(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
புதுக் கிணறு. அதனைச் சுற்றிலும் கோழிக்கூடு. சீனிக்கதலி, கதலி, மொந்தன் ஆகிய வாழைகள் செழித்து வளர்ந்து நின்றன. வளமான பண்பட்ட நிலமும், அடிக் கடி கிடைக்கும் நீரும் அவற்றின் செழிப்புக்கும், வளர்ச் சிக்கும் துணை நின்றன.
அவ்வாழைகளுக்கிடையே, நாணமுற்று நிற்கும் ஒரு மங்கையினைப் போல ஒரு கோழிக்கூடு வாழை குலையோடு நின்றிருந்தது. அக்குலையோ, பாரியது. காய்கள் பசுமை யில் தோய்ந்து கிடந்தன.
யானையின் துதிக்கை போலத் தொங்கிக் கொண் டிருந்த குலையைச் சுமந்து கொண்டிருந்த அந்தக் கோழிக் கூடு வாழையின் பக்கத்திலேதான் ஒரு சீனிக்கதலி வாழை யும் குலையோடு நின்றிருந்தது. ஆனால், அதன் குலையோ சிறியது. காய்களும் சிறியவைதான். இனிப் பருக்க இயலாத அளவுக்கு நன்கு பருத்து முற்றிவிட்டிருந்தது. காய்களில் செறிந்திருந்த பசுமை நிறத்தில் சாம்பல் வண் ணமும் நன்கு பாய்ந்து கலந்து விட்டிருந்தது போல் தோன்றியது. அந்தக் குலையின் பாரம் சீனிக்கதலி வாழை யினால் சுமக்கக் கூடிய அளவிலேயே இருந்தது. அதனால் அது அக்குலையைச் சுமந்து கொண்டு சாதாரணமாக நின்றிருந்தது.
இந்த நிலையிலே தான் ஒரு நாள்… கோழிக்கூடு வாழை சீனிக்கதலி வாழையை ஊன்றி ஒரு முறை அவதானித்து விட்டு பின்வருமாறு பகர்ந்தது:
“அக்கா… நீ வெட்கமின்றி உனது குலையின் இந்தச் சிறு பாரத்தைச் சுமப்பதைப் பெரிதாகக் காட்டிக் கொண்டு நிற்கிறாயே… உன்னைப் பார்த்தால் இதை விடவும் அதிகமான பாரத்தைச் சுமக்கக் கூடிய அளவுக்கு வாட்டசாட்டமாக இருக்கிறாய். இருந்தும் நீ, பாரத்தைக் கூட்டிக் கொள்ளாது இந்தச் சிறு பாரத்தோடேயே நின்றி ருப்பதற்குக் காரணம் நீ கொள்ளும் பயமாகத்தானிருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன். இதோ…! என்னைப் பார்… எனது இந்தப் பெரிய குலையின் பாரம் என்னை மெத்தவே அழுத்துகிறது. இந்த நிலையிலே இன்னும் எவ்வளவு பாரம் வந்தாலும் நான் சுமக்கத் தயாராக விருக்கிறேன். எதற்கும் தைரியம் வேண்டும்” என்று விட்டு கோழிக் கூடு வாழை தன்மேனியை மெல்ல உலுக்கி விட்டுக் கொண்டது.
“தங்கச்சி… நீ நினைப்பது போல் அப்படி ஒன்றும் நான் பயந்தான் கொள்ளியல்ல… நான் பார்வைக்குப் பெரிதாகத் தோன்றினாலும் நான் சுமந்து நிற்கும் பாரம் எனது சக்திக்கு அளவானதே.. இதற்கு மேல் சிறிதளவு பாரத்தையும் என்னால் தாங்கிக் கொள்ள இயலாதது மட்டுமல்ல, நான் அவ்வாறு செய்து கொள்ள விரும்பவு மில்லை… தமது சக்திக்கு மேற்பட்ட பாரத்தைச் சுமந்து கொள்ள முற்பட்டால் அது பெரும் ஆபத்தில்தான் போய் முடியும். எனவே, நீயும் இந்த விடயத்திலே துணிவை மட்டுமே துணையாகக் கொண்டு தீர்மானம் செய்து விடாமல் நன்கு சிந்தித்து மிகவும் கவனமாக நடந்து கொள்” சீனிக்கதலி வார்த்தைகளை வெகு நிதானமாக அவிழ்த்து விட்டது.
“நான் என்னமோ சொல்ல நீ பெரிய ஆள் போல் கதை அளக்கிறாய்… நீயும் உனது கதையும் சீ…”
கோழிக்கூடு வாழையின் இந்த உரையைக் கேட்ட சீனிக்சுதலி மேற் கொண்டு எதுவுமே பேச விழையாது மௌனத்தில் மூழ்கியது.
சில வினாடிகளில் மீண்டும் அவை இரண்டுமே தத்தம் பணிகளிலே கவனத்தைச் செலுத்தத் தொடங்கின.
நாட்கள் நகர்ந்தன.
அந்தக் கோழிக்கூடு வாழையிலும், சீனிக்கதலி வாழையிலும் குறிப்பிடத்தக்கதாக எவ்வித வளர்ச்சியுமே ஏற்படவில்லை; அப்படி அப்படியே நின்றன என்றே சொல்லலாம். இந்நிலையிலே, கோழிக்கூடு வாழை சுமந்து கொண்டிருந்த குலையின் பருமன் மட்டும் அதிகரிக்க சீனிக் கதலி வாழை சுமந்து கொண்டிருந்த குலையின் பருமனோ எவ்வித மாற்றமுமே இன்றி அப்படியே இருந்தது.
சில தினங்களின் பின் ஒரு நாள்… திடீரென்று அந்தக் கோழிக்கூடு வாழை, மிகவும் அதிகரித்துவிட்ட தனது குலையின் பாரத்தைச் சுமக்க முடியாது நடுவால் முறிந்து அதன் மேற்பகுதி தரையிலே சரிந்து விழுந்தது.
இவை யாவற்றையும் நன்கு அவதானித்துவிட்ட சீனிக்கதலி, சிறிது நேரத்தின் பின் அதனை நோக்கி, தாழ்ந்த குரலிலே சில வார்த்தைகள் செப்பியது:
“நான் முன்பு விஷயத்தை எடுத்துச் சொன்னேன். கேட்கவே இல்லை. இப்போது பார்த்தீரா நான் சொன்னது பலித்துவிட்டதே!” என்றது சீனிக்கதலி. அதனைக் கேட்டதும் குற்றுயிராய்க் கிடந்த கோழிக்கூடு வா வாழை தன் பார்வையைச் சற்று மேலே உயர்த்தி அதன் மேல் படர விட்டது.
“அக்கா கதலி…நீ சொன்னது சரிதான். அதனைக் கேட்டிருந்தால் எனக்கு… இந்த நிலை ஏற்பட்டிருக்காது தான். அது மட்டுமல்ல நானும் உன்னைப்போல் வாழ்ந் திருக்கலாம். என்ன செய்வது… பிழை விட்டு விட்டேன்” என்று விட்டு நெடு மூச்சொன்றையும் உதிர்த்து விட்டுக் கொண்டது கோழிக்கூடு வாழை.
அவ்வாழையின் இந்தப் பேச்சையும், பெருமூச்சை யும் சீனிக்கதலி பொருட்படுத்தியதோ என்னவோ தெரிய வில்லை. ஆனால், அது தனது உரையைத் தொடர்ந்தது:
“இதே போல் தான் சில மனிதர்கள் தமது சக்திக்கு மேற்பட்ட பெரும் பதவிகளை ஏற்றுக்கொண்டு அதனைச் சுமக்க முடியாது ஈற்றில் உன்னைப்போலவே துன்பத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்”
சீனிக்கதலியின் இவ்வார்த்தைகளைச் செவிமடுத்த கோழிக்கூடு வாழை, “ம்…அப்படியா..?” என்றது. அவ்வளவுதான் சப்தம். மறுகணம், அந்தக் கோழிக்கூடு வாழை திடீரென்று மயங்கிப் போனது.
ஆனால், அப்போது சீனிக்கதலி வாழையோ தனது பழைய அளவு பருமனான அதே குலையையே சுமந்த வண்ணம் அநாயாசமாய் நின்றிருந்தது. அதற்கு, அதன் குலையில் அங்குமிங்குமாக நன்கு கனிந்திருந்த சில கனிகள் கூட அழகை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தன.
– தினகரன் வார மஞ்சரி – 1982.07.25.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.