சைவத்திற்கு மாறிய காகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 2,711 
 
 

ஒரு பெரிய ஆலமரத்தில் ராசாலி, முரரி என்ற இரண்டு காகங்கள் நெடுங்கால நண்பர்களாக பழகி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இதில் ராசாலி காகம் சரியான அசைவ பிரியன். தன் வாழ்நாளில் அந்த காகம் சைவ உணவை சாப்பிட்டத்தே கிடையாது. ஆனால் முரரி காகமோ தன் பசிக்கு எது கிடைத்தாலும் அதை முழுமனத்தோடு பெற்றுக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும்.

அன்றொரு நாள் இரண்டு காகங்களும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தன. முரரி காகம் சொன்னது, நண்பா இன்னைக்கு அமாவாசை. நம்முடைய காக்கை இனங்களுக்கு மக்கள் தங்கள் வீட்டு கூரையில் வாழை இலையில் வடை பாயாசத்தோடு உணவு வைப்பார்கள். வா போய் வயிறார சாப்பிட்டு வரலாம் என்று முரரி காகம் ராசாலி காகத்தை கூப்பிட்டது.

‘அய்யயோ இந்த சைவ சாப்பாடெல்லாம் எனக்கு ஒத்து வராது நண்பா. நமக்கு எப்போதுமே அசைவம்தான். நீ உன்னோட வழியில போ நான் என்னோட வழியில போறேன்’ என சொல்லிய காகம் வேகமாக மரத்தைவிட்டு பறந்துப் போனது. இவனை திருத்தவே முடியாது என்று நினைத்தது முரரி காகம்.

மரத்திலிருந்து பறந்து வந்த ராசாலி காகம் நேராக அலிபாய் கடையில் போய் நின்றது. இந்த கசாப்புக் கடைக்கு ராசாலி வருவது எப்போதுமே வாடிக்கையான ஒன்றுதான். வழக்கம் போல அலிபாயும் இரண்டொரு ஆட்டிறைச்சி துண்டுகளை எடுத்து ராசாலி காகத்திற்கு போட்டார். ஆவலோடு சாப்பிட போன காகத்தின் கவனம் அந்த கசாப்புக்கடையில் கட்டிப் போட்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டியின் பக்கம் திரும்பியது. அழுதுக் கொண்டிருந்த ஆட்டுக் குட்டியின் அருகே ராசாலி போனது. ‘அடடா இந்த அழகான ஆட்டுக்குட்டு எதுக்கு இப்போ அழுகுது”? இப்போது ஆட்டுக்குட்டியின் அழுகை இன்னும் அதிகமானது. காரணத்தை சொல்லாமல் இப்படி அழுதுக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? அதற்கு அந்த ஆட்டுக்குட்டி அலியாயயும் அவர் வெட்டுக் கொண்டிருந்த ஆட்டு இறைச்சியையும் அது மாறி மாறிப் பார்த்தது. ராசாலி காகத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

ஆறறிவு உள்ள மனிதர்கள்தான் எங்கள் இனங்களை கொன்று சாப்பிடுகிறார்கள் என்றால், ஐந்தறிவு உள்ள நீயும் எங்கள் இறைச்சியை தினமும் இப்படி ரசித்து ருசித்து சாப்பிடுகிறாயே? இதோ உன் முன்னால் சிதறிக்; கிடக்கும் இந்த இறைச்சி துண்டுகளைப் போல் என்னையும் ஒரு நாள் கொன்று இப்படிதானே துண்டு துண்டாக வெட்டுவார் என ஆட்டுக்குட்டி கேட்டதும், ராசாலி காகத்திற்கு தலை தொங்கிப் போனது. எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து பறக்க ஆரம்பித்தது.

அப்போது வழியில் ஒரு வீட்டின் கூரையின் மீது வாழை இலையில் வைக்கப்பட்டிருந்த சைவ சாப்பாட்டை ராசாலி காகம் மனநிறைவோடு சாப்பிட்டது. அன்றிலிருந்து ராசாலி காகம் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *