சின்ன வயசும் பெரிய மனசும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,163 
 

ஐந்தாம் வகுப்பு படிக்கும் தீபாவுக்கு அடுத்த வாரம் நடக்க இருக்கும் இங்கிலீஷ் பரீட்சைக்கு நோட்ஸ் வேண்டும். கேட்டு கேட்டுப் பார்த்தும் அவள் அம்மா வாங்கித் தரவேயில்லை. அதனாலேயே அவளுக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை.

ஏதோ ஒரு புத்தகம் அவள் கால்களுக்கு அடியில் கிடந்தைப் பார்த்தாள்.

‘என்ன புத்தகம்? யாருடையது?’ என்று அதை எடுத்தாள்.

அது அவள் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்த இங்கிலீஷ் நோட்ஸ். அந்த நோட்ஸ் அவள் வகுப்பில் படிக்கும் கலாவினுடையது. ‘ஆஹா, மறந்துட்டு போயிட்டா போல இருக்கு. எனக்கு அதிர்ஷ்டம்தான். அப்பிடியே அமுக்கிடலாம்’ என்று நினைத்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி புத்தகத்தை எடுத்துப் பைக்குள் வைத்துக்கொண்டாள்.

வேகவேகமாக நடந்து தன் வீட்டை அடைந்தாள்.

‘அப்பாடியோவ், இங்கிலீஷ் நோட்ஸ் கிடைத்து விட்டது. இந்த முறை பரீட்சையில் நல்ல மார்க் வாங்கலாம்’ என்று சந்தோஷம் அடைந்தாள்.

வெளியில் வீட்டு வேலைகளை முடித்து, தன் வீட்டுக்கு வந்த தீபாவின் அம்மா எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தாள்.

‘‘அம்மா என்ன தேடறே?’’ தீபா கேட்டாள்.

‘‘வேலை செய்யிற வீட்டில் இருந்து பணம் கடன் வாங்கி என் சுருக்குப் பையிலே போட்டு வெச்சிருந்தேன், அதைக் காணலை’’ என்று தீபாவின் அம்மா வருத்தப்பட்டாள்.

‘‘எவ்வளவு பணம் வெச்சிருந்தே?’’

‘‘இரு நூறு ரூபாய் கடன் வாங்கினேன். உன் பள்ளிக்கூடத்தில பீஸ் கட்டிவிட்டு, உனக்கு யூனிஃபார்ம் பழசாயிடுச்சே, புதுசா வாங்கலாம்னு பாக்கியை வெச்சிருந்தேன்’’ என்று கண் கலங்கினாள்.

அப்போது ‘‘தீபா… தீபா’’ என்ற குரல் கேட்டது.

‘‘தீபா, இது உன் அம்மாவின் சுருக்குப் பைதானே? என்று கேட்டாள் கலா.

‘‘ஆமா’’ என்றாள். சுருக்குப் பையைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாக, ‘‘பாப்பா உன் கையிலே இது எப்படி கிடைச்சது?’’ என்று கேட்டாள் தீபாவின் அம்மா.

‘‘அம்மா, என் இங்கிலீஷ் நோட்ஸை மறந்து நான் உட்காரும் பெஞ்சுக்கு கீழ வெச்சுட்டு வந்துட்டேன். அதை எடுக்க என் கிளாசுக்குப் போனேன். புத்தகம் இல்லை. யாராவது ஆபீஸ் ரூமில் கொடுத் திருப்பாங்களோ என்று நினைத்து அங்க கேட்கப் போனேன். அப்போ அந்த ரூம் வாசலில் இந்தப் பை கிடந்தது. அதில, ரூபாயும் நீங்க தீபாவுக்கு கட்டின ஸ்கூல் பீஸின் ரசீதும் இருந்தது. அதை கொடுக்கலாம்னுதான் எடுத்து வந்தேன்’’ என்று சொன்ன கலாவை ஆச்சர்யமாக பார்த்தாள் தீபா.

‘‘ரொம்ப நல்லது பாப்பா. நல்ல வேளை பை உன் கையில் கிடைச்சது’’ என்று சொல்லி பையை வாங்கிக் கொண்டாள்.

தீபாவுக்கு தான் செய்த தவறு புரிந்தது. விசும்பலோடு அழத் தொடங்கினாள்.

‘‘ஏய், தீபா ஏன் அழறே?’’

‘‘அம்மா… அம்மா… ’’ என்று தேம்பியபடி கலாவின் நோட்ஸை தான் எடுத்து வந்ததைச் சொன்னாள்.

‘‘பரவாயில்லை தீபா, நீ எப்ப உன் குற்றத்தை உணர்ந்தியோ அப்பவே நீ திருந்திட்டே’’ என்றாள் கலா.

தீபா கொடுத்த நோட்ஸை வாங்கிக்கொண்டு கலா சிரித்த முகத்துடன் புறப்பட்டாள்.

வெளியான தேதி: 01 அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *