கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 7,693 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

2. பட்டணத்தில் | 3. மேலே பறக்கிறான்

ஜக்குவுக்கு இதற்குள் ஊரிலிருந்து பல கடிதங்கள் வந்து விட்டன. மணி, சீதாராமன், சுப்புணி எல்லாரும் எழுதி யிருந்தார்கள். அம்புலுகூடக் குண்டு குண்டாக ஒரு கார்டு எழுதியிருந்தாள். “ஜக்கு! உன் போட்டோவைப் பேப்பர்லே பார்த்தேன். மாமி காட்டினா. ரொம்ப ஜோராய் இருந்தது. ஜல் – ஜல் கப்பல் எப்படி இருக்கு? நீ வரபோது எனக்கு ஒரு கண்ணை மூடித் திறக்கும் செலுலாயிடு பொம்மை வாங்கிண்டு வா. எங்க அப்பாகிட்டே பணம் வாங்கிக் கொடுத்துடறேன்” என்று எழுதியிருந்தாள்.

ஜக்குவுக்கு ரொம்பப் பெருமையாய் இருந்தது. அன்றைக்கு வத்திருந்தவர்கள் எல்லாரும் பத்திரிகைக்காரர்கள். அந்தப் போட்டோவைத் தங்கள் பத்திரிகைகளில் பிரசுரித்துவிட்டார்கள். கப்பலில் நின்றபடி ஒரு பையனுடைய போட்டோ எல்லாப் பத்திரிகைகளிலும் வந்தால் யாருக்குத்தான் பெருமையாய் இருக்காது? எவ்வளவு ஊர்களில் எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்!

ஜக்குவுக்கு இரண்டு நாளாய் ஓய்ச்சல் ஒழிவு இல்லை. நந்து வின் வீட்டு மாடிக்கும் அவன் வீட்டு மாடிக்கும் ஒரு நூல் டெலிபோன் கட்டினான: நூறு நூறு கஜத்துக்கு இரண்டு நூல் கண்டுகள், நாலு அட்டைக் குழாய்கள் – இவைதாம் செலவு. நூல் ஒன்றிலும் நடுவில் உராயாமல் அட்டைக் குழாய் மூடியில் ஓட்டை போட்டு வந்து சேரும்படி செய்தான். இவன் வீட்டு மாடி அறையையும் நந்துவின் வீட்டு மாடி அறையையும் மறு நாளே இரண்டு நூல் தந்திக் கம்பிகள் இணைத்தன.

அது மணி அடிக்காது. ஜக்கு, “அடேய், மேலே போய்க் காதை வைத்துக்கொள்ளடா!” என்று சொல்லிவிட்டு வருவான். போனதும், ‘ஹலோ” என்று கூப்பிடுவான் நந்து. சற்று நேரத்தில் டெலிபோனில் ஒருவன் பேசுவது மற்றவனுக்குக் கேட்கும்.

“அடே நந்து, சாப்பிட்டு விட்டாயா?”

“சாப்பிட்டுவிட்டேன். நீ?”

“நானும் சாப்பிட்டாச்சு.”

“பேசறது நன்றாய்க் கேக்கறதாடா?” என்றான் நந்து.

“ஓ! உனக்கு?” என்று கேட்டான் ஜக்கு.

“எனக்குந்தான்.”

“அன்னிக்கு லைட்ஹவுஸ், கோட்டை எல்லாத்தையும் பார்த் துட்டு வந்தோமே. நாம்ப பெரிய எஞ்சினீயராகப் போனா எவ்வளவு ஜோராய் இருக்கும்! அப்படிப் போகணும் போல இல்லே?”

“ஆமாண்டா.”

“பெரிய கிரிக்கெட் சாம்பியனாகி டெஸ்ட் மாட்ச் எல்லாம் விளையாடி எல்லாரும் புகழும்படி ஆகப் போறேன்!”

“நானுந்தாண்டா. எனக்கும் அதாண்டா ஆசையாய் இருக்கு. ஆனா அந்த ‘உல்ப்’ இருக்கான் பாரு, அவன் சும்மா என்னைக் கேலி பண்ணிண்டே இருக்காண்டா! நீ அவனை எப்படி யாவது ஒரு நாளைக்கு நன்னா மட்டந்தட்டி அழ வைக்கணும்டா!”

“உம், பார்க்கலாம்!” என்றான் ஜக்கு.

“எல்லாம் சரிதாண்டா ஜக்கு, நீ உங்க ஊரிலே போய்ப் படிக்கிறதைவிட இங்கேயே என் பள்ளிக்கூடத்துலே சேர்ந்து விடேன்” என்றான் நந்து.

ஜக்குவுக்கும் ஆசையாய்த்தான் இருந்தது. ஆனால் அவனுடைய அப்பா விடமாட்டாரே. அப்படியே விட்டாலும் இன்னொரு கஷ்டம் இருக்கிறதே. யாரோ தினம் ஒரு தடவை அவனை நிஜ டெலிபோனில் கூப்பிட்டு, “எங்கே போனே? ஏன் போனே?” என்றெல்லாம் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்களே! அதை நினைத்ததும் ஜக்குவுக்குப் பயமாய் இருந்தது. நந்துவிடம் இதை ஒரு நாள் அவன் சொல்லிவிட்டான். அதன் பிறகுதான் அவனுக்கு ஆறுதலாய் இருந்தது.

“அடே, இப்படி மிரட்டுவது யாராய் இருக்கும்?” என்று கேட்டான் நந்து.

“தெரியல்லியேடா” என்றான் ஜக்கு. யார் என்று அவனால் ஊகித்துப் பார்க்கவே முடியவில்லை.

நந்து அநுதாபப்பட்டான். படிப்பில் ஜக்கு எப்படியோ நந்துவுக்குத் தெரியாது. ஆனால் அவன் எல்லாவற்றிலும் கெட் டிக்காரன் என்று நந்து எண்ணினான். ரொம்பத் தைரியசாலி என்பதையும் கண்டான். அவனோடு சிநேகமாய் இருப்பதே ஒரு பெரிய தெம்பாய் இருந்தது. ஜக்குவை இப்படி யாரோ ஒருவன் ஒன்றிலும் புத்தியை ஓடவிடாமல் அடிக்கடி ‘காபரா’ பண்ணிக் கொண் டிருக்கிறானே. இது தான் நந்துவுக்கு வருத்தம். ஜக்கு வைச் சதா விட்டுப் பிரியாமல் இருப்பதைப் பார்த்த நந்துவின் சிற்றப்பா நந்து கீழே வந்ததும், “யாரடா அந்தப் பையன்? அவனை இங்கே கூட்டிக்கொண்டு வாடா, பார்ப்போம்” என்றார்.

நந்து ஓடிப்போய் ஜக்குவை அழைத்து வந்து அவர் முன் நிறுத்தினான். அவர், “உன் பேர் என்னடா, பையா?” என்று கேட்டார்.

ஜக்கு பட்டென்று, “ஜகந்நாத்” என்றான்.

“எந்தக் கிளாஸ் படிக்கிறே?”

“ஸெவன்த் போகப் போறேன்.”

“உங்க தஞ்சாவூரிலே இருக்கிற பழைய அரண்மனையை யெல்லாம் பாத்திருக்கயா?”

“ஓ!”

“அங்கே சுரங்க வழி ஒண்ணு இருக்கே!”

“ஓ! அதுக்குள்ளேயும் போயிருக்கேன்!”

“உங்க ஊரிலே என்னமோ விசேஷமானது என்பார்களே!”

“பெரிய கோயில்!”

“எஸ்! டக், டக்கென்று பதில் சொல்கிறாயே; பேஷ்! ஆனா, உனக்குத் தினம் யாராவது டெலிபோன் பண்ணுவதுண்டா?”

இப்படி அவர் கேட்டதும் ஜக்கு திடுக்கிட்டான். இவருக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்? இவர் இரவு நேரங்களில் அவன் மாமாவிடம் வந்து அரட்டையடித்துவிட்டுப் போவதுண்டு. அதைத் தவிர, பகல் நேரங்களில் வீட்டிலேயே அவரைப் பார்க்க முடியாது. அவர் விமான நிலையத்தில் ”பிளையிங் கிளப்’ அங்கத் தினர். விமானம் ஓட்டக் கற்றுக்கொள்கிறார். அவன் மாமா வுக்கே தெரியாத விஷயம் இவருக்கு எப்படித் தெரிந்திருக்கும்! ஒரு சமயம் இவரே டெலிபோன் பண்ணுகிறாரோ? இல்லாவிட்டால் நந்து எல்லாவற்றையும் சொல்லியிருப்பானோ? சே, நந்து இப்படி ஒரு நாளும் சொல்லிக்கொடுக்க மாட்டான்.

ஜக்கு திடீரென்று பேச்சை மாற்றி, “சார், சார்! என்னை ஒரு நாளைக்கு ஏரோப்பிளேனில் ஏற்றி ஊரெல்லாம் ஒரு தடவை சுற்றிக் காட்டுங்கோ, சார்!” என்றான்.

நந்துவின் சிற்றப்பா கடகடவென்று சிரித்தார். அசல் அது அந்த டெலிபோன் சிரிப்புப் போலவே இருந்தது. ஜக்கு விக்கிப் போய் நின்றான்.

“உன் மாமாவைக் கேட்க வேண்டாமா?”

ஜக்கு தலையை ஆட்டினான். அந்த ஆட்டலுக்கு எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம். நந்துவோ, “அடேய் ஜக்கு, மயக்கமா வரும்டா; தலையைச் சுத்தும். வாந்தி எடுக்கும். வேண்டாம்டா” என்றான்.

ஜக்கு அதற்கும் தலையை ஆட்டினான். நந்துவின் சிற்றப்பா ஜக்குவை அருகில் அழைத்து அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“பயப்படாதே, நாளைக்கே நான் உன்னை ஏரோப்பிளேனில் ஏற்றிச் சுத்திக் காண்பிக்கறேன். நந்து பயப்படுவான். அவன் கீழேயே நின்று வேடிக்கை பார்க்கட்டும்” என்றார்.

ஜக்குவின் சந்தேகம் குன்றியது. டெலிபோனில் பேசுபவராக இருந்தால் இப்படி ஒப்புக்கொள்வாரா? நிச்சயம் அது வேறு யாரோ தெரியவில்லை.

மறுநாள் காலை பதினொரு மணிக்கு ஜக்கு ஜம்மென்று டிரஸ் செய்துகொண்டான். எதிர்ப் பங்களா வாசலில் நந்துவின் சிற்றப்பாவும் நந்துவும் புறப்படத் தயாராக இருந்தனர். நல்ல வேளை, ஜக்குவின் மாமா ஆபீசுக்குப் போய்விட்டார். மாமி இவன் எங்கேயோ புறப்படத் தயாராவதைக் கண்டு, ”வெயிலில் இப்படி அலைந்தால் உன் உடம்புக்கு ஆகுமாடா?” என்று கேட்டாள்.

மாமியிடம் அவன், “இன்னிக்கு மட்டுந்தான் மாமி! நான் பார்க்காத தெல்லாம் பார்த்துவிட வேண்டாமா? ஊருக்குப் போனால் அங்கே இதெல்லாம் எப்படிப் பார்க்க முடியும்? மாமாவிடம் சொல்ல வேண்டாம், மாமி!” என்று கெஞ்சுத லாகக் கேட்டான்.

மாமி சம்மதித்து விட்டாள். ஜக்குவுக்கு ரொம்பக் குஷி! குதித்துக்கொண்டே பெல்ட்டை மாட்டிக் கொண்டான்.

“ட்ரிங்…ட்ரிங்… கிணு…கிணு…!”

ஜக்குவின் குஷியெல்லாம் இந்த டெலிபோன் ஒலிக்க ஆரம்பித்ததும் பறந்துவிட்டது. ‘பூசை வேளையில் கரடியா? சேச்சே!’ என்று சொல்லிக்கொண்டே டெலிபோனண்டையில் போனான். டக்கென்று ரிஸீவரை எடுத்தான். காதில் வைத்துக் கேட்காமலே மேஜைமீது பொத்தென்று வைத்துவிட்டுக் கீழே இறங்கி வந்துவிட்டான். “டெலிபோன் மணி அடித்ததே, நீ பேசினாயா?” என்றாள் மாமி. “ஆமாம்” என்றான் ஜக்கு.

“கிரிக்கெட் விளையாடவா போகிறாய்?” என்று கேட்டாள் மாமி சிரித்துக்கொண்டே.

ஜக்கு சிறிதும் யோசனையின்றி, “ஆமாம்” என்றான்.

“மட்டை எடுத்துக்கொள்ள வேண்டாமா?”

“வேண்டாம்; கிளப்பிலேயே நல்ல மட்டை இருக்கிறது. இதைப் புதிதாக ஊருக்கு எடுத்துக்கொண்டு போகப்போகிறேன்” என்றான் சமாளித்துக்கொண்டு.

மாமி அதற்குமேல் அவனைக் கிண்டிக் கேட்காமல் கையில் ஓர் ஆப்பிள் பழத்தைக் கொடுத்தாள். ஜக்கு அதைக் கடித்துத் தின்றுகொண்டே வாசலில் ஓடினான்.

‘ஏரோடிரோமு’க்குப் போகும் வழியில் நந்துவின் சிற்றப்பா விடம், “ஏரோப்பிளேன் எப்படிப் பறக்கிறது, எவ்வளவு நாளில் அதை ஓட்டக் கற்றுக்கொள்ளலாம், அமெரிக்காவுக்கும் லண்ட னுக்கும் போக எவ்வளவு நாட்கள் பிடிக்கும், நடுவில் எங்கே எங்கே இறங்கவேண்டும்?” என்றெல்லாம் கேட்டுக்கொண்டே போனான். அவரும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.

“சபாஷ்! நந்துவைப்போல அசட்டுப் பிசட்டு என்று கேட்காமல் இந்த மாதிரிக் கேட்கிறாயே; கெட்டிக்காரப் பயலடா நீ!” என்றார் அவர்.

“நந்துவும் கெட்டிக்காரன் தான், சார்” என்றான் ஜக்கு, விட்டுக் கொடுக்காமல்.

நந்துவோ தானும் ஏதாவது கேட்டுத் தன்னுடைய கெட்டிக்காரத்தனத்தையும் காட்ட நினைத்தான். “சித்தப்பா, ஏரோப்பிளேன் போற வழியிலே தொப்பென்று ‘விங்’ ஒடிந்து விழுந்துவிட்டால் என்ன ஆகும், சித்தப்பா?” என்று கேட்டான்.

இருவருக்கும் சிரிப்புத்தான் வந்தது.

“பார்த்தாயா, இவன் கெட்டிக்காரத்தனத்தை!” என்றார் சிற்றப்பா,

ஜக்கு சிரித்தான். நந்துவுக்கு உடனே கோபம் வந்து விட்டது. “இதுக்கு என்னடா சிரிப்பு?” என்றான்.

விமான நிலையம் வந்தது. வரிசையாக விமானங்கள் நின் றன. ஒன்று விர் ரென்று சுற்றிக் கொண்டு புறப்படத் தயாராய் இருந்தது. மற்றொன்று கீழே வந்து ஒரு ‘ஜர்க்’ கொடுத்துத் தரை யில் இறங்கி நின்றது. அடேயப்பா! எவ்வளவு பெரிய மைதானம்! எவ்வளவு விமானங்கள்! ஓர் ஆள் கையை ஆட்டிக் காண்பிப்பதும் பைலட் தலையைமூடி, கண்ணாடி போட்டுக்கொண்டு கம்பீரமாய் உட்கார்ந்திருப்பதும் ஜக்குவுக்குப் பிரமிப்பாய் இருந்தன. நந்துவின் கோபம் இன்னும் தணியவில்லை. ஜக்குவுக்குச் சுற்றிலும் எதைப் பார்த்தாலும் அதிசயமாய் இருந்தது. பளபளவென்று சிலர் துடைப்பதும், பிரயாணிகள் ஏறுவதும் இறங்குவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தன. கடைசியில் அங்கே இருந்த கான்டீனில் டிபன் பண்ணிவிட்டு அவர்கள் ‘பிளையிங் கிளப்’ புக்குள் நுழைந்தார்கள்.

அடுத்த அரை மணிக்கெல்லாம் ஜக்கு ஒரு சிறிய ஏரோப் பிளேனில் உட்கார்ந்திருந்தான்: நந்துவின் சிற்றப்பாவுங் கூட உட்கார்ந்திருந்தார். நந்து, கிளப் வாசலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஏரோப்பிளேன் சுற்றி, எழும்பி, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து செல்வதைப் பார்த்துக்கொண்டே இருந் தான். அவனுக்குத் தான் பறப்பதைவிட அவர்கள் பறந்து சென்றது தான் ஆனந்தமாக இருந்தது.

சாயங்காலம் ஜக்கு ரொம்ப நல்ல பிள்ளையைப்போல் வீட்டுக்குள் வந்து நுழைந்தான். கையில் ஒரு பெரிய பொட்டலம் இருந்தது. ஜக்குவின் மாமா இன்னும் வீட்டுக்கு வரவில்லை. ஜக்கு காபியைக குடித்துவிட்டு மாடிக்குப் போனதும் டெலிபோன் மணி ஒலித்ததும் சரியாக இருந்தன. மேஜைமீது இருந்த ரிஸீவர் டெலிபோன் மேலேயே இப்போது இருந்தது.

“ஹல்லோ ஜக்கு!” என்றது குரல்.

“ஏன்?” என்றான் ஜக்கு, எரிச்சலுடன்.

“மத்தியான்னம் மாமியிடம் கிரிக்கெட் விளையாடப் போவ தாகச் சொல்லிவிட்டுப் போனாயா?”

“ஆமாம்.”

“கிரிக்கெட் விளையாடினாயா?”

“ஆமாம், விளையாடினேன்!”

“பொய் சொல்கிறாய் என்கிறேன். என்ன, சரிதானா?”

“இல்லை; நிஜந்தான் சொல்கிறேன்.”

‘நீ, நந்து, நந்துவின் சித்தப்பா மூவருமாய் ஏரோ ட்ரோமுக்குப் போனீர்கள். உண்டா, இல்லையா?”

ஜக்கு பதில் சொல்லவில்லை. ‘இதென்னடா, பெரிய வம்பாய் இருக்கிறது : இது யார்? கதைகளில் வருமே, அதைப்போல், பூதமாய் இருக்குமோ?’ என்று எண்ணிவிட்டுத் தைரியமாய் “இல்லை; நான் கிரிக்கெட் விளையாடத்தான் போனேன்” என்றான்.

“விமான கிளப் ரிஜிஸ்தரில் உன் பெயர் இருந்தால்-? போலீஸில் உன்னை ஒப்படைக்கலாமா?”

“ஆமாம்; என்னை மன்னிச்சுடுங்கோ. நான் தெரியாமல் ‘பொய் சொல்லிவிட்டேன்.’

“இனிமேல் பொய் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா?”

“தெரியாது!”

“பொய் சொன்னால் அன்றிரவே ஊருக்குப் புறப்படும்படி யாகும்!”

“சரி; எனக்குக்கூட இனி இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. ஊருக்குப் போய்விடுகிறேன்” என்றான் ஜக்கு முடிவாக.

“ஆமாம், அப்படியானால் செலுலாயிடு பொம்மை வாங்கி விட்டாயா?”

“வாங்கிவிட்டேன்.”

டக்கென்று பேச்சு நின்றது. ஜக்கு கட்டிலில் உட்கார்ந்து பெருமூச்சு விட்டான். கடைசியில் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாகப் படுக்கையை எடுத்துக்கொண்டு கீழே வந்தான்.

– தொடரும்…

– ஜக்கு, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1952, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *