதோ ஒரு புத்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கிக் கொண் டார். பிறகு தரையில் கிடந்த பெட்டியிலிருந்து கற்றை கற்றையான நோட்டுக்களை மொத்த மாகவும், தனித்தனியாகவும் பிரித்துப் பார்த்தார். 

“இவையெல்லாம் கள்ள நோட்டுக்கள் என்பதை யாவது நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” 

“எனக்குத் தெரியாது!” என்றார் சந்தானம். 

“எது உங்களுக்குத் தெரியாது?’” 

“இப்போது இங்கே நடக்கிற விஷயங்களைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது என்றுதான் சொல்லுகிறேன்.” 

“தெரியாது என்று நீங்கள் ஒரே வார்த்தையில் கூறிவிட்டால், அதைப் போலீஸ் ஏற்றுக் கொண்டு விடுமா?. இது உங்களுடைய பங்களா; இது உங்களுடைய பணப்பெட்டி”. 

“அதையெல்லாம் நான் மறுக்கவில்லையே!”

“உங்கள் வீட்டு மாடியைச் சோதனை போட்டுத் தானே இந்தக் கள்ள நோட்டுகளை யெல்லாம் எடுத்தோம்?”

“அதையும் நான் மறுக்கவில்லை; ஆனால் இந்தக் கள்ள நோட்டுகள் எப்படி என் இருப்பிடத்துக்கு வந்தன என்பதுதான் எனக்குப் புரியவில்லை” என்றார் சந்தானம். உடனே இன்ஸ்பெக்டர், “இப்படிச் சொன்னால் எப்படி? சமூகத்தில் நீங்கள் அந்தஸ்து உள்ளவர்கள். உங்களிடம் நம்பிக்கை வைத்து, உங்கள் வார்த்தை களுக்கு மதிப்பு வைத்து நாங்கள் கேட்கிறோம்.” 

“நான் உங்களைக் குறை கூறவில்லை. ஆனால் என்னால் உங்களுக்கு இந்தச் சமயத்தில் வேறு எந்த விதமான பதிலையும் கூற முடியவில்லையே! பள்ளியில் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காகச் செக் எழுதிக் கொடுத்தேன். மானேஜர் டவுனில் மாற்றிக் கொண்டுவந்த பணத்தை மாடியில் கொண்டு வைத்தேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்…” என்றார் சந்தானம் அமைதியாக. 

“சரி, நீங்கள் இப்போது எங்களுடன் தயவு செய்து ஸ்டேஷனுக்கு வரவேண்டும். அங்கே வந்து. தங்கள் வாக்குமூலத்தை அளியுங்கள்” என்றார் இன்ஸ்பெக்டர். 

அதை ஒப்புக் கொண்ட சந்தானம், வேலைக்காரனிடம் பத்திரமாயிரும்கும்படிக் கூறிவிட்டு, போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டார். 

சந்தானத்தையும் சுமந்து கொண்டு ஜீப் பறந்தது. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து சங்கரின் உள்ளத்தைப் பெரும்பாரம் அழுத்துவது போலிருந்தது. இமைகளில் கண்ணீர் துளித்து நின்றது. 

13. முரட்டுப் பிடி 

ருளைக் கிழித்துக் கொண்டு சென்ற போலீஸ் ஜீப் கண்ணுக்கு மறைந்து விட்டது. ஆனால் அங்கே அப்போது அவன் கண்ட காட்சிகள், அநுபவித்த உணர்ச்சிகள் சங்கரின் மனத்திலிருந்து மறையவில்லை. எவ்வளவு பயங்கரமான விஷயம்! ‘இப்படியும் இருக்குமா?’ என்று எண்ணிப் பார்க்கக்கூட அவனால் முடியவில்லை. 

சத்தியமே உருவானவர் சந்தானம். ஏழைகளுக்கு இரங்கும் இனிய குணம் படைத்தவர். செல்வம் சேர்ப்பதில் பேராசை இல்லாதவர் மீது; செல்வம் திரட்டத் கள்ளநோட்டைப் பயன்படுத்தியதாகப் பழியா? இந்த உலகத்தில் நன்மை செய்பவர்கள் நல்லது நினைப்பவர்கள் இவர்கள் எல்லாம் பொல்லாப் பழிக்கு இரையாகித் துன்பப் படத்தான் நேருமோ? 

அப்படியானரல் பரோபகாரம் ஒரு பாவச் செயலா? ‘சத்தியத்துக்கும், நேர்மைக்கும், இத் தகைய தண்டனைகள், அநுபவங்கள்தான் பரிசு என்றால்; இனிஎன்வரையில் அதற்கு நான் விரோதி. தீயவர்களைத் தீமையினாலேயே வெல்லுவேன். பெற்ற தந்தையினும் மேலாகப் போற்றிவரும் சந்தானத்தை எப்படியாவது காப்பாற்றுவது என் கடமை. இந்தக் குற்றந்தை அவர் ஒரு நாளும் செய் * திருக்கமாட்டார். இதில் ஏதோ மோசடி இருக் கிறது’ என்று பலவாறு எண்ணிக்கொண்டே இருந்த சங்கருக்குத் திடீரென்று அப்போதுதான் நினைப்பு வந்தது– 

‘ஐயோ, வீட்டுக் கதவைத் திறந்து போட்டு விட்டு இங்கே வந்து இப்படி இவ்வளவு நேரம் நின்று விட்டேனே! வசந்தி விழித்துக்கொண்டு விடமாட் டாள் என்றாலும்; நான் இப்படி வரலாமா? பட்டா மணியத்துக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வார்?’ என்று எண்ணி வேகமாக வீட்டை நோக்கி நடந்தான். 

சாலையின் இருமருங்கிலும் உள்ள வயல் வெளிகளிலிருந்து தவளைகள் “தப-தப” வென்று கத்தி இரவின் நிச்சப்தத்தைக் குலைத்துக்கொண்டிருந்தன. சங்கர் வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவனது இடையில் அந்தப் புதிய பொருள் உறுத்திக் கொண்டிருந்தது.- உள்ளத்தில் புதிய கவலை உறுத்திக் கொண்டிருப்பதைப்போல. 

மரங்கள் அடர்ந்த பகுதியின் வழியாக அவன் வந்துகொண்டிருந்தான். அப்போது யாரோ தன்னைப் பின்தொடர்ந்து வருவதேபோல் தோன்ற வுமே சங்கர் சட்டென்று திரும்பிப் பார்க்க எண்ணி னான், ஒரு வேளை, ஏதேனும் பேய் பிசாசுகள் தான் இந்த அகால வேளையில் நடமாடுகின்றனவோ என்கிற ஒரு கிலியும் கூடவே அவன் மனத்தில் எழுந்தது. இந்த எண்ணம் தோன்றிய பிறகு- பின் புறமென்ன; அக்கம் பக்கம் பார்க்கவே அவனுக்குச் சிறிது அச்சமாக இருந்தது. 

ஆயினும் அவனால் அப்படிக் கண்மூடித்தனமாக நடந்து கொண்டேயிருக்க இயலவில்லை. பேய், பிசாசுகளைப் பற்றிய கதைகளைத் தானே படித்தும்; பலர் சொல்லியும் அவன் கேள்விப் பட்டிருக்கிறான். பேயின் உருவங்களைப் பற்றியும்; அவைகளின் செய் கைகளைப் பற்றியும் பலவிதமான கதைகளை அவன் அறிந்திருந்தான். ‘இப்போது அது உண்மையில் எப்படித்தான் இருக்குமென்பதைப் பார்த்து விட்டால் என்ன?’ என்கிற ஓர் எண்ணம் எழுந்தது. 

தன்னுடைய தைரியத்தையெல்லாம் ஒன்று திரட்டி மெல்லத் திரும்பிப் பார்க்கப் போனான். ஆனால் அதற்குள் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு முரட்டுக் கரம் அவன் வாயைப் பொத்தியது. 

சங்கரால் கத்த முடியாமற் போனது ஆச்சரியமல்ல; அந்த முரட்டுக்கரம் வாயோடு மூக்கையும் சேர்த் துப் பிடித்துக்தொண்டு விட்டதால்; நிமிஷ நேரத் துக்குள் மூச்சுவிடக்கூட முடியாமற் போய், திக்கு முக்காடினான். சங்கர் தன்னுடைய பலம் முழுவதையும் உபயோகித்து,  தன்னைப்பற்றி வளைத்த உருவத்தை ஓர் உதறு உதறி மீண்டான். ஆனால் அதற்குள் கையில் ஒரு துணி மூட்டையுடன் எதிர்ப்பட்ட அந்த உருவம் ‘மளார்’ என்று சங்கரின் முகத்தில் ஓங்கி ஓர் குத்துவிட்டது. 

தூக்கி எறியப்பட்டவனைப் போல் எட்டப் போய் விழுந்த சங்கர் நிமிஷ நேரம் துடிதுடித்துப் போனான். வலியின் அதிர்வு ஒரு புறம் – ஒரு புறம்-ஒரு குற்றமும் செய்யாமல் சாலை வழியே சென்று கொண்டிருக்கும் தன்னைத் தாக்கிய கயவர்கள் மீது எழுந்த ஆத்திரம் ஒரு புறம்-இரண்டு மாகச் சேர்ந்து அவனை வெறிகொள்ளச் செய்திருந்தன. 

தரையில் விழுந்த சங்கர் எழுந்து நிற்பதற்குள், அந்த இரு முரடர்களும் மீண்டும் சங்கரைத் தாக்கப் பாய்ந்து வரவே, சங்கர் சட்டென்று இடையிலிருந்த ரிவால்வரைக் கையில் எடுத்துக் கொண்டான். மறுகணம் –

‘டுமீல்’ என்று ஓர் ஓசை – மூட்டைக்காரன் இடக்கையைக் குண்டு துளைத்தது. கையிலிருந்த மூட்டை கீழே விழுந்தது. அவன் “ஐயோ! அம்மா! என்று அலறிக்கொண்டு ஓடினான். துப்பாக்கியைக் கண்டதும், அரண்டுபோன மற்றவனும் உயிர் பிழைத்தால் போதுமென்று பின்னாலேயே ஓட்டம் பிடித்தான். 

மரத்துக்குப் பின்னாலிருந்து வெளியே வந்த சங்கர் அவர்கள் விட்டுச் சென்ற மூட்டையைக் கண்டதும் அப்படியே திடுக்கிட்டுப் போனான். ‘தொப்’பென்று கீழே விழுந்த வேகத்தில் மூட்டை பிரிந்து, சில நோட்டுக் கற்றைகள் வெளியே சிதறிக் கிடந்தன. உள்ளே–இன்னும் கற்றை கற்றையாகப் புத்தம் புதிய கரன்ஸி நோட்டுக்கள்! 

சங்கருக்குச் சில விநாடிவரை என்ன செய்வ தென்றே புரியவில்லை. ஆனால் இத்தனை பணத்தையும் விட்டுச் சென்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்; அவர்கள் போதிய பலத்துடன் திரும்பி வந்து தன்னைத் தாக்கு முன்பு இங்கிருந்து ஓடிவிட வேண்டும்; அப்படி ஓடும்போது கூடவே இந்த மூட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டியது தான் புத்திசாலித்தனம்; பிறகு என்ன நேர்ந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டான். 

அவிழ்ந்து போன துணி மூட்டையை இறுகக் கட்டி இடக்கையில் எடுத்துக்கொண்டான். பாதுகாப்புக்காக வலக்கையில் துப்பாக்கியையும் பிடித் துக்கொண்டே வேகமாகப் பட்டாமணியம் வீட்டை நோக்கி நடந்தான். 

‘இவை நல்ல நோட்டுக்களானால், இந்தப் பொல்லாதவர்கள் கையில் இந்த வேளையில் இவை இருக்கக் காரணம் என்ன? ஒருவேளை இந்த இரண்டுபேருமே எங்கேனும் ஒரு செல்வந்தர் வீட்டில் கன்னம் வைத்துத் திருடிக் கொள்ளை யடித்துக் கொண்டு வருகிறார்களோ?- எப்படி இருந் தாலி என்ன, கையில் கிட்டிய பொருளைத் தெருவில் போட்டுவிட்டுப் போகக்கூடாது. வருவது வரட்டும்” என்று பலவாறு எண்ணியபடியே வீட்டை அடைந்த சங்கருக்கு அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. 

பூனைபோல் உள்ளே நுழைந்து தன்னுடைய அறைக்குள் சென்று கற்றை நோட்டு ளையும் பத்திரப் படுத்திவிட்டு; வசந்தியின் அறைக்குள்: தலையை நீட்டியபோது. 

அவள் படுத்திருந்த படுக்கை காலியாக இருந்தது. 

14. கிழவியின் கோபம் 

கவலையும் பயமும், பேரிருள் போல் சங்கரின் உள்ளத்தைக் கப்பிக் கொண்டு விட்டன. என்ன செய்வ தென்றே புரியாத-பிரக்ஞை யற்றது போன்ற நிலையில் சில விநாடிகள் கழிந்தன. சட்டென்று விழிப்புற்றவன் போல் வாசற்கதவைத் தாழிட்டான். வசந்தியை ஒவ்வோர் அறையாகத் தேடியபடி வீட்டிலுள்ள எல்லா விளக்குகளையும் போட்டுக் கொண்டே வந்தான். எங்கும் ஒரே ஒளி வெள்ளம். இருளைவிட, அந்த ஒளியில் தனிமையாக இருப்பது தான் சங்கருக்குச் சங்கடமாகத் தோன்றியது. 

“எங்கேதான் அவள் போயிருப்பாள்? ஒரு வேளை எதிர்பாராமல் விழித்துக் கொண்டவள என்னைப் படுக்கையில் காணோமென்று கவலைப்பட்டு வெளி யே…’ அதற்குமேல் அவனால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. 

சட்டென்று சமையல்காரக் கிழவியின் ஞாபகம் வரவே, சங்கர் வேகமாகப் பின்கட்டை அடைந்தான். ஆனால் அங்கே-அடுக்களையில்-அவன் கண்ட காட்சி! 

ஒரு தூணில் சமையல்காரக் கிழவி பின்கட்டு மாறாகக் கயிற்றால் கட்டப்பட்டிருத்தாள். அவளுக்குப் பக்கத்திலிருந்த ஒரு தூணில் வசந்தியும் கட்டப்பட்டிருந்தாள். இருவரது வாயிலும் துணியைப் பந்துபோல் உருட்டி அடைத்திருந்தார்கள். 

இதெல்லாம் எப்பொழுது நேர்ந்ததோ! எத்தனை நேரமாக இவர்கள் இப்படி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்களோ? 

சங்கர் அதற்குமேல் விநாடிகூடத் தாமதிக் வில்லை. மூச்சு முட்டி விழிகள் பிதுங்கி நின்ற வசந்தியின் வாயிலிருந்த துணியை முதலில் எடுத் தான். “சங்கர்” என்று அவள் பெரிதாக அழ ஆரம்பித்தாள். 

கிழவி வாயிலிருந்த துணி உருண்டையை அகற்ற இன்னும் சற்றுத் தாமதித்திருந்தர்ல்கூட அவள் மூச்சுத் திணறி இறந்தே போயிருப்பாள். சங்கர் அவர்கள் இருவரையும் கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டான். விடுதலையடைந்த கிழவி ‘குய்யோ முறையோ’ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். 

சங்கர் அவளைச் சமாதானப்படுத்தி, “என்ன நடந்தது?” என்று விஷயத்தைக் கேட்டான். 

“முதல்லே நீ வீட்டுக் கதவைத் திறந்து போட்டுட்டு எங்கே போனே? சொல்லு!” என்று கிழவி எதிர்க் கேள்வி கேட்டாள். சங்கருக்கு எரிச்சல் வந்தது. 

“அதிருக்கட்டும்; இங்கே நடந்த விஷயத்தைச் சொல்லுங்க!” என்று ஓர் அதட்டு அதட்டினான்.  ஆனால் கிழவி அதை லட்சியம் செய்தவளாகவே காணவில்லை. “அதுதான் பொண்ணு உன் பக்கத்திலேயே நிக்குதே, அதைக் கேளு. எல்லாம் விவரமாச் சொல்லும். எஜமான் வந்ததும் நீ பண்ணின காரியத்தை நான் அவருகிட்டே சொல்லத்தான் போறேன்” 

சங்கருக்கு ஒரு கணம் திக்’கென்றது. அவனுக்கு ஆதியிலிருந்தே அவளைப் பிடிக்கவில்லை. அவளுடைய நடத்தை-செய்கைகள் – நம்பிக்கை ஊட்டுவனவாக இல்லை. இப்போது அவளுடைய பேச்சின் போக்கு வேறு சந்தேகத்தைக் கிளப்புவது போல் இருக்கவுமே, இங்கு நடக்கும் எல்லா விஷயங்களையும் இவள் உளவு பார்த்துக் கொண்டு தான் இருந்திருப்பாளோ? அப்படியானால் இரும்புப் பெட்டியிலிருந்து துப்பாக்கியை நான் எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும் இவளுக்குத் தெரிந்திருக்குமோ?’ என்று எண்ணினான். உடனே சங்கர் கோபத்தோடு இரைந்தான். 

“நல்லாச் சொல்லுங்க! எஜமான் வந்ததும் நானும் சொல்லி; முதல்லே உங்க சீட்டைக் கிழிச்சிட்டுத்தான் மறு ஜோலி பார்க்கப் போறேன். சாயங்காலம் நீங்க அந்த ரவுடிங்ககிட்டே பேசிக் கிட்டிருந்ததை யெல்லாம் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்!” என்று வசந்தியை அழைத்துக் கொண்டு முன் அறைக்கு வந்துவிட்டான். 

அவளால் சட்டென்று அவ்வளவு வேகமாக நடந்துவரக்கூட முடியவில்லை. அப்படியே தொப் பென்று கட்டிலில் உட்கார்ந்து சுருண்டு படுத்து விட்டாள். 

“என்ன வசந்தி பண்ணறது?” – சங்கர் பரிவோடு விசாரித்தான். 

ஆனால் வசந்தி, “என்னைத் தனியா விட்டு விட்டு எங்கே சங்கர் போயிட்டே?” என்று துக்கம் ததும்பக் கேட்டாள். 

“அதைச் சொல்றேன்; இங்கே என்ன நடந்தது? நீ பாதியிலே எழுந்திருந்து என்னைத் தேடினியா? யார் இங்கே வந்து இந்தக் காரியம் பண்ணினது?” 

“நான் எழுந்திருக்கவே இல்லே. நல்லாத் தூங்கிக்கிட்டேதான் இருந்தேன். பாதித் தூக்கத்திலே யாரோ என் தொடை மேலே சுளீர்னு ஓர் அறை அறைஞ்சாப்லே இருந்தது. ஏதோ சொப் பனமோன்னு பயந்து திடுக்கிட்டுக் கண்ணைத் திறந்தேன். எதிர்த் தரப்பிலே ரெண்டு குண்டன்கள் கையிலே கத்தியை நீட்டிக்கிட்டு நின்னுக்கிட் டிருந்தாங்க”

“அப்புறம்…?”

“நான் பயந்துபோய், உன்னைக் கூப்பிட்டேன்” 

“உம்….”

“உடனே அதிலே ஒரு தடியன், இரும்பு மாதிரித் தன்னோடு கையாலே என் வாயைப் பொத்தி, ‘சத்தம் கித்தம் போட்டியானா இதோ இதாலே ஒரே குத்து!’ என்று கத்தியைக் காட்டி மிரட்டினான்,”

“அப்புறம்?”

“எனக்கு ஒரே பயமாய்ப் போயிடுத்து! கொலை செய்ய வந்திருக்காங்கோண்ணு பயந்து நடுங்கினேன்”

“ஒருத்தன் என்னைக் கட்டில்லேருந்து எழுந்திருன்னான். நான் எழுந்திருந்ததும், ‘அப்பாவோட இரும்புப் பெட்டிச் சாவி எங்கே இருக்கு? கொடு’ன்னான்”. 

“எங்கிட்டே இல்லே. ஆஸ்பத்திரியிலே அப்பாகிட்டே இருக்கு’ன்னு நான் முடிக்கறதுக்குள்ளே ஓர் ஆள் கையை ஓங்கி என்னை அடிக்க வந்து விட்டான்”. 

“அப்புறம்? “

“உடனே மத்தவன், ‘ஒருவேளை இது பொய் சொன்னாலும் சொல்லும். படிச்ச பொண்ணு பாத்தியா?’ என்றான். அட சரிதான், பிடிச்சு இழுத்துக்கிட்டுவாடா! சாவி இந்த வீட்டிலே இல்லேன்னாலும் விட்டுட்டா போயிடப்போறோம்?’ ன்னான். ரெண்டுபேரும் என்னைக் கரகரன்னு இழுத்துக் கிட்டு போய்ச் சமையல் கட்டுத் தூணிலே கட்டிப் போட்டாங்க”

“சமையல் கிழவி?” 

“அவளை முந்தியே கட்டி வெச்சிருந்தாங்க.”

“அப்போ திருடவந்தவன் வாசல் பக்கத்தாலே வல்லியா?” 

“அதெப்படி வரமுடியும் சங்கர்? வாசல் கதவை நாம் தாழ்ப்பாள் போட்டுட்டுத்தானே படுத்துக்கிட்டோம். கிழவிகூட ஏதோ பயித்தியம் மாதிரி உளறினாளே..” என்றாள் வசந்தி. 

“கிழவி ஒண்ணும் உளறல்லே. அப்புறமா அதை நான் உனக்கு விவரமாகச் சொல்றேன். நீ மேலே என்ன நடந்தது சொல்லு” என்றான். 

“ஒருத்தன் என்கிட்டே கத்தியைக் காட்டி,  ‘இரும்புப் பெட்டி, எந்த அறையிலே இருக்கு? சீக்கிரம் சொல்லு’ன்னு மிரட்டினான்”. 

“நீ சொல்லிப்பிட்டியா?” -சங்கர் ஆச்சரியத்துடன் கேட்டான். 

“சொல்லாமெ? இல்லேன்னா என்னைக் கொன்னே போட்டிருப்பாங்களே. ரொம்ப நேரம் வரை இரும்யுப் பெட்டியை எதாலே எல்லாமோ திறந்து பார்க்கிற மாதிரியும்; அடிச்சு உடைக்கிற மாதிரியும் எல்லாம் ஓசை கேட்டுக்கிட்டே இருந்தது. நீ.எங்கே போயிட்டே? ஒருவேளை இவங்க உன்னைப் பார்க்கவே இல்லியான்னும் தெரியல்லே. கொள்ளையடிக்கிறவங்களோ; சத்தம் போடக்கூட முடியாமெ, வாயிலே துணியை வெச்சு அடைச் சிட்டாங்க. இன்னும் சித்தே நாழி நீ வரலேன்னா நான் செத்துக்கூடப் போயிருப்பேன்.” இதைக் கூறி முடிப்பதற்குள் வசந்திக்கு அழுகையே வந்து விட்டது. 

“சரி…சரி. அதுதான் நான் வந்துட்டேனே; வா அப்பா ரூமைப் போய்ப் பார்க்கலாம்!” என்று வேகமாகப் புறப்பட்ட சங்கரைப் பின் தொடர்ந்து வசந்தியும் சென்றாள். 

அந்த அறைக்குள் அடி எடுத்து வைத்ததும் அங்கே அவர்கள் கண்ட காட்சி! 

ஏதோ போர்ப் பிரதேசத்துக்குள் அடியெடுத்து வைத்தாற்போல் ஏககாலத்தில் இருவரும் நடுங்கியே போனார்கள். 

அவர்களைக் கண்டு பரிகசிப்பது போல் இரும் புப்பெட்டி தனது கோரப் பற்களை நீட்டிப் பயங்கரமாகச் சிரித்துக்கொண்டிருந்தது. 

15. சைனா டீ! 

சங்கருக்கு அதற்கு மேலும் அந்த அறைக்குள் நின்று கொண்டிருக்கப் பிடிக்க வில்லை. இரும்புப் பெட்டியில் ஒன்றும் மீதி வைக்காமல் கொள்ளையடித்துச் சென்றிருந்தார்கள். சாவியைக் கையில் வைத்துக் கொண்டும் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டதுபோக;அந்தப் பலே திருடர்கள் எப்படியோ கள்ள அறைகளைக்கூட விடாமல் அந்த இரும்புப் பெட்டியைக் குடைந்து துப்புரவாகத் துடைத்து விட்டார்கள்.

“ஐயோ, சங்கர்! இதென்ன…!” என்று அந்தக் காட்சியைப் பார்த்து வசந்தி அலறியேவிட்டாள். 

ஆனால், ஏனோ சொற்கள் அவளது தொண்டையி லேயே உறைந்து விட்டதுபோல் வலுவில்லாமல் ஒலித்தன. 

“சரி வா, போகலாம்!” என்று சங்கர் வசந்தியை அழைத்தான். 

“எங்கே?” என்றாள் வசந்தி. 

“கிழவி என்ன பண்ணுகிறாள்னு பார்க்கலாமே”. 

இருவரும் அடுக்களைக்குள் சென்றபோது, கிழவி அடுப்பை மூட்டி ஏதோ காய்ச்சிக் கொண்டிருந்தாள். 

‘‘என்ன பண்ணறே, பாட்டி?”-வசந்தி ஆச்சரியத்துடன் கேட்டாள். 

“டீக்குத் தண்ணி போட்டேன். பால் காய்ச்சறேன்.” 

“இந்த வேளையிலா டீ குடிப்பாங்க?” 

“எமதூதன்கள் மாதிரி வந்து; தூணோடு கயிற்றாலே வரிஞ்சு கட்டிப் போட்டிருந்தாங்களே. உனக்கு மட்டும் உடம்பெல்லாம் வலிக்கலியா?” 

‘“வலிக்காமெ என்ன பாட்டி? உசிரே போயிடுமோன்னு பயந்தே போனேன்.” 

“பின்னே பேசறியே; நல்ல சைனா போட்டுத் தறேன்! உடம்பு வலியெல்லாம் பறந்துடும் பாரு!”

காய்ச்சின பாலில் டீயைக் கொட்டி, அது கொதித்ததும் அப்படியே தண்ணீர் ஊற்றாமல் வடிகட்டி, சீனியைப் போட்டாள் கிழவி. 

“சைனா டீன்னா என்ன பாட்டி?” அந்த ஊரைப் பத்தியெல்லாம்கூட உனக்குத் தெரியுமா?”

“தெரியாமெ என்ன? அதுதானே இவங்களுக்குத் தாய்நாடு!”-சங்கர் ஆத்திரத்தை உமிழ்ந்தான். 

“போ சங்கர்! நம்ம பாட்டி இந்தியாவிலேயே பொறந்தவங்க, வேணும்னா கேட்டுப் பாரு.” 

“நான் இவங்க உடம்பைப்பத்திப் பேசல்லே. இவங்க எண்ணம், செயல், அதைப்பத்திப் பேசறேன். உங்கப்பா கொடுக்கிற சம்பளத்தை நம்பியா கிழவியும் இவங்க கூட்டமும் இங்கே பிழைப்பு நடத்தறாங்க?”

“அப்படீன்னா?'” 

“உனக்கு இதெல்லாம் ஒண்ணும் புரியாது” 

“கொஞ்சம் புரியும்படிதான் சொல்லேன், சங்கர்!” வசந்தி கெஞ்சினாள். 

“ஆ…பொல்லாத விஷயத்தைக் கண்டவன் இவன்! அவனைப் போய்க் கேளு. கண்ட சோமாரிப் பசங்களை எல்லாம் நம்பி, பொண்ணையும் வீட்டை யும் விட்டுட்டுப் போன உங்க அப்பனைச் சொல்லணும். வரட்டும், வெச்சிக்கிறேன். இந்தா, நீ குடி!”

கையிலிருந்த டீயை வசந்தியிடம் நீட்டினாள் பாட்டி, 

அதைப் பெற்றுக்கொண்ட வசந்தி, ‘‘சங்கருக்கு?” என்று கேட்டாள். 

“குடுக்காமெயா போயிடுவேன்? ஏதோ அறியாப்பிள்ளை-இளம் வயசு-வாய்த்துடுக்கு- பேசிட்டுப் போகுது. நாலெடத்திலே அடிபட்டா; தானே புத்தி வந்துட்டுப் போகுது!” என்று கூறியபடி இன்னொரு டீ டம்ளரைச் சங்கரிடம் நீட்டினாள். 

சங்கர் அதைப் பெற்றுக் கொண்டான். உடனே வசந்தி, “பாட்டி, நீ குடிக்கல்லியா?” என்று எதேச்சையாகக் கேட்டாள், 

“இதோ நிறைய இருக்கே-குடிக்காமெ? நீங்க சாப்பிட்டுட்டு டம்ளரைக் குடுங்க.”

வசந்தி உடனே கையிலிருந்த டீயைக் குடிக்க வாயருகே கொண்டு போனாள். 

“டமார்!” 

சங்கர் புறங்கையால் ஒரு தட்டு விட்டான். வசந்தி கையிலிருந்த டம்ளர் ஒருபுறமாகப் பறந்து சென்று சுவரில் முட்டிக் கீழே விழுந்தது. அதிலிருந்த சூடான தேநீர் கிழவி மீதும் தெறித்து அவள் கத்தினாள். 

வசந்தி ஒன்றுமே புரியாமல் திகைத்தபடி கேட்டாள்: “ஏன் சங்கர், இப்படிப் பண்ணினே?” 

“அந்த டீயைக் குடிச்சா நீ மயக்கம் போட்டுக் கீழே விழுந்திடுவே!” 

“சைனா டீ நல்லதுன்னு பாட்டிசொன்னாளே!” 

“அதிலே அபினைக் கலந்திருக்கா!” 

“அபினா? அது என்னது? விஷமா?”

வசந்தி கேட்டிக்கொண்டிருக்கும் போதே, “பாவி! உன்னை இன்னிக்கு ஒழிச்சுப்புட்டுத்தான் மறு சோலி!” என்று மூலையிலிருந்த அரிவாள் மணையை எடுத்துக்கொண்டு சங்கர் மீது பாய்ந்தாள் கிழவி. சட்டென்று சங்கர் இடது காலால் லேசாக ஒரு தட்டுவிட்டான்-மறுநிமிஷம் வேரற்ற மரம்போல் கிழவி தலைகுப்புறவிழுந்தாள். நீட்டிக்கொண்டிருந்த ஒன்றிரண்டு பற்களும் உடைந்து அவளது வாயிலிருந்து ரத்தம் பீரிட்டு வந்தது. 

வலி பொறுக்க முடியாமல் ‘குய்யோ, முறையோ!’ என்று கத்தியபடி கிழவி தரையில் புரண்டு கொண்டிருந்தாள். 

நிமிச நேரத்துக்குள் இத்தனையும் நிகழ்ந்து விட்டது. திக்பிரமை பிடித்தாற்போல் நின்று கொண்டிருந்த வசந்தியின் கையைப் பிடித்து வெளியே அழைத்துக்கொண்டு வந்த சங்கர், கிழவி இருந்த அறையை இழுத்துத் தாளிட்டான். இருவரும் முன் ஹாலுக்கு வந்து விட்டார்கள். 

“இதெல்லாம் என்ன சங்கர்? கிழவியை ஏன் இப்படிக் கீழே தள்ளினே? அவ செத்துப் போயிட்டா?” 

“அவ ஒண்ணும் சாகமாட்டா!” 

“இப்போ நீ என்ன பண்ணப் போறே?” 

“இந்த ஊரைவிட்டே போயிடப் போறேன்”

“எப்போ?’ 

‘‘இப்பவே!”

“ஏன்?”

“…”

“ஏன் பேச மாட்டேங்கறே சங்கர்? என்னைத் தனியே விட்டுட்டா போகப்போறே?” 

“நான் போனதும் கதவைத் திறந்துவிடு. கிழவி துணை இருப்பா!” 

“அவதான் பொல்லாதவள்னு, நீ இப்போ சொன்னியே…”

வசந்தி வார்த்தையை முடிக்கவில்லை. சங்கர் தன்னை விட்டுத் திடீரென்று போய்விடப்போகிறான் என்பதனால் ஏற்பட்ட துக்கமும் பயமும் அவளைச் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தின. 

“என்னாலே கிழவியோடு சேர்ந்து இருக்க முடியாது!” 

வசந்தியின் குரல் கரகரத்தது. 

“பரவாயில்லை. அவள் உனக்கு ஒரு கெடுதலும் செய்யமாட்டாள். நாளைக்கு உன் அப்பாவே ஆஸ்பத்திரியிலிருந்து வந்துவிடப் போகிறாரே…” 

“அப்படியா? எனக்குத் தெரியாதே! யாரு சொன்னா சங்கர்? பொன்னுசாமிப் பிள்ளை வந்தாரா?” 

‘‘அவருக்கேகூடத் தெரியாது”

“பின்னே”

‘“கிழவி சொன்னா.” 

“கிழவியா? அவளுக்கு எப்படித் தெரியும்?”

