கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 12,260 
 

பாண்டிபஜார் அருகில் இருக்கும் அந்தப் பூங்காவைக் கடந்து செல்லும் போதெல்லாம் சுமதியின் மனதுக்குள் ஓர் இனம் புரியாத கலக்கம் வந்து குடிகொண்டுவிடும். எங்கு பார்த்தாலும் பட்டாம்பூச்சிகளாய் சிறுவர் சிறுமியர்கள் சுற்றி சுற்றி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலர் ஏணியில் ஏறி சர்ர்ர் சர்ர்ர்…. என்று கீழே சரிந்து விழுவதும், எழுந்து மகிழ்வதுமாக இருப்பர். சில சிறுமிகள் ஸ்கிப்பிங் விளையாடுவதும், சிலர் ஓடிப்பிடித்தும் விளையாடிக் கொண்டிருப்பதைக் பார்க்கும் போதெல்லாம் சுமதியின் நெஞ்சே வெடித்துவிடும் போலிக்கும். உடனே ராதுவின் நினைவு வந்து வாட்டி எடுக்கும்.

சுழற்சிசுமதியின் ஒரே செல்ல மகள் ராஜேஸ்வரி. ராது என்றுதான் கூப்பிடுவார்கள். ஏழாம் வகுப்பு படிக்கும் ராது படிப்பில் கெட்டிக்காரி. கோயில் கோயிலாகச் சுற்றி, நேர்த்திக்கடன் செய்தபிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவள்.

ராதுவின் தந்தை பாண்டுவுக்கு ஒரு வங்கியில் மானேஜர் பதவி. எப்போது பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாக சுற்றிச் திரிந்து கொண்டிருப்பார். ராது அவருக்கு மிகவும் செல்லம். அதனால் அவள் படிப்பு விஷயத்தில் அவர் கண்டிப்பாக இருக்க மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று, அருகில் யார் அமர்ந்திருக்கிறார் என்று கூட தெரியாமல் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பிசிமேன்.

சுமதி தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிபோன்
ஆபரேடராக இருக்கிறாள். நாள் முழுவதும் தொலைபேசியில் பேசிப் பேசி, வீட்டுக்கு வரும்போது தலைவலியுடன்தான் வருவாள். இப்படி வருபவளிடம் ராது அன்பையும் பாசத்தையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து பலமுறை ஏமாந்திருக்கிறாள். வீட்டுக்குள் நுழைந்ததுமே “”ஹோம் வொர்க் பண்ணியா? படிச்சியா? எழுதினியா? பாட்டுக் கிளாஸ் போனியா? டிராயிங் போட்டியா?”

என்று கேட்டுக் கொண்டேதான் உள்ளே நுழைவாள்.

“”எப்பப் பாத்தாலும் ஏம்மா படிச்சியா படிச்சியான்னே கேக்குற. நான்தான் நல்ல மார்க் வாங்கி முதல் மூணு ரேங்குக்குள்ள வர்ரேன்ல… கொஞ்ச நாழியாவது என்னை விளையாட விடமாட்டியா” என்று கோபித்துக் கொள்வாள் ராது.

“”என்னடி விளையாட்டு வேண்டிக்கிடக்கு. படிக்கிறதுக்கு எவ்வளவு இருக்கு பாரு. ஒவ்வொரு புத்தகமும் தலகாணியாட்டமா இருக்கு. அடுத்தடுத்த வருஷம் இதைவிடப் பெருசா இருக்கும். நிறைய படிச்சு அறிவை வளர்த்துக்க வேண்டாமா?” என்பாள்.

ஒரு நிமிடம் கூட வீட்டில் சும்மா இருக்கவோ, விளையாடவோ விடுவதில்லை. பள்ளி முடிஞ்சா வீடு. வீட்டுக்கு வந்ததுமே அடுத்த இரண்டு மணி நேரம் பாட்டுக் கிளாஸ். பாட்டுக் கிளாஸ் முடிஞ்சதும் கம்ப்யூட்டர் கிளாஸ், அடுத்து டிராயிங் கிளாஸ் இதெல்லாம் போய்விட்டு இரவு வீட்டுக்கு வந்தால், சிறிது நேரம் படித்துவிட்டுத்தான் தூக்கம். மீண்டும் காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் படிப்பு… தொடர்ந்து இதே நிகழ்வுகள்தான். அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருக்கும் வீட்டின் பால்கனி வழியாக தரைத்தளத்தில் விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பதோடு சரி. அதற்கும் சில நேரம் தடா சட்டம் போடுவாள் சுமதி.

“”சும்மா வேடிக்கை பார்த்துண்டு இருக்காதே. உன்னோட நேரந்தானே வீணாகுது. இந்த நேரத்துல ஏதாவது புக்க வச்சுண்டு படிச்சோமா, எழுதினோமான்னு இருக்கணும். இல்லன்னா இரண்டு பாட்டு பாடி பிராக்டிசாவது பண்ணணும்” என்று சிடுசிடுப்பாள். பால்கனி இருப்பது சமையல் அறையை ஒட்டி என்பதால், ராதுவுக்கு அங்கு நின்று வேடிக்கை பார்க்கக்கூட பயமாக இருக்கும்.

ஒரு நாள்கூட தன் தோழிகளுடன் விளையாட அனுப்புவதில்லை என்பதில் அம்மா மீது ராதுவுக்கு நிறைவு வருத்தம் உண்டு. கேட்பதெல்லாம் வாங்கித் தருகிறாள். ஆனால், விளையாட மட்டும் விடுவதே இல்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். “வீட்டில் இருக்கும்போது உனக்குச் சொல்லித் தருகிறேன்’ என்று, படிக்கும்போது பக்கத்திலேயே உட்கார்ந்து விடுவாள். அங்கு இங்கு சிறிது நேரம்கூட எழுந்து செல்ல முடியாது.

கேட்டால், “”உங்கப்பாதான் உன் மேல அக்கறை இல்லாம வேலை வேலைன்னு அலையராரு. நானும் அப்படி இருந்தால் உன்னை எப்படி ஃபஸ்ட் கிளாஸ் வாங்க வைக்க முடியும்? எங்களுக்கு என்ன ரெண்டு மூணு குழந்தைகளா இருக்கு. நீ ஒருத்திதானே! உன்னை நல்லா படிக்கவைக்க வேண்டாமா?” என்று புலம்ப ஆரம்பித்து விடுவாள். ராதுவுக்கு அழுகை அழுகையாக வரும்.

“”மேடம் உங்களுக்கு போன் வந்திருக்கு. உங்க வீட்டு சமையக்கார அம்மான்னு நினைக்கிறேன்” என்று கூறிவிட்டு போனைத் தந்தாள் அலுவலகத் தோழி பானு.

“”ஹலோ, யாரு பேசறது?” சற்று பதட்டத்துடனேயே கேட்டாள் சுமதி.
“”மாமி நான் கற்பகம் பேசறேன். நம்ம ராது பள்ளிக்கூடம் விட்டு வந்ததுலேர்ந்து ரெண்டு காலும் பயங்கரமா வலிக்குதுன்னு எழுந்திருக்க முடியாம அழுதுக்கிட்டிருக்கா. நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். அம்மாவை உடனே வரச்சொல்லுங்கன்னு அழறா. அதனாலதான் போன் பண்ணேன்”.

“”ஏதாவது சாப்பிட செய்து கொடுத்தியா?”

“”பிரிட்ஜ்ல மாவு இருந்துதும்மா. ரெண்டு தோசைதான் செஞ்சி கொடுத்தேன். அதையே ஒழுங்கா சாப்பிடல. வலி தாங்க முடியாம ரொம்ம அழுவுறாம்மா”

“”சரி நான் கிளம்பி வரேன். அதுவரைக்கும் நீ அங்கேயே இரு”

“”சரிம்மா”

தொலைபேசி பேச்சைத் துண்டித்துவிட்டு உடனே மேலதிகாரியைப் பார்த்து விவரத்தைக் கூறிவிட்டு அவசர அவசரமாக வீட்டுக்குக் கிளம்பினாள் சுமதி.

“”என்னடா ஆச்சு ராதுக்குட்டி? எங்கயாவது இடிச்சிகிட்டியா? கீழ விழுந்துட்டியா?”

“”இல்லம்மா காலையில ஸ்கூலுக்குப் போகும்போதே கொஞ்சமா வலி இருந்தது. மத்தியானத்துக்கு அப்புறமா ரொம்ப வலிக்க ஆரம்பிச்சுடுத்து. நடக்கவே முடியல. மரத்துப்போன மாதிரியும் இருக்கும்மா” கூறிவிட்டு தேம்பித் தேம்பி அழுதாள்.

செல்ல மகளின் கண்ணீர் அவளைக் கலங்க வைத்தது. கற்பகத்திடம் ஆட்டோவை அழைத்து வரச் சொல்லிவிட்டு, உடனே குடும்ப டாக்டர் ஸ்ரீநிதிக்கு போன் செய்து அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கினாள். “”உங்க அப்பா ஊருல இல்லாத இந்த நேரத்துல போய் என்னடி இது சோதனை. உனக்கு ஏதாவது ஒன்னுன்னா அவர் தாங்கமாட்டாரே! என்னதான திட்டுவார்” என்று புலம்பியபடி வீட்டைப் பூட்டிக்கொண்டு ராதுவைத் தூக்கிக்கொண்டு வாசலுக்கு வந்தாள். வாசலில் ஆட்டோவுடன் தயாராக நின்றுகொண்டிருந்தாள் சமையக்கார மாமி கற்பகம்.

“”நீயும் கூட வாயேன் கற்பகம். உன் ஆத்துக்காரர்கிட்ட நான் சொல்லிக்கிறேன். என்னமோ ஏதோ தெரியலையே! டாக்டரைப் பார்த்து என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்கிற வரை நிம்மதியே இருக்காது. கொஞ்ச நேரம் என்கூடவே இரேன்”

“”வரேம்மா” என்ற கற்பகம், ராதுவைத் தூக்கி அப்படியே ஆட்டோவில் உட்காரவைத்துவிட்டு தானும் ஏறிக்கொண்டாள்.

கிளினிக்கில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ராதுவை ஒரு நாற்காலியில் அமரவைத்தாள். டாக்டர், ஸ்ரீநிதி குடும்ப டாக்டர் என்பதால், ஐந்து ஆறு பேருக்குப் பிறகு அவளுடைய பெயரைக் கூப்பிட்டார்கள். அதுவரை ராது வலியால் பட்ட அவஸ்தை சுமதியின் வயற்றைக் கலங்கடித்தது.

டாக்டர் ஸ்ரீநிதி விவரம் எல்லாம் கேட்டுவிட்டு, சின்ன சுத்தியல் போல் உள்ள ஆயுதத்தால் ராதுவின் கால், தொடைப் பகுதி, மூட்டு எல்லாவற்றையும் மெதுவாகத் தட்டித் தட்டி வலிக்குதா? உணர்ச்சி? இருக்கான்னு கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு கற்பகத்தைப் பார்த்து, “”பாப்பாவ கொஞ்சம் வெளியே அழைச்சுக்கிட்டுப் போய் உட்காரவையுங்க” என்று கற்பகத்திடம் கூறிவிட்டு, அவர்கள் வெளியே சென்றதும் சுமதியைப் பார்த்து, “”சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க சுமதி. நீங்க படிச்சவங்கதானே?” என்றார்.

இந்த நேரத்துல என்ன இது கேள்வி என்பதுபோல, ஒன்றும் பேசாமல் டாக்டரின் முகத்தையே வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. எந்த நேரமும் அணையை மீறத் தயாராய் இருந்தது.

டாக்டர் ஸ்ரீநிதியே தொடர்ந்து பேசினார். “”உங்க பெண் நல்லா ஓடியாடி விளையாடுவாளா?” என்றார்.

“”இல்ல டாக்டர், அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு. பள்ளிக்கூடம் விட்டா, வீடு. அப்புறம் பாட்டுக்கிளாஸ், டிராயிங் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாசுன்னு போகவே சரியா இருக்கு. இதுல விளையாடவும் போயிட்டா அப்புறம் எப்படிப் படிக்கிறது. இந்த வருஷம் நிறைய போர்ஷன்” என்று அங்கலாய்த்தாள்.

“”ராது குழந்தையா இருக்கும்போது கொடுக்க வேண்டிய போலியோ சொட்டு மருந்தையாவது ஒழுங்கா, தவறாமக் கொடுத்தீங்களா?”

“”இல்ல டாக்டர். ஒரு தடவைதான் கொடுத்த மாதிரி ஞாபகம். அடிக்கடி அவருக்கு மாற்றல் கிடைச்சி ஊர் ஊராப் போறதாலே சரியா கொடுக்க முடியலை. மறந்தும் போயிடுச்சு”

“”அதுதான் இப்ப அவஸ்தைப்படும்படியா ஆயிடுச்சு. படிச்சவங்க நீங்க. நீங்களே இப்படி அலட்சியமா இருந்தா எப்படி? உங்க அலட்சியப் போக்கால உங்க குழந்தைக்குத்தானே இப்ப பாதிப்பு. படிப்பு படிப்புன்னு சொல்லி அவளை ஓடியாடி விளையாட விடறதும் இல்ல. இந்த வயசுல நல்லா ஓடியாடி விளையாண்டாதானே கை கால்களுக்கு நல்ல உறுதி கிடைக்கும். நம்ம வயசுல நாமெல்லாம் பாண்டி, பல்லாங்குழி, ஸ்கிப்பிங், தட்டாமாலை, நாலுமூலத்தாச்சி, தாயக்கட்டை, கல்லாங்காய், கிச்சிகிச்சித் தாம்பாலம் என்று ஒரு விளையாட்டு விடாம விளையாடி இருக்கோமே. அப்படி இருக்க, நம்ம குழந்தைகளை மட்டும் ஏன் விளையாட அனுமதிக்கிறதில்ல? நாமும்தான் படிச்சோம், பாஸ் பண்ணோம். இப்ப ஒரு நல்ல பதவியில நாம இல்லையா? ஏன் நம்மளோட எதிர்பார்ப்புகளை நம் குழந்தைங்க மேல திணிக்கணும்? அவங்கள அவங்க இஷ்டத்துக்கு ஏன் வளரவிடறதில்ல? இந்த வயசுலதான சுமதி விளையாட முடியும்? இப்பவே விளையாட அனுமதிக்காத நீங்க, அவள் வயசுக்கு வந்துட்டா அனுப்பவா போறீங்க. உங்க மகளை ஓடியாடி விளையாடவே விடறதுல்லங்கறதுதான் நீங்க செஞ்ச மிகப்பெரிய தவறு. வேர்க்க விறுவிறுக்க விளையாடினாத்தானே ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கை, கால்களுக்கு நல்ல வலு கிடைக்கும்? குழந்தையில் கொடுக்க வேண்டிய போலியோ மருந்தையும் சரியாகக் கொடுக்கல, விளையாடவும் விடல. அதுனாலதான் அவள் போலியோவால் பாதிக்கப்பட்டிருக்காள். சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, இனி அவள் எழுந்து நடப்பதே சிரமமாகத்தான் இருக்கும் போலிருக்கு”

டாக்டர் சொல்லி முடிப்பதற்குள் ஓ…வென அழத்தொடங்கினாள் சுமதி.

“”டாக்டர் என் மகளுக்கு ஏதாவது செய்யுங்க. என் தவறை உணர்ந்திட்டேன். தவமிருந்து பெற்ற ஒரே பெண்ணுங்கறதாலே அவளை வெளியே போகவே அனுமதிக்கல. கண்ணுக்குள்ளயே வச்சு பாத்துக்கணுன்னு அப்படி நடந்துகிட்டேன். அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா துடிச்சுப் போயிடுவாரு” என்று கெஞ்சினாள்.

“”ஸôரி சுமதி. அந்த ஸ்டேஜ அவ தாண்டிட்டா. இருந்தாலும், டிரீட்மெண்ட் கொடுத்துப் பார்ப்போம். மகளோட படிப்புல மட்டுமே கவனம் செலுத்தின நீங்க, மகளோட ஆரோக்கியத்திலேயும் கவனம் செலுத்தி இருக்கணும். சுவர் இருந்தாத்தானே சித்திரம் வரைய முடியும்?”

டாக்டர் எழுதிக்கொடுத்த சில மாத்திரை மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த சுமதி, ராதுவின் நிலையைப் பார்த்துப் பார்த்து அழுதாள். ஆறு மாதமாகக் கொடுத்த ட்ரீட்மெண்ட்டால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு ராதுவுக்கு எந்நேரமும் துணையாக இருந்தது அவள் உட்கார்ந்திருக்கும் சக்கர நாற்காலிதான். அதில் உட்கார்ந்து கொண்டுதான் எழுதுவாள்; படிப்பாள்; சாப்பிடுவாள். அந்த நாற்காலியுடன் பள்ளி செல்லவும் கார் ஏற்பாடு செய்திருந்தார் ராதுவின் அப்பா. ராதுவின் நிலையைப் பார்த்து இடிந்து போன கணவர் மதன், சுமதியோடு சரியாகக்கூட பேசுவதில்லை. எத்தனையோ கோயில் குளம் என்று ஏறி இறங்கியாகிவிட்டது. பயனில்லை. வீட்டின் கலகலப்பே காணாமல் போயிருந்தது.

தினமும் அந்தப் பூங்காவைக் கடந்துதான் தன் அலுவலகத்துக்கு சுமதி சென்றாக வேண்டும். அலுவலகம் செல்லும் வேளையில் பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் ஓரிருவரைத் தவிர, மழலைகளைக் காணமுடியாது. ஆனால், மாலைப் பொழுதில் அந்தப் பூங்கா நிரம்பி வழியும். குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு, கூட வந்த அம்மாவோ, அப்பாவோ, தாத்தாவோ பாட்டியோ நடைப் பயிற்சி மேற்கொள்வதும், தன் வயதொத்தவர்களிடம் பேசி மகிழ்வதுமாக தங்கள் மன அழுத்தங்களைக் குறைத்துக் கொண்டிருப்பார்கள். பூங்காவில் மகளை விளையாட வைத்துப் பார்க்கும் அந்த சுகமான அனுபவம் சுமதிக்கு வாய்க்காமலேயே போய்விட்டது.

இந்தப் பருவத்தில் வாழ்க்கையில் எதையெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ, அதையெல்லாம் அனுபவிக்க முடியாமல் தவிக்கும் மகள் ராது, நாள்தோறும் இப்படி சக்கர நாற்காலியில் வலம் வருவதற்குக் காரணம் தான்தான் என்ற குற்ற உணர்ச்சி அந்தப் பூங்காவைக் கடந்து செல்லும் போதெல்லாம் சுமத்திக்குத் தோன்றாமல் இருக்காது.

வீட்டில் இருந்த ராது, சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி சக்கரத்தைச் சுழற்றி சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தாள்.

– இடைமருதூர் கி.மஞ்சுளா (பெப்ரவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *