(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பரந்து விரிந்த கடல். அதன் கரையிலே ஒரு பெரிய கல் காலாகாலமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்தது. கன்னங் கரேலென்று கரடுமுரடாயிருந்த அக்கல்லைக் காணும் போதெல்லாம் கடலுக்கு உள்ளூர ஒரு வெறுப்பு. அதனால், அது ‘ஹோ ஹோ’ என்று ஆரவாரித்துத் தன் அலைக் கரங்களினால் அக்கல்லை ஓங்கி ஓங்கி அடித்தது.
அடியைப் பொறுமையோடு சகித்துக்கொண்டது கல். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? ஒருநாள் அந்தக் கல் தன் பொறுமையை இழந்தது. எனினும், அது தன்னை ஓர் அறிஞனைப்போலக் கட்டுப்படுத்தி, நிதானமாகக் கடலை நோக்கி “ஐயா பெரியவரே! என்னை ஏன் இவ்வளவு கேவலமாக நடத்துகின்றீர்? நான் அப்படி என்ன பிழை செய்தேன்?” என்று வினவியது.
அதற்குக் கடல் “இப்போது நீ உள்ள நிலையில், உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு உன்மேல் வெறுப்பாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது எனவே தான் நான் உன்னைக் கேவலமாக நடத்துகிறேன்” என்று தன் உள்ளளத்தில் உள்ளதை வெளிப்படையாக உரைத்தது.
“ஆரம்பத்தில் மிகவும் தாழ்வாக இருந்த எத் தனையோ பேர் பின்னர் சிறந்த நிலையை அடைந்திருக் கிறார்களல்லவா? அதேபோல நானும் பின்னர் ஒரு காலத் திற் சிறந்தவொரு நிலையை அடையலாந்தானே? எனவே இப்போதுள்ள எனது நிலையினை மட்டும் கொண்டு நீர் என்னைப் புறக்கணிப்பது அழகல்ல” என்று கூறியது கல்.
“நீயாவது நல்ல நிலையை அடைகிறதாவது. அது ஒரு நாளும் நடக்காது” என்று கூறிய கடல், போகிற போக்கிற் கல்லை ஒருதரம் மோதிவிட்டுச் சென்றது. ‘உவர்ப்புள்ளம் கொண்ட இந்த உன்மத்தனோடு உலகநீதி பேசி என்ன பயன்?’ என்றுணர்ந்த கல், “அப்படியா சொல்கிறீர்கள், இனி உங்களோடு பேசிப் பயனில்லை. எப்படியாவது நடந்து கொள்ளுங்கள். காலம் வரட்டும் பார்ப்போம்” என்று கூறிவிட்டு மோனத்தவத்தில் ஆழ்ந்தது.
காலமென்ற கொடியிலே நாட்களென்ற மலர்கள் மலர்ந்து உதிர்ந்து கொண்டே வந்தன. எனினும், கடலின் மனப்பாங்கு மாறவில்லை.
ஒரு வாரத்தின் பின் ஒரு நாள், தற்செயலாக அங்கு வந்த சிற்பி ஒருவன் அந்தக் கல்லைக் கண்டான். எப்படி யான கல் தனக்குத் தேவையென்று எண்ணி எதிர்பார்த் திருந்தானோ அப்படியான ஒரு கல்லை அவன் அங்கே கண்டது அவனுக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. உடனே அவன் அந்தக் கல்லைத் தனது வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தான். பின் அந்தச் சிற்பி நாட்டிற்காக உயிர் நீத்த தியாகி ஒருவரின் உருவத்தை அவ்வூர் ஆட்சி மன்றத்தின் வேண்டுகோட்படி அக்கல்லிற் கச்சிதமாக வடித்தான்.
நல்லதோர் தினத்தில், முன்னம் அக்கல்லிருந்த இடத் திற்கு அண்மையாக அச்சிலை நிறுவப்பட்டது.
வழக்கமாக வெறிச்சென்றிருந்த அக்கடற்கரை விழாக்கோலம் பூண்டது. மக்கள் திரண்டு வந்து அப்பெரியாரின் உருவச்சிலைக்கு அஞ்சலி செய்தனர்.
இவற்றையெல்லாம் கடலும் பார்த்துக்கொண்டே இருந்தது. அன்று முதல், அந்தக் கல்லைப் புறக்கணிப்பதை அது தானாகக் கைவிட்டது. “நான் மடத்தனமாக நடந்து கொண்டேனே. அந்தக் கல் முன்பு சொன்னது போல இப்போது சிறந்த நிலைக்கு உயர்ந்து விட்டதே. என்னைப் பார்த்து அது இனி என்ன கூறப்போகின்றதோ?” என்று கடல் தனக்குட் சிந்தித்தவாறு இருந்தது.
உலகியல் அறிந்த உருவச்சிலை கடலின் மனநிலையை உணர்ந்து தானாகவே கடலோடு பேசத் தொடங்கியது.
“ஐயா பெரியவரே! நான் முன்பு சொன்னதை அலட்சியஞ் செய்தீர்கள். இப்போது பார்த்தீர்களா? நான் சிறந்த நிலைக்கு உயர்ந்துவிடவே, நீங்கள் என்னைப் புறக்கணிப்பதைக் கைவிட்டு விட்டீர்கள். ஆகவே, உயர்ந்தோர் இழிவதும், இழிந்தோர் உயர்வதும் உலகியற்கை என்ப தையும், சிறியோரெல்லாம் சிறியருமல்லர், பெரியோரெல் லாம் பெரியருமல்லர் என்பதையும் இனிமேலாவது அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறியது சிலையாக மாறிய கல்.
கடலும் உருவச் சிலையும் இப்போது உற்ற நண்பர்கள். பூரணைத் தினங்களில் இருவரும் அளவளாவிக் கொள்வதாக, அங்கு செல்வோர் பேசிக்கொள்கிறார்கள்.
– வளர்மதி, மதி – 1 கலை மதி – 1 கலை – 02 – 1975.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.