“இங்கே நடக்கிறது, நடக்கப்போகிறது எல்லாமே அவளுக்குத் தெரியும்”. 

“அப்படின்னா நீ இப்போ போகிற இடம் கிழவிக்குத் தெரியுமா?”

“தெரியாது.” 

“கிழவிக்குத் தெரியாதா; இல்லே உனக்கேகூடத் தெரியாதா?” 

“ரெண்டு பேருக்குமே தெரியாது!” சங்கர் தன்னுடைய சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டபடியே கூறினான். பெட்டிக்குள் வழியில் கிடைத்த நோட்டுக்களையும்; முன்னரே அவன் அடுக்கி; அதன்மீது தனது துணிமணிகளை வைத்திருந்தான். எல்லாவற்றுக்கும் அடியில் கடிதங்கள், சில அச்சு இயந்திரங்கள், பட்டாமணியத்தின் கைத்துப்பாக்கி ஆகியவை இருந்தன. ஆனால் இது பற்றிச் சங்கர் வசந்தியிடம் எதுவுமே கூறவில்லை. 

“நான் வர்றேன்.” 

“புறப்பட்டுட்டியா சங்கர்?” 

“….”

“எனக்கு ஒரே பயமாயிருக்கு, சங்கர்!” 

“பயப்படாதே. உன்னை யாரும் ஒண்ணும் செய்ய மாட்டாங்க…. சீக்கிரமே நாம் சந்திப்போம்….’ 

சங்கர் பதிலுக்குக்கூடக் காத்திராமல் விருட் டென்று வாசல் வழியாகப் பாய்ந்தான். இருட்டில் விடுவிடுவென்று ஸ்டேஷனை நோக்கி அவன்சென்ற திசையையே பார்த்தவண்ணம் வசந்தி வாசலில் நின்றுகொண்டிருந்தாள். உள்ளே கிழவி கதவைத் தட்டி உடைத்துக் கொண்டிருந்தாள். 

சற்றைக்கெல்லாம் அந்தச் சிறிய சந்தைப் பேட்டை ஸ்டேஷனில் நின்ற ஒரு பாசஞ்சர் வண்டி ‘கூ’வென்று ஓசை எழுப்பிய வண்ணம், தள்ளாடி நகர்ந்தது. 

சங்கரையும்; அவனது கனமான தோல் பெட்டியின் சுமையையும்; தாளாமல் தான்; தெற்கே. செல்லும் அந்தப் பாசஞ்சர்வண்டி அப்படித் தள்ளாடித் தள்ளாடி ஊர்கிறதோ….! 

16. ஹலோ, இன்ஸ்பெக்டரா?

எத்தனை நேரம் வசந்தி அப்படி, சங்கர் சென்ற திசையையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந் தாளோ? பெயர்த்து விடுவது போல், சமையற்கட்டில் கிழவி கதவை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது அப்போது தான் அவளுக்கு உறைத்தது. படீரென்று வாசற் கதவைச் சாத்திவிட்டு அடுக்களைக் கதவைத் திறந்தாள். 

விடுதலை அடைந்த கிழவி ஆவேசம் வந்தவளைப் போல், “அந்தச் சோனிப் பயல் எங்கே?” என்றுகோபத்தோடு கேட்டாள். 

வசந்தி சிறிது நேரம்வரை வாயே திறக்கவில்லை. 

உள்ளபடியே வசந்திமிகவும் பயந்து போயிருந் தாள். சங்கர் இப்படி அவளைத் திடுதிப்பென்று தனியே விட்டு விட்டுப் போய்விடுவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. 

உரத்த குரலில் சங்கரை வாய்க்கு வந்தபடி யெல்லாம் திட்டினாள் கிழவி. 

உடனே வசந்தி, “பாட்டி, சங்கர் இப்போ இங்கே இல்லே, இந்த ஊரைவிட்டே போயிட்டான். வீணா ஏன் அவனைத் திட்டறே?” என்றாள். 

“அடி பாவிப்பெண்ணே! காரியத்தைக் கெடுத் துப்பிட்டியே!” என்று கிழவி பதறிப்போய்த் தொண்டை கிழியக் கத்தினாள். 

வசந்தி, ‘நாம் என்ன காரியத்தைக் கெடுத்து விட்டோம்? சங்கர் போனால் இவளுக்கு என்ன?’ என்று ஒன்றும் புரியாமல் விழித்தாள். 

”உனக்கு ஒண்ணுமே புரியலையா? ஐயோ… ஐயோ! இந்தப் பட்டாமணியம் வயித்திலே ஏன் இப்படியொரு அசட்டுப் பொண்ணு பிறக்கணும்? அவருடைய சாமர்த்தியம் என்ன; கில்லாடித்தனம் என்ன? இப்போ பெத்த அப்பனுக்கே உலை வச்சிட்டியேடி பொண்ணே….”- கிழவி கண்ணீர் வடிப்பதுபோல் கூறினாள். 

“பாட்டி, நீ என்ன சொல்றேன்னே எனக்குப் புரியல்லே! ஒரே குழப்பமாக இருக்கு. எங்கப்பாவுக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன்? சங்கர் இங்கே யிருந்து போயிட்டா அதனாலே அப்பாவுக்கு. என்ன கெடுதல்?” 

“அசட்டுக் குழந்தே, அந்தப் பாவிப் பயல் சும்மாவா ஓடிப்போயிருக்கான்? உங்க அப்பாவோட அத்தனை ரகசியத்தையும் தெரிஞ்சுண்டு போயிருக்கான்!” 

“அப்படி என்ன பாட்டி அப்பாவோட ரகசியம்?” 

“ஒண்ணா, ரெண்டா? உங்கப்பா கிட்டே இருக்கிறது அத்தனையும் ரகசியம்தான். அத்தனை யும் தப்புத்தண்டாதான். அதையெல்லாம் காப்பாத்தத்தான் என்னையும் பாவாடையையும். இன்னும் ஒரு பட்டாளத்தையும் கட்டி வெச்சு உங்க அப்பா சோறுபோடறாரு!” 

“அதுதான் என்ன ரகசியம்னு கேக்கறேன்?”_ வசந்தி சற்றுக் கோபமாகவே கேட்டாள். 

“உனக்கு அவசியம் தெரிஞ்சு தான் ஆகணுமா? உங்கப்பாவுக்கு நான் சொன்னது தெரிஞ்சா என் முதுகுத் தோலை உரிச்சுக் கொடியிலே உலத்திப் பிடுவார்!” 

“சத்தியமா நான் உன்னைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் பாட்டி…” வசந்தியின் குரல் கெஞ்சுவது போலிருந்தது. கிழவி அவள் காதருகில் சென்று மெல்லக் கிசு கிசுத்தாள்; “கள்ளநோட்டு அச்சடிக்கறாரு. நாகப்பட்டிணத்திலே கப்பல் வந்ததும் கள்ளத் தோணி ஆட்கள் போய்-கஞ்சாவும் அபினும் கிராம்பும் கடத்திக்கொண்டு வருவாங்க.” 

“இதெல்லாம் எதுக்குப் பாட்டி?’’ 

“எல்லாம் பணம் சம்பாதிக்கத்தான்.” 

“பணம் சம்பாதிக்கவா? இப்போ அப்பாகிட்டே இருக்கிற பணமே ஏழு தலைமுறைக்குக் காணுமே?”

“ஏழு தலைமுறைக்குக் கண்டா? பதினாலு தலைமுறைக்கு வேணுங்கற ஆசை இருக்காதா? இது மட்டுமா? உன்னைப்போல அழகான பெண்களைப் பிடிச்சு வளர்த்து ஆளாக்கி, பம்பாயிலே இருக்கிற தரகுக்காரங்க கிட்டே வந்த விலைக்கு வித்துப்புடுவாங்களே!” 

“ஐயோ பாட்டி, இப்படியெல்லாம்கூட அக்கிரமம் நடக்குமா?” 

“இது என்ன அக்கிரமம்? இன்னும் எத்தனை யோ நடக்குது. உங்க அம்மா செத்துப்போனதுக்கப் புறம் வந்த வினை. அவரு மனசை இந்தப் பாவிங்கதான் இப்படிக் கலைச்சுப்புட்டாங்க. இதிலே ரெண்டு போட்டி கோஷ்டிங்கவேறே. இவங்க ரெண்டு பேருக்கும் மத்தியிலே மாட்டிக்கிட்டு நான் அல்லாடறேன்.” 

“அப்போ இதெல்லாம் சங்கருக்குத் தெரியும்னு சொல்றியா பாட்டி?” 

“நல்லாத் தெரியும், உங்க அப்பா இரும்புப் பெட்டிச் சாவியை நீ அவன்கிட்டே அடிக்கடி திறக்கக் கொடுத்ததே தப்பு. உங்க அப்பா என்னையே நம்பமாட்டாரு.” 

“அதனாலே என்ன பாட்டி? என்னாலே திறக்க முடியல்லேன்னா நான் என்ன செய்வேன்? சங்கர் கிட்டே கொடுத்தேன். அவன் நிமிஷமாத் திறந்துட்டானே!” 

‘‘ஏன் திறக்கமாட்டான்? அவன்தான் கில்லாடிக் கெல்லாம் கில்லாடியாச்சே. இவங்க அத்தனைபேரையும் விழுங்கி ஏப்பம் விட்டுடுவானே இல்லேன்னா, சவுக்குத் தோப்புப் பங்களாக் கம்பியைப் பெயர்த்துக்கிட்டு வெளியே வரமுடியுமா; பாவாடை வஸ்தாதைத்தான் மண்ணைக் கவ்வ வைக்க முடியுமா?” 

“அது மட்டுமில்லே பாட்டி. எங்க பள்ளிக்கூட ஸ்போர்ட்ஸிலேயே சங்கர் தான் பஸ்ட்! அப்பாவே அதிசயப்பட்டு மெடல் கொடுத்தார்னா பார்த்துக் கோயேன். ஆனால் அது எப்படியோ அநியாயமாத் தொலைஞ்சு போச்சு!” 

“போதும், விட்டுடு, அவன் பேச்சை. என் வயித்தைப் பத்தி எரியுது. இரும்புப் பெட்டியிலே யிருந்த துப்பாக்கியைக் காணோம். இன்னும் அத்தனை தஸ்தாவேஜியையும் காணோம். எல்லாத் தையும் இந்தப் பிள்ளை அடிச்சுக்கிட்டுப் போயிட்டுது!” 

“துப்பாக்கியா?” – வசந்தி ஆச்சரியத்துடன் கேட்டாள். 

“ஆமாம்.” 

“அப்பாகிட்டே ஏது? அவருக்கு எதுக்குத் துப்பாக்கி?” 

“துப்பாக்கி மட்டுமா? விஷம் கூட உங்கப்பா கிட்டே இருக்கு! இப்படிக் குறுக்கு வழியிலே பணம் சம்பாதிக்கிறவங்ககிட்டே – இது மட்டுமில்லே; இன்னும் என்னல்லாமோ ஆயுதம் இருக்கும் – அகப்படறமட்டும் எதிரிகளைச் சுட்டுக் கொல்லு வாங்க. அகப்பட்டுக்கிட்டா – மானம்தான் பெரிசுன்னு நினைச்சுத் தாங்களே உசிரைப் போக்கிக்கு வாங்க!” 

இதைக் கேட்டதும் வசந்தி அப்படியே அதிர்ந்தே போனாள். தன்னையுமறியாமல் அவள் விக்கி விக்கி அழுதாள். அந்த நள்ளிரவில், தாயற்ற அந்தச் சிறு பெண்ணின் விம்மல் ஒலி – தீனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. 

“வசந்தி, ஏன் இப்படி அழறே! இப்போ என்ன நடந்துட்டுது? அடடே….நாளைக்கு உங்க அப்பா, ‘ஜாம் ஜாம்னு’ உடம்பு குணமாகி வீட்டுக்கு வந்துடப் போறாரு. அப்புறம் உனக்கு என்ன பயம்?” என்றாள் கிழவி. 

வசந்தி அழுவதை நிறுத்தி விட்டு ஒருமுறை தீர்க்கமாகக் கிழவியைப் பார்த்தாள். 

“நீதானே கொஞ்ச முன்னாடி சொன்னே, சங்கர் எல்லா ரகசியத்தையும் தெரிஞ்சுக்கிட்டு ஓடிப் போயிட்டான்னு!” 

“ஆமாம்; அவன் இன்னும் ஒரு நாள் இங்கே தங்கி இருந்தா, அவனைத் தீர்த்தே கட்டியிருப் பாங்க. பாலிப் பயலுக்கு ஆயுசு கெட்டி பிழைச்சுப் போயிட்டான். இனிமே இந்தக் கூட்டம் -ரெண்டு கட்சியும் – நிம்மதியா இருக்க முடியாது. விடிஞ்சதும் விடியாததுமா நான் போயி எங்க அக்காகிட்டே இதைச் சொல்லியாகணும்!” 

“உனக்கு அக்காகூட இருக்காளா? அவ எங்கே இருக்கா! என்ன பண்ணறா?” 

“எல்லாம் பக்கத்திலேயேதான் இருக்கா-இதே தொழில்தான் அவள் தலையிலேயும் எழுதியிருக்கு. பாவாடைதான் அவளை ஆட்டிவைக்கறான். இது கூட அந்தச் சோனிப்பயலுக்கு தெரிஞ்சு போச்சு!”

“உங்க அக்காவைச் சங்கர் பார்த்திருக்கானா?”

“ரேக்ளா கட்டிக்கிட்டுப் போயி, விழுந்த அன் னிக்கு அவ வீட்டுக்கே போய்த்தான் உங்களுக்குக் குடிக்கத் தண்ணி வாங்கி வந்திருக்கான். போனா சும்மா வந்திருப்பானா? – வீடு பூராத் துழாவிப் பார்த்திருப்பான்!” 

“பார்த்தா என்ன? அங்கே அப்படி என்ன இருக்கு?” 

கத்தி, கம்பு, அரிவாள், கள்ளு, சாராயம்- இன்னும் இருக்கக்கூடாதது எல்லாமே இருக்கு. எல்லாத்தையும் விட வயல்காட்டிலே அது ஒரு ரகசிய இடம். அது எப்படியோ இந்த பயலுக்குத் தெரிஞ்சுப் போச்சு. ஆனா உங்க அப்பாவுக்காகத் தான் யோசிக்கிறான் போலிருக்கு…” 

“இப்பத்தான் அவன் ஊரை விட்டே ஓடிப் போயிட்டானே?” 

“ஆமாம்… இனிமே உங்கப்பாவுக்காகவும் பார்க்கமாட்டான்; எல்லா ரகசியமும் அவன் கையிலே மாட்டியாச்சு. சந்தானம் பிள்ளை மேலே கள்ளநோட்டு கேஸ் போட்டு, போலீஸை ராவோடு ராவா வரவழைச்சு அவரைப் பிடிச்சுக்கிட்டுப் போனாங்க…” 

“சந்தானம் பிள்ளைமேலே கள்ள நோட்டுக் கேஸா?” 

“ஆமாம், அவருமேலே எல்லாப் பழியையும் போட்டு, உள்ளே தள்ளிப்பிடணும்கறதுதான், உங்கப்பாவோட எண்ணம்; ஆனால் இப்போ அதிலேயும் மண் வுழுந்துட்டுது. உங்க அப்பா தான் மாட்டிக்கப் போறாரு!” 

“எப்படி, பாட்டி?”

“பாவாடையோட ஆளுங்க-சந்தானம் பிள்ளை வீட்டிலே உள்ள கள்ள நோட்டைக் கொண்டு வெச் சிட்டு, நல்ல நோட்டுகளைச் கொண்டு வந்தபோது- இந்தச் சோனிப் பயல்கிட்டே மாட்டிக்கிட்டு, அவங்க பணத்தையெல்லாம் பறி கொடுத்தாங்க!  பய சுட்டுத் தள்ளிப் பிட்டானாம்!” 

“எப்போ பாட்டி இதெல்லாம் நடந்தது?” 

“இதெல்லாம், நேற்று நிசி வேளையிலே நடந்த கதைதான். ஆனா ஒரு வாரமாத் திட்டம் போட்டுச் செஞ்சாங்க. அத்தனையும் பாழாப் போச்சு! ஆள் வந்து சொல்லிப்பிட்டுத் தானே போனான்!”

“அப்போ இங்கே வந்து நம்மைக் கட்டிப் போட்டவங்க?” 

“வீராசாமி ஆளுங்க” 

“அது யாரு பாட்டி, வீராசாமி?” 

“அதெல்லாம் உனக்குத் தெரியாது. பாவாடையும், உங்க அப்பாவும் செய்யற தொழிலைத்தான் இவங்களும் செய்யறாங்க. எப்படியோ பாவாடை ஆளுங்க சந்தானம் பிள்ளையோட பணத்தோடெ வர்ற விஷயம் தெரிஞ்சு; அதெல்லாம் இங்கே நம்ம வீட்டிலே தான் கொண்டு வெச்சிருப்பாங்கன்னு உத்தேசத்திலே வீட்டிலே புகுந்து இரும்புப் பெட்டியை உடைச்சிருக்காங்க. ஆனால் இவங்களை விடச் சங்கர் பய முந்திக்கொண்டு விட்டானாம். 

இனிமே என்னவெல்லாம் நடக்கப் போகுதோ?…. பொழுது விடிஞ்சு உங்க அப்பா வந்து என்ன பாடு படுத்தப் போறாரோ-இல்லே; இந்தப் பயலுக்கு வீட்டிலே இடத்தைக் கொடுத்ததுக்காக அவரு தான் என்ன பாடுபடப் போறாரோ? எது நடந் தாலும் ஒண்ணுக்கும் கவலைப்படாதே. உங்க அப்பா வந்து என்ன கேட்டாலும் நீ எதுக்கும் வாயே திறக்காதே. எல்லாம் நான் பார்த்துக்கறேன். இப்போ நீ உள்ளேப்போய் படுத்துக்கோ!” என்று அடுக்களை விளக்கை அணைத்தாள் கிழவி. 

வசந்தி மிகுந்த துயரத்துடன் தன்னுடைய கட்டிலில் வந்து படுத்தாள். ‘சங்கர் என்னை விட்டு விட்டுப் போய்விட்டானே!’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். 

இதேபோல் ரெயில் பிரயாணம் செய்துகொண்டிருந்த சங்கரும் வேதனைப்பட்டான். 

“வசந்தியிடம் நம்முடைய திட்டம் எதைப் பற்றியும் கூறாமல்; இப்படித் திடீரென்று புறப்பட்டு வந்து விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதே!’ என்று வருந்தினான். 

வெளியே எங்கும் கும்மிருட்டு. அந்த இருளுக்குப் பின்னணி போல்; ஓடுகிற ரெயிலின் ‘கடகட’ என்னும் ஓசை ஓலித்துக் கொண்டிருந்தது. 

அவனால் பட்டாமணியத்தை மறக்கவே முடியவில்லை. 

பணம் படைத்த மனிதர்களிடையே இத்தனை சூதும், வாதும், பிறரை வஞ்சித்துப் பொருள் சேர்க்கும் பேராசையும் ஏன் இடம் பெறவேண்டும்? ஏழைகளும், வாயில்லாம் பூச்சிகளும், இந்த வலியவர்களிடம் – கொடிய எண்ணமுடைய இரக்கமற்ற மனிதர்களிடம் சிக்கி என்ன பாடுபடுகிறார்கள் என்று சிந்தித்தான்; இதற்குத் தன்னால் இயன்றதைச் செய்தே ஆகவேண்டுமென அவன் தீர்மானித்தான். 

அதேசமயம்-ஏழைகளுக்காக – பணபலம் படைத்த இரக்கமற்ற சமூகத் துரோகிகளுடன் மோதுவது; கல்லில் தலையை மோதிக்கொள்வது போன்றது என் பதையும் உணர்ந்திருந்தான். 

ஆயினும், அவனால் கண்ணெதிரே நடக்கும் அநீதியைக் கண்டு சகித்துக் கொண்டு கோழையாக வாழப் பிடிக்கவில்லை. 

கடவுளால் தனக்கு அளிக்கப்பட்ட உடல் வலிமை, உள்ளத்து இரக்கம், சிந்தனைத்திறன். இம் மூன்றையும் கொண்டு ஒரு சில அக்கிரமக்காரர்களின் தீச்செயலையாவது ஒழித்தால்தான் அவன் மனம் ஆறும் போலிருந்தது. 

புதிதாகத் தான் மேற்கொண்டுள்ள முயற்சியில் இறங்கும்போது; தனக்கு எடுத்ததுமே வெற்றியோ புகழோ கிடைத்து விடாது என்றாலும்; ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்தானது என்பதைச் சங்கர் உணர்ந்து கொண்டான். 

டவுனிலுள்ள ஒரு சாதாரண ஹோட்டலில்- ஆனால், பத்திரமான-ஓர் அறையை வாடகைக்கு “எடுத்துக்கொண்ட சங்கர் அன்று பிற்பகல் ஒரு பொதுத் தொலைபேசி அறையிலிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தான். 

இன்ஸ்பெக்டர் ரிசீவரைக் கையிலெடுத்து, “யார் பேசுகிறது?” என்று கேட்டதும், “நான்தான் ஜேம்ஸ் பாண்ட் சங்கர் பேசுகிறேன்…” என்று துணிச்சலாகப் பதிலளித்தான். 

இன்ஸ்பெக்டருக்கு ஒரு கணம் ஒன்றும் புரிய வில்லை.”ஜேம்ஸ் பாண்ட் சங்கரா? அப்படியொரு பெயரா? எங்கே இருந்து பேசுகிறீர்கள்?” 

“நான் யார் என்பதும், பேசுகிறேன் என்பதும் அவ்வளவு முக்கியமல்ல. தாங்கள் நேற்று இரவு சந்தைப் பேட்டைக்கு வந்திருந்தீர்கள் அல்லவா?’” 

“ஆமாம்…” 

“சந்தானம் பிள்ளையைக் கைது செய்து கொண்டு வந்தீர்கள் அல்லவா?” 

“ஆமாம். அவர்மீது கள்ள நோட்டு வழக்கு ஒன்று பதிவாகி இருக்கிறது. அது சரி, தாங்கள் யார்?” 

“நான் அவருக்கு மிகவும் வேண்டியவன்.”

“உங்களுக்கு இப்போது என்ன தகவல் வேண்டும்?” 

“எனக்கு ஒருதகவலும் வேண்டாம். உங்களுக்குச் சில தகவல்கள் கொடுக்கலாம் என்றுதான் கூப்பிட்டேன்” 

இதைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் தம்முடைய நாற்காலியிலிருந்து சீற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். 

“எங்களுக்குத் தகவலா? உபயோக முள்ளதாக. இருந்தால் உங்களுக்கு நான் மிகவும் கடமைபட்டவனாக இருப்பேன். தாங்கள் விரும்பினால் இங்கேயே நேரில் வரலாம். எது பற்றிய விஷயமோ?” 

“சந்தானம் பிள்ளையை நீங்கள் கைதுசெய்தது ஒரு தவறான – அக்கிரமமான செயல்” என்றான் சங்கர். 

உடனே இன்ஸ்பெக்டர் சற்று உணர்ச்சி வசப்பட்டு; “நீங்கள் எங்கள் இலாக்காவைப் பற்றி, ஒரு டெலிபோன் மூலம் அவசரப்பட்டு இப்படிக் குற்றம் கூறுவது சரியல்ல. நாங்கள் தீரவிசாரியாமல் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கள்ள நோட்டுக்கள் சந்தானம் பிள்ளையின் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்டன. அதுவும் அவர் கண்ணெதிரிலே நாங்கள் நடத்திய சோதனையின் மூலம் உறுதியான விஷயம். 

இதற்கு சந்தானம் பிள்ளையே மறுப்புக் கூற வில்லை. அப்படியிருக்கும்போது; நீங்கள் எங்கள் இலாகாவைக் குறை கூறி இப்படியெல்லாம் பேசுவது சட்டப்படிக் குற்றமாகும்,” என்றார். 

உடனே சங்கர், “இன்ஸ்பெக்டர் சார், கோபப்படாதீர்கள். சந்தானம் பிள்ளை தன் வீட்டிலிருந்து கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப் பட்டதைத்தான் மறுக்கவே இல்லையே தவிர; அந்தக் கள்ள நோட்டுக்களை அவரே தன்வீட்டில் வைத்திருந்ததாக ஒப்புக் கொள்ளவில்லையல்லவா” 

உடனே இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு, “அப்படி, யார்தான் உடனே குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்; எல்லாம் விசாரணை நடத்தினால் உண்மை வெளி வரும்.” 

“நீங்கள் நடத்துகிற விசாரணையின் மூலம் உண்மை வெளிவராது. சந்தானம் பிள்ளை ஒரு கண்ணியமான மனிதர். தன் வாழ் நாளில் ஒரு தவறு கூடச் செய்யாதவர். அப்படிப் பட்டவருக்கு அந்தக் கள்ள நோட்டுக்கள் தன்னுடைய வீட்டிற்குள் எப்படி வந்து சேர்ந்தன; யார் இந்த வேலையைச் செய்திருப்பார்கள் என்று தெரியாத நிலையில்-அவர் மௌனமாக உங்களுடைய அழைப்பிற்கு இணங்கி உடன் வருவதைத் தவிர; அவரால் வேறு என்ன செய்ய முடியும்! 

“நான் சொல்லுகிறேன் நீங்கள் உங்கள் கடமையை மேலெழுந்த வாரியாகச் செய்து கொண்டு போயிருக்கிறீர்கள். எதிலும் சந்தேகப்பட்டுத் துருவிப் பார்க்கிற உங்களுடைய இலாகா விற்கே உரிய செயல் முறையை-இந்த வழக்கில் தாங்கள் கையாளத் தவறி விட்டீர்கள்.” 

கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதே உங்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றி போல எண்ணிவிட்டீர்கள். அதனால்; தங்களுக்கு இத்தகவலை அளித்தவர்கள் மீது சந்தேகம் எழவில்லை. 

அப்படி சந்தேகம் எழாத காரணத்தினால் உண்மைக் குற்றவாளியை வெளியே விட்டு விட்டு; நிரபராதியைக் கைது செய்து வைத்திருக்கிறீர்கள்” என்றான் சங்கர். 

இதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் பரபரப்புடன் ‘உண்மையாகவா?’ என்றார் உணர்ச்சி பொங்க. 

“சத்தியமாக” என்றான் சங்கர். 

உடனே இன்ஸ்பெக்டர், “இத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிற நீங்கள்; ஏன் நேரிலே இங்கு வந்து உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் உதவக் கூடாது?” என்று கேட்டார். 

உடனே சங்கர், “கண்டிப்பாக உதவுகிறேன். ஆனால். இந்த ஒரு கள்ள நோட்டு விவகாரத்தில் மட்டுமல்ல; இன்னும்-  

“சமூகத்தின் நல்வாழ்வுக்கு கேடு விளைவிக்கும் தீயவர்களை வேட்டையாடுவதற்கு உங்களோடு நான் முழு மனத்துடன் ஒத்துழைக்க விரும்புகிறேன். ஆனால் என்னை நீங்கள் நேரில் சந்திக்க அவசரப்பட வேண்டாம். ஆலய விக்கிரகத் திருடர்கள்; கள்ள நோட்டுக்காரர்கள்; சாராயப் பதுக்கல்காரர்கள் இன்னும் பலதரப்பட்ட பேர் வழிகள் என்னிடம் சிக்கியுள்ளார்கள். 

முதலாவதாக நீங்கள், சந்தானம்பிள்ளை குற்றவாளி அல்ல என்பதை நம்பி அவரைக் கௌரவமாக நடத்துங்கள். நீங்கள இப்போ தக்க படையுடன் நான் கூறும் விலாசத்துக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். அங்கு கள்ள நோட்டு மலையைக் காண்பீர்கள். அவர்கள்தான் வேண்டு மென்றே போலி நோட்டுகளைச் சந்தானம் பிள்ளை வீட்டில் வைத்துவிட்டு தாங்கள் தப்புவதற்காக – உங்களிடம் அவரைக் காட்டிவிட்டார்கள். உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க உடனே புறப்படுங்கள். இரவு நடுநிசிக்கு அந்த ரகசியப் பங்களாவை முற்றுகை இடுங்கள். வெற்றிக்குப் பின் உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்!” 

போனில் வந்த செய்தியை இன்ஸ்பெக்டரால் அலட்சியப் படுத்த இயலவில்லை. இளம் பையன் ஒருவனுடைய குரல் போல் இருந்தாலும்; அந்தக் குரலில்  உண்மையின் சாயை இருப்பது போல அவருக்குப் பட்டது. அதன் பிறகு – 

போலீஸ் சுறுசுறுப்பாகச் சில நடவடிக்கைகளை மேற் கொண்டது. சங்கர் தன் இரும்புப் பெட்டி ரகசியங்களை அறிந்து சென்றதிலிருந்தே பட்டாணியம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தார். 

சங்கர் தலைமறைவான பிறகு சில புதிய சம்பவங்கள் சங்கிலித் தொடர்போல் நடந்தன. பட்டாமணியம் ஆஸ்பத்திரியிலிருந்து விசேஷ அனுமதி பெற்றுக்கொண்டு வீடு திரும்பியும் அவர் முயற்சிகள் பலிக்காமல் போயின. அவர் போலி சாரிடம் சிக்காமல் இருக்க கூட்டாளிகளான பாவாடை முதலானோரைக் காவு கொடுத்து விட்டுப் பங்களாவுக்குள்ளேயே பதுங்கிக்கொண்டார். 

சந்தானம் பிள்ளை ஜாமீனில் வந்து சந்தைப் பேட்டையில் தம் அறப்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். சங்கரை உயிரோடு இழந்து விட்டதாக எண்ணி அவர் உள்ளூற வருந்தினார். 

வசந்தி- சங்கரைக் காணாமல் சில நாள் வருந்தினாலும் ஜேம்ஸ் பாண்ட் சங்கர் எங்கும் எப்போதும் ஆபத்தில்லாமல் இருப்பான் என்று அவள் எண்ணியது போலவே போலீசுடன் ஒத்துழைத்து விட்டு தக்க சமயத்தில் வந்து சேர்ந்தான். 

இதற்குள் விசாரணை முடிந்து கடத்தல்; கள்ள நோட்டு அச்சடித்தல்; விக்ரகத் திருட்டு; கள்ளச்சாராயம் போன்ற பல குற்றங்கள் புரிந்தோரிடம் தொடர்பு கொண்டிருந்ததற்காக பட்டாமணியத்திற்கு ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது.” 

பாவாடைக் கும்பலுக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தன. 

சங்கரின் கண்களில் படவே பட்டாமணியத்துக்கு வெட்கமாயிருந்தது. ஆயினும்; மனதார அவனிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டு-ரேக்ளா சவாரியின் போது சங்கரிடமுருந்து பாவாடை பறித்து வைத்திருந்த தங்க டாலரை மீண்டும் அவன் சட்டையில் செருகினார். 

கண்கலங்கிய பட்டாமணியத்தை அருகிலிருந்த சந்தானம் பிள்ளை சமாதானப்படுத்தினார். 

பட்டாமணியம்; தான் திரும்பி வரும் வரை, சங்கரைப் போலவே தன் மகள் வசந்தியையும் பாடசாலையில் தன்னுடன் வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். சந்தானம் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு பட்டாமணியத்தை நிம்மதியாகச் சென்று வரும்படிக் கூறினார். 

சங்கரும், வசந்தியும் அந்த ஆண்டு தேர்வு வரை ஒரே பாடசாலையில் இருந்து ஒரே பள்ளியில் படித்து தேறினார்கள். 

சங்கர் இப்போது பட்டணத்தில் சந்தானத்தின் உதவிப்பெற்றுப் படித்து வருகிறான். படிப்புச் செலவு; ஹாஸ்டல் செலவு எல்லாம் அவருடையதுதான். அவ்வப்போது அவனுக்குப் பணம் தேவைப் பட்டால் பட்டாமணியம் தாராளமாக அனுப்புவார். பட்டாமணியத்தின் இந்த மனமாற்றம் சந்தானத்திற்கு மகிழ்ச்சியாகி இருந்தது. சங்கரை எண்ணும் போதெல்லாம் அவர் உள்ளம் பூரிக்கும். காரணம் அவரைக் கௌரவமாக மீட்டு உதவியதற்காக மட்டுமல்ல; அவன் படிப்பில் நிகரற்ற சூரனாக இருந்தான்.கையிலே அசாதாரண வலு இருந்ததை போல உள்ளத்திலே இரக்கமும், கருணையும், உறுதியும் இருந்தன. இப்படிப்பட்ட இளைஞர்கள் தானே நாட்டுக்கு இப்போது தேவை என்பது அவரது எண்ணம். 

– முற்றும் –

– ஜேம்ஸ் பாண்ட் சங்கர், முதற் பதிப்பு: டிசம்பர் 1984, காயத்ரி பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *