ஒரு சிற்றூரில் ஆனந்தன் என்பவன், தன் மனைவியோடும், இரண்டு குழந்தைகளோடும் வாழ்ந்து கொண்டிருந்தான்.
அவன் கைவசம் இருந்த பணமும், நகையும் செலவழிந்தது; வேலை எதுவும் கிடைக்கவில்லை, சில நாட்கள் பட்டினி கிடக்கவும் நேரிட்டது.
மனைவி, மக்களோடு ஊர் ஊராக அலைந்தான் ஆனந்தன்.
அடுத்த ஊரில் இருக்கும் செல்வந்தன் ஆண்டான் செட்டி வீட்டுக்கு வேலை பார்க்க ஒரு பெண் தேவை என்பதை கேள்விப்பட்டான் ஆனந்தன்.
தன் மனைவியையும் குழந்தைகளையும் ஆண்டான் செட்டி வீட்டில் வேலை செய்யும்படி ஏற்பாடு செய்தான்.
சிறிது தொலைவில் உள்ள வணிகனிடம் கணக்கனாக வேலை பார்த்து, அங்கேயே ஒரு அறையில் தங்கினான் ஆனந்தன்.
சில நாட்களுக்குப் பிறகு, ஆண்டான் செட்டி மகளுக்கு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருமணத்திற்குச் சென்று நல்ல உணவு அருந்தலாம் என்று மிக ஆவலோடு இருந்தான் ஆனந்தன். ஆனால், அவனை அழைக்கவில்லை. சிறுது வருத்தம் உண்டாயிற்று. ஆயினும், தன் மனைவி மக்களாவது திருமண விருந்து உண்டதில் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது.
அடுத்த நாள் ஆனந்தனின் மனைவி அவனைக் காண வந்தாள்.
‘நாம் ஏழை என்பதால் தானே செட்டி மகள் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை’ என்று மனைவியிடம் வருத்தப்பட்டான் ஆனந்தன்.
மனைவி புறப்படத் தயாரானாள்.
அப்போது, ” எனக்கு ஒரு புது யோசனை தோன்றியுள்ளது. செக்குமாடுபோல, கணக்கு வேலை பார்த்து எப்படி முன்னேற முடியும்?. ஏதேனும், ஒரு தந்திரத்தைக் கையாண்டால் தான் மதிப்போடு, பணமும் சம்பாதிக்க முடியும். செட்டி வீட்டுக்கு பலர் வருவார்கள். பேச்சுவாக்கில், என் கணவர் ஞான திருஷ்டி மூலம் சோதிடம் கூறுவார். தெய்வீக சக்தி பெற்றவர் என்று சொல்லு”, என்றான்.
“உங்களுக்கு சோதிடம் தெரியாதே, பொய் சொல்லலாமா?” என்றால் அவன் மனைவி.
“பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். தந்திரம்! அது ஒரு வகையான சாமர்த்தியம்” என்றான் ஆனந்தன்.
செட்டி வீட்டுக்கு ஆனந்தன் மனைவி சென்றாள்.
மறுநாள், செட்டி வீட்டில் ஒரே பரபரப்பு. திருமணத்திற்கு மாப்பிள்ளை வந்த குதிரை காணாமல் போய்விட்டது. எங்கே தேடியும் குதிரை போன சுவடே தெரியவில்லை.
அப்போது, “என் கணவர் தெய்வீக அருள் பெட்ரா சோதிடர், காணாமல் போன குதிரையைப் பற்றி, அவரிடம் கேட்டால், ஞான திருஷ்டி மூலம் சொல்லக் கூடியவர்” என்று செட்டியிடம் ஆனந்தன் மனைவி சொன்னாள்.
உடனே செட்டி, ஆனந்தனைத் தேடித் சென்று வேலை மிகுதியால், திருமணத்திற்கு உங்களை அழைக்க மறந்து விட்டேன். மன்னிக்க வேண்டும் என்று கூறி, “குதிரை காணாமல் போய் விட்டது, அது கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்று பணிவோடு வேண்டிக் கொண்டான்.
அதைக் கேட்டதும், கரும்பலகையில், என்னமோ கனக்குப் போட்டு, கண்ணை மூடிக் கொண்டு, வாய்க்குள், முணுமுணுத்து “செட்டியாரே! நேராக தெற்கே போனால், ஊருக்கு வெளியே, பாழடைந்த ஒரு சத்திரம் காணப்படும், திருடர்கள் அதில் குதிரையை மறைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது” என்றான் ஆனந்தன்.
செட்டி சில ஆட்களோடு அந்தச் சத்திரத்திற்குச் சென்றான்.
ஆனந்தன் கூறியபடி அங்கே குதிரை மறைவாகக் கட்டப்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு, அதை ஒட்டி வந்தனர்.
செட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆனந்தனுக்கு நிறைய பணம் கொடுத்தான். அவனுடைய சோதிடத்தின் பெருமையைப் பலரிடம் சொன்னான். அவன் மதிப்பு, புகழும் ஊர் முழுதும் பரவியது.
ஆனால், குதிரையை முதல் நாள் இரவில் திருடிக் கொண்டு போய் சத்திரத்தில் கட்டி வைத்தவன் ஆனந்தனே என்பது எவருக்கும் தெரியாது.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் தொகுப்பிலிருந்து (ஜூன் 1998).