(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் ஒரு பெரிய செல்வந்தன் இருந்தான். அவன் எப்படியெப்படியோ பணம் சேர்த்தான். ஊரிலேயே பெரிய பணக்காரன் ஆகிவிட்டான். ஆனால் அவன் பணக்காரனாக இருந்து என்ன பயன்?
பெற்ற தாய் தகப்பனுக்குக்கூட ஒரு காசு கொடுக்க மாட்டான். பிள்ளை குட்டிகள் ஆசை யாகக் கேட்கும் அற்பப் பொருள்களைக்கூட வாங்கிக் கொடுக்க மாட்டான். தன் வயிற்றுக்கே அவன் சரியாகச் சாப்பிடுவதில்லை.
சோற்றை வடித்துப் பச்சைமிளகாயைக் கடித்துக்கொண்டு சாப்பிட்டால் போதும் என்பான். சாம்பார் வைக்க வேண்டுமென்றால் பருப்புப் படி ஒரு ரூபாயல்லவா ? ஏன் வீண் செலவு என்று கேட்பான்.
உறவினர்கள் யாரும் அவனைத் நாடி வருவதேயில்லை. ஏதாவது உதவி செய்யக் கூடிய வனாய் இருந்தால் அல்லவா அவனை தேடி வருவார்கள்.
அவனுக்கு நண்பர்களே கிடையாது. யாராவது ஆபத்துக் காலத்தில் வந்து கைமாற்றுக் கேட்டால் கூடக் கொடுக்க மாட்டான். திரும்ப வசூல் ஆகுமோ ஆகாதோ என்று பயந்து அவன் அந்த வழக்கமே வைத்துக்கொள்ளவில்லை.
துன்பத்தையெல்லாம் சொல்லித் தொழுது அழுது கேட்டாலும் அவனிடமிருந்து ஒரு சல்லிக் காசுகூடப் பெற முடியாது.
அந்தப் பணக்காரன் வீட்டுக்குள் ஒரு நாள் இரவு கொள்ளைக்காரன் ஒருவன் புகுந்தான். நேராகப் பணக்காரன் படுத்திருந்த அறைக்குச் சென்றான். ஒரு கையில் தீவட்டியும் மறு கையில் வெட்டரிவாளும் வைத்திருந்த அந்தக் கொள்ளைக் காரன் அவனைத் தட்டியெழுப்பினான்.
செல்வன் திருடனைக் கண்டு திடுக்கிட்டான். திருடன் இரும்புப் பெட்டிச் சாவியைக் கேட்டான். அவன் கொடுக்க மறுத்தான். வெட்டரிவாளால் காலிலும் கையிலும் இரண்டு மூன்று இடங்களில் வெட்டினான் திருடன். வலி தாங்க முடியாமல் பணக் காரன் அழுதான். கடைசியில் உயிருக்குப் பயந்து அவன் இரும்புப் பெட்டிச் சாவியைக் கொடுத்து விட்டான். இருந்த பணம் முழுவதையும் கொள்ளைக்காரன் மூட்டைக் கட்டிக்கொண்டு போய் விட்டான்.
பணக்காரன் அழுது கொண்டிருந்தான். அவனைத் தேற்ற யாரும் வரவில்லை.
கருத்துரை :- அழுது தொழுது கேட்டாலும் இரக்கப்பட்டுச் சிறிது பொருள் கொடுக்காதவர்கள், அடித்து உதைத்துக் கேட்பவர்களுக்குப் பயந்து இருப்பதையெல்லாம் கொடுத்து விடுவார்கள்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.