தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: இளம் எழுத்தாளர்கள் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 204,617 
 
 

பொம்மை… பொம்மை… வாசலில் குரல் கேட்டவுடன், வாணி ஓடோடி வந்தாள். தலையில் பொம்மைக் கூடையுடன் பொம்மைக்காரர் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்.

“”அங்கிள்… பொம்மை அங்கிள்… இங்கே வாங்க, எனக்கு பொம்மைகளைக் காட்டுங்க… நான் வாங்கணும்” என்றாள் வாணி.

சாந்தினிஅழகான மாடி வீடு… உற்சாகமாக அழைக்கும் குழந்தையைக் கண்டதும் பொம்மை விற்கும் வேலு மனதுக்குள் குதூகலித்தார்.

“”ஆஹா… இன்னிக்கு சரியான வியாபாரம்தான்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வாணியை நோக்கி வந்தார்.

பொம்மைக் கூடையை கீழே இறக்கி, ரயில், பஸ், கப்பல், புறா, என பலவித பொம்மைகளை எடுத்துக் காட்டினார்.

வாணியின் கண்கள் ஒரு சிறிய அழகான பெண் குழந்தை பொம்மையின் மேலே பதிந்தது.

“”அங்கிள்… இந்தப் பாப்பா பொம்மையைக் குடுங்களேன்…” என்றாள்.

வேலு அதை அவளிடம் கொடுத்து, “”பாப்பா… 50 ரூபா குடும்மா..!” என்றார்.

பொம்மையைப் பெற்றுக் கொள்ளாமல், “”இருங்க… அம்மாகிட்டே இருந்து பணம் வாங்கிட்டு வர்றேன்…” என்றபடியே வீட்டுக்கு உள்ளே ஓடினாள்.

அவள் ஓடிய வேகத்தில், கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி கீழே விழுந்தது. வேலுவின் எண்ணம் தவறாக ஓடியது. தன் மகள் சாந்தினியின் கழுத்தில் அந்தச் சங்கிலி இருப்பது போல அவருக்குத் தோன்றியது.

வாணி ஆவலுடன், அம்மாவை அழைத்துக் கொண்டு வாசலுக்கு ஓடி வந்தாள். பொம்மையும் இல்லை… விற்றவரும் இல்லை… ஏமாற்றத்துடன் அந்த மனிதரை வாணி அங்குமிங்கும் தேடினாள்…

அப்போதுதான் வாணியின் அம்மா, அவள் கழுத்தில் இருந்த சங்கிலியைக் காணாது பதறினார்.

“”செயினை எங்கே போட்டே?” அம்மா கேட்டதும், வாணி பதறினாள்.

“‘அம்மா, பொம்மைக்காரர்தான் சங்கிலியைத் திருடிக்கிட்டு போயிட்டாரு போல இருக்கு…” என்றாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த வாணியின் அம்மா போலீசிடம் புகார் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்தார்.

அன்று இரவு முழுவதும் வாணி சரியாகவே தூங்கவில்லை. தொலைந்து போன சங்கிலியும் அந்த அழகிய பொம்மையும் அவள் கண் முன்னே தோன்றிக் கொண்டேயிருந்தன.

மறுநாள் காலை… வாணி தனது அறைக்குள்ளிருந்த ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள்.

அப்போது அந்த பொம்மைக்காரர் வருவதைப் பார்த்தாள். அவர் கூடவே, ஒரு சிறிய பெண்ணும் வந்து கொண்டிருந்தாள்.

வாணி உடனே, “”அம்மா… அப்பா…. அந்த பொம்மைக்காரர்….” என்று அலறினாள்.

எல்லோரும் வாசலுக்கு ஓடி வந்தனர். பொம்மைக்காரரும் அவர் மகளும் அந்த வீட்டு வாசலுக்கு வந்து நின்றனர்.

அந்தச் சிறிய பெண், “”ஐயா, தயவு செய்து எங்க அப்பாவை மன்னிச்சிடுங்க… இதோ உங்களுடைய தங்கச் சங்கிலி… ஏதோ எனக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தப்பு பண்ணிட்டார்… இனிமேல் இப்படிப் பண்ண மாட்டார்…” என்று கெஞ்சினாள்.

பொம்மைக்காரரும் தனது தவறை உணர்ந்தவராக அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

அந்தச் சிறிய பெண்ணின் உயரிய எண்ணத்தைப் பார்த்து வாணியின் பெற்றோர் அவளைப் பாராட்டினர். பொம்மை விற்கும் வேலு, வாணிக்கு அவள் விரும்பிய பொம்மையை நன்றியுடன் பரிசளித்தார்.

அன்றிலிருந்து வாணியும் சாந்தினியும் உற்ற தோழிகளாக மாறினர்.

– பி.கணேஷ்ராம், பெங்களூரு (ஏப்ரல் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *