ஜேம்ஸ் பாண்ட் சங்கர்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 1,712 
 

அத்தியாயம் 1 – 5 | அத்தியாயம் 6 -10 | அத்தியாயம் 11 -16

6. நடுத்தெருவில் ஒரு நாடகம்! 

வசந்திக்கு அன்றிரவெல்லாம் உறக்கமே வா வில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். மன உளைச்சல் தாளவில்லை. தான் செய்தது சத்தியத்துக்கும் நேர்மைக்கும் புறம்பானதல்ல. அதை உணர்ந்தே அவள் நிரபராதியான சங்கரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆனால், அவள் செய்தது தன் அப்பாவுக்கு எதிரான காரிய மல்லவா? 

சாவியைப் பெற்றுக் கொண்ட மானேஐ அவளைப் புகழ்ந்தார். அது அவளது மனத்துக்கு மிகவும் இதமாயிருந்தது உண்மை தான்; பெருமையாகக்கூட இருந்தது. 

பொழுது விடிந்ததும் விடியாததுமாகப் பாவாடை யுடன், பெரும் சண்டை போல் இரைந்து கத்திக் கொண்டிருந்தார் பட்டா மணியம். 

வசந்திக்குத் தந்தையின் இந்தக் கோபத்துக் கான காரணமே புரியவில்லை. ஏனென்றால் இரவு போருக்குத் தீ மூட்டியதாகவும், அந்தப் பழியைச் சங்கர்மீது சுமத்த அவனையும் அவனது கூட்டாளி யையும் சவுக்குத் தோப்புப் பங்களாவில் முன்னெச் சரிக்கையாகச் சிறைப்படுத்தி யிருப்பதாகவும் பாவாடை கூறியது கேட்டு அவர் அடைந்த மகிழ்ச் சிக்கு அளவே இல்லை. பாவாடையை அவனுடைய திறமைக்காக வானளாவப் புகழ்ந்தார். இப்போதோ தாறுமாறாகத் திட்டுகிறார்! 

காரணம்; வசந்தி எதிர்பார்த்ததுதான். சங்கர் தோட்டத்து வீட்டிலிருந்து தப்பித்துச் சென்று விட்டானாம்! 

“முட்டாளே! பூட்டு அப்படியே பூட்டியபடி இருக்கு; ஒரு பொடிப்பயல் ஜன்னல் கம்பியை வளைச்சுத் தப்பிப் போய்விட்டான்னு பூதம் மாதிரி ஓர் ஆள் வந்து சொல்றியே, உனக்கு வெட்கமா இல்லை?” 

“நான் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லைங்க எஜமான்!”-பாவாடை குழறினான். 

“நீ எதிர்பார்த்தபடி என்னதான் நடந்திருக்கு? சந்தைப் பேட்டையிலே உன் மானம் துளியுண்டுப் பயல்கிட்டே மண்ணைக்கவ்வும்னு எதிர்பார்த்தியா? உள்ளே கொண்டு வந்து அடைச்சவன்; அந்த வீட்டுக்கு ஓர் ஆளைக் காவல் போடறதுக்கு என்ன?” 

“அப்படிச் செய்யாததுதான் எஜமான் தப்பாப் போச்சு!” 

“போச்சா? கருங்கல்லிலே போய் முட்டிக்கோ! காரியம் மிஞ்சிப்போனப்புறம் இப்போ என்கிட்டே வந்து கையைப் பிசைஞ்சு என்ன பண்ணறது?’ அடைச்சு வச்ச பயல் அப்படியே இருக்கானான்னு பார்க்காமலே சந்தானத்தின்கிட்டே வேறேபோய்க் கூட்டமாய்ச் சொல்லித் தொலைச்சுட்டு வந்திருக்கே!”

“அதுதானுங்களே எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு.’ 

“நல்லா குழம்பு! உன்மாதிரி முட்டாளை நம்பிக் காரியத்திலே இறங்கினதுக்கு நானும் சேர்ந்து குழம்பறேன். ஏன்னா அவனை என் வீட்டில் இல்லையா அடைச்சு வெச்சிருந்தே? தப்பிப் போன பயல் ஒண்ணுவிடாமச் சொல்லி உன்னோடு என்னையும் சேர்த்துச் சந்தி சிரிக்க வைக்கப் போறான். என்மானம் போகறதுக்குள்ளே நான் உசிரை விடறதேமேல்!” 

ஆக்கிரோஷத்துடன் பட்டாமணியம் கூறிய இந்த வார்த்தையைத் தன் அறையிலிருந்து கேட்ட வசந்திக்குத் திக்கென்றது. 

‘சங்கருக்கு உதவி செய்ததில், தர்மமும் நியாய மும் இருக்கலாம். ஆனால் அது-அந்த உதவி-என் அப்பாவின் உயிரைப் பறிக்கிற அளவுக்குப் போகு மென்றால் அது கொடுமையல்லவா? அப்பாவின் மானக்கேட்டுக்கும் மரணத்துக்கும் நாமே காரண’ மாக இருப்பதா? எல்லாவற்றையும்விடப் பூட்டிய பூட்டும்; பூட்டிய படியே இருந்ததாம். சங்கர் ஜன்னல் கம்பியை நீக்கியல்லவா கம்பி நீட்டிவிட் டானாம்! அப்படியானால் நான் மானேஜரிடம் சாவி கொடுத்தனுப்பியது என்னவாயிற்று? என் உதவி யைப் பெறுமுன்னரே சங்கர் தப்பிச் சென்று விட்டானா?” 

இப்போது வெளியேயிருந்த பட்டாமணியம், பாவாடை, இவர்களுடையதைவிட ; வசந்தியின் மனம் தான் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தது. சங்கருக்கு ஆபத்தில் உதவத் தூண்டிய அவளது நல்ல உள்ளம் தந்தையின் இடருக்கும் முடிவு காணத் துடித்தது. 

ஒரு திட்டம் அவள் உள்ளத்தில் பளிச்சிட்டது. 

ஆனால் அதை எப்படி அவள் தன் தந்தை யிடம் தெரிவிக்க முடியும்? மேலும் தந்தையின் இந்த ரகசிய நடவடிக்கைகளை எல்லாம் அவள் கவனித்த தாகவே காட்டிக் கொள்ளக் கூடாதே! பிறகு அவள் மீதும் அவருக்குச் சந்தேகமல்லவா. வந்துவிடும்? 

அப்போது, வசந்திக்காக வேளையாள் காப்பி கொண்டுவந்து வைத்தான். அவனிடம், (வண்டிக் கார முனியன் இருக்கானா?’” என்று விசாரித்தாள். 

“ஐயாவும்,பாவாடையும், முனியனும் ஏதோ முக்கிய விஷயம் பேசிக்கிட்டிருக்காங்க–” 

“சரி. நேத்திக்கு வண்டியிலே என் பேனா விழுந்திடுத்து. முனியனை நான் கூப்பிட்டதா வரச் சொல்லு!’” வசந்தி துணிந்து ஒரு பொய்யைச் சொல்லி அனுப்பினாள். 

ஆம்! அப்பாவுக்கும் பாவாடைக்கும் முனியன் வ்வளவு அந்தரங்கமோ; வசந்திக்கும் அவன் அவ் வளவு அந்தரங்கம். ஆனால் அவள் தாய்-பட்டா மணியத்தின் உத்தமமான மனைவி – உயிர் பிரியும் நேரத்தில் வசந்தியையும், தீய வழிகளிலே ஈடுபடும் தன் கணவரையும் துன்பம் நேராமல் காப்பாற்ற வேண்டிய பணியை அவனிடம் வேண்டியிருந்தாள் காரணம்; முனியன் அந்த வீட்டில்வண்டிக்காரனாக மட்டும் விளங்கவில்லை. குடும்பத்தில் சகல பொறுப்புக்களுமே அவனிடம் தான் ஒப்படைக்கப் பட்டிருந்தன. 

முனியனைக் கண்டதும் வசந்திக்கு அழுகையே வந்து விட்டது. 

“உள்ளே பேசிக்கிட்டிருந்ததெல்லாம் என் காதிலேயும் விழுந்தது. அப்பாவுக்கு அவமானம் ஏற்படக்கூடாது முனியா!” என்று விம்மல்களுக்கு கிடையே வசந்தி முனகினாள். 

முனியன் அன்போடு, “நானும் அதைப்பத்தித் தான் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்மா. இந்தப் பாவாடை எக்கச்சக்கமா சந்தானத்தய்யா கிட்டே போய் அவசரப்பட்டு உளறி வெச்சிருக்கான். இனி என்னெல்லாம் நடக்கப் போகுதோ?” என்று அங்கலாய்த்தான். 

உடனே வசந்தி, “அப்படியொன்றும் நேராது. சங்கரை என்னவோ காப்பாற்றி விட்டோம். அப்பாவுக்கும் ஒரு நல்ல வழி எனக்குத் தோணுது” என்றாள். 

“அது என்ன பாப்பா?” என்று ஆவலோடு கேட்ட முனியன் காதில், ரகசியமாகத்தன்னுடைய யோசனையைக் கூறினாள் வசந்தி. 

“என்ன இருந்தாலும் படிச்ச புள்ளை; படிச்ச யுள்ளைதான். இந்த ஐடியா எங்க யாருக்கும் தோணவே இல்லையே!” என்று புகழவாரம்பித்து விட்டான் முனியன். 

உடனே வசந்தி சட்டென்று அதை ஏற்காதவள் போல், “அது சரி முனியா, இதில் ஒரு முக்கிய மான விஷயம். இப்போ நான் சொன்ன விஷயம் உனக்குத் தான். ஐயாகிட்டே நீ இதை உன்னு டைய யோசனையாகத்தான் சொல்லணும்; அதை மறந்துவிடாதே!” என்று எச்சரித்தாள். முனியன் கிளம்பினான். 

குழம்பிக் கொண்டிருந்த பட்டாமணியத்திடம், “எஜமான், எனக்கு ஒரு ஐடியா தோணுது. இப்படிச் செஞ்சா என்ன?” என்று விஷயத்தைக் கூறினான். அதைக் கேட்டதும் பாவாடை மட்டு மென்ன; பட்டாமணியமே அசந்து போய் விட்டார். 

“முனியா, உன்னுடைய இந்த யோசனை யினாலே என்னுடைய மானம் மட்டுமில்லே, உயிரே பிழைச்சுது!” என்று வாயாரப் புகழ்ந்தபடி இரும்புப் பெட்டியைத் திறந்து நூறு ரூபாை எடுத்துப் பாவாடையின் கையில் கொடுத்தார். “ஓடு இப்பவே ஒரு பயலை இழுத்துக் கொண்டு வா! நானும் சற்றைக்கெல்லாம் சந்தானத்தின் வீட்டுக்கு. வந்து விடுகிறேன். காரியம் ஐந்து நிமிஷத்துக்குள் முடிஞ்சாகணும்!” என்று விரட்டி அனுப்பினார். 

அதன்படியே சற்றைக்கெல்லாம் பட்டாமணியம் அங்கே சென்றபோது; சந்தானத்தின் வீட்டு வாசலிலே இருந்த மரத்தில் ஓர் ஆளைக் கயிற்றால் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் பட்டா மணியத்தைக் கண்டதும், எகிறிக் கொண்டு, “எஜமான், மன்னிக்கணும். தெரியாம, பழைய விரோதத்திலே பாவாடையோ வைக்கப் போருக் குத் தீ வெச்சுட்டேன். இனிமே இந்த மாதிரித் தப்புத் தண்டாவுக்கெல்லாம் போகமாட்டேன் என்று விழுந்து கும்பிட்டான்.

பட்டாமணியத்துக்கு முகத்திலுள்ள கடுமை மாறவே இல்லை. 

“சீ, அயோக்கிய நாயே! எழுந்திரு!உன்னாலே இந்த ஊருக்கே எவ்வளவு பெரிய அவமானம்! சந்தைப் பேட்டைச் சண்டையை மனசிலே வெச்சுக் கிட்டு, சங்கர் தான் நெருப்பு வெச்சிருக்கான்னு பாவாடை குதிக்கறான். உன்னை நான் வலை போட்டுப் பிடிக்காட்டா, பாவம், அந்த சாதுப் பிள்ளை மேலே தானே பழி விழுந்திருக்கும்?” என்று கூறியபடியே கையிலிருந்த சவுக்கால் பளார் பளார் என்று பட்டாமணியம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆம்! கொடுத்த நூறு ரூபாய் செரிக்க வேண்டாமா? 

ஆனால் இந்தச் சூதுவாது ஒன்றும் அறியாத சந்தானமோ,”போதும்பட்டாமணியம், விட்டுடுங்க; ஏதோ அறியாத்தனமா விரோதத்திலே நடந்துக் கிட்டிருக்கான். ஆனால் பாவாடை வந்து என் பள்ளிக் கூடப் பையன் சங்கர் மேலே பழியைப் போட்டதும் என்னாலே நம்பவே முடியவில்லை!” என்றார் உணர்ச்சி பொங்க. 

“என்னாலே மட்டு நம்பவா முடிஞ்சுது? நானும் அதை நம்பாமத்தானே உண்மைக் குத்த வாளியைக் கொண்டு வந்தாகணும்னு இத்தனை பாடுபட்டேன்!” என்று பட்டாமணியமும் சேர்ந்து கொண்டார். 

இந்த நாடகத்தைக் கூட்டத்தோடு கூட்டமாய், சங்கரும் மானேஜரும் மட்டுமல்ல; வசந்தியும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். 

7. விளையாட்டுப் போட்டி 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பட்டாமணியம் வெகு வாக மாறிவிட்டார். பாவாடையை நம்பிக் காரியத்தில் இறங்குவது; மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குகிற கதைதான் என்பது அவருக்குப் புரிந்து விட்டது. சந்தானத்தைப் பழிவாங்க நினைத்தது போக,  சந்தானத்திடமிருந்து மட்டுமல்ல; ஊரார் கண்ணெதிரிலிருந்தும் மானம் போகாமல் பிழைத்ததே பெரிய காரியமாகப் போய் விட்டது. 

இப்பொழு தெல்லாம் அவர் சந்தானத்துடன் கூடச் சகஜமாகப் பழகி உறவு கொண்டாடினார். 

அடிக்கடி வலுவிலேயே சந்தானத்தின் வீட்டுக்குப் போனார். வளர்ந்து பெருகும் பள்ளியின் வளர்ச்சி யிலேஅதிக அக்கறை காட்டினார். 

வண்டி அனுப்பி, சங்கரை வீட்டுக்கு அழைத்து வருவார் விருந்தளிப்பார். அப்போதெல்லாம் சந்தானத்தின் அநுமதியை ஒவ்வொரு தடவையும் பெற்றேதான் சங்கர் செல்வது வழக்கம். 

வசந்தியும் சங்கரும் மிகவும் அன்னியோன்னிய மாகப் பழகுவது கண்டு பட்டாமணியம் மனம் பூரித் தார். வசந்தியும் அப்பாவின் மனம் இப்படி மாறும் என்று எதிர்பார்க்கவில்லையே! 

எல்லாவற்றையும் விட, அந்த வருஷம் நடை பெறவிருக்கும் பள்ளி விளையாட்டுப் போட்டியில் பட்டாமணியம் சங்கருக்கு மிகவும் உற்சாகமூட்டினார். 

அந்த வருஷம் பட்டணத்துப் பள்ளி ஒன்றுடன்; தாயுமானவர் பள்ளி விளையாட்டுப் போட்டி நடத்து வதாக இருந்தது. 

எல்லா விளையாட்டுகளுக்கும் தாயுமானவர் பள்ளி ஒவ்வொரு டீமுக்கும் திறமையான மாணவர் களைப் பொறுக்கி வைத்திருந்தது. 

சங்கர் இரும்புக் குண்டு வீசி எறியும் போட்டி யில் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டான். இதைக் கண்டு எள்ளி நகையாடியவர்கள் பலர். ‘சோனிச் சங்கரால் அந்த வலுவான குண்டைத் தூக்கவே முடியதே; பிறகல்லவா அவன் அதை வேகமாக வீசி எறிந்து வெற்றி பெறுவதற்கு?’ என்று அனைவருமே எண்ணினார்கள். ஹெட்மாஸ்டர்கூட, வாலிபாலிலோ, புட்பால் போட்டியிலோ கலந்து கொள்ளும்படித்தான் சங்கரைச் சிபாரிசு செய்தார். ஆனால், சங்கர் தனக்கு இந்தப் போட்டியில் மிகுந்த நம்பிக்கை இருப்பதாகக் கூறிவிடவே, அதற்குமேல் அவனை யாரும் வற்புறுத்தவில்லை. 

குறிப்பிட்ட தேதியில் பட்டணத்துப் பள்ளி விழாக் கோலம் பூண்டு காட்சியளித்தது. 

பூப்பந்தாட்டப் போட்டி, முதல் நாள் நடை பெற்றது. இதில் இரு தரப்பிலிருந்தும் மாணவிகளே பங்கு கொண்டார்கள். பிற்பகல் வரை இரு கோஷ்டியும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடிய வில்லை. ஆட்டம் உற்சாகமாகவும், மும்முரமாகவும் தொடர்ந்தது. தாயுமானவர் பள்ளியின் கோஷ் டிக்கு வசந்திதான் லீடர். அவள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், லாகவமாகவும் விளையாடக் கூடியவள் என்பதைச் சங்கரே அன்றுதான் கண்டான். பந்து அவளது மட்டையில் சொன்னபடி. யெல்லாம் கொஞ்சி விளையாடியது. 

ஆட்டத்தை ஊக்குவிக்கவும், ஆடுபவர்களை உற்சாக மூட்டவும் ஒவ்வொரு மும்முரமான கட்டத் திலும் இருதரப்பிலிருந்தும், சீழ்க்கையும் கைதட்ட லும் விசில் ஒலியும் எழுந்துக் காதைத் துளைத்தன. 

முற்றிலும் பெண்களே கலந்து கொள்ளும் விளை யாட்டு இது ஒன்றேயாதலால்; பார்ப்பதற்கு வேடிக் கையாகவும், அழகாகவும் இருந்தது. 

வசந்தி அடிக்கொருதரம் தன் தந்தை அமர்ந் திருக்கும் பகுதிப் பக்கம் விழிகளைச் சுழல விட்டுக் கொண்டே இருந்தாள். அதற்குக் காரணம், சங்கர் பட்டாமணியத்தின் அருகிலேயே அவளது ஆட்டத்தை மிகவும் ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தது தான். 

“வெல்டேக்கன் வசந்தி!” 

‘“குட்!’” 

“க்ளவர்”- போன்ற புகழுரைகள் வசந்தியை வெகுவாக உற்சாக மூட்டிவிட்டன போலும். மிகவும் அநாயாசமாக விளையாடி இறுதி ஆட்டத்தில் வெற்றியை நிலை நாட்டிவிட்டாள். 

கரகோஷம் காதைப் பிளந்தது. வசந்நியையும், அவளது கோஷ்டியையும் எல்லோரும் புகழ்ந்தார்கள். 

தந்தையின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்ட வசந்தியிடம், சங்கர் கையில் தயாராக வைத்திருந்த உயர்ரகச் சாக்லெட்டை நீட்டினான். அவளும் அதை ஆசையுடன் வாங்கிச் சுவைத்தாள். விளையாடிக் களைத்து வந்த அவளுக்குச் சங்கர் அளித்த பரிசு மிகவும் இனித்தது. 

பூப்பந்தாட்டப் போட்டியை அடுத்துக் கால் பந்துப் போட்டி ஆரம்பமாயிற்று. 

இரண்டு கோஷ்டிகளின் பெயர்களும் வாசிக்கப் பட்டன. அனைவரும் தயாராய் ஃபீல்டுக்கு வந்து விட்டார்கள். 

குறிப்பிட்ட நேரம் நெருங்கியதும் ரெபரி விசிலை ஊதினார். பம்பரமாகப் பையன்கள் சுழன்றும் பாய்ந்தும், ஓடியும் விளையாடினார்கள். பூப்பந் தாட்டத்தில் இழந்த வெற்றியைக் கால்பந்தில் நிலை நாட்ட வேண்டுமென்று பட்டணத்துக் கோஷ்டி மும்முரமாக ஆடியது. 

தாயுமானவர் கோஷ்டியும், ‘இதிலும் வெற்றி எங்களுக்குத்தான்!” என்கிற இறுமாப்புடனேயே ஆடியது. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைக்க வில்லை. பட்டணத்துக் கோஷ்டியின் கோல்கீப்பர், தாயுமானவர் கோஷ்டியின் திறமைகளையெல்லாம் அப்படியே விழுங்கி ஏப்பம் விடுவதில் வல்லவனாக இருந்தான். இறுதியில் அப்படியே ஏப்பம் விட்டு விட்டான். 

அன்று பளு எறியும் போட்டி; தாயுமானவர் பள்ளி மாணவர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டார் கள். ‘வழக்கமாக நாம் ஜயிக்கும் வாலிபாலும், புட் பாலுமே போய்விட்டன; இதிலா சங்கர் ஜெயிக்கப் போகிறான்?’ என்று அனைவருமே வருத்தம் கலந்த குரலில் பேசிக் கொண்டார்கள். 

ரெபரி மூன்றாவது விசிலை ஊதிவிட்டார். 10, 20, 30, 40, 50 கிலோ எடைக் கணக்கில் தரையில் குண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன சங்கர் முதலில் 20 கிலோ குண்டைத் தூக்கி இடது கையால் அநாயாசமாா வீசி எறிந்தான். இந்தப் போட்டிக்குத் தாயுமானவர் பள்ளியின் சார்பில் சங்கரைத் தவிர வேறு மாணளர்கள் யாருமே கலந்து கொள்ள விரும்பவில்லை. தங்களால் முடியாது என்று ஒதுங்கிவிட்டார்கள். ஆனால் எதிர்த் தரப்பில் ஆறுபேர் கலந்து கொண்டிருந்தார்கள். 

சங்கர் வீசியதும், எதிர்க்கட்சியிலிருந்து ஒருவன் அதே தூரத்துக்கு அந்தக் குண்டை வீசி எறிந்துவிட்டுச் சென்றான். 

அடுத்து, சங்கர் வரிசையாக 30,40, என்றுவீசி , எறிந்தான்; இப்போது எதிர்த் தரப்பில் ஒருவனே இருந்தான். 30-வது கிலோவிலேயே பாக்கிப்பேர் தோற்றுப் போய்விட்டார்கள். 

கடைசியாக இருந்தவன் மிகுந்த சிரமப்பட்டு 40 கிலோவை வீசி எறிந்து தன்கட்சியின் வெற்றிக்கு உயிர் ஊட்டி விட்டான். 

உடனே சங்கர் 50 கிலோ குண்டைத் தூக்கிப் பலம் கொண்டமட்டும் வீசி எறிந்தான். எங்கோ கண்ணுக்கெட்டாத தூரம் புல்லுக்குள் சென்று விழுந்தது அந்தக் குண்டு! 

கரகோஷம் வானைப் பிளந்தது. அத்தனை நேரம் உற்சாகமிழந்து கிடந்த தாயுமானவர் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல; ஆசிரியர்களுமே வியப்பில் ஆழ்ந்து விட்டார்கள். 

பட்டணத்துக் கோஷ்டியில் இறுதியாக எஞ்சி யிருந்த அந்த மாணவன் மிகுந்த தயக்கத்துட னேயே வந்தான். அந்த 50 கிலோ குண்டை அவனால் முழங்காலுக்குமேல் தூக்க முடியவில்லை. 

தன்னுடைய வலிமையை எல்லாம் திரட்டி, இரண்டு கைகளினாலும் உயர்த் தூக்கிய அவன்; குண்டை ‘தொபுகடீர்’ என்று கீழே போட்டுவிட் டான். தூக்கவே முடியாதபோது எடுத்து வீசுவது எங்கே? தோற்றுப்போனான்! 

கேட்கவேண்டுமா சங்கர் பள்ளி கோஷ்டியின் உற்சாசத்துக்கு? சங்கரின் நண்பர்கள் வெற்றி வாகை சூடிய சங்கரை அப்படியே அலாக்காகத் தோளில் தூக்கிக் கொண்டு “ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் சங்கருக்குஜே!; ஜேம்ஸ்பாண்ட் சங்கருக்குஜே!!> என்று புதிய பட்டமளித்து ஆனந்தக் கூத்தாடினார்கள். 

அன்று முதல் சாதாரண சங்கர் ஜேம்ஸ்பாண்ட் சங்கரென்று எல்லா மாணவர்களாலும் அழைக்கப் பட்டான். 

ஆம், தாயுமானவர் பள்ளியின் சரித்திரத்தி லேயே ஒரு புதிய ரிகார்டை அல்லவா சங்கர் ஏற்படுத்தி விட்டான்! பளு எறிவதற்கான வெற்றிச் சுழல் கோப்பையைத் தொட்டுக்கூடப் பார்த்திராத தாயுமானவர் பள்ளியின் சார்பில் சங்கர் பெற்றுக் கொண்டபோது அங்கே கூடியிருந்த அத்தனை பேருடைய உள்ளத்திலும் மகிழ்ச்சி கரைபுரண்டோ டியது. 

வசந்தியில் கண்ணில் நீரே வந்து விட்டது. ஆம், சங்கர் அடைந்த வெற்றி அவள் அவள் அடைந்த வெற்றியே அல்லவா? அதுமட்டுமல்ல; அந்த வருஷ விளையாட்டுப் போட்டியிலேயே, வசந்தியும் -சங்கருந்தானே பள்ளியின் புகழைக் காப்பாற்றியிருக்கிறார்கள்? 

தம்முடைய பாதங்களைத் தொட்டு வணங்கிய சங்கரைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண் டார் சந்தானம். அப்போது அருகிலிருந்த பட்டா மணியத்தின் உள்ளத்தில் என்ன உணர்ச்சிகள் பிரதிபலித்தன என்று வர்ணிக்கவே முடியாது. 

தன் கோட்டில் தொங்கிக் கொண்டிருந்த தங்க டாலரை எடுத்துச் சங்கரின் சட்டையில் செருகிய போது முதலில் வசந்திதான் கைதட்டி ஆரவாரத்தைக் கிளப்பினான். இப்போதெல்லாம் பட்டாமணியத்துக்கு வசந்தி வலது கண் என்றால் சங்கர் அல்லவா இடது கண்! ஆனால்…. 

எஜமானருடைய இந்தத் திடீர் மனமாற்றத்தைக் கண்டு எங்கோ மூலையிலிருந்த பாவாடை மிகவும் மனம் குமுறினான். 

8. ரேக்ளா சவாரி 

சங்கரின் மதிப்புத் திடீ ரென்று பெருமளவு உயர்ந்து விட்டது. 

பட்டாமணி யத்தினு டைய கோட்டில் இத்தனை நாளும் தொங்கிக்கொண்டி ருந்த பெரிய தங்கடாலர் இப்போது சோனிச் சங்கரு டைய சட்டையிலல்லவா தொங்கிக் கொண் டிருக் கிறது! சங்கர் அதைப் போட்டுக்கொண்டு உலவும் போதெல்லாம் பாவாடை யின் நெஞ்சம் பொறாமை யினால் வெந்து நீறாகியது. 

‘தூ, என்னா நன்னி கெட்ட மனுஷன் ஐயா, இந்த பட்டாமணியம்?’ என்று சலித்துக் கொண்டான்.

‘எத்தனை தெருச் சண்டைகள், வயல் தகராறுகள், கிஸ்தி வசூல் இதிலெல்லாம் பட்டா மணியத்துக்கு வலது கையா இருந்து ராப்பகலா எவ்வளவு உழைச்சிருக்கிறேன்; எத்தனை வருஷப் பழக்கம்! இந்த உறவை எல்லாம் மனுஷன் மறந்துப் பூட்டு, நேத்துவரை தீத்துக் கட்டணும்னு எண்ணிக் கிட்டிருந்த பயலைத் தூக்கித் தலைமேலே வெச்சுக் கிட்டுத் திரியறாரே! அவன் என்ன சாதிச்சுப் புட்டான்னு டாலரைக் கழட்டி மாட்டினாரு. என்று எண்ணி எண்ணிக் குமுறினான். வஞ்சம் தீர்த்துக்கொள்ளவும் வழி பார்த்தான். 

வருஷந்தோறும் சந்தைப் பேட்டையில் நடை பெறும் மாட்டுச் சந்தை மிகவும் பிரசித்தமானது. 

மாட்டுச் சந்தை இருபது நாள் முதல் ஒரு மாசம் வரையில்கூட நடைபெறும். இதற்காகவே வழக்க மாக ஒரு திடல் ஒதுக்கப்பட்டிருக்கும். 

சந்தை கூடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, ஹோட்டல், ஷாப்புக்கள், மளிகை என்று பலதரப் பட்ட திடீர்க் கடைகள் தோன்றிவிடுவது வழக்கம். வெளியூரிலிருந்து வரும் மாட்டு வியாபாரிகள் அந்தப் பொட்டல்வெளிகளில் தங்கள் விலையுயர்ந்த மாடு களையும் கட்டிவிட்டு; அருகேயே கூரைக் குடிசை அமைத்துக்கொண்டு தாங்களும் தங்கிவிடுவார்கள். 

ஒரு நாள் பகல் பொழுது பட்டாமணியம் பாவாடையுடன் சந்தைக்கு வந்திருந்தார். கூடவே வேடிக்கை பார்க்க வசந்தியும் வந்திருந்தாள், பலதரப்பட்ட மாடுகளைப் பார்வை இட்டார்கள். சுற்றிக்கொண்டே வரும்போது துடிப்பான காளைக் கன்று ஒன்று பட்டாமணியத்தைக் கவர்ந்தது. 

ரேக்ளா வண்டிக்கு மிகவும் பொருத்தமான மாடு! 

‘“ஏன் பாவாடை, கன்னுக்குட்டி எப்படி யிருக்கு? பரவாயில்லையா?” என்று கேட்டார். 

“வாங்கிப்புடலாம் எசமான் சுழியெல்லாம் கூட நல்லாயிருக்கு ஆனா-“

‘ஆனா என்ன?”

“விலையைத்தான் படையாச்சி ஒரே முட்டாச் சொல்றாரு. ஐந்நூறு ரூபாய் வேணுமாம். ஒரு ஜோடி மாடு விலை!” 

“ஐந்நூறு ரூபாயா?” 

பட்டாமணியம் வியந்தார். 

“எனக்காகக் கொடுக்க வேண்டாம்; ஐயா! மாட்டைப் பிடிச்சுப் பார்த்துக் கொடுத்தாப் போதும். நானூற்றி ஐம்பதுவரை கேட்டிருக்காங்க!” என்று படையாச்சி கூறினார். 

அந்த அழகான காளைக் கன்று வசந்தியைப் பார்த்துத் தலையைத் தலையை ஆட்டியது. மிகவும் வாஞ்சையுடன் அவள் அதன் முகத்தையும் முதுகையும் தடவிக் கொடுத்தாள். குஷியால் அது பின்னங் கால்களைத் தூக்கிக் கொண்டு ஒரு துள்ளுத் துள்ளியது. 

“எஜமான் கிட்டே வரணுங்கிறான் பயல். பணத்தைப் பார்க்காதீங்க….” என்று படையாச்சி உற்சாக மூட்டினார். 

பட்டாமணியம் விரும்பியபடியே முனியனையும் அழைத்துக்கொண்டு மாலையில் பாவாடை வந்து
ரேக்ளா மாட்டுக்குபி பேரம் பேசினான். முனியனுக்கும் மாடு பிடித்திருந்தது. ஆனால் ரொம்பத் துடுக் காக இருக்கும் போலிருந்தது. மேலும் வண்டியில் பூட்டி இதுவரை அதிகம் பழக்கப்படாததால், திமிர் ஏறிப்போயிருந்தது. அதனால்தான் சற்றுத் தயங்கினான். 

“எஜமானும் வசந்தியம்மாவும் இதுமேலே ஆசைப்படறாங்க…” என்று பாவாை சற்று வற்புறுத்திக் கூறவே, “அப்படீனன்னா முடிச்சுப்புடு வோம்” என்று முனியன் சம்மதித்துவிட்டான். 

ரேக்ளாவில் பூட்டி இதுவரை மூன்று தடவை கீழே தள்ளி வண்டியையும் உடைத்திருக்கிறதாம் இந்தக் காளை. அதனால் கொஞ்சம் ஜாக்கிரதை யாக இருக்கும்படி பாவாடையிடம் உள்ள நட்புற வினால் அந்தப் படையாச்சி ரகசியமாகக் கூறினார். 

உடனே பாவாடை, “இதைப்பற்றி எல்லாம் எஜமான்கிட்டே மூச்சுவிட்டுடாதே. அப்புறம் மாடே வாங்கமாட்டாரு. எப்பேர்ப்பட்ட சண்டி மாட்டையெல்லாம் அடக்கியிருக்கேன்; இது என்னய்யா கன்னுக்குட்டி!” என்று கூறிவிட்டான். மனத்துக்குள், ஏதோ திட்டமிட்டபடிதான் பாவாடை இப்படிப் பேசினான். 

புதிய மாடு பட்டாமணியத்தின் வீட்டுக்கு வந்து விட்டது. அதன் அழகைக் கண்டு வசந்தியும், சங்கரும் வியந்தார்கள். காடிகானாவில் நீண்ட காலமாகத் தூங்கிக் கொண்டிருந்த ரேக்ளா வண்டியை வெளியே இழுத்துக்கொண்டு வந்தான் பாவாடை. அதை நன்றாகத் துடைத்து, சக்கரத் துக்கு மசியெல்லாம் போட்டு வைத்தான். மாட்டைப் பூட்டி வெள்ளோட்டம் பார்ப்பதற்கு ஒரு நல்ல நாளும் குறித்தாயிற்று. 

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை நாள். பிற்பகல் மூன்று மணிக்குமேல் புதுமாடு பூட்டி ரேக்ளா அன்றுதான் ஓடப்போகிறது. பாவாடை புது மாட்டை நுகத்தடியில் பூட்டி, அதன் நெற்றியில் பொட்டுவைத்து, “ பயலே! இன்னிக்கு உன் கை வரிசையெல்லாம் காட்டறதை நான் கண்ணாரப் பார்க்கப் போறேன். ஜாக்கிரதை!” என்று முதுகின் மேல் ஓங்கி ஒரு ஷொட்டுக் கொடுக்தான். சங்கரைப் பார்க்கப் பார்க்க அவனுடைய சட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் பட்டாமணியத்தின் தங்க டாலரைப் பார்க்கப் பார்க்க-, அவன் மனம் பற்றி எரிந்தது. 

‘பயலே சங்கர்… இன்னியோட நீ ஒழிஞ்சே… நீ மட்டுமில்லே…. உன்னைத் தூக்கித் தலைமேலே வெச்சுக் கூத்தாடற எஜமானும் அவர் பொண்ணும் குறைஞ்சது ஆறுமாசத்துக்கு ஆசுபத்திரியிலே யிருந்து வீட்டுக்கு வரக்கூடாது. ஹஹஹா!’ என்று மனத்துக்குள்ளேயே கறுவிக் கொண்டான். 

பட்டாமணியம் தம்முடைய முழுக்கை ஜிப்பா வின் மேல், சரிகை அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு வாசலுக்கு வந்துவிட்டார். வாசலில் போடப்பட்டிருந்த கோடைப் பந்தலில் ரேக்ளா பூட்டி தயாராக நின்று கொண்டிருந்தது. வண்டி யில் ஏறத் தயாராக வசந்தியும், சங்கரும் வந்து விட்டார்கள். 

“இருங்க, ஒரு நிமிஷம்!” என்று வேலைக்கார முனியன் உள்ளே சென்று தயாராய் வைத்திருந்த வெற்றிலைபாக்குத் தட்டைக் கொண்டு வந்து வெள் ளோட்டம் போகிற வண்டிக்குச் சூடம் காட்டினான். 

வண்டியில் எல்லோரும் ஏறிக் கொண்டு விட் டார்கள். முன்புறம் சங்கரும் வசந்தியும்; பின்பக்கம் பட்டாமணியம். இதை வேடிக்கை பார்க்க ஒரு சிறு கூட்டமும் அங்கே கூடியிருந்தது. பாவாடை, “ஹை!” என்று ஓர் அதட்டு அதட்டி விட்டுப் பாய்ந்து நுகத்தடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு சாட்டையால் ஒரு சொடுக்குச் சொடுக்கினான். காளைமாடு காலைவாரிக் கொண்டு பாய்ந்து கிளம்பியது. 

வண்டி இப்போது சந்தடிமிக்க சந்தைப் பேட்டையை விட்டு, அகலமான கொள்ளிடம் ரோட்டில் போய்க் கொண்டிருந்தது. இல்லை, இல்லை, பறந்து கொண்டிருந்தது! 

மாடு போகிற வேகத்தைக் கண்டு பயந்த வசந்தி, “கொஞ்சம் மெள்ள ஓட்டச் சொல்லுங்கப்பா!’ என்று கூறிக் கொண்டே இருந்தாள். 

“இப்படிப் போகிறதுக்குத்தான் ரேக்ளா வண்டியம்மா. மெதுவாப் போனல் நல்லாவாயிருக்கும்? பயப்படாதே, பாவாடையில்லையா ஓட்டறான்!” என்று கபடு சூது இல்லாமல் சிரித்துக் கொண்டே கூறினார் அவர். 

ஆனால் – நெஞ்சில் கரவுடைய பாவாடை என்ன செய்து கொண்டிருந்தான்? 

கையில் ஒளித்து வைத்திருந்த ஒரு சிறு தார்க் குச்சியால், அந்த இளங்காளையின் அடித்தொடை யில் ஓங்கி ஒரு செருகுச் செருகினான். 

அவ்வளவுதான்; வலி பொறுக்க முடியாத காளை கண்மண் தெரியாத வேகத்தில் பறந்தது. பட்டாமணியத்துக்கே இப்போது பயம் தட்டியது! 

“டேய் பாவாடை!” என்று அட்டினார். 

“ஒண்ணும் இல்லே எசமான், பயப்படாதீங்க. பூட்டாமெ கிடந்த காளை; வண்டியிலே மாட்டினதும் குஷி தாங்கல்லே….” என்று வஞ்சகமாய்ப் பதிலளித்தபடியே, கையிலிருந்த தார்க்குச்சியால் மீண்டும் ஒரு குத்துக் குத்தினான். 

காளை பயங்கரமாக அலறிக்கொண்டு தாறு மாறாகத் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. அதன் தொடையிலிருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்த தையும் பொருட்படுத்தாமல் பாவாடை மேலும் மாட்டை அடித்து வாலை முறுக்கினான். முன்புறம் இருந்த வசந்தி, “ஐயோ அப்பா! வண்டியை நிறுத்தச் சொல்லுங்க…. நான் இறங்கிடறேன்!” என்று பயம் தாங்காமல் அழுதாள். 

வண்டி சாலையின் இருமருங்கிலுமிருந்த புளிய மரத்தின்மீது எப்போது மோதுமோ? அட்டகாசமாகச் சிரித்தபடி பாவாடை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். 

சங்கருக்குத் திடீரென்று சந்தேகம் வந்து விட்டது. பாவாடை தங்களை அடியோடு கவிழ்க்கச் சூழ்ச்சி செய்கிறானா என்ன? அடுத்த நிமிஷம்…

“குபீர்!” என்று பாய்ந்த சங்கர் தன் முஷ்டியை முறுக்கிப் பாவாடையின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். 

சற்றும் எதிர்பாராத இந்த இரும்புத் தாக்கு தலுக்கு இலக்கான பாவாடை, “ஐயோ அம்மா!” என்று தலைக்கயிற்றை விட்டு விட்டு, சாலையின் ஓரத்தில் தலைகுப்புறச் சென்று விழுந்தான். 

சங்கர் தலைக் கயிற்றை தாவிப் பிடிப்பதற்குள் காளை தறிகெட்டு ஓடிஓர் புளியமரத்தில், “டமார்!” என்று மோதி வண்டி நொறுங்கிக் குடை சாய்ந்தது. அதுவரை வண்டியில் இருந்தவர்கள் இப்போது தரையில், “அம்மா…. அம்பா!” என்று முனகிக் கிடந்தார்கள். பூட்டியிருந்த காளை அவர்களை வேடிக்கை பார்த்தபடி கொண்டு சுதந்தரமாக நின்றிருந்தது. 

9. மலைபோல் வந்த விபத்து 

எல்லாம் ஒரு நிமிஷத் துக்குள் நடந்துவிட்டது. எவ்வளவோ உற்சாகமாகப் புறப்பட்ட ஒரு வெள்ளோட் டம் ஒரு வேதனை நிகழ்ச்சி யாகி விட்டது! 

“அம்மா…. அம்மா….” அடிபட்ட வேதனை தாங்காமல் மரத்தடியில் பட்டாமணியம் அப்படியேபடுத்துக் கிடந்தார். அவரால் எழுந்திருந்து நிற்கவே முடிய வில்லை. ஏன், புரளக் கூட முடியாமல் துடித்தார். 

சற்று தூரத்தில் வசந்தி, “உஸ்.. உஸ்” என்று முழங்கையைப் பார்த்தபடு முனகிக் கொண்டே இருந்தாள். முழங்கையில் வசந்திக்குப் பலமான சிராய்ப்பு ஏற்பட்டிருததது. மேல் தோல் வழுக்கி, ரத்தச் சிவப்பாயிருந்தது. சங்கருக்குத் தலையில் அடி. அதனால்தான் சிறிது நேரம் அப்படியே விழுந்து கிடந்தான். 

சற்றுச் சுயநினைவு திரும்பியவுடன் பட்டாமணியம் அருகில் அவன் ஓடிச் சென்றான். அவர் அவனை மெள்ளத் தடவியபடியே, “உனக்கு ஒன்று மில்லையே?” என்றார். சங்கர் வருத்தத்துடன் தலையை அசைத்தான். 

“வசந்தி எங்கே?” என்று கேட்கவும்தான் அவள் ஞாபகம் வந்தவனைப்போல் சங்கர் ஓடினான். 

சாலையை அடுத்த வயலில் விழுந்து கிடந்த அவளை மெள்ளப் பட்டாமணியத்தினிடம் அழைத்துக் கொண்டு வந்தான். 

“தண்ணீர் வேண்டும்…..” என்று லேசாகக் கையைத் தூக்கிச் சமிக்ஞை செய்தார் பட்டா மணியம். வயதின் முதிர்ச்சியினாலும், விபத்தின் அதிர்ச்சியினாலும் அவர் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தார். 

சங்கர் சுற்றுமுற்றும் பார்த்தான். தூரத்தில் வயல் வெளிக்கு மத்தியில் ஒரு குடிசை கண்ணுக்குத் தெரிந்தது. “இதோ ஒரு நொடியில் வருகிறேன்!” என்ற சங்கர் குடிசையை நோக்கி ஓடினான். 

குடிசைக்குள் நுழைந்த சங்கர் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். அந்தமண் குடிசையிலுள்ள ஓர் அறையில் ஈட்டி, வேல், கம்பு, கத்தி, ஹரிக்கேன் விளக்குகள், சாராயப் புட்டிகள் எல்லாம் இருந்தன. 

இதைக் கண்டதும் சங்கர் வந்த சுவடு தெரியாமல் வெளியே வந்தான். அப்போது மொட்டைக் கிணற்றங்கரையில் நின்றுகொண்டிருந்த ஒரு கிழவி அவனைப் பார்த்துவிட்டாள். 

“யாரப்பா நீ ? எங்கே போயிட்டுப் போறே? என்று ஓர் அதட்டல் போட்டாள். 

அந்தக் கிழவியை ஒரு முறை நோட்டம் விட்ட படியே அருகில் வந்த சங்கர், “ஒண்ணுமில்லே பாட்டி; கொஞ்ச தூரத்திலே நாங்க ஏறி வந்த வண்டி குடை சாஞ்சு போச்சு. அதிலே வந்த ஒருத்தருக்குக் கொஞ்சம் குடிக்கத் தண்ணி வேணும். அதுதான் அவசரமா ஓடி வந்தேன்….” என்று கூறினான். 

“இவ்வளவுதானே, இந்தா, தண்ணி; கொண்டு போய்க் கொடு…” என்று ஒரு செம்பு நிறைய நீரை மொண்டு அவனிடம் நீட்டினாள் கிழவி. நன்றியுடன் அதைப் பெற்றுக்கொண்ட சங்கர், “இப்பவேயே செம்பைத் திருப்பிக் கொண்டு வரேன் பாட்டி!” என்று தண்ணீருடன் ஓட்டம் பிடித்தான். 

சங்கர் கொண்டு வந்த தண்ணீரை வாங்கி வசந்தி தந்தையின் வாயில் சிறிது சிறிதாக ஊற்றினாள். அப்போதுதான் அவருக்குச் சிறிது தெம்பு வந்தது. செம்பைத் திரும்பக் கொண்டு போய்க் கொடுத்துவர, சங்கர் குடிசைக்குச் சென்றான். காத்திருந்த கிழவி சங்கரைப் பிடித்துக் கொண்டாள். 

“நீங்க யாரு, எந்த ஊரு, எப்படி வண்டி குடை சாஞ்சிச்சு?” என்கிற அத்தனை கேள்விகளையும் கேட்டு விட்டாள். சங்கரும் சுருக்கமாகக் கூறினான். 

“எங்களுக்குச் சந்தைப் பேட்டை. பட்டாமணியம் புதிசா ஒரு மாடு வாங்கியிருக்காரு; அதை ரேக்ளா வண்டியிலே கட்டி, பாவாடைதான் அதை ஓட்டிக்கிட்டு வந்தார். மாடு மிரண்டு போய் மரத்திலே மோதிடுச்சு!” 

“எந்தப் பாவாடை? வஸ்தாத் பாவாடையா?”

“ஆமாம், அவரேதான்! உங்களுக்கு அவரைத் தெரியுமா?”. கிழவி சிறிது யோசனையில் ஆழ்ந்தாள். 

பாவாடையின் பெயரைக் கேட்டதும் கிழவியின் முகம் மாறுதலடைந்தது. 

“கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போ அவரு எங்கே?” 

“வழியிலேதான் விழுந்து கிடப்பார். நான் போகணும், வாறேன். தண்ணீர் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி!” என்று கூறி விட்டு வேகமாகச் சாலையை நோக்கி நடந்தான். 

அப்போது பட்டாமணியம், வசந்தி இவர்கள் இருந்த இடத்துக்கருகில் ஓர் இரட்டை மாட்டு வண்டி வந்து நின்று கொண்டிருந்தது. பிரமுகர் ஒருவர் பட்டாமணியத்திடம் விபத்துபற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் பட்டாமணி யத்தின் நண்பர். 

சங்கரைக் கண்டதும், “யார் இந்தப் பையன்?” என்று விசாரித்தார். 

“இவன் பெயர் சங்கர். சந்தானத்தின் பள்ளிக்கூடத்திலே பதினோராவது படிக்கிறான். இவனும் எங்க கூடத்தான் வந்தான். தனக்கு அடிபடல்லேன்னு சொல்றான் பொன்னுசாமி; பொய்யோ, நிசமோ!” என்று சொன்னார் பட்டாமணியம். 

“எப்படியும் நாம் இப்போது நேரே ஆஸ்பத்திரிக்குப் போறதுதான் நல்லது. உங்களுக்கு எங்கேயோ நல்ல ஊமைக் காயம் பட்டிருக்கு…” என்ற நண்பர் பொன்னுசாமி அந்த வழியாக வந்து கொண்டிருந்த குடியானவன் கையில் ரேக்ளா வண்டியை ஒப்படைத்து, “இதைப் பட்டாமணியார் வீட்டிலே கொண்டுபோய்க் கட்டிவிடு!” என்று ஏற்பாடு செய்தார். 

பிறகு எல்லோருமாகச் சேர்ந்து கைலாகு கொடுத்துப் பட்டாமணியத்தை மெள்ள வண்டியில் ஏற்றினார்கள். 

“நேரே டவனுக்கு – சர்க்கார் ஆஸ்பத்திரிக்கு ஓட்டு!” என்று பொன்னுசாமி உத்தரவு பிறப்பித் தார். சலங்கை பூட்டிய அந்த இரட்டை மாட்டு வண்டி “ஜல்ஜல்’ என்று ஓடத் தொடங்கியது. 

வண்டி சிறிது தூரம் ஓடி, ஒரு வளைவு திரும்பியபோது திடீரென்று பட்டாமணியம் “பொன்னுசாமி வண்டியைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லு!” என்றார். 

சாலையில் ஓரமாக-ஒரு மரத்தடியிலிருந்து முனகல் குரல் வந்தது. பாவாடைதான் அங்கே, “ஐயோ, அம்மா….” என்று அரற்றியபடி விழுந்து கிடந்தான். 

கீழே விழுந்ததில், சாலையிலிருந்த ஒரு குத்துக் கல்லில் அடிபட்டு அவனுடைய தலையிலிருந்து இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. 

“நான்தான் சொன்னேனே பொன்னுசாமி பாவாடைதான் ரேக்ளாவை ஓட்டிக்கிட்டு வந்தான். இந்த முரட்டுக் காளை அவனையும் உதறிக் கீழே தள்ளிப்பிட்டுத்தான் இந்தப் பாடு படுத்தியிருக்கு ” என்றார் பட்டாமணியம். 

பாவம், அவருக்கு விஷயம் ஒன்றுமே தெரியாது. பாவாடையிடம் அவருக்கு அளவுக்கு மீறியதொரு இரக்கமே மேலோங்கியிருந்தது. 

கீழே இறங்க முயன்ற பட்டாமணியத்தைப் பொன்னுசாமி கண்டித்தார். 

“நீ சும்மா அப்படியே உட்கார்ந்திரு. எல்லாம் நான் பார்த்துக்கறேன்!” என்று கீழே இறங்கிய அவர், பாவாடை- அருகில் சென்று பார்த்தார். கூடவே சங்கரும் சென்றான். 

சங்கரைக் கண்டதும் பாவாடை பற்களை வெளியே தெரியாமல் நறநறவென்று கடித்துக் கொண்டான். சங்கருக்கு உண்மையிலேயே மனத்துக்கு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. தலையில் இவ்வளவு பெரிய காயம்பட்டு எழுந்திருக்க முடியாமல் பாவாடை கிடப்பான் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. 

ஆழமாகப் பட்டிருந்த காயத்திலிருந்து ரத்தம் கசிவதை நிறுத்தப் பட்டாமணியத்தின் துண்டை வாங்கிப் பாவாடையின் தலையில் இறுகக் கட்டினார் பொன்னுசாமி. 

“பொன்னுசாமி, என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுடு. என்விஷயம் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். பாவாடையை அவசரமா நீ அழைச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ!” என்றார் பட்டாமணியம். 

உடனே பாவாடை, “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாமுங்க. அடிபட்ட வேகத்திலே, தலை சுத்திக் கொஞ்சம் மயக்கம் போட்டுக் கிடந்திட் டேன். அவ்வளவுதான். இதுக்காக ஆஸ்பத் திரிக்குப் போறதாவது? பேசாமே வீட்டுக்குப்போய் ஒரு பச்சிலையை அரைச்சுக் கட்டினாக் கழுதை சரியாப் போகுது. நீங்க கவலைப்படாமெ போங்க எஜமான்!” என்றான் சற்றுத்தெம்புடன். 

எனவே பொன்னுசாமியின் வண்டி மற்றவர்களுடன் டவுன் ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தது.

வண்டி கண் மறைந்ததும் பாவாடை மெள்ள எழுந்து வயல் மத்தியிலிருந்த கிழவியின் குடிசையை நோக்கி நடந்தான். 

ஆஸ்பத்திரியில் பட்டாமணியத்தைப் பரிசோதித்த டாக்டர். “காலில் உள் எலும்பு முறிவு ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். அதனால் எதற்கும் காலையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துத்தான் முடிவு கூற முடியும்” என்றார். பட்டாமணியத்துக்கு, ‘பெட்’ ஏற்பாடு செய்து ஆஸ்பத்திரியிலேயே படுக்க வைத்தார்கள். 

மறுநாள் வந்து பார்ப்பதாக பொன்னுசாமி பட்டாமணியத்திடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டு வசந்தியையும் சங்கரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு சந்தைப்பேட்டைக்கு வந்தார். 

நடந்த விவரங்களை யெல்லாம் கேட்டு முனியன் பதறிப்போனான். வசந்தியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி முனியனுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டுப் பொன்னுசாமி போனார். 

“அப்பா ஆஸ்பத்திரியில் என்ன அவதிப்படு கிறாரோ” என்று வசந்தி அடிக்கொருதரம் கூறிக் கொண்டே இருந்தாள். 

அப்போது முனியன் சட்டென்று, “ஏன் சங்கர் சாரு; நீ இனிமே பாடசாலைக்குப் போவானேன்? இங்கேயே தங்கிப்பிடேன். பாப்பாவுக்கு மனசுக்குக் கொஞ்சம் தெம்பாயிருக்கும்” என்றான். 

உடனே வசந்தியும் “ஆமாம் சங்கர்,நீ இன் றைக்கு ஹாஸ்டலுக்குப் போகவேண்டாம்!” என்று சிறு குழந்தைபோல் சிணுங்கினாள். 

”ஐயோ, போகவேண்டாமா? மானேஜர் அப் புறம் என்ன செய்வாருன்னு உங்களுக் கெல்லாம் தெரியாது” என்றான் சங்கர் படபடப்பாக. உடனே முனியன், “ஒண்ணும் செய்யமாட்டாரு பாரேன். நான் இப்பவே சந்தானத்தையா கிட்டே போய் விஷயத்தை விளக்கிப் பிடறேன். அப்புறம் உனக் கென்ன பயம்?” என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் காத் திராமல் வெளியேறினான். 

வசந்தியும் சங்கரும் அதற்குமேல் என்னசெய்வ தென்று புரியாமல் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டர்கள். அப்போது வசந்தி தன்னையும் மீறி “ஐயோ சங்கர், உன்னுடைய டாலர் எங்கே?” என்று அலறினாள். 

தேள் கொட்டினாற்போல், சட்டென்று கையால் நெஞ்சைத் தொட்டபடி சங்கர் குனிந்து பார்த்தான். டாலர் தொங்கிய இடத்தில் ஒரு கிழிசல்தான் சட்டையில் இருந்தது. 

10. ஆஸ்பத்திரி வாசம் 

இரவெல்லாம் உறக்கம் வராமல் சங்கர் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். புதிய இடம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அதைவிட மனத்தில் ஏற்பட்ட உளைச்சல்களே உறக்கம் வராமைக்குக் காரணம். பட்டாமணியம் அருமையும் பெருமையுமாகக் கொடுத்த விலையுயர்ந்த டாலரை இழந்தது; தன்னுடைய வெற்றியின் சின்னத்தையே இழந்து விட்டாற்போல் சங்கருக்கு வேதனையாக இருந்தது. 

பாண்ட் பட்டாமணியத்தின் வீட்டில் படுத்துக்கொள்வதற்கு ஹாஸ்டல் மானேஜர் சந்தானத்திடம் முனியன் சென்று அனுமதி வாங்கி வந்துவிட்டான். 

நடந்த விஷயங்களைக் கேட்ட சந்தானம், “அதனால் என்ன? பட்டாமணியம் குணமாகி வீடு திரும்பும் வரை சங்கர் வசந்திக்குத் துணையாக அங்கேயே இருக்கட்டுமே!'” என்று கூறிளிட்டாராம். 

மறுநாள் பொழுதுவிடிந்ததும் காலை காபி- பலகாரங்களை வசந்தியே சங்கரின் அறையில் கொண்டு வந்து வைத்தாள். அப்போது அவள் கண்ட காட்சி- 

சங்கர் குளித்துவிட்டுப் பட்டையாக நெற்றி யில் திருநீறு அணிந்து, அந்த அறையில் பெரிதாகத் தொங்கவிடப்பட்டிருந்த முருகன் படத்தின் முன்பு இருகரம் கூப்பி, ‘கண்மூடி மெய்மறந்து நின்று கொண்டிருந்தான். அவனது மெல்லிய குரல் தேவாரப்பண்ஒன்றை இசைத்துக்கொண்டிருந்தது. வசந்தி அந்த அறைக்குள் வந்து நிற்பதையோ, மேஜைமீது ஆவி பறக்கக் காபி பலகாரங்கள் வைக்கப்பட்டிருப்பதையோ சங்கர் கவனித்ததாகவே தெரியவில்லை. 

‘எப்போது இந்தச் சங்கர் எழுந்திருந்தான் இத்தனை கருக்கில் எப்படி அவனால் பச்சைத் தண்ணீரில் குளிக்க முடிந்தது’ என்பதெல்லாம் வசந்திக்கு மிக்க ஆச்சரியமாக இருந்தது. ஆம்! அப்பா இருந்தால், அவள் இன்னுங் கூடத் தூங்கிக் கொண்டிருந்திருப்பாள்! 

காப்பிக்கு அடுப்பு மூட்டிக் கொண்டிருந்த கிழவி யிடம் பல்பொடி பெற்று பாத்ரூம் இருக்கிற இடத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்ட சங்கர், சுறு சுறுப்பாகத் தன் காலை கடன்களை முடித்துக் கொண்டு விட்டான். இதெல்லாம் கட்டுப்பாடு மிகுந்த அந்த ஹாஸ்டல் வாசத்தால் ஏற்பட்ட நல்ல பழக்கங்கள் என்பதை வசந்தி உணர்ந்து கொண்டாள். 

திரும்பிய சங்கர், தன் எதிரில் மேஜைமீது காபி பலகாரத்துடன் வசந்தி தயாராகக் காத்திருப்பது கண்டு சிரித்தான். நன்றிப் பெருக்கால் கண்கள் பளபளத்தன. 

ஹாஸ்டலில் மணி அடித்ததும், தட்டைத் தூக்கிக்கொண்டு ஓடுகிற வாழ்க்கையில் அநுபவப் பட்டவன் அவன். அநாதையாக ஐயனார் கோவிலில் கிடந்த அவனைச் சிறுவயதில் பூசாரிதான் எடுத்து வளர்த்து உயிரூட்டினார். ஏதோ தெய்வாம்சம் பொருந்திய குழந்தை என்று, இறுதி நெருங்கும் வரை அவர் கண்ணும் கருத்துமாய்க் காப்பாற் றினார். விவரம் தெரிந்ததுமுதல் அவனுக்கு ஹாஸ் டல்தான் கோயில்? அதில் எல்லோரும் வழிபடுகிற சந்தானம் தான் அன்னை; தந்தை; தெய்வம் அனைத்தும் இப்படி ஒரு பொதுப்படையான-பரவலான இயந்திர வாழ்க்கை வாழ்ந்து வந்த அவனுக்கு, வசந்தி தன்னிடம் காண்பிக்கிற விசேஷ அன்பும் பாசமும் அவன் நெஞ்சை நெகிழச் செய்தன. 

பள்ளிக்கூடத்துக்கு இருவரும் சேர்ந்தே வண்டி. யில் போனார்கள், மாலையிலும் ஒன்றாகவே வீடு வந்தார்கள். ”அப்பாவுக்கு உடம்பு எப்படி இருக்கோ? ஆஸ்பத்திரியில் என்ன கஷ்டப்படு கிறாரோ?” என்று வசந்தி வழி முழுவதும் கவலைப் பட்டாள். 

அப்பாவுக்கு ஒன்றும் நேராது. சாயங்காலம் தான் பொன்னுசாமி வந்து ஆஸ்பத்திரிக்கு நம்மைக் கூட்டிக்கொண்டு போறதாகச் சொல்லியிருக்கிறாரே. நீ தைரியமா இரு!” என்று சங்கர் ஆறுதல் கூறினான். 

அன்று மாலை பொன்னுசாமி சொன்னபடியே தம்முடைய வண்டியில் பட்டாமணியம் வீட்டுக்கு வந்துவிட்டார். 

சங்கரும் வசந்தியும் ஆஸ்பத்திரிக்குப் புறப்படத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர் களுடன் முனியனும் அந்த வண்டியில் எஜமானைப் பார்த்துவர ஏறிக்கொண்டான். 

பொன்னுசாமியைக் கண்டதும் பட்டாமணியம் துக்கம் தாளாமல் வாய் விட்டே அழுதுவிட்டார். அவருடைய அழுகைக்குக் காரணம் அருகிலிருந்த எக்ஸ்ரே-படம்தான். 

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது! எப்படியும் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியிலிருந்து போக மூன்று நான்குவாரங்களாகுமென்று டாக்டர் கூறிவிட்டாராம். 

“அதுக்காக ஏன் பட்டாமணியம் நீங்கள் வருத்தப்படறீங்க? நீங்களே இப்படிக் கண்கலங்கினா குழந்தை வசந்திக்கு யாரு ஆறுதல் சொலுவார்கள்?” என்று பொன்னுசாமி கூறினார். 

“வசந்திக்காக – அவளை நெனைச்சுத் தான் பொன்னுசாமி நான் இப்படிக் கலங்கறேன். என் காலைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. தாயில்லாப் பொண்ணு. இத்தனை வயசிலே அவளை விட்டுப் பிரிஞ்க நான் ஒருநாள்கூட இருந்த தில்லே! நேத்திக்கு ராத்திரி பூரா எனக்குத் தூக்கமே வரல்லே. என் உடம்பு தான் இந்த ஆஸ்பத்திரிக் கட்டிலிலே கிடந்ததே தவிர; என் மனசு பூரா வசந்தியைப் பத்தியேதான் கவலைப் பட்டுக்கிட்டிருந்தது. 

“இந்தமாதிரி சமயத்திலே நீங்க இப்படிக் கவலைப்படக்கூடாது. வசந்தி உங்களுக்கு எவ்வளவு அருமையின்னு எங்களுக்கெல்லாம் தெரியாதா? நாங்கள்ளாம் சிநேகிதங்கன்னு பின்னே எதுக்குத் தான் இருக்கோம்? குழந்தையைப் பார்த்துக்க மாட்டோமா? அவளுக்கு அங்கே தனியா இருக்கப் பிடிக்கலேன்னா என் வீட்டுக்கு வேணும்னாலும் அழைச்சுக்கிட்டுப் போயிடறேன். நம்ம பசங்க ளோடு பசங்களா அவ சந்தோசமா இருப்பா!” 

பொன்னுசாமியின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பட்டாமணியம், தன் மகளுடைய விருப் பத்தைக் கேட்பது போல், வசந்தியினுடைய முகத்தைப் பார்த்தார். வசந்தி குனிந்தபடியே ஓரக் கண்ணால் சங்கரைப் பார்த்தாள். 

‘ஏன் வசந்தி, நீ பொன்னுசாமி வீட்டுக்குட் போயிடப் போறியா?’ என்று கேட்காமல் கேட்பது போலிருந்தது சங்கரின் பார்வை. 

“ஏம்மா வசந்தி, உன் அபிப்ராயம் என்னம்மா?” என்று பட்டாமணியம் கேட்டவுடன் தான்; எங்கோ சென்றிருந்த உணர்வு மீண்டும் திரும்பியது வசந்திக்கு. 

“இல்லேப்பா, நான் நம்ம வீட்டிலேயே இருக்கேன். துணைக்குத்தான் சமையல்காரப் பாட்டி, சங்கர், முனியன் எல்லாரும் இருக்காங்களே!” என்றாள் வசந்தி. 

மகளின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொண்ட பட்டாமணியம் அதற்குமேல் அவளை வற்புறுத்தவில்லை. “ஆனால் நீ இப்படி நிதம் என்னைப் பார்க்க வரவேண்டாம் வசந்தி” என்று பட்டாமணியம் கூறி முடிக்கு முன்னர் வசந்திக்கு அழுகை வந்து விட்டது. 

“ஏம்ப்பா…. என்மேலே கோபமா? நான் அவங்க வீட்டிலேயே போய் இருக்கேன், அப்பா!” என்றாள் குரல் தழுதழுக்க. 

‘“சீ…..சீ…..அசடே! இன்னும் நீ பச்சைப் பிள்ளையாகவே இருக்கியே வசந்தி! உன்மேலே எனக்கு என்னிக்காவது கோபம் வந்திருக்கா? பரீட்சை சமயமா இருக்கே. நிதமும் வந்து போகறதுன்னா படிப்புக் கெட்டுப்போகுமே! மேலும் பொன்னுசாமிக்குத்தானே தெரிந்தரவு கொடுக்க  வேண்டிருக்கும்னு சொன்னேன்” என்று பட்டாமணியம் கூறி முடிக்குமுன்னர் பொன்னுசாமிக்கு உண்மையிலே கோபம் வந்து விட்டது. 

‘இப்போ உன்னைச் சீக்காளின்னுகூடப் பார்க்காமெ ரெண்டு திட்டுத் திட்டலாமான்னு எனக்கு அவ்வளவு கோபம் வருது. யார்கிட்டே யாரு பேசற வார்த்தை இதெல்லாம்! நாள் தவறாமே டவுனுக்கு வந்து போற எனக்கு; வழியிலே உன் குழந்தையையும் கூட்டிக்கிட்டு வர்றது ஒரு சிரமமா? என் சம்சாரம் சீக்குலே சாகக் கிடந்தப்போ, வேளைக்குச் சோறு தண்ணிகூடச் சாப்பிடாமெ; ராப்பகல் பாராமெ எவ்வளவுதரம் நீ டவுனுக்கு அலைஞ்சிருப்பே! எத்தனை டாக்டர் களைக்கொண்டுவந்து காட்டியிருப்பே! மனசு ஒடிஞ்சுபோயிருந்த எனக்கு நீ எவ்வளவு ஆறுதல் சொல்லியிருப்பே! உன் முயற்சியில்லேன்னா என் குழந்தைகள் இந்நேரம் தாயில்லாப் பிள்ளைகளா இல்லே நின்னுக்கிட்டிருக்கும்!” என்று உணர்ச்சி வசப்பட்டு உரிமையோடு பட்டாமணியத்தைக் கண்டித்தார். பிறகு பையில் கொண்டுவந்திருந்த ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்களையெல்லாம். முனியனிடம் கொடுத்தார். 

அவன் அதையெல்லாம் எஜமான் படுத்திருந்த கட்டிலின் பக்கத்தில் இருந்த ஷெல்பில் வைத்து மூடினான். 

பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தேறுதலும் சமாதானமும் சொல்லிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 

விஸிட்டர்கள் நோயாளிகளைப் பார்த்துவிட்டுப் போக வேண்டியதற்கான மணி அந்த ஆஸ்பத்திரி முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பட்டாமணியம் தலையணைக்கு அடியிலிருந்த தம் யாக்கெட் வாட்ச்சைப் பார்த்தார்: மணி ஆறு. 

அங்கே வந்த ஸ்டாஃப் நர்சிடம், பட்டாமணியத் தைக் கவனித்துக் கொள்ளும்படி பொன்னுசாமி கேட்டுக்கொண்டார். அப்போது அவர்களிடம் அந்த நர்ஸ் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூறினாள். 

மறுநாள் காலையில் ஒரு பேஷண்ட் டிஸ்சார்ஜ் ஆகிறபடியால், ஸ்பெஷல் வார்டில் பட்டா மணியத்துக்கு இடம் கிடைத்துவிடும் என்பதுதான் அது. 

இது பட்டாமணியத்துக்கும் பொன்னுசாமிக்கும் சற்று ஆறுதலாயிருந்தது. ஏனெனில், ஸ்பெஷல் வார்டில்தான் கூடவே துணைக்கு ஓர் ஆள் இருக்க முடியும்; ஆஸ்பத்திரியில் உடன் தங்க அநுமதிப்பார் கள். ஆகவே இனிமேல், முனியன் பட்டாமணியத்துடனேயே இருந்து ஆகவேண்டிய உதவிகளைக் செய்யலாம், 

“அப்படியானால், முனியன் ஏன் அநாவசியமாக அலையவேண்டும்? ராப்போழுதை இங்கேயே ஓட்டி. விடட்டும். காலையில்தான்: ரூம் கிடைத்துவிடுமே காபி பலகாரம், சாப்பாட்டுக்கு இனி கவலை இல்லை. முனியன்கூட இருந்தால் எங்களுக்கும் சமாதான மாக இருக்கும்!” என்றார் பொன்னுசாமி. பட்டாமணியத்துக்கும் அதுவே சரி என்று பட்டது. 

“செலவுக்குப் பணம் அனுப்பட்டுமா?” என்று கேட்டார் பொன்னுசாமி. 

பட்டாமணியம் தலைமாட்டிலிருந்த பர்ஸைத் திறந்து பார்த்துவிட்டு, “அவசரமில்லை நாளைக்கு நீ வருகிறபோது நூறு ரூபாய் கொண்டு வா!” என்றார். 

அறிவிப்பு மணியை அலட்சியம் செய்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களைத் துரிதகதியில் துரத்தியபடி ஆஸ்பத்திரிச் சேவகன் வந்துகொண்டிருந்தான். எல்லோரும் பட்டாமணியத்திடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள். போகும்போது, “வசத்தியை ஜாக்கிரதையாகக் கவனிச்சுக்கோ சங்கர். முனியன்கூட வீட்டில் இல்லை; ஜாக்கிரதை;” என்று சங்கரிடம் பட்டாமணியம் தனியாகக் கூறி அனுப்பினார். 

மனத்துக்குள், ‘இந்தப் பாவாடைத் தடியன் என்ன ஆனானோ…பாவம், அவனைப் போய் யாருமே கவனித்திருக்க மாட்டார்கள். எங்கே எல்லாம் அடிபட்டதோ; அவன் என்ன அவஸ்த்தைப் படுகிறானோ…பொன்னுசாமியிடம் கூடச் சொல்லி யனுப்ப மறந்து விட்டது!’ என்று வேதனைப்பட்டுக் கொண்டார். 

ஆனால், பட்டாமணியம் இப்படிக் காட்டுகிற அநுதாபத்துக்கெல்லாம் பாவாடை தகுதியுடையவன் தானா? – இதே சமயத்தில் அவன் தம்மை ஒழித்துக்கட்ட என்னவெல்லாம் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறான்-என்பதெல்லாம், பாவம் பட்டாமணியத்துக்குத் தெரிந்தால்தானே!

– தொடரும்

– ஜேம்ஸ் பாண்ட் சங்கர், முதற் பதிப்பு: டிசம்பர் 1984, காயத்ரி பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *