(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
I
பசு மகன்
ஆறுகளில் உயர்ந்தது கங்கை. இதில் வந்து கலக்கும் சிறிய ஆறுகள் பல இருக்கின் றன. அவ்வாறு கலக்கின்றவற்றுள் இரண்டு. வாரணை, அசி என்பவை. இவை கங்கையோடு சேரும் இடத்தில் ஓர் ஊர் இருக்கின்றது.
அதற்கு வாரணாசி என்பது பெயர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாரணாசியில் அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந் தான். அவன் பெயர் அபஞ்சிகன்; வேதத்தை நன்றாகப் படித்தவன். அவன் தொழில் பிற ருக்கு வேதத்தைச் சொல்லிக் கொடுப்பது. அவன் மனைவியின் பெயர் சாலி. அவள் கற்பி லும் அழகிலும் சிறந்தவள். கணவனையே கடவுளாக வணங்கினாள்.
தீவினை யாரை விடும்? சாலி அழகிய ஆடவன் ஒருவனைக் கண்டாள். அவன்மேல் ஆசைகொண்டாள். தன் உயிரினும் சிறந்த கணவனை மறந்தாள் ; கற்பை விடுத்தாள்; கண்ட அவனுடன் கலந்திருந்தாள் ; கருவும் வாய்க்கப் பெற்றாள்.
கமரில் விழுந்த பால் மீண்டும் வருமா ! ஒரு செயலைச் செய்யும் முன்னே பல முறை எண்ணுதல் வேண்டும். எண்ணித் துணிந்த பிறகே செய்தல் வேண்டும். சாலி நினைத்துப் பார்க்கவே இல்லை. கண்டவனிடம் கலந்து வாழலாமா? என்று அவள் நினைக்கவே இல்லை. பிறகு தான் செய்தது தவறு என்பதை உணர்ந் தாள். அவள் நெஞ்சு அவளுக்கு நஞ்சு ஆயிற்று. ”ஏ! சாலி ! என்ன செயல் செய் தாய் ? கற்பைக் கெடுத்துக் கொண்டாயே ! பெண்களுக்கு அழகிய அணி கற்பன்றோ? அதனை இழந்து வாழ்தல் ஆகுமோ?” என்று அவளுடைய நெஞ்சு இடித்துக் கூறிற்று.
நெருப்பிலிட்ட புழுவைப்போல் சாலி துடித்தாள். ‘என்ன செய்வது’ என்று வருந்தி அழுதாள்; பிறகு அறிஞர்களை அடுத்தாள்; தான் செய்த தவற்றினை எடுத்துக் கூறினாள். அதற்குக் கழுவாயாக என்ன செய்தல் வேண்டும்? என்று கேட்டாள். அவர்கள், ”தமிழ் நாட்டில் குமரி என்றோர் இடம் இருக் கின்றது; அங்கே சென்று நீராடவேண்டும் : நீராடினால் தீவினை ஒழியும். நீ செய்திருக்கும் தீச் செயலுக்கு இதுவே கழுவாய்,” என்று சொன்னார்கள்.
காசி விடுத்தாள். தெற்கு நோக்கி வந்தாள். அருமை அன்பர்களே, எண்ணிப்பாருங்கள். நம் தென்னாடு எவ்வளவு சிறப்போடு கூடியது. வடநாட்டில் பிறந்த சாலி தன் தீவினையைப் போக்கிக் கொள்ள நம் நாட்டிற்கு வருகின்றாள்.
பல ஆறுகளைக் கடந்தாள். காடு மேடுகளைத் தாண்டி வந்தாள். கன்னட நாடு தெலுங்கு நாடுகளை விட்டுத் தமிழ் நாடு சேர்ந்தாள். சோழ நாட்டு வழி வந்து கொண்டிருந்தாள். ஒருநாள் ஞாயிறு மறைந்தது; இருள் எங்கும் நிறைந்தது; சாலி ஒரு சோலையில் தங்கிக்கொண்டிருந்தாள். காசியை விட்டு வருங்காலத்தில் கருவுடன் இருந்தாள் என்று அறிவோமன்றோ ! அக்கரு முதிர்ந்தமையால் அந்த இரவில் குழந்தையைப் பெற்றாள். தன்னருகில் ஒருவரும் இல்லாமை யால் தவித்தாள் ; உள்ளம் வருந்தினாள்.
பிறந்த அந்த ஆண் குழந்தை அழகாக இருந்தது. கைகளையும் கால்களையும் உதைத்துக் கொண்டு அழுதது. அதனைக் கண்ட சாலி முதலில் வருந்தினாள். ஐயோ இக் குழந்தையி னாலன்றோ நான் காசியை விட்டு வந்தேன். என் வாழ்க்கைக்கு இஃது ஒரு கோடரிக்காம்பு என்று நினைந்து அழுதாள்.
குழந்தை பசியால் துடித்தது . தாய் சிறி தும் கவலை கொள்ளாமல் விட்டுவிட்டுப் போய் விட்டாள். ‘அம்மா! அம்மா!’ என்று மேலும் மேலும் அச் சிறுவன் அழுதான். அம்மா எங்கே? அவள் போய்விட்டாளே !
அச்சோலையின் மற்றொரு புறத்திலே பசு ஒன்று இருந்தது. அது நல்ல குணங்களை உடையது. மக்களிடத்தில் அன்பாக இருக்கும். அப்பசு குழந்தையின் அழுகைக்குரலைக் கேட் டது. தன் தூக்கத்தையும் விட்டு எழுந்து வந்தது. குரல் கேட்ட வழியே போய்க் குழந் தையை அடைந்தது. யாருமில்லாமல் இளங் குழந்தை தனியே கிடந்து அழுவதைக் கண்டது. அதன் அருகில் சென்று நின்று தன் நாவினால் மெல்ல நக்கிற்று. பசு நக்கவே குழந்தை உடம்பில் கொஞ்சம் சூடு உண்டா யிற்று. குழந்தை உறங்கத் தொடங்கியது.
பசு குழந்தையை நக்குதல் பசியினால் குழந்தை விழித்துக்கொண்டு அழுதது. பசு குழந்தையின் வாயில் தன் பாலைப் பீச்சிற்று. குழந்தை குடித்தது. அதன் பசி நீங்கிற்று. அழுகை ஓய்ந்தது. குழந்தை யும் விளையாடிற்று. சோலையிலுள்ள பல நிறப் பூக்களைப் பசு பறித்துக்கொண்டு வந்தது! குழந் தைக்குக் காட்டி விளையாடச் செய்தது.
அன்பர்களே ! பசுவின் செய்கையைக் கண்டீர்களா? நாம் அதனை விலங்கு என்று கட்டிப் போட்டுத் தீனி போடுகின்றோம். நாம் நெல்லை எடுத்துக்கொண்டு அதற்கு வைக்கோலி னைப் போடுகின்றோம். பெற்றெடுத்த தாய் குழந்தையை விட்டுச் சென்றாள். ஆனால் விலங்காகிய பசு அக்குழந்தையைக் காப்பாற்று கின்றது. இப்பசுவினை நாம் எவ்வாறு புகழ லாம்! கடவுள் பசு என்று சொல்லலாமா? அறிவுடைய ஆ என்று கூறலாமா? நீங்களே சொல்லுங்கள்.
குழந்தையைப் பசு ஏழு நாட்கள் காத்தது. சோலைக்குச் சிறிது தொலைவில் வயனங்கோடு என்ற ஊர் ஒன்று இருந்தது. அவ்வூரில் அந்தணர் பலர் வாழ்ந்தனர். அவர்களுள் இளம் பூதி என்பவன் ஒருவன் இருந்தான். அவன் வேதங்களைக் கற்றவன்; நல்ல உள்ளம் உடையவன் ; கடவுளிடம் அன்பு செலுத்து பவன்.
இளம்பூதி செல்வத்துடன் வாழ்ந்தான். அவனுக்கும் அவன் மனைவிக்கும் ஒரே குறை இருந்தது. அஃது என்ன? அவர்களுக்குக் குழந்தை இல்லை.
வயனங்கோட்டை அடுத்த ஓர் ஊரில் இளம்பூதியின் உறவினர் இருந்தனர். அவ் வூருக்கு இளம்பூதியும் அவன் மனைவியும் போக நேர்ந்தது. அவர்கள் சோலையின் வழியாகத் தான் போகவேண்டும்; வேறு வழி கிடையாது.
குழந்தை இல்லாமலிருந்த இளம்பூதிக்கு நல்லகாலம் பிறந்துவிட்டது! சோலை வழிச் சென்ற அவன் குழந்தையைக் கண்டான். மக்கள் யாருமில்லாமலிருக்கப் பசு ஒன்று அதனைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்தான். கடவுள் மகிழ்ந்து தனக்கு மகனைத் தந்ததாகக் கருதினான். ‘இது பசுவின் குழந்தை அன்று. என் குழந்தை, என் குழந்தை. ஆகா! என்ன அழகான முகம் ! ஆகா! எவ்வளவு சிறிய கால்கள், இளைய ஞாயிறுபோலச் செக்கச் செவேரென இருக்கின்றதே !’ என்று சொல்லி மகிழ்ந்தான்.
இளங்குழந்தை தனியாய்க் கிடந்ததை நினைந்து நினைந்து அழுதான். ‘கடவுளே! தாங்கள் தம்மை நம்புவோரைக் கைவிடமாட் டீர் என்பதை அறிந்தேன். அடியேனுக்குத் திருவருள்செய்த தங்களுக்கு என்ன கைம்மாறு செய்வேன். இறைவனே! குற்றமில்லாத என் உள்ளத்தால் தங்களை வணங்குகின்றேன். இவ் வளவே என்னால் செய்யத்தக்கது!’ என்று பல பேசினான்.
தன்னருகில் நின்ற மனைவியைப் பார்த் தான். அவளும் அவனைப் போலவே உள்ளம் உருகிக் கண்ணீர்விட்டு நின்றாள். ‘கண்மணி! இவன் நமக்குக் கடவுள் தந்த செல்வம். இச் செல்வ மகன் நம்மை நல்ல நெறியில் செலுத்த வந்த பெருமகன். இனி நீயே இவனைக் காப் பாற்ற வேண்டியவள் ! இதுவரை அன்போடு
இப்பசு காப்பாற்றியது. நம் கிளை பொலிக . இந் நம்பி நீடுவாழ்க,” என்று சொல்லிக் குழந் தையை எடுத்து அவள் கையில் தந்தான். அவள் குழந்தையை வாங்கி அணைத்து முத்த மிட்டு உச்சி மோந்தாள்.
நடந்தவற்றை எல்லாம் கண்ணீர் ஒழுகப் பசு கண்டுகொண்டிருந்தது. இளம்பூதி பசு வருந்துவதைக்கண்டு அதனருகில் சென்று அதன் உடலை மெல்லத் தடவிக் கொடுத்தான். ‘பசுவே, வருந்தாதே. இதுவரை நீ இக் குழந் தையை வளர்த்தாய். இனிமேல் உன்னால் ஆகாது. ஆதலினால் நாங்கள் எடுத்துச் செல் கின்றோம். துன்பப்படாதே. உன்னை நாங் களும் மறக்கமாட்டோம்; இக்குழந்தையும் மற வாது. இச்சிறுவனுக்கு நீ வளர்த்த நினைவு பற்றி ஆமகன் என்று பெயர்வைக்கிறேன்,’ என்று சொன்னான். தன் பொறுப்பில் இருந்த பொருளை மற்றொருவரிடத்தில் ஒப்படைத்ததைப் போன்று பசு நின்றது. ‘குழந்தையை அன் போடு வளர்த்து வாருங்கள்’ என்று சொல்வ தைப்போல் பார்த்தது. பிறகு காடு நோக்கி மெதுவாக அசைந்தசைந்து நடந்து சென்றது.
இளம்பூதி வயனங்கோட்டிற்குக் குழந்தை யுடன் வந்தான். கண்ணை இமை காப்பாற்றுவதுபோல் காப்பாற்றினான். மதி வளர்வதைப் போல் ஆமகனும் வளர்ந்தான். அவனுக்கு ஆண்டுகள் ஐந்தும் நிரம்பவில்லை.
ஆமகன் இயல்பாகவே நல்லறிவு வாய்க்கப் பெற்றிருந்தான். பல நாள் துன்பப்பட்டுக் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை எளிமையாக அறிந்தான். கல்வி நிரம்பிற்று; கல்வியின் பயன் என்ன என்று ஆராய்ந்தான்.
“கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன்
நற்றாள் தொழஅர் எனின்.”
– குறள். இறைவன் திருவடிகளை வணங்குவதே கல்வி யின் பயன். கற்பதெல்லாம் கடவுள் அருளைப் பெறுவதற்கே. உண்மையாகிய கல்வி, கற்றவர் களைக் கடவுளிடத்தில் கொண்டு சேர்க்கும். இறைவனை வணங்காதவர்கள், கற்றவர்கள் என்று சொல்லப்பட மாட்டார்கள்; அவர்கள் வெற்று ஆள்களே ! இந்த உண்மையை ஆமகன் அறிந்தான்.
இறைவனை எவ்வாறு வணங்குவது? என்று மேலும் எண்ணினான். இறைவன் எங்கே இருக்கிறான்? அவன் இல்லாத இடம் எது? எங்கும் அவன் இருத்தலினால் எல்லாப் பொருள் களையும் இறைவனாகக் கருதி வணங்க வேண்டி யதே கடமை ஆகும்.
உலகத்திலுள்ள பொருள்கள் இருவகைப் படும் ; உயிருள்ளன, உயிரில்லாதன என. உயி ரில்லாத பொருள்களுடன் நாம் எவ்வாறு பழக முடியும் ? உயிருடைய பொருள்களுடனே தான் நாம் பழகுகின்றோம். ஒவ்வொரு உயிரினுள்ளும் கடவுள் எழுந்தருளி இருக்கின்றான். ஆகவே, உயிருள்ள பொருள்களெல்லாம் இறை வன் எழுந்தருளும் கோயில்கள். ஒரு புழுவை நாம் நசுக்கிவிட்டால் கடவுள் கோயில் ஒன்றை இடித்தவர்களாகின்றோம். ஆதலினாலே பூச்சி புழு முதலாக மக்கள் வரையில் எல்லோரிடத் தும் அன்புடன் இருக்க வேண்டும். அன்பே உயிர்; அன்பே கடவுள். இன்பம் தருவதும் அன்பே. அழியாத வீடு தருவதும் அன்பே. உலகத்தில் நமக்கு வேண்டிய எல்லாம் தருவதும் அன்பே.
“எவ்வுயிரும் நீங்காது உறையும் இறைசிவன் என்று
எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு.”
ஆகவே, எல்லா உயிர்களிடத்திலும் அன் பாக இருத்தல் வேண்டும்; அதுவே இறைவனை வணங்கும் நெறி; அதுவே நமக்கு இறைவன் அருளைக் கூட்டுவிக்கும் என்று ஆமகன் உறுதி கொண்டான்.
II
வேள்விப்பசுவை விடுதலை செய்தல்
வயனங்கோட்டில் அந்தணர்கள் வாழ்ந் தார்கள் என்று முன் சொன்னேன் அல்லவா? அவர்கள் வேள்வி செய்வது வழக்கம். அவ் வாறு ஒரு நாள் வேள்வி செய்தார்கள். அதனைக் காணுதற்கு ஆமகன் அங்குச் சென்றான்.
வேள்வி செய்யும் இடத்தில் அவன் என்ன கண்டான்? ஓர் இடத்தில் குழியொன்று கட்டப் பட்டிருந்தது. அதனைச் சுற்றிலும் பல அந் தணர்கள் இருந்தனர். அக் குழியில் தீ எரிந்து கொண்டிருந்தது. அந்தணர்கள் அடிக்கடி பலவற்றைச் சொல்லி நெய்யை அக் குழியில் விட்டார்கள். தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதனை அடுத்து ஒரு பெரிய தூண் இருந்தது. அத் தூணில் ஒரு பசு கட்டப்பட்டிருந்தது. அப் பசுவின் கொம்பில் பல மாலைகள் சுற்றப்பட் டிருந்தன. வேள்வியின் முடிவில் அப் பசுவைப் பலியாகக் கொல்வார்கள் என்பதை அவ் விலங்கு அறிந்திருந்தது. ஆதலினால் கண்ணீர்விட்டுக் கதறிக்கொண்டிருந்தது. அந்தணர்கள் அத னைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
வலைப்பட்ட மான் போல் வருந்திய பசுவை ஆமகன் கூர்ந்து பார்த்தான். அதன் நெஞ்சின் துடிப்பையும் உடலின் படப்படப்பையும் உள்ளத் துத் துயரத்தையும் அவனால் பார்த்துக்கொண் டிருக்க முடியவில்லை; உள்ளம் கசிந்தான்; கண்ணீர் விட்டான். யாரிடம் சொல்லிப் பசுவை மீட்கலாம் ? என்று எண்ணினான். அங்கிருந் தோர் ஒவ்வொருவரும் யமனைப் போன் றிருந் தார்கள்; ஒருவரும் அவன் சொல்லை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்தான். ‘எவ்வாறேனும் பசுவின் தொல்லையை ஒழிப் பேன்,’ என்றுறுதி கொண்டான். அதற்கேற்ற வழியை நினைத்து ஒரு முடிவிற்கு வந்தான்.
வேள்வி நடந்த வீட்டிலேயே அந்த இரவு தங்கினான்.
நள்ளிரவு; எல்லோரும் அயர்ந்து உறங்கு கின்றனர்; வீடு முழுவதும் அமைதியாக இருக் கின்றது. ‘இதுவே காலம்’ என்று கருதி ஆமகன் தன் மறைவிடத்தினின்றும் வந்தான். மெதுவாகப் பசுவைக் கட்டுத் தறியினின்றும் அவிழ்த்தான். தனக்கு விடுதலை வந்தது என்று மகிழ்ந்த பசுவும் மெல்ல அவனைப் பின்பற்றியது. எத்தகைய ஓசையும் இல்லாமல் ஓட்டிச் சென்ற னன். கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான வழியே இருவரும் சென்றார்கள்.
அந்தணர் கண் விழித்தனர். ஆவினைக் காணவில்லை. ”ஐயோ! வேள்வி நின்றுவிடுமே வேள்விப்பசு எங்கே சென்றது?” என்று கூக்குர லிட்டார்கள். பசுவின் அடிச்சுவட்டைக்கண்டு தேடிச் சென்றார்கள். விரைந்து சென்றமை யால் பசுவினை ஆமகனுடன் கண்டார்கள். உடனே இருவரையும் பிடித்துக் கொண்டனர்.
“இழிந்தவனே! புலைமகனே! திருடனே! கொடியவனே! ஏன் வேள்விப் பசுவினைத் திருடிக்கொண்டு ஓடுகின்றாய்? உன் எண்ணம்
என்ன? சொல்லு. இல்லையேல் உதைபடுவாய். உம்,” என்று அச்சுறுத்தினர். அன்றியும் கோலினால் அடித்துத் துன்புறுத்தினர்.
தேடிக்கொண்டு வந்த அந்தணர்களுடன் வேள்வியைச் செய்து வைக்கும் ஆசிரியரும் வந்திருந்தார். அவர் வேள்வி ஆசிரியர் என்று சொல்லப்படுவார். அவரே அளவு கடந்து ஆமகனை அடித்தவர். சிறுவன் என்றும் கருதா மல் தம் கையிலிருந்த கோலால் ஓங்கி ஓங்கி அடித்தார். ஆமகன் உடலில் குருதி வழியத் தொடங்கியது .
அந்தணர்கள் செய்கைகளைப் பசு கண்டது. வேள்வி ஆசிரியரே கொடுமை நிறைந்தவர் என்று எண்ணிற்று. தனக்கு நன்மை புரிந்த இளைஞனைத் துன்புறுத்திய ஆசிரியரிடம் அதற் குப் பகைமை மிகுந்தது. ஆதலின் உடனே தன் கூர்மையான கொம்புகளால் ஆசிரியர் வயிற்றில் குத்திற்று; குடல் வெளிவந்தது. அந்தண ஆசிரியரின் உடல் கீழே வீழ்ந்தது; உயிர் ஓடி ஒழிந்தது.
மற்ற அந்தணர்கள் என்ன செய்வதென்று அறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். தன் னைக் காப்பாற்றிய இளைஞனை மெல்ல நக்கித் தன் நன்றியைப் பசு அறிவித்தது. உடனே நாலுகால் பாய்ச்சலில் விரைந்து ஓடிக் காட்டில் மறைந்தது.
வயனங்கோட்டு அந்தணர் தம் வேள்விப் பசுவை இழந்தனர். அது மட்டுமா? அந்தோ ! வேள்வி ஆசிரியரையும் இழந்தார்கள். இவற் றிற்கெல்லாம் ஆமகனே காரணம் என்று அவனை வெகுண்டு நோக்கினர். கொல்லுகின்ற வர்களைப் போல நோக்கிய அந்தணர்களைப் பார்த்து ஆமகன், “ஐயர்களே! என்னை ஏன் அடிக்கிறீர்கள்? நான் என்ன குற்றம் செய் தேன்? நான் சொல்வனவற்றைக் கேளுங்கள். இப்போது காட்டுப் பக்கமாக ஓடிய பசுவுடன் உங்களுக்குள்ள பகை என்ன? அதனை ஏன் கொல்லத் துணிந்தீர்கள்? அதனைக் கொல்லு வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின் றது? அதன் நன்மைக்காக நீங்கள் என்ன செய்திருக்கின்றீர்கள். பசுக்களுக்கென்று அரசன் புல்வெளிகளை விட்டிருக்கிறான். அப் புலங்களிலுள்ள புல்லை இந்தப் பசு தின்கின்றது. நீரோடையி லிருக்கும் தண்ணீரைக் குடிக் கிறது. மரத்து நிழலில் படுத்துறங்குகின்றது. அவ்வளவோ? நமக்கும் நம் குழந்தைகளுக்கும் பால் கொடுத்துக் காப்பாற்றுகின்றது. நாம் இப்பசுவுக்கு என்ன கைம்மாறு செய்கின்றோம். ஒன்றுமில்லையே ! அவ்வாறிருக்கக் கொடுமையாக இதனையே கொல்ல முற்படுகின்றீர்களே! இஃது ஒழுங்காகுமா! எண்ணிப் பாருங்கள்,” என்று சொன்னான்.
சிறுவன் பேசப் பேச அந்தணர்களுக்குச் சீற்றம் ஏறிக்கொண்டே போயிற்று. மேலும். அவனைப் பேச வொட்டாது தடுத்து அந்தணர் கள் பின்வருமாறு சொன்னார்கள். “அறிவில் லாச் சிறுவனே! அறியாமையால் பல பேசு கின்றாய். உனக்கு உண்மை உணர்வு கிடை யாது ; ஆதலினால் தான் ஏதேதோ உளறு கின்றாய். எம் சொற்களைக் கருது. திருமால் அருள் செய்துள்ள வேதத்தை நீ படித்தறி யாய். அறிந்திருப்பின் வேள்வியின் பெரு மையை அறிந்திருப்பாய்; இந்தப் பயனிலாத சொற்களைச் சொல்லி இருக்கமாட்டாய். நீ மக்க ளுள்ளே பதரை ஒத்தவன். பல சொல்லுவா னேன். நீ பசுமகன் தானே! உனக்கு விலங் கின் அறிவைத் தவிர வேறு அறிவு எவ்வாறு வரும்,” என்ற னர்.
ஆமகன் “அந்தணர்களே ! நன்றாக மகிழுங்கள். என்னைப் பசுமகன் என்று சொல்லி எதற்காகச் சிரிக்கின்றீர்கள் ! என்னைப் பசுமகன் என்று சொல்லுவதால் எனக்கென்ன இழிவு. ஓகோ! உங்களுக்குத் தெரியாதோ? உங்கள் குலத்து இருடிகள் வரலாற்றை நீங்கள் படிக்க வில்லையோ? இல்லையானால் சொல்லுகின்றேன்; கருத்துடன் கேளுங்கள். அசலன் என்ற முனிவன் உங்களால் போற்றப்படுகின்றான்.
அவன் யார் வயிற்றில் பிறந்தவன்? பசுவின் வயிற்றில் பிறந்தவன் என்பதை அறியீரோ? அல்லது மறந்தீரோ ? சிருங்கியைப் பெற்ற தாயார் யாவர்? மான் என்னும் விலங்கன்றோ ? சிறிதும் உயிர்களிடம் இரக்கம் காட்டாது கொல்லும் கொடிய விலங்காகிய புலியின் வயிற் றில் பிறந்தவன் விரிஞ்சி ஆகும். நீங்கள் வணங்குகின்ற கேசகம்பளனைப் பெற்றது நரி அல்லவா? பசு, மான், புலி, நரி முதலியவற் றின் வயிற்றில் பிறந்தவர்கள் உங்கள் குலத்து இருடிகள். இவ்வாறிருக்க என்னைப் பசுமகன் என்று இகழ்கின்றீர்களே ! இகழ்வதற்கு என்ன வழி இருக்கின்றது? சிறிது நினைத்துப் பாருங் கள்!” என்றான்.
அந்தணர்கள் வெட்கத்தால் மூடப்பட் டனர்; பேச வழி அறியாது திகைத்து நின் றனர். அவருள் ஒருவன், “ஓ ! இச்சிறுவன் யார் என்று எனக்குத் தெரியும். இவன் திருட் டுச் செயலையும் முரட்டுப் பேச்சினையும் பார்க்கும் போது ஐயம் சிறிதுமே இல்லாது ஒழிந்தது” என்றார்.
எல்லோரும் ஆவலுடன் “சொல்லு சொல்லு” என்றனர்.
அவன், “நான் சில ஆண்டுகட்கு முன் ஒருத்தியைக் கண்டேன். அவள் வடநாட்டி லிருந்து வந்தவள்; நடந்தமையால் உடல் வாடி இருந்தாள். குமரி சென்று நீராட வந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டு யான், நீ யார்? நின் ஊர் யாது? இங்கு வரக் காரணம் யாது?’ என்று கேட்டேன். அவள் ‘என் பெயர் சாலி. நான் காசியிலிருந்து வரு கின்றேன், கணவர் வேத வாத்தியார். நான் தீயமதியால் தவறி நடந்து கரு வயிற்றிலுற் றேன். அறிஞர்கள், கற்பு நெறி தவறிய கொடுமை நீங்கக் குமரி ஆடவேண்டும் என் றனர். இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லும் மக்களோடு கூடினேன். தெற்கிலுள்ள குமரி நீராடி வருகின்றேன் இவ்வூரிலிருந்து சிறிது தொலைவில் உள்ள சோலை ஒன்றில் குமரிக்குப் போகும் பொழுது தங்கியிருந்தேன்; அச்சோலை யில் நல்ல இருளில் ஒரு மகனைப் பெற்றேன். வேறுவழி இன்மையால் அக்குழந்தையை அங் கேயே விடுத்துப் போய்விட்டேன். ஐயா, எனக்கும் நற்கதி கிடைக்குமா? என்னைப் போன்று கொடுவினை செய்தாரை நீங்கள் கண்டிருப்பீர்களா! கடவுளே!’ என்று சொல்லி வருந்திச் சென்றாள். அக்குழந்தையே இவன்! கற்பு நெறி தவறியவள் பெற்றெடுத்த கசடன் இவன்! இச்செய்தியை இவனை வளர்த்த இளம் பூதிக்குச் சொல்லவேண்டும் என்று கருதினேன். அவனுக்குப் பிள்ளை இல்லாமையால் என் சொற்களை நம்பமாட்டான் என்று நினைத்துப் பேசாமல் இருந்துவிட்டேன். ஒழுங்கற்றுப் பேசும் இவன் பிறப்பும் ஒழுங்கற்றதே ! குலத் தளவே ஆகும் குணம்” என்றான்.
அந்தணர்கள் எல்லோரும் முணுமுணுத் தார்கள். ‘வேசி மகன், இழி மகன்’ எனப் பலவற்றைச் சொன்னார்கள்.
ஆமகன் அவர்கள் பேச்சினைக் கேட்டான். இனிமையாகச் சிரித்தான் ‘அந்தணப் பெரு மக்களே! ஏன் சிரித்துக் குறை கூறுகின்றீர். நீங்கள் வணங்கும் கடவுளாகிய பிரம்மா திலோத்தமை என்ற தேவ தாசியைப் படைத் தார். அந்தத் தாசியின் பிள்ளைகள் அல்லரோ வசிட்டனும் அகத்தியனும் ? மாபெரும் முனி வர்களாகிய இவ்விருவரையும் தாசியின் பிள்ளை கள் என்று தள்ளிவிட்டார்களா?” என்று சொல்லிக் கைகொட்டிக் கடகட என்று சிரித் தான்.
ஆமகன் பேச்சு அந்தணர்களுக்கு வெந்த புண்ணில் வேல் நுழைவதுபோல் இருந்தது. அவர்களால் மறுத்தும் பேசமுடியவில்லை. சிறிய அவனால் சொல்லப்படும் சொற்களைக் கேட்டுக் கொண்டிருக்கவும் உள்ளம் ஒப்பவில்லை. முடி வாக அவனைக் குலத்தினின்று விலக்கினர். அவர்கள் கட்டளைப்படியே அவனை வளர்த்த இளம்பூதியும் விட்டுவிட்டான்.
பசுமகனுக்குச் சோறு போடுவார் எவரும் இல்லை. ஆகவே பிச்சையெடுக்க வேண்டியவ னானான். இவனிடத்தில் நல்லெண்ணம் இல் லாத அந்தணர் பிச்சைப் பாத்திரத்தில் சோறு போடாது கல்லைப் போட்டனர் ! அந்தோ! கொடுமை. கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கக் கடவுள் கற்றுக் கொடுத்திருக்கின்றானா? இல்லையே. பசியைக் கல்லால் எவ்வாறு போக்கிக்கொள்ள முடியும்? ”சோறு இல்லை; போ என்று சொல்லலாகாதா? கல்லைப் போடு கின்றார்களே ! இவர்கள் நீடூழி வாழட்டும். நான் வேறு ஊர் செல்கின்றேன்,” என்று சொல்லிப் பசுமகன் வேற்றூர்க்குச் சென்றான்.
III
உணவு சுரக்கும் ஓடு
வயனங்கோட்டினை விட்ட பசுமகன் பல கல் தொலைவு நடந்து வந்தான். வடமதுரை அடைந்தான். அவ்வூரில் நாமகளுக்கென்று ஒரு கோயில் இருந்தது. அக்கோயிலின் முற் பகுதியில் ஒரு மேடை இருந்தது. அம்மேடை யைத் தானிருக்கும் இடமாகச் சிறுவன் அமைத் துக்கொண்டான். அவ்வூரில் பகல் முழுவதும் பிச்சை எடுப்பான். மாலையில் அம்மேடைக்கு வருவான். பிச்சையாகக் கிடைத்த உணவைத் தான் ஒருவனே உண்ணமாட்டான். குருடர், செவிடர் , நொண்டிகள், காப்பாற்றுவோர் இல்லாதோர், பிணியாளர் முதலியோரை அழைத்து அவர்களுக்கு இடுவான். அவர்கள் உண்டு ஒழிந்த மிச்சிலைத் தான் உண்பான்.
பிறகு நாமகளை வணங்கி உறங்குவான்.
இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. ஒரு நாள் வழக்கம்போல் பிச்சை எடுத்து மற்றவருக்கும் கொடுத்துத் தானும் உண்டு உறங்கினான். இரவு கன்னங்கரேல் என இருந்தது. விண் மீன்களும் ஆகாயத்தில் காணப்படவில்லை. கரிய மேகம் எங்கும் சூழ்ந்திருந்தது. ‘சோ’ என்ற ஒலியுடன் மழை பெய்தது. அக் காலத் தில் வேறு ஊரிலிருந்து வந்த சில கூட்டத் தார் ஆமகனை எழுப்பி ‘உணவு வேண்டும்’ என்று சொன்னார்கள். அவர்கள் பசியினால் வாடி வதைந்தார்கள். சிறுவனோ சோறு மிகுதி வைத்திருப்பவன் அன்று. அன்றன்று கிடைத்தவற்றை அவ்வந்நாளிலேயே செலவு செய்துவிடுவான். ஆதலின் உள்ளம் நொந்து, ”கலைமகளே ! இவர்கள் பசியை யான் எவ்வாறு போக்குவேன்; இவர்களோ பசிக்கொடுமையால் மிகுதியும் துன்புறுகின்றார்களே; என்ன செய் வேன் தாயே, நீயே காப்பாற்ற வேண்டும்,” என்று வணங்கினான்.
தனக்கென்று நினைந்து வருந்துவதை விடப் பிறருக்காக வருந்துவது உயர்ந்தது. பிறர் துன்பத்தைக் காணமுடியாத நிலையில் ஆமகன் வருந்தினான். ஆதலின் கலைமகளும் அவன் துன்பத்தை ஒழிக்க வேண்டும் என்று எண்ணினாள். அவன் முன்தோன்றி, ”உண் மையான அன்பனே ! வருந்தாதே. நான் இந்த ஓட்டினைத் தருகின்றேன். இதனைக் கைக் கொள். நாட்டில் பஞ்சத்தால் உணவு இல்லா மற் போனாலும் இவ்வோடு உணவு தரும். உண வைக் கையில் வாங்குவோர் மேலும் வாங்க முடியவில்லையே என்று வருந்தும் அளவுக்குத் தரும். இதில் உணவு இல்லையே என்று நீ என்றும் வருந்தவேண்டியதில்லை. வந்தோர் பசியை முதலில் நீக்கு,” என்று சொல்லி ஓட் டினை அவன் கையில் தந்தாள்.
‘செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை’ அல்லவா? நன்றியறிந்தவன் பசுமகன். ஆத லின், நாத் தழுதழுக்க அன்போடு கலைமகளை வணங்கினான். ‘என் தாயே! ஒளியே! நாக் கில் விளங்கும் நங்கையே ! வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி! பிறர் துன்பத்தை அழிக் கும் பெருந்தகையோய்! நின் திருவடியை வணங்குகின்றேன். நின்னை வணங்காது யான் உய்ய முடியுமோ?” என்று தொழுதனன்.
பிறகு பசியால் வாடிய கூட்டத்தாருக்குச் சோறிட்டான். எவ்வளவு எடுத்தாலும் சோறு வந்து கொண்டே இருந்தது. மணலிடத்தில் தோண்டினால் தண்ணீர் எவ்வாறு சுரக்கும்? அதைப் போலவே எடுக்க எடுக்க அவ்வோடு உணவு தந்துகொண்டே இருந்தது.
மறு நாள் பொழுது புலர்ந்தது. இதற்கு முன்னெல்லாம் கையில் பிச்சைப் பாத்திரத் தோடு பிச்சை எடுக்கச் செல்வான். ஆனால், இன்றைய நாள் பசித்தோர் எல்லோருக்கும் உணவு கொடுக்கச் சென்றான். இரந்தோர்க் கெல்லாம் உணவு தந்தான். பசி எனும் நோயினை ஒழிக்கும் மருத்துவனாயினான். மக்களுக்கு மட்டுமா? பறவைகளுக்கும் சோறு போட்டான் !
பழுத்த மரத்தில் பறவைகள் வந்து சேரும். எதற்கு? அதிலுள்ள பழத்தைத் தின்பதற்கு. ஆமகனிடத்தில் உணவு தரும் ஓடு இருந்தமையால் அவனும் ஒரு பழமரத் தைப் போன்றிருந்தான். பசிநோயாளரும் பறவைகளும் அவனைச் சூழ்ந்தனர். உணவு உண்ணும் ஒலி மிகுந்தது!
அருமை அன்பர்களே! பசி என்பது கொடிய துன்பத்தைத் தருகின்றது. ஒருவ னுக்குப் பசிக்கத் தொடங்கினதும் அவன் எந்த வேலையும் செய்யமுடியாமல் விழிக்கின்றான். உடம்பு ஓய்கின்றது. கண்கள் மூடுகின்றன. ஆதலினால் பசி எல்லா வகையான சிறந்த குணங்களையும் அழித்துவிடும்.
பசியால் வாடினவர்களுக்கு உணவு தரு தல் பெருஞ் செயலாகும். அவர்கள் உண்ட தும் தெளிவாகக் காணப்படுகின்றார்கள். அவர் களின் முகத்தில் ஒருவகை ஒளிகாணப்படுகின் றது. ‘அப்பா’ என்று கூறித் தம் மகிழ்வைத் தெரிவிக்கிறார்கள். அந்தக் காலத்தில் அவர் களைக் காண்பதற்கே நமக்கு மிகுதியும் மகிழ்ச் சியாய் இருக்கிறது.
பசி நீங்கி மகிழ்ந்து செல்லும் முகங்களை ஆமகன் கண்டு உள்ளம் மகிழ்ந்தான். இவ்வாறு சோறு போடுவது உயர்ந்த அறச்செயல் ஆதலின், பசுமகன் அறத்திற்குத் தூண் போன்று விளங்கினான்.
மேலுலகம் என்று ஒன்று இருக்கின்ற தென்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா? வீட்டில் உங்கள் பெற்றோர் சொல்லியிருப்பார் களே! அந்த உலகத்தில் வாழ்பவன் தேவேந் திரன். அவன் ‘பாண்டு கம்பளம்’ என்னும் இருக்கையில் இருப்பான் ; சிற்சில காலத்தில் அக் கம்பளம் அசையும். அவ்வாறு அசைந் தால் மண்ணுலகத்தில் பெரும் அறச்செயல் செய்கின்றவர் இருக்கின்றார் என்று கொள்ளப் படும். அறிந்தவுடன் புறப்பட்டு வருவான். வந்து அவர்களுக்கு நல்லவரங்களைத் தருவான்.
சாலி மகனைப்போல் அறச்செயல் செய்த வர் உண்டோ ? அதன் பயனாக இந்திரன் கம் பளம் அசைந்தது. இந்திரன் சாலிமகனைப் பற்றி உடனே அறிந்தான். அவனுக்கு நல்ல வரங்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைத் தான். விரைவாக மண்ணுலகத்திற்கு வந் தான்.
தன் சொந்த உருவத்தை இந்திரன் விட் டான் ; ஒரு கிழவன் உருவத்தை ஏற்றுக் கொண்டான். ஆமகன் முன்னே வந்தான். “அன்பனே! அறச்செயல் செய்த பெருமை நினக்கு உண்டு. யான் மிக மகிழ்கின்றேன். நான் தேவலோகத்துத் தேவேந்திரன். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பதற்காக வந் தேன் . அறிவிற் சிறந்தவனே! உனக்கு வேண்டும் வரங்களைக் கேள் ; தருகின்றேன்” என்றான்.
சாலி மகன் கிழவனை உற்றுப் பார்த்தான். இடி இடி என்று சிரித்தான். அவன் சிரித்த சிரிப்பில் அவன் விலா எலும்புகள் முறிந்து விடுவன போன்று இருந்தன. பிறகு அத் தேவனை இழிவாக நோக்கினான், ”இந்திரனே! தேவர் நாட்டு அரசனே! மேலுலகத்துத் தலைவனே ! இந்த மண்ணுலகத்தில் நல்ல செயல்களைச் செய்தோர் அவற்றின் பயனைத் துய்த்தற்காக நின் நாட்டிற்கு வருகின்றனர். நின்னாடு எவ்வகையான தகுதியை உடையது? அது வெறும் இன்ப நாடு. அங்குத் தவம் செய் யும் முனிவர்கள் இருக்கின்றார்களா? உலக ஆசை ஒழிய வேண்டும் என்று கடவுளை வணங்குவோர் இருக்கின்றார்களா? அறம் செய்வோர் உண்டோ ? திக்கற்றோரைக் காப் பாற்றுவோர் உளரோ? இப்படிப் பட்டவர் நின் நாட்டில் ஏது? இன்பக் கடலில் அழுந்தி உலகத்தை மறந்தவர்கள் தானே உனது நாட்டில் வாழ்கின்றார்கள்? என் ஓடு நிரம்ப உணவினைத் தருகின்றது. பசி எனத் துடித்து வருவோருக்குச் சோறு போடுகின்றேன். உண்
ணும் அவர்கள் அயர்ச்சி நீங்கி மகிழ்கின்றார் கள். அவர்களுடைய முகமலர்ச்சி எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. நீ தரும் வரங்கள் இம்மகிழ்ச்சியினும் மிகுந்த மகிழ்ச்சி யினைத் தருமோ ? உண்டி உடுப்பன ஆகிய இவற்றைத்தானே நீயும் தருவாய், வேறு எவற் றைக் கொடுக்க முடியும்?” என்று சொன்னான்.
இந்திரனால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை. அவன் முகம் வாடிற்று. மனம் அழிந் தான். என்ன இவன் செருக்கு , சோறு தரும் ஓடு இவனிடத்திலிருக்கிறது. இதனாலல்லவா இவன் தருக்குடன் பேசுகின்றான். இவன் இறுமாப்பினை அடக்குகின்றேன். ஏழைகளுக் குத்தானே இவன் ஓடு பயன்படும். நாட்டில் ஏழைகளே இல்லாமல் செய்துவிடுகின்றேன். நாடு முழுவதும் நல்ல மழையைப் பெய்யச் செய் கின்றேன்; வேண்டிய வளங்களையும் உண் டாக்குகின்றேன் ; அப்பொழுது பிச்சை எடுப்போர் இல்லாமல் போவர். இவனைத் தேடிக்கொண்டு யாரும் வரமாட்டார்கள். இவன் செருக்குத் தானே தணிந்துவிடும்,” என்று எண்ணினான். அவ்வாறே மழை பெய்யச் செய்தான்; நாட்டில் வளம் பெருகிற்று.
– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